Jan 15, 2020

மருத்துவ வெண்பா - பசுவின் பால்


டாக்டர் வ. க. கன்னியப்பன்,
கண் மருத்துவப் பேராசிரியர்
(பணி நிறைவு)
மதுரை 18

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவற்றின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

நேரிசை வெண்பா

பாலர் கிழவர் பழஞ்சுரத்தோர் புண்ணாளி
சூலையர் மேகத்தோர் துர்பலத்தோர் – ஏலுமிவர்
எல்லார்க்கு மாகு மிளைத்தவர்க்குஞ் சாதகமாம்
நல்லாய்! பசுவின்பால் நாட்டு.

பொருளுரை:

குழந்தைகள், முதியோர், நெடு நாட்கள் சுரத்தால் பாதிக்கப்பட்டோர், ரணம் உள்ளவர், சூலை, பிரமேகம், நோயினால் பலம் குறைந்து இளைத்தவர்கள், நரம்பு தளர்ந்தவர்கள், மூளை பாதிப்பு, குடல் சம்பந்தமான நோயாளிகள், வாத ரோகிகள், அஜீர்ண பேதி, நீர்த்தாரை ரணம் உடையவர்கள் ஆகியோர் பசும்பாலைஅருந்தலாம்.

தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கும், சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பசும்பாலில் சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சி பாலாடையை நீக்கிக் கொடுக்கலாம்.

காய்ச்சிய பாலுடன், பார்லி அரிசியை வேக வைத்து வடித்த கஞ்சியை 2 பங்கு சேர்த்து டைபாய்டு காய்ச்சலில் பாதிக்கப்படவர்களுக்குத் தரலாம்.

பசும்பாலில் சிறிது மஞ்சள் தூவி, பனங்கற்கண்டும் சேர்த்து இரவில் அருந்தி வந்தால் வறட்சியினால் உண்டான இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment