Oct 29, 2018

இரட்டைப் பனைமரம்


-விஜயகுமார் வேல்முருகன்


"டேய் காசி உண்மையா தான் சொல்றியாடா.."
"ஆமான்டா.. பரமா .. எங்க தாத்தாக்கூட நிறைய தடவ சொல்லியிருக்காங்க.. எங்க தாத்தாவும் நிறைய தடவ அதுக்கூட பேசியிருக்காங்களாம்..
கும்புட்டுப் போறவங்கள அது ஒன்னும் செய்யாதாம்.. ஆனா அதுக்கு எதாவது தொல்லைக் கொடுக்குறவங்கள சும்மா விடாதாம் டா"
"அடடா.. அப்படியா?"
"ஆமான்டா.. போன மாசங்கூட மாசானத்தோட அப்பா யார் பேச்சையோ கேட்டுகிட்டு கையில அறுவால எடுத்துகிட்டு வெட்றதுக்காக பக்கத்துல போயிருக்காங்க.. மறுநாளு பாத்தா அவரு வாயில் நுரைத்தள்ளி செத்துக் கிடந்தாரு.. பாத்தா அவர் கால்ல பாம்பு கடிச்ச தடம் இருந்துச்சுல..."
"ஆமான்டா.. எங்க அப்பாக்கூட சொல்லிருக்காங்க.. பகல்ல கூட கெட்ட எண்ணத்துல போனா .. போறவங்க நிலமை அதோகதிதான்.. ஆனா நல்ல எண்ணத்தோட ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு...  சரி வா.. நாம அங்க போயி கும்புட்டுட்டு விளையான்டுட்டு வரலாம்" காசி சொல்ல..
"சரிடா வாடாப் போலாம்" என்று பரமாவும் சொல்லியபடி அந்த இரட்டைப் பனை மரங்கள் இருந்த இடத்திற்குச் சென்று இருவரும் விளையாடினார்கள்..
அப்பொழுது யாரோ ஒரு ஆள் கையில் கோடாரியோடு வந்து பனை மரங்களை ஏறயிறங்க பார்த்துக் கொண்டு இருந்தான்..
காசியும், பரமனும் அவனிடம் சென்று விசாரிக்க, அவன் அந்த மரங்களை வெட்ட வந்ததாகச் சொல்ல..
இருவரும் அதிர்ச்சியாகி, அதில் சாமி குடியிரிப்பதாகவும், ஏற்கனவே இரண்டு மூன்று பேர்கள் அங்கே இறந்துவிட்டதாகவும் கூறி வெட்ட வேண்டாம் என்றுச் சொன்னார்கள்..
அவனும் பயந்த மாதிரி திரும்பி போக.. முகம் சற்று கேலி புன்னகையோடு மாறியது..
இருவரும் விளையாடிவிட்டு மாலை இருட்ட ஆரம்பித்ததும் வீட்டிற்குப் போனார்கள்..
இன்னும் சற்று இருட்ட..
அதே கோடாரி மனிதன் வந்தான்..
அவன் முகத்தில் கண்கள் பேராசையில் இருப்பது போல விரிய.. ஒரு மர்ம சிரிப்பு சிரித்தபடியே பனை மரத்தின் அருகே சென்று கோடாரியால் ஓங்கி வெட்ட ஆரம்பித்தான்..
மறுநாள் விடிந்தது..
ஊரே பரபரப்பாகி இரட்டை பனை மரம் இருக்கும் இடத்தை நோக்கி போய்கொண்டிருக்க..
காசியும், பரமனும் ஒன்றும் புரியாமல் ஊர் மக்களோடு சேர்ந்து ஓடினார்கள்..
அங்கே..
பனைமரத்தின் அடியில் மொத நாள் பார்த்த கோடாரி மனிதன் தலையிலும், காது, மூக்கிலும் இரத்தம் வழிந்து காய்ந்துப்போய் செத்துக் கிடந்தான்..
"மரத்த வெட்ட வந்தவன் #முனி அடிச்சி செத்துப் போயிட்டாம்பா" என ஊர் பெரியவர் ஒருவர் பேச..
ஊரே கையெடுத்து அந்த இரண்டு பனைமரங்களையும் பார்த்து கும்பிட்டனர்..
சற்றுத் தள்ளி நான்கைந்து பெரிய அளவு பனம்பழங்கள் விழுந்து கிடந்தன..


No comments:

Post a Comment