'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 13, 2021

தமிழ்க்குதிர் - சிலை 2051 - மின்னிதழ்


ஆசிரியர் பக்கம்

அன்பு தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்.

இதோ... தமிழ்ப்புத்தாண்டு (2052) பிறக்கிறது. ஆண்டாண்டு காலமாக நிலவியிருந்த தமிழர் பண்பாட்டைச் சிதைத்து அறிவுக்கொவ்வாத சித்திரையைப் புத்தாண்டாக மாற்றி,  அடிப்படையிலிருந்தே ஆரிய வழிவந்தோர் என்ற கீழ்நிலையை உண்டாக்க எத்தனிக்கும் முயற்சிதான் சித்திரைப் புத்தாண்டென்பது.

தெலுங்கர்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது. 

மலையாளத்தார்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது. 

சைனர், பௌத்தர், சீக்கியர், இசுலாமியர், கிறித்தவர் என்று அவரவர்க்குத் தனிப்புத்தாண்டும், தொடராண்டும் வழங்கிவரும் நிலையில்,  மூத்த குடியாகிய நந்தமிழர் பண்பாட்டிற்கு ஊறுசெயும் விதமாகத் தங்களுக்கென்று  தனிப்பண்பாடில்லாத வடவர் கூட்டம் நுழைத்த ஆரியப் புத்தாண்டை ஒழித்து, மறுத்து நம் முன்னோர் வழங்கிய அறிவின்பாற்பட்ட சுறவத்திங்களாம் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டென்று எம்மினத்தோர் உணரத் தலைப்படுதல் நன்றாம்.

விழுமியங்களை விட்டுச் சென்ற முன்னோர்தம் செயலுக்குக் கேடு நேராதவாறு நாமும் நல் விழுமியங்களை நம் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம். 

நாம் தமிழினம்... வாருங்கள் சுறவப் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்.

அன்புடன்

பாவலர் மா.வரதராசன்

புத்தாண்டே வருக வருக

 பைந்தமிழ்ச் செம்மல்

தமிழகழ்வன் சுப்பிரமணி


அழகிய தமிழுக்(கு) ஆண்டுமுறை

    ஐயன் வள்ளு வன்போற்றி

வழங்குதல் கண்டு வரவேற்போம்

    வருக வருக புத்தாண்டே


இன்பம் பொங்கும் புத்தாண்டோ

    இரண்டா யிரத்தைம் பத்திரண்டு

முன்னோர் போற்றி வாழ்த்துவமே

    முறைமை போற்றி வாழ்த்துவமே


பழகு செய்யுள் அக்காலப்

    பழமை போற்று! பொங்கட்டும்

வழங்கு செய்யுள் இக்காலப்

    புதுமை சாற்று! பொங்கட்டும்


பொங்க லோடு புத்தாண்டு

    போற்றிப் பாடி வாழ்த்துவமே

எங்கும் செய்யுள் நிறையட்டும்

    இன்பப் பொங்கல் பொங்கட்டும்

ஒழுக்கம்

 

பைந்தமிழ்ச் செம்மல் அழகர் சண்முகம்


ஒழுங்கிலா வெள்ளம் ஒளிர்பசுங்கான் வீழ்த்திப்

பழுதைப் படல்விரித்துப் பாய - விழுதாய்

மழையாள் கனிந்திரங்கி மண்மகிழ்பி றப்புக்

கிழைக்குமே யாம்பே ரிடர்! 1

(ஆற்றில் கட்டிலாத வெள்ளம் கரைகடந்து கரையிலும் காட்டிலும் உள்ள மரங்களை வீழ்த்திச் செல்லும். அப்படிச் செல்வதால்  ஆற்றில் நீரோட்டம் ஏற்பட ஏதுவான மழை, மரங்கள் வீழ்த்தப் படுவதால் குறைந்து ஆறும் வறண்டு விடும். தன்பிழையால் தன்பிறப்பிற்கே இழுக்கு.)


நச்சுக் கழிவொடுதுர் நாற்றக் கறையேந்தி

உச்சநுரை சூழ உழன்றோடும் - எச்ச

அழுக்குடை யாற்றி னளவிலா நீரும்

ஒழுக்கமில் ஓதலும் ஒன்று! 2

(நச்சுக் கழிவுகளைச் சுமந்து எந்நாளும் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுநீரால் யாருக்கும் பயனில்லை, அதுபோல் ஒழுக்கமின்றிக் கற்ற கல்வியாலும்)


கொதிப்பணை தண்பால் கொளுமுறை யூடப்

பதிந்திறுகி நான்கெனப் பல்கும் - பொதியுடைப்

பாலுமொவ் வாத்துளியால் பாழ்போன்ம் ஒழுங்கின்மை

நூலுடைத் தாரெண் நுழைவு ! 3

(காய்ச்சித் தணிந்த பாலில் முறையோடு உறையூற்றத் தயிர் மோர் வெண்ணை நெய் என நான்கைப் பெறலாம். அப்பாலில் ஒவ்வாத துளி  சிறிது கலந்தாலும் முறிந்துவிடும். அதுபோல், நல்ல நெறிகளைத் தன்னகத்தே கொண்டோரிடம் சிறிய தீய ஒழுக்கம் புகுந்தாலும் முற்றும் கெட்டுவிடும்.)


நெற்கட்ட!ப் பாயும் நெடுமலை நீளாற்றைக்

கற்கட்டால் கால்பிரிக்கும் கண்ணுடை - நற்கட்டும்

சிற்றஞ் சிறுதுளையால் சீர்கெட்டாற் போலொழுங்கில்

புற்றால் கெடுமே புகழ்! 4

(நீர்த்தேக்க அணையில் சிறுதுளை ஏற்பட்டால் அது நாளடைவில் பெரிதாகி அணையையே உடைத்து விடும். அவ்வணையால் நீரோட்டம் பெற்ற விளை நிலமும் காய்ந்து போகும். அதேபோல் சிறு தீய பழக்கமும் தன்னையும் தனைச் சார்ந்தோரையும் துன்பத்தில் தள்ளிவிடும்).


வெள்ளாவி இட்டு வெளுத்தபுத் தாடையிற்

கள்ளிக் கரியிழைக் காரொட்டுப் - புள்ளிவிழக்

கொண்ட குணமிருந்தும் கோலோச்சு வெண்தூய்மை

கண்மறைந்து காணும் கறை! 5

(வெளுக்கப்பட்ட வெள்ளை உடையில் சிறிய கறை பட்டால் உடைமுழுதும் இருக்கும் வெண்மை மறைந்து அக்கறையே கண்முன்நிற்கும். சிறந்த ஒழுக்கமுடையோரின் சிறு தவறு பெரிதாகத் தோன்றும்)


ஒழுக்கத் துணையால் உயர்வுண்டாம் அஃதில்

இழுக்கினிருள் மாய்க்கும் இடராம் - வழுக்கி

நடையற்று வீழ்ந்தார்துர் நாற்ற வழுக்கின்

உடைபோர்த்தெண் சாணுடம் பே 6

(ஒழுக்கத்தின் துணைசென்றால் உயர்வடையலாம் ஒழுக்கமில்லாதவர் துர்நாற்ற உடைபூண்ட பிணம்)


கற்றும் கலையறிந்தும் கண்ணாகப் பேரறிவு

பெற்று மொழுக்கமின்றேல் பேரிழுக்காம் - முற்றாய்ப்

பழுத்துடைந்(து) உண்ணப் பயனின்றிப் பாழும்

அழுக்கடை வீழ்ந்தகனி யாம் 7

(பழுத்த கனி உடைந்து அழுக்கினுள் விழுந்ததைப் போன்றதே ஒழுக்கமிலாரிடம் உள்ள கலையும் அறிவும்)


நன்னெறி சொல்லுயர் நல்லோர் துணையிருந்தும்

தொன்மை ஒழுக்கம் தொலைத்துநொந்தார் -முன்னிருக்கும்

கைவிளக்கை விட்டுவிட்டுக் காரிலொளி தேடிமடப்

பைவிரித்த லையும் பதர். 8

(நல்ல நெறிசொல்லும் நல்லோரின் துணையிருந்தும் கட்டில்லாமல் சென்று பின்வருந்துவோர் தன்மடமையால் கைவிளக்கை விட்டவர்)


முன்னோர் வகுத்தளித்த முப்பால் நெறியொழுங்கைத்

தன்னகம் கொண்டு தலையெடுக்கார் - நன்னீர்

வரத்துடை வாய்க்கால் வழியிருந்தும் தேக்க

வரப்பின்றிக் காயும் வயல்! 9

(நன்னெறி சொல்லும் முன்னோரின் அற நூல்களைப் படித்தும் அதைக் கைகொள்ளாதவர் நீரைத்தேக்க வரப்பில்லாமல் காயும் பயிர்செய்யும் வயலைப்போன்றோர்)


ஓங்கியெழி லாட ஒளிரும் உயர்மாடம்

தாங்குமடி சாயத் தகர்ந்தாற்போல் - தீங்கின்

மழுவேந்தித் தூய மதிதேய்த்து வீழ்த்தும்

ஒழுங்கின்மை யாற்பா ழுயர்வு 10

(உயர்ந்த அழகிய மாடமும் அதன் அடித்தளம் சிதைந்தால் விழுந்து விடும். அதுபோல் மாந்தருக்கு ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடித்தளமாகும் அது ஆட்டம் கண்டால் எல்லாம் பாழாகிவிடும்)


ஈர மனம்

(சிறுகதை)

கவிஞர்  சொ. சாந்தி


சுற்றிலுமாய் மகிழ்ச்சிக் குரல் கேட்டுக் கொண்டிருக்க, அந்த ஹோட்டலின் பேமிலி அறையில் நிலவிக் கொண்டிருந்த அமைதியை அப்பாதான் அவ்வப்போது விரட்டி அடித்துக் கொண்டிருந்தார்.

“சாப்பிடுங்க... என்ன பிடிக்குதோ ஆர்டர் பண்ணுங்க... வயிறார சாப்பிடுங்க...”

அருகில் அமர்ந்து காஷ்மீரி புலவ் சாப்பிட்டுக் கொண்டிருந்த வருணை வாஞ்சையாக வருடினார் செந்தில்நாதன். மனதுக்குள் கவலைகள் பிசைந்து கொண்டிருக்க அவருக்காக வைக்கப்பட்டிருந்த இட்டிலி அவரால் பிசையப்பட்டுக் கொண்டிருந்தது.  

"கமலி உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணட்டுமா...?" 

"இதை முடிச்சிட்டு சொல்றேன் டாடி.." என்று கமலி  சொன்ன சோலாப்பூரி பாதி காலியாகி இருந்தது.

"தாரணி, நீ சாப்பிடலையா.. நூடுல்ஸ் அப்படியே இருக்கு."

செந்தில் இப்படிக் கேட்கவும் விழிகளில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் மடைதிறந்து  பெருக்கெடுத்து வழிந்தது. உடல் குலுங்க புடவைத் தலைப்பினைக் கொத்தாய்ச் சுருட்டி வாயில் வைத்து மூடிக்கொண்டாள். அழுகை ஒலி முந்தானைக்குள் சிறைப்பட்டது. மகிழ்ச்சியாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்த செந்தில்நாதன் கண்ணீர் சிந்தி… இப்போது தோற்றுப்போனார். 

"அப்பா ஏன் அழறீங்க.. அம்மா ஏன் அழறீங்க" 

கமலியும் வருணும் ஒரே நேரத்தில் கேட்கவும் சுதாரித்துக் கொண்டனர் செந்தில்நாதன்  தம்பதியர். அது வந்துடா செல்லம்.. நாம இப்படி சாப்டு ரொம்ப நாள் ஆகுதுல்ல. அதான்.  

"சாப்பிட்டுவிட்டுக் கோவிலுக்குப் போலாமா செல்லங்களா.."

சர்வர் உள்ளே நுழையவும் பேச்சை திசை திருப்பினார் செந்தில்நாதன்.

“கஸாட்டா ஐஸ்கிரீம் ரெண்டு...” என்று இரண்டு விரல்களை உயர்த்தி சர்வருக்குக் கட்டளை யிட்டுவிட்டு, "உனக்கு ஏதாச்சும்...."  செந்தில்நாதன் முழுதுமாகக் கேட்டு முடிக்கும் முன்பாக வேகமாகத் தலையசைத்து மறுத்தாள் தாரணி...

இன்னமும் அவள்  தட்டில் அந்த நூடூல்ஸ் அப்படியே இருந்தது… வைக்கப்பட்டபோது இருந்த உஷ்ணத்தைத் தொலைத்து.  

உணவை வீணடிக்க விரும்பாது தொண்டை அடைக்க விழுங்கினர் செந்தில்நாதனும் தாரணியும். தாலி விற்ற பணத்தின் கடைசிக் கையிருப்பு ஆயிற்றே.

பிள்ளைகள் கஸாட்டாவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். "ம்ம். டேஸ்ட்டு.. டேஸ்ட்டு... உனக்கு வேணுமா டாடி" ஓரமாக வெட்டி எடுத்த கஸாட்டா ஐஸ்கிரீமை அப்பாவிடம் நீட்டினாள் கமலி.  அப்பா வேண்டாம் என்றவுடன்

"அம்மா... உனக்கு.. கொஞ்சம்ம்மா... ப்ளீஸ்..."  மகளின் திருப்திக்காக வாய்திறந்து பெற்றுக் கொண்டாள். ஐஸ்க்ரீம் ஏனோ உஷ்ணமாக இருந்தது தாரணிக்கு.

டிப்ஸ் இருபது ரூபாயுடன் பில் தொகையினைச் செலுத்திவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர இரவு எட்டு மணி ஆகியிருந்தது. எத்தனை விளக்குகள் எரிந்தாலும் இருண்ட சூழலாகவே இருந்தது.

கொரோனா வந்த பிற்பாடுதான் பல இன்னல்கள்.  லாக் டவுனைத் தொடர்ந்து இருவருக்கும் வேலை போனது.  இயன்றவரை கடன் வாங்கியாகிவிட்டது.  வேலை கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. எங்கு சென்றாலும் கைவிரிப்பு. ஏராளமானவரை   ஏழைகளாக்கி விட்டது இந்தக் கொரோனா.

இனியும் கடன் வாங்க திராணி அற்று எடுத்த முடிவு. சுண்டக் காய்ச்சிய பாலில் கலக்கப் பட்டிருந்தான் எமன். பிள்ளைகளைக் கட்டிக் கொண்டு அழுதாள் தாரணி. ஏன் அம்மா அழுகிறாள்..? புரியாது நோக்கினார்கள் பிள்ளைகள்.

"எல்லோரும் ஒண்ணா இன்னிக்கு பாலைக் குடிப்போம் செல்லங்களா. அப்பா ஒன்-டூ-த்ரீ எண்ணுவனாம். த்ரீ சொல்லும்போது குடிக்கணுமாம்.   சரியா..?"

கூறியவுடன்  பிள்ளைகள் தலையை ஆட்டியபடியே பால் தம்ளரை கையில் எடுத்தார்கள். அப்பா எண்ண ஆரம்பித்தார். 

ஒன்-டூ........ டூவை நீட்டிக்கொண்டிருந்தார் கண்களில் கண்ணீர் வழிய..

தட்... தட்.. கதவை யாரோ தடதடக்கத் தட்டிக்கொண்டிருக்க இரண்டுடன் நின்றது எண்ணிக்கை. 

செந்தில்நாதன் டம்ளரை அப்படியே தரையில் வைத்துவிட்டுக் கதவைத் திறக்க, உயிர் நண்பன் ஜீவா நின்று கொண்டிருந்தான். "என்னை  மன்னிச்சுடு செந்தில்.  யார் கிட்டயும் நீ கையேந்தி நிக்க மாட்ட. உழைப்பாளி நீ. உனக்குக் கேட்ட மாத்திரத்தில் உதவ முடியல. எப்படியோ பணம் பத்தாயிரம் என் அப்பா கிட்ட இருந்து வாங்கினேன் இந்தா வச்சுக்க இப்ப செலவுக்கு… அப்படியே உனக்கும் துணிக்கடையில் வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்..."

சொல்லிக்கொண்டே இருக்க... அணைத்துக் கொண்டான் நண்பனை, செந்தில்... ஜீவாவின் முதுகில் செந்திலின் கண்ணீர் நன்றியினை எழுதிக் கொண்டிருந்தது...

பாலைக் குடித்துக் கொண்டிருந்தது வாஷ் பேசின்.

திருமாலைத் தேடி…

பைந்தமிழ்ப்பாமணி

சரஸ்வதி ராசேந்திரன்


வெண்டளையானியன்ற

எண்சீர் ஆசிரிய விருத்தம்


திருப்பாவை பாடித் திருக்கோவில் நாடித்

    தினமும் திருமாலைத் தேடியேநான் வந்தேன்

பெருமாளை நாடிடப் பேரருளும் செய்வான் 

    ‘பிறப்பின்றி என்னைப் பரந்தாமா காக்க’

உருகும் மனமும் உணரவருள் தந்தே

    உலகினில் தோன்றும் உயிரினங்கள் யாவும்

திருவும் பொருளும் திருத்தமாய்க் கொண்டு

    தினமும் துணையாய்த் திருவருளை வேண்டும்

 

நஞ்சானேனா நஞ்சேன் நான்

(ஒட்டியும் ஒட்டாமலும்)

கவிஞர் சு.அய்யப்பன்


தொட்டணைத்தும் முத்தமிட்டும் தோளணைக்கும் என்னத்தான்

ஒட்டியம்போல் ஒட்டும் உயிருறவா - விட்டகலும்

நெஞ்சேகேள் ஏன்நீங்கி நின்றார் இதழகலாய்

நஞ்சானே னநஞ்சேன் நான்


முதல் 2 அடி ஒட்டும் (கலவியைப் பாடும்), பின் 2 அடி ஒட்டாது (பிரிவில் ஒட்டாது).

‘நஞ்சானேனா? நஞ்சேன் (நைந்தேன்) நான்’ என்பது ஒரு பொருள்

‘அவருக்கு நஞ்சானேனா - அந்த நஞ்சு ஏன் - நஞ்சேன் (நைந்தேன்) இன்னும் உயிர் வாழவா’? என்பது மற்றொரு பொருள்

குறிப்பு: கவிஞர் கவிமேகம் கேட்டுக்கொண்டபடி, முன் 2 அடிகள் ஒட்டியும் பின் 2 அடிகள் ஒட்டாமலும் பாடிய வெண்பா.

இயற்கையின் அழகு

 பைந்தமிழ்ச் செம்மல்

நிர்மலா சிவராசசிங்கம்


செங்கதிர் உதிக்கும் போது

    செவ்வானம் அழகு  சிந்தும்  

தங்கமாய் ஒளியைப் பாய்ச்சத்

    தரணியும் ஒளிர்ந்து மின்னும்

பங்கயம் மெல்லப் பூக்கப்

    பரவச மடையும் வண்டு

மங்கல ஒலியும் கேட்க

    மகிழ்ச்சியில்  மனமும்  மேவும் 1


மனத்தினை மேவிச் சென்று

    மயக்குமே தென்றல் காற்று

கனத்திலே மறைந்து செல்லக்

    கன்னமும் சிவந்து நிற்கும்

இனிமையாய் வருடிச் செல்ல

    இலைகளும் அசைந்தே ஆடும்

தினசரி ஆற்றல் காட்டிச்

    சிட்டெனப் பறக்கும் மெல்ல 2


மெல்லென மழையும் தூவ

    மேதினி மகிழ்ச்சி கொள்ளும்

சில்லெனக் குளிரும் போது

    சிந்தையும் மகிழ்வு காணும்  

செல்லமும் சிணுங்கல் காட்டி

    செம்மையைத் தருமே எங்கும்

நல்லவர் நலமாய் வாழ

    நன்றென மழையும் பெய்யும் 3


நன்றென மழையும் பெய்ய

    நலந்தரச் செழிக்கும் காடு

பொன்னென மிளிரும் எங்கும்

    புதர்களில் பாம்பு வாழும்

வன்சிறை யின்றிச் சிங்கம்

    வண்ணமாய் எங்கும் ஓடும்

இன்னொலி இசைக்கும் பட்சி

    இசையுடன் அசைந்தே  ஆடும் 4


இசையுடன் அசைந்தே ஓடி

    இலங்குகள் நிறைத்துப் பாயும்

நசையுடன் எங்கும் தொட்டு  

    நானிலம் சிறக்க வைக்கும்

திசையெலாம் பசுமை பொங்கச்

    சிறப்பென நீரை நல்கும்

கசிகிற இடங்க ளெல்லாம்

    கழனிகள் விளையு மன்றோ 5


ஓங்கலும் உயர்ந்து நிற்க

    உலகமும் வியந்து பார்க்கும்

மூங்கிலும் இசைக்கும் போது

    முகில்களும் முட்டி மோதும்

பூங்குயில் பாட்டுப் பாடப்

    புன்னகை சிந்தும் யாவும்

பைங்கொடி படர்ந்து நிற்கப்

    பசுமையும் மிளிரு மன்றோ 6


பசுமையும் மிளிரு மன்றோ

    பாரினில் மரங்கள் நின்றால்

அசைகிற இலைகள் யாவும்

    அசதியைப் போக்கி நிற்கும்

நசையுடன் நாமும் பேண

    நலத்தினைத் தந்து நிற்கும்

திசையெலாம் வளர்த்து விட்டால்

    தென்றலும் இதமாய் வீசும் 7


தென்றலும் இதமாய் வீசச்

    சில்லெனப் பனியும் கொட்டும்

பொன்மழை பொழியும் போது

    பூமியே வெண்மை யாகும்

வெண்பனித் தூள்க ளெங்கும்

    வெண்மலை போல நிற்கும்

கண்களை வியக்க வைக்கும்

    காட்சிகள் நிலவு மாங்கே 8


எண்திசை யெங்கும் விண்மீன்

    இருளதில் ஒளிர்ந்து மின்னும்

தண்மதி ஒளியை நல்கத்

    தாரகை எழிலாய் நிற்கும்

கண்களைச் சிமிட்டி நன்கு

    காவலாய் என்றும் சுற்றும்

கொண்டலும் மெல்லத் தொட்டுக்

    குலாவியே நகர்ந்து செல்லும் 9


இயற்கையின் அழகைக் கொஞ்சும்

    இன்றமிழ்ச் சுவையில் தொட்டேன்

வியப்புறும் காட்சி கண்டு

    விழிகளும் விரிய நின்றேன்

அயர்வினை நீக்கும் சக்தி

    அவனியில் இயற்கைக் குண்டு

செயற்கைகள் மோதி நிற்கச்

    சிகரமாய் ஒளிரு தன்றோ 10

மாலைப்பொழுது

பைந்தமிழ்ச் செம்மல் 

செல்லையா வாமதேவன்


வண்ணப்பா


தான தந்த தான தந்த

தான தந்த தான தந்த

தான தந்த தான தந்த தனதானா


மாலை வந்து வானெ ழுந்த

 மாரு தங்க லாப மென்று

  மாச னங்கள் நாடு கின்ற பொழுதாமே

மானி னங்க ளோடு கங்கை

 மாக ணங்கள் ஊர நின்று

  மாத லங்க ளோது மின்ப மறையாமே


பாலை யெங்கு மேபொ ழிந்து

 பாகு தென்ற லோடு சிந்து

  பாடி யந்தி மாலை வந்த மதிதேனே

பாத மின்றி யூரு பந்து

 பாட கந்த டாகம் அம்பு

  பாத வங்க ளோடு விந்தை எழிலாமே


வாலை மங்கை யோடு தங்கை

 வாளம் ஒன்று கூடி முன்றில்

  வாகை விஞ்சு நாட கங்கள் விழைவாரே

வாத மென்று கூனு டம்பில்

 வாதை தங்கு மாவ ரங்கள்

  வாகு பொங்கு பார தங்கள் மொழிவாரே


வேலை நின்று மோடி வந்து

 வேக மொன்றி ஓத னங்கள்

  வீறு கொண்டு சோர்வை வென்று        புரிமாதர்

வீணை யின்ப நாத முண்டு

 வீசு கஞ்சி வாச மொன்ற

  வீதி சந்தி வேணி யெங்கும் நிறைவாமே! 


(மாகணம் - பாம்பு, பாடகம் - விளைநிலம், அம்பு - கடல், பாதவம் - தோப்பு, ஓதனம் - உணவு, வேணி - ஆகாயவெளி)


நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 10

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இன்றைக்கு முன் சற்றொப்ப, 2300 ஆண்டுகளுக்கு முன் அஃதாவது, கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கும், 2ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த ஓர் அரசியல் போர்க்கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பழங்கதையே இராமாயணமாகும். (இதிகாசம் - பழங்கதை)

இன்றைய பீகார் மாநிலத்தின் பிரிந்த சத்தீஸ்கர் மாநிலப்பகுதியில் கங்கையின் கிழக்குக் கரையில் தொடங்கி, கங்கையின் மேற்குக் கரைப்பகுதியில் நடைபெற்ற இருமன்னர்களின் போர் குறித்தான செய்திகளை மையமாகக் கொண்டதே இராமாயணமாகும். (★அடுத்த பகுதியில் சான்றுகளுடன் விளக்கப்படும்)★

இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே இதிகாசங்கள்தாம். (பழங்கதைகள்).

இக்கதைகள் நிகழ்ந்த இடத்திருந்து காலத்தால் கடத்தப்பட்டுச் செவிவழிச் செய்தியாகப் பரவியகாலை அவ்வப் பகுதிகளின் பண்பாடுகளுக்கேற்பவும், கதை சொல்லும் மாந்தர்தம் கற்பனைகளுக்கேற்பவும், உட்பொருள் திரிபடைந்து வளர்ச்சியுற்றுப் பலப்பல புனைவுகளும், கற்பனைகளும், கருதுகோள்களும் நுழைக்கப்பெற்றவையே.

அதனால்தான் இராமகாதை அவ்வப்பகுதிகளுக் கேற்பக் கருக்கொண்டு அம்மக்கள் பழக்கத் தனவாக வழங்கலாயிற்று. சான்றாகத், துளசி ராமாயணம், வசிஷ்ட ராமாயணம், ஆனந்த ராமாயணம் போன்றவை நம் நாட்டிலேயே மாற்றம் பெற்றவையாகும்.

தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அந்நாட்டு மக்களின் வழக்கிற்கேற்ப மாற்றம் பெற்றவையுள.

இராமாயணம் நடைபெற்ற பகுதியில் வாழ்ந்திருந்த (சூத்திரரான) ரட்சன் என்ற வேடன் அக்கதையை அஃதாவது அவனுடைய காலத்தில் நிகழ்ந்த ஒரு போர் நிகழ்வை வடமொழியில் எழுதி வைத்தார்.

(அவருடைய ஏழாம் காண்டமான உத்தர காண்டத்தில் இராமனின் மனைவியான சீதைக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அங்கேயே அவள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததாகவும் வரும் செய்திகளை ஆராய்ந்தால், போருக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நிலை கருதி வான்மீகியே அரசக் குடும்பத்தைப் பாதுகாத்துத் தகுந்த காலத்தில் அரியணையில் அமர வைத்தார் என்று கருதவும் இடமுள்ளது.)

இராமாயணம் நிகழ்ந்த அதே காலக்கட்டத்தில் தான்...

ரிக் வேத கால நதிகளான சரசுவதி மற்றும் திருட்டாதுவதி நதிக்கரைப் பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் [இன்றைய வடக்கு இராசபுதனம் மற்றும் தெற்கு அரியானா] பெருமழையால் அழிந்த பின்பு அங்கு வாழ்ந்தவர்கள் (ஆரியர்கள்), விந்திய மலைக்கு வடக்குப் பகுதிகளில்... (தற்கால நேபாளம், உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனம்] குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரிய வர்த்தம் எனற பெயரால் அழைக்கப்பெற்றது.

ஆரியர்கள் அந்தப் பகுதியில் நுழைந்ததும், அப்பகுதியில் வாழ்ந்திருந்த மக்களைத் தாழ்ந்த இனத்தவராகவும், தங்களைக் கடவுளின் பிள்ளைகளாகவும் கூறிக் கொண்டனர். அவற்றை மெய்ப்பிக்க மனுதர்ம சாத்திரத்தையும் எழுதி வைத்தனர். அந்தச் சாத்திரத்தின்படி சாதிப் பகுப்புகளை வைத்து அங்கிருந்த மக்களை இனக் காழ்ப்புடன் நடத்தியும், அந்நாட்டையாண்ட அரசர்களுடன் குரு என்ற நிலையில் அமர்ந்தும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர்.

அவர்களுடைய போக்கில் ஏற்பட்ட பிணக்கினாலும், பண்பாட்டு மாற்றத்தினாலும் அப்பகுதி மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறிப் பிற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர். காக்கேசிய இனத்தவர்களான வந்தேறியவர்களை வரலாற்றாசிரியர்கள் ஆரியர் என்றழைத்தனர். அவர்கள் வந்தேறிய பகுதி ஆரிய வர்த்தம் எனப்பட்டது.

அப்பகுதியின் பூர்வீகக் குடிகளைச் சத்திரியர் என்றும், சூத்திரர் என்றும் மனுசாத்திரத்தில் குறித்தனர். சத்திரியர்களிலேயே திராவிடர் என்ற பகுப்பில் ஆதிக் குடிகளைக் குறித்தனர். (இவர்கள் தாம் ஆதி திராவிடர்).

எஞ்சிய மற்றவரை ஐதரேய பார்ப்பனர் என்றும் குறிப்பிட்டனர். ஐதரேய பார்ப்பனரும், சத்திரியர்களும் திராவிடர் என்றே ஆரியர்களால் குறிக்கப்பெற்றனர். (ஆதாரம்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம். பக்.4,5)

அப்போதிருந்துதான் ஆரிய - திராவிடப் பண்பாட்டுப் போர் நடைபெறத் தொடங்கியது.

ஆரியரை எதிர்த்தவர் அனைவருமே "திராவிடர்" எனப்பட்டனர். அவர்கள் வணங்கி வந்த தெய்வத்தையும் (சத்திய விரதன்) திராவிடக் கடவுளாகக் குறிப்பிட்டனர்.

ஆதாரம். இதோ...

"இராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவது இக்ஷ்வாகு என்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வது வைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.

யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:

ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா ஸ வை விவஸ்வத: 

புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம் த்வத்தஸ் தஸ்ய சுதா: 

ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

                                                         (பாகவதம் 9.1.2 & 9.1.3)


இதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜ ரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.

