May 15, 2019

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்



 மரபு மாத்தமிழர் பாவலர் கருமலைத்தமிழாழன்

மண்ணில் பிறந்தோரெல்லாம் மணியாக ஒளிர்வதில்லை. மாசற்ற வாழ்வைக் கைக்கொண்டு தாய்மண்ணையும் தாய்மொழி யையும் விழியாக ஏத்தும் மாண்பைக் கொண்டோரே மாணிக்கமாக சமுதாயத்திற்கு ஒளிகொடுப்பர். அவ்வகையில் நந்தமிழாளின் செழிப்பிற்கு அடிப்படையாய் விளங்கும் மரபு பாக்களைத் தந்தோளில் சுமந்துகொண்டு உலகெங்கும் பரப்பியும் அருந்தமிழ் நூல்களாயாக்கியும் மேடைதோறும் மரபு தமிழை முழங்கிவரும் மரபு மாத்தமிழர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் இற்றைத் திங்களை அலங்கரிப்பவராகிறார்.

கி. நரேந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட பாவலர் கருமலைத் தமிழாழன் 16-07-1951-ஆம் நாள் கருமலையில் (கிருட்டிணகிரி) பிறந்தவர். புலவர், எம்.., எம்.எட்., எம்.ஃபில்., கல்வித்தகுதி யுடன் 25 ஆண்டுகள் தமிழாசிரியர், 10 ஆண்டுகள் தலைமையாசிரியர் பணிசெய்தவர். இவரின் முதற்கவிதை, குயில் ஏட்டில் 1969-இல் வெளிவந்தது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாள், வார, மாத ஏடுகளில் இதுவரை பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட கவிதைகள்  வெளிவந்துள்ளன. தமிழகத்தில் இவர் பங்களிப்பில்லாத சிற்றிதழ்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 500-க்கும் மேற்பட்ட கவியரங்கம், பட்டிமன்றங்களில்  பங்கு பெற்றுள்ளார். 21 கவிதை நூல்கள், 3 ஆய்வு நூல்கள் என இவரின் நூற்பணி தொடர்கிறது. இவரின் படைப்புகள் பெற்ற பரிசுகள் ஏராளம். அவற்றில் சில:

பாரதஸ்டேட் வங்கி 2000-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகவீணை மத்தளமாகிறதுநூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.

பாரத ஸ்டேட் வங்கி 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகமரபின் வேர்கள்நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு வழங்கியது.

சென்னை பகுத்தறிவாளர் கழகமும், மெய்யறிவு இதழும் இணைந்து 2004-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகவேரின் விழுதுகள்நூலைத் தேர்ந்தெடுத்து முதல் பரிசு வழங்கின.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் 2004-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகவேரின் விழுதுகள்நூலைத் தேர்ந்தெடுத்து முதல்பரிசு வழங்கியது.

கவிதை உறவு  இலக்கிய அமைப்பு  2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகக் கல்லெழுத்து  நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு  வழங்கியது.

கரூர் திருவள்ளுவர் கழகம் 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாகக் கல்லெழுத்து நூலைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் பரிசு  வழங்கியது.
 
கம்பம்  பாரதி  இலக்கியப்  பேரவை  2016-ஆம்  ஆண்டிற்கான  சிறந்த  மரபு கவிதை நூலாகச் செப்பேடு நூலைத் தேர்ந்தெடுத்து 15-8-2016 அன்று கம்பத்தில் நடைபெற்ற விழாவில்  பொற்கிழியும்  விருதும் அளித்து சிறப்புச் செய்தது.

சென்னை  கவிமுகில்  அறக்கட்டளை  2016-ஆம் ஆண்டின் சிறந்த மரபு கவிதை நூலாக  செப்பேடு  நூலைத் தேர்ந்தெடுத்து விருதும்  உரூபா ஐந்தாயிரமும் வழங்கி சிறப்புச் செய்தது.

சென்னை உரத்த சிந்தனை அமைப்பு 2016-ஆம் ஆண்டின் சிறந்த மரபு கவிதை நூலாகச்  செப்பேடுநூலைத் தேர்ந்தெடுத்து விருதும்  உரூபா மூவாயிரமும் வழங்கி சிறப்புச் செய்தது.

சென்னை உரத்த சிந்தனை  அமைப்பு மற்றும் பொதிகை  மின்னல்  கலைக்கூடம்  2017-ஆம் ஆண்டின் சிறந்த மரபு கவிதை நூலாகஅகமுகம்நூலைத் தேர்ந்தெடுத்து விருதும் உரூபா     மூவாயிரமும் வழங்கிச் சிறப்புச் செய்தது.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் வாழ்க்கை வரலாறு மற்றும்  இலக்கியப்பணி குறித்த 140 பக்கங்கள்  கொண்ட நூலை அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் மலேசிய நாட்டின் மலேயப் பல்கலைக் கழகமும்  இணைந்து   எழுதி அண்ணாமலை நகரில் 12-9-2016-அன்று  நடைபெற்ற  விழாவில்  வெளியிட்டுச் சிறப்புச் செய்துள்ளது. இவரின் இடையறாத் தமிழ்ப்பணிகளுக்குக் கிடைத்த விருதுகள் அளவிடற்கரியன. அவற்றில் குறிப்பிடத்தகுந்தவனவாகத், தமிழக அரசின்  தமிழ்ச்செம்மல் விருது, தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தமிழ்ச்செம்மல் விருது, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிந்தனைச் சிகரம் விருது மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் வழங்கிய ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவையன்றி, இலண்டன் தமிழ்ச்சங்கம், இலங்கை  தடாகம் கலை இலக்கிய வட்டம் ஆகியவை  உலக அளவில் நடத்திய கவிதைப்போட்டியில் முதற்பரிசுகள், பல இலக்கிய அமைப்புகள் இந்திய மற்றும் மாநில அளவில் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைப் போட்டிகளில்  முதல்பரிசுகள் பெற்றுள்ளார். அவ்வகையில் அகமெலாம் அன்பைத்தேக்கி அன்னைத் தமிழிற்கு அருந்தொண்டாற்றும் மரபுமாத்தமிழரை ஆவணப் படுத்துவதில் தமிழ்க்குதிர் பெருமை கொள்கிறது.

இவரின் முகவரி:
2-16. ஆர்.கே.இல்லம்,
முதல் தெரு, புதிய வசந்த நகர்,
ஒசூர்-635 109,
கிருட்டினகிரி, (மா). தமிழ்நாடு,
இந்தியா.
பேசி: 9443458550.

4 comments:

  1. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    என்னைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு எனக்குச் சிறப்பு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. தேர்வும் அருமை.பகிர்வும் அருமை.பாவலர் இருவருமே பைந்தமிழ்த்தொண்டர்கள்.
    வாழ்க

    ReplyDelete
  3. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய வணக்கம்.ஐயா அவர்களின் இலக்கியப் பணி போற்றுதலுக்குரியது வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete