Sep 14, 2019

பைந்தமிழ்ச் சோலை நான்காம் ஆண்டு விழா


பைந்தமிழ்ச் செம்மல் விவேக்பாரதி

பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவின் நான்காம் ஆண்டு விழா சென்னை மைலாப்பூர் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் 25-08-2019 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது.

மறைதிரு புதுவை பொன்.பசுபதியார் அவர்களின் குடும்பத்தார், பாவலர் கருமலைத் தமிழாழன், கவிமாமணி .ரவி, இசைக்கவி ரமணன், கவிக்கோ ஞானச்செல்வன் மற்றும் பைந்தமிழ்ச் சோலைக் குடும்பக் கவிஞர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழா பைந்தமிழுக்கு எடுக்கும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

பெண்பாற் கவிஞர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் தமிழ்வாழ்த்துப் பாடினார்.

மறைதிரு புதுவை பொன்.பசுபதியார் அவர்களது திருவுருவப்படம் திறக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவரங்கப் பாடலைப் பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி அவர்கள் பாடினார்.

கவிஞர் சிதம்பரம் சு.மோகன் அவர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார். ‘முகநூலில் நமது பொழுதை நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்ள அமைக்கப்பட்ட குழு’ எனப் பைந்தமிழ்ச் சோலையை அறிமுகப்படுத்திப்  பைந்தமிழ்ச்சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பைந்தமிழ்ச்செம்மல்  முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் ஆண்டறிக்கை வழங்கினார்.

அடுத்து, நூல் வெளியீட்டு அமர்வுக்குப் பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து அவர்கள் தலைமை ஏற்றார்.  இந்த அமர்வில் பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எழுதியஅகடகவிதமது” என்னும் மரபு கவிதைத் தொகுப்பு நூலும், கவிஞர்கள் மதுரா, ரத்னா வெங்கட், ராஜி வாஞ்சி, வாஞ்சி கோவிந்த் ஆகிய நால்வர் எழுதியமுல்லை முறுவல்” என்ற நூலும் வெளியிடப்பட்டது. பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் நூல்களை வெளியிட்டார். 2019 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற சோலைக் கவிஞர்கள் மற்றும் பைந்தமிழ்ச் சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன் அவர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து விருது வழங்குதல் அமர்வுக்குப் பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர் அவர்கள் தலைமை ஏற்றார். கவிமாமணி .ரவி அவர்களுக்குப் “பைந்தமிழ்க்குவை” என்னும் விருதும்,  பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்குப் "பைந்தமிழ்க் குருத்து" என்னும் விருதும் வழங்கப்பட்டன. விருது வழங்கிக்கம்பனில் நுண்மைகள்என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் அவர்கள் உரையாற்றினார். அவருக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அடுத்து, யாப்புத் திறனும் உள்ளத் துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்னும் அறிவிப்புடன் ஆசுகவிப்போட்டி தொடங்கியது. இந்த ஆசுகவி அரங்க அமர்வுக்குப் பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி அவர்கள் தலைமையேற்று நடத்தினார். ஆறு கவிஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். கவிஞர் சுந்தரராசன், கவிஞர் வெ.விஜய், கவிஞர் தமிழகழ்வன் ஆகியோர் ஆசுகவிப்பட்டம் பெற்றனர்.

இடையில் பாவலர் மா.வரதராசனாருக்கு இன்ப அதிர்ச்சியாக பைந்தமிழ்ச்சோலைக் கவிஞர்கள் பாவலர் மா. வரதராசனார்மேலும் சோலைமேலும் எழுதிய "பைந்தமிழ்ச்சோலைப் பன்மணிஅந்தாதி" என்னும் நூல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, "என்ன தவம் செய்தோம்" என்னும் தலைப்பிலான கவியரங்க அமர்வுக்குப் பாவலர் மா. வரதராசனார் தலைமை ஏற்றார். பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் முன்னிலை வகித்து வீறுகொண்டெழும் அரிமாவாக எழுச்சிக் கவிதை பாடினார். கவியரங்கத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்குகொண்டு கவிமழை பொழிந்தனர்.

தொடர்ந்து, பைந்தமிழ்ச் செம்மல் மன்னை வெங்கடேசன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் நோக்கவுரையாற்றி வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் "பிழையின்றி நல்ல தமிழ் பேசுவோம்" என்னும் தலைப்பில் சீரிய உரையாற்றிச் சோலையின் பாவலர் பட்டத் தேர்வு எழுதிய கவிஞர்களுக்குச், "சந்தக்கவிமணி", "பைந்தமிழ்ச் செம்மல்", "பைந்தமிழ்ப் பாமணி", "பைந்தமிழ்ச் சுடர்" ஆகிய பட்டங்கள் வழங்கினார்.  அவருக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பைந்தமிழ்ச் செம்மல் இரா.கண்ணன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழா நிறைவில் கவிஞர் விஜயகுமார் வேல்முருகன், தம் மகளின் பொற்கைகளால் அனைவருக்கும் மரக்கன்று தந்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சி ஆர்க்கே கன்வென்ஷன் சென்டரின் பேருதவியால் நேரலையாக ஒளிபரப்பாகியது.  இதோ அந்தக் காணொலி.

No comments:

Post a Comment