மேல்சாதியினராகத் தங்களைக் கூறிக்கொண்ட. அப்பகுதியில் வழங்கிவந்த இராமகாதையைத் தங்களுக்கான இதிகாசமாக ஆக்கிக் கொண்டனர். அக்கதையில் கூறப்பட்ட இராமனையும், பாகவதத்தில் கூறப்பட்ட கிருஷ்ணனையும் தங்களின் இறைவராக ஆக்கினர். (இராமாயணம், மகாபாரதம் இரண்டுமே ஒரேபகுதியில் சிறு கால இடைவெளியில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளே)

அதுவரை சராசரி மனிதர்களின் வாழ்க்கைக் கதையாக இருந்த இராமாயணமும், மகாபாரதமும் இறைமைத்துவம் பூண்டன.

(பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சத்திய விரதனின் பிள்ளையான இக்குவாகு வம்சத்தில் வந்த தயரதனின் பிள்ளையான) இராமன் என்ற சராசரி மனிதனின் வாழ்வில் நடந்த நிகழ்வில் தங்கள் கடவுள் கொள்கையைப் புகுத்தி இராமனையும், கண்ணனையும் கடவுளாக்கினர்.

சத்திய விரதன் திராவிடர்களின் அரசன் என்றால் அவ்வழியில் வந்த இராமனும் திராவிடனே என்பதால் அவனை அவதாரமெடுத்த திருமால் என்றனர். இராமனைக் கடவுளாக்கிய ஆரியர் அக்கதையை எழுதிய சூத்திரரான ரட்சனைப் பார்ப்பனனாக்கி அந்த இராமகதையைத் தங்களுக்குரியதாக்கிக் கொண்டனர்.

இந்தப் புனைவுகள் அனைத்தையும் தாங்கிய இராமகதைகள் செவிவழியாகப் பலவிடங்களுக்கும் பரவின.

செவிவழிக் கதையாக இருந்த இராம காதை சோழ நாட்டுக்குள் புகுந்தபோது இராமன் கடவுளாகவே மாறிவிட்டிருந்தான். இச்சூழலில்தான் கம்பர் அக்கதையைத் தமிழில் எழுத விரும்பினார்.

கம்பர் வாழ்ந்த காலம் அஃதாவது கம்பராமாயணம் எழுந்த காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டாகும். ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வு பல்வேறு புனைவுகளாலும், நகர்வுகளாலும் கம்பர் காலத்தில் ஓர் இறைமைத்துவம் பெற்றே நிலைத்தது. எனவே, வான்மீகியால் மனிதனாகப் பார்க்கப்பட்ட இராமன் கம்பர் காலத்தில் மக்களின் வழக்கிற்கேற்பக் கடவுளாகக் காட்டப்பட வேண்டிய கட்டாயமாயிற்று.

இதைக் கம்பருக்கு முன் வாழ்ந்த யாரும் மறுத்தாரில்லை. இதற்குச் சான்றாக... சங்க இலக்கியக் காலந்தொட்டே இராமாயணச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

(தொடரும்)

மருத்துவ வெண்பா - கொய்யாப் பழம்

 கவிஞர் வ.க.கன்னியப்பன்

கண் மருத்துவர் & தமிழ் ஆர்வலர், மதுரை


நேரிசை வெண்பா


திரிதோசஞ் சென்னித் திருப்ப மரோசி

பொருமாந்தம் வாந்தி பொருமல் – கரப்பானும்

மெய்யாய்ப் பரவுமல மெத்தவிடும் போகமுண்டாங்

கொய்யாப் பழத்தினாற் கூறு. 46

- பதார்த்த குண விளக்கம்


குணம்:

கொய்யாப் பழத்தினாற் முத்தோசம், தலை மயக்கம், அருசி, மந்தம், சர்த்தி, வயிற்றுப்புசம், கரப்பான், வீரியம் இவைகள் உண்டாகும். மலங் கழியும்.


உபயோகிக்கும் முறை:

நன்றாய்க் கனிந்த பழத்தையுண்ண மனத்திற்குக் களிப்பை உண்டாக்கும். 

இரைப்பைக்கு பலத்தைக் கொடுப்பதுடன் விக்கல் இருப்பின் நிறுத்தி விடும். 

எளிதில் சீரணப்படாமல் மந்தம், வயிற்றுப் புசம், அரோசகம் முதலியவற்றை உண்டாக்கும். 

இதன் விதை வயிற்றில் சிக்குமாயின் சீதபேதி, உஷ்ண பேதி உண்டாக்கும்.


இப்பழத்தில் சிவப்பு, வெள்ளை என இருவகையுண்டு. இவை நிறத்தில் வேறுபட் டிருப்பினும் குணத்தில் ஒன்றேயாகும்.


திருமுருகாற்றுப்படை

 உரையாடல் - பகுதி - 8


பைந்தமிழ்ச் செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


புலவர்: அருமை ஐயனே! வேலன் மகளிரோடு கூடி ஆடும் குரவைக் கூத்தைப் பற்றிச் சொன்னீர்.  அவன் திருமுருகப் பெருமானாகத் தன்னை ஆக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடுவது கேட்கவே இன்பமாயிருக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலிடுகிறது.

நக்கீரர்: அது மட்டுமா? மற்றுமொரு விழாவைப் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் புலவரே!

புலவர்: அஃது என்ன விழா ஐயனே?

நக்கீரர்: செறிவான மலைப்பக்கங்களில் வாழும் மக்கள் அனைவரும் திருமுருகப் பெருமானை வாழ்த்திப் பாடி விழாக் கொண்டாடுகிறார்கள்.

