'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 23, 2023

சோலைக் கவியரங்கம் 2023

 நான் ஏணி பேசுகிறேன் - கவிதை

பைந்தமிழ்ச்சோலையின் ஆண்டுவிழாக் கவியரங்கில் வாசித்த எனது கவிதை.

சேலையின் உறவுகளின் பார்வைக்கும் கருத்துக்கும்.

------------++++++++++---------------++++++++++++

தமிழ்த்தாய் வாழ்த்து

குன்றா இளமையும்  கோணாச் செழுமையுங் கொண்டவளைத்

தின்றா லெமக்குத் திகட்டாத் தமிழின் திருவணங்கை

நன்றா யெனக்கு நயந்தரு பாடல் நவிலவேண்டி

மன்றா டியுந்தன் மலர்ப்பதம் போற்றி வணங்கினேனே!


தலைமைக் கவிஞர் வணக்கம் - கவிமாாணி சேலம் பாலன்

குவையினிற் குவித்த பொன்னாய்க்

    குழுமிய கவிகட் கெல்லாம்

இவையிவை உகந்த(து) என்று 

     எடுத்தெமக்(கு)  அளித்த அன்னல்

சுவைமிகு சேலத்து மாவின்

     சோலையில் பழுத்த பாலன்

அவையினைத் தலைமை தாங்க

    அவரது அடியைத் தாழ்ந்தேன்.

       

அவை வணக்கம்

பைந்தமிழ் மணக்குஞ் சோலை

   பழக்கிய கவிகள் எல்லாம்

செந்தமிழ் மணக்கும் பாடல் 

     சிறப்புற வடிக்கும் வண்மை

அந்தியில் அருந்திப் போக

     அழைப்பினை ஏற்று இங்கு

வந்தவர் மலரடி போற்றி

    வணங்கினேன் துணிந்து பாட.


   கவியரங்கக் கவிதை

நான் ஏணி பேசுகிறேன்

1.பொருள்நிறை பதவி யென்று

     புகழினை அடைந்த பின்னர் 

பொருட்டென  மதியா(து)  ஓரப்

    புழுதியில் எறிந்த மாந்தர்

கருனையின் திறத்தை எண்ணிக் 

      கவலையின் கடலில் மூழ்கி 

இருட்டினிற் கிடந்த ஏணி

    இயம்பிய கதையைக் கேளும் 


2.கருவினிற் தொடங்கி உன்னைக்

     கவனமாய்ப் பெரியோன் ஆக்கி

உருகிய மெழுகாய்த் தம்மை 

     உகந்ததை மறந்து பிள்ளை

பெருநிலை அடைந்த பின்னர்

    பெற்றவர் என்னும் இந்தத் 

தெருவினில்  எறிந்த ஏணி

      செப்பிய கதையைக் கேளும்


3.பேசிய பசப்புப் பேச்சுப்

       பெறும்பயன் அடைந்தாற் போச்சு!

கூசிய மனத்தை விட்டுக்

    குறைமிகு  ஆசான் என்று

வேசியர் பொருளைக் கண்டு

    வேற்றிடம் அடைதல் போல

வீசிய ஏணி இன்று

     வெதும்பிய விதத்தைப் பாரும் 


4.கதுப்பினிற் காலம் எல்லாங்

    கடினமாய்ப் பாடு பட்டுப்

பொதுப்பட வாழ்ந்து கெட்டுப்

    போலியாய் வாழாச் சொந்தம்  

சதுப்பினில் வீந்து சற்றுத்

    தன்னிலை தளர வாழ்வில் 

ஒதுக்கிய உறவின் ஏணி

    ஓதிய கதையைக் கேளும் 


5.தொட்டிலிற் தவழ்ந்த காலந்

        தொட்டது நட்பு என்பர்

சட்டியில் ஒன்றாய் உண்டு 

     சகலதும் பகிர்ந்த தென்பர்

கட்டிய மனைவி சொல்லக்

      கனவெனக் கலைந்து சென்ற

நட்பெனும் நல்ல ஏணி

         நவின்றநற் கதையைக்  கேளும் 


6.கற்பவர் ஆசான் என்பர்

       கல்வியைக் கற்கும் மட்டும்!

பெற்றவர் தன்னைக் கூடப்

      பேணிடப் பொருளைக் கேட்பர் !

உற்றவர் அயலார் என்பர்

      உதவிகள் செய்யும் மட்டும்!

சுற்றமும்  சூழ நிற்கும் 

    சொத்துடன் வாழும் போதே!


7.பற்றுவர் பணிந்து போற்றிப் 

     பலமொழி புகழ்ந்து பேசி

வெற்றியை அடைவர்! பின்னர்

      வேண்டிய(து)  இல்லை என்றால் 

எற்றுவர்! உதைப்பர்! காறி

     எச்சிலை உமிழ்வர்! நஞ்சைச்

சொற்களில் அள்ளி வீசிச்

      சுயநலப் புலியாய் வாழ்வர்!

  

8.எற்றுவர் என்று எந்த

     எழுத்தையும் மறைத்த(து) இல்லை

கற்றவை பயிலக் கூடிக்

     கைவரப் பெற்ற வித்தை

முற்றிய நுட்பம் என்று

     முழுவதுங் கூட்டி என்னை

விற்பனைப் பொருளாய் வாங்க

      வெகுமதி உலகில் உண்டோ?


9.ஏறிய ஏணி கூட

      இலக்கினை அடையத் தானே!

ஏறிய பின்னால் யாரும் 

      ஏத்தித் தொழுதார் உண்டோ?

ஏறிய பின்னர்க் காலால் 

     எற்றுவர் என்று பாதி

ஏறிய வழியிற் கீழே

      இறக்கிய கதைதான் உண்டோ?


10.சொந்தமாய் என்ன கொண்டாய்?

      சுயம்புவாய்ப் பூமி தன்னில் 

 வந்தவர் யாரும் உண்டோ?

       வாழ்ந்தவர் எவரும் உண்டோ?

வெந்தணல் வேகும் போதும் 

       வெட்டியான் வேண்டுங் கேளீர்!

  வந்தநம் வழியைப் போற்றி

     வாழ்வினை வாழ்தல் நன்றே!

ச.குகநாதன்

அகநானூறு களிற்றியானைநிரை பாடல் 2

 காணொலியைக் காண இழையைச் சொடுக்குக

https://youtu.be/7mlMRg4HFG8?si=owLi0QCgvqR7fu_C




Jun 14, 2021

கைம்மாறு!

மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,

      மாற்றுதவி  எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்

      குளிரொளியை விலைசொல்லி விற்ப  துண்டோ?

விழைவுடனே உலகமெலாம் சுற்றிச்  சுற்றி,

     வெம்மையுடன்  ஒளிபரப்பும் கதிரும் என்றும்

உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?


பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?

     புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?

கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்

     குயிலினங்கள் பரிசிலெதும்  பெறுவ துண்டோ?

ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி

       எஞ்ஞான்றும்  உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,

ஊக்குதொகை  கேட்பதுண்டோ? உயர்ந்த  சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?

                                        -- தில்லைவேந்தன்

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்