விழாக் கொண்டாடுவதற்கான களத்தில் கோழிக் கொடி நட்டுக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். அவ்விழாவில் சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பிப் 'பிரப்பு அரிசி'யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்துக் கொண்டாடுகிறார்கள்.

[பிரப்பு - கூடை நிறைய இட்டு வைக்கும் நிவேதனப் பொருள்]

புலவர்: அவ்விழாவைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே! எங்கெல்லாம் அந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

நக்கீரர்: அன்புடைய அடியார் திருமுருகப் பெருமானை 

வழிபட்டுப் போற்றத் தக்க பொருத்தமான இடங்களிலும்,

வேலன் மிக்க மகிழ்ச்சியுடன் ஆடும் களத்திலும், 

காட்டிலும், சோலையிலும், அழகான தீவு போன்று ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலத்திலும்,

ஆறு, குளம் ஆகியவற்றின் கரைகளிலும், வேறு பல இடங்களிலும்,

நான்கு தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [நாற்சந்தி, சதுக்கம்], 

மூன்று தெருக்கள் சந்திக்கும் இடங்களிலும் [முச்சந்தி], 

புதுமலர்களை உடைய கடம்பு மரத்தின் அடியிலும், ஊரின் நடுவில் உள்ள மரத்தின் அடியிலும், 

மக்கள் கூடும் பொது மேடையை உடைய மன்றங்கள், பொதியில் ஆகியவற்றிலும்,

கந்து நடப்பட்டுள்ள இடங்களிலும் கொண்டாடுகிறார்கள்.

புலவர்: ஓ! நன்று ஐயனே! அவ்விழாவை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: அவர்கள்

நெய்யுடன் வெண்மையான சிறு கடுகினைக் கலந்து கோயிலின் வாயிலில் அப்புவர்;

திருமுருகப் பெருமானின் திருப்பெயரை மென்மையாக உரைத்து, இரு கைகளையும் கூப்பி வணங்குவர்; 

வளம் பொருந்திய செழுமையான மலர்களைத் தூவுவர்; 

வெவ்வேறு நிறமுடைய இரு ஆடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அணிந்திருப்பர்;

கையில் சிவப்பு நூல் காப்பு நூலாகக் கட்டியிருப்பர்; 

வெண்மையான பொரியைத் தூவி, வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாகப் பல இடங்களில் வைப்பர்; 

சிறிய பசுமையான மஞ்சளையும் நல்ல நறுமணப் பொருள்களையும் பல இடங்களில் தூவித் தெளித்திருப்பர்; 

செவ்வரளி மலரால் ஆகிய மாலையைச் சீராக நறுக்கிக் கோயிலைச் சுற்றித் தொங்க விட்டிருப்பர். 

புலவர்: ஓ! மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் ஐயனே! அவர்கள் இவ்விழாவில் வேறு என்னவெல்லாம் செய்கிறார்கள்?

நக்கீரர்: 

மணப்புகையை எடுத்து ஆராதனை செய்கின்றனர்; 

குறிஞ்சிப் பண்ணில் இயற்றப் பெற்ற பாடல்களைப் பாடுகின்றனர்; 

மலைமீதிருந்து விழும் அருவியின் ஓசைக் கேற்ப இசைக் கருவிகளை ஒலிக்கின்றனர்; 

பல்வேறு வடிவமுடைய அழகான பூக்களைத் தூவுகின்றனர்.

இவை மட்டுமா? 

புலவர்: இன்னும் வேறு என்ன சிறப்புள்ளது ஐயனே?

நக்கீரர்:  குறமகளின் வெறியாடலைக் கேட்பீர்.

திருமுருகப் பெருமானுக்கு விருப்பமான குறிஞ்சி யாழ், துடி, தொண்டகம், சிறுபறை போன்ற இசைக் கருவிகளைக் குறமகள் இயக்கிப் பாடி ஆடுகிறாள். அவ்வாறு ஆடித் திருமுருகப் பெருமானைத் தன்மீது வரவைக்கிறாள். மாற்றுக் கருத்துடையோரும் இந்நிகழ்வைக் கண்டு அஞ்சும் அளவுக்கு ஆவேசம் அடைகிறாள். இவ்வாறு திருமுருகன்பால் வழிப்படுத்துகின்றாள். அத்தகு  அழகு பொருந்திய அகன்ற ஊரில் கோயில் வழிபாடு அமைகின்றது.

புலவர்: ஓ! நன்று… நன்று. இத்தகு கோயில்களிலும் திருமுருகப் பெருமான் தங்குகிறார் எனச் சொல்ல வருகிறீர். அப்படித்தானே ஐயனே!

நக்கீரர்: ஆம் புலவரே! அவ்வாறு, மிகுதியான மகிழ்ச்சியுடன் ஆடிய களத்தில் ஆரவாரம் ஏற்படுவதற்குரிய பாடல்களைப் பாடி, ஊது கொம்புகள் பலவற்றையும் ஊதி, வளைந்த மணியினையும் ஒலிக்கச் செய்து, என்றென்றும் கெடாத வலிமையுடைய யானையை அல்லது மயிலினை வாழ்த்தித், தாம் விரும்பும் அருட்கொடைகளை விரும்பியவாறு அடைய வேண்டி அடியார்கள் வழிபடுவதற்கென்று, அந்தந்த இடங்களில் திருமுருகப்பெருமான் தங்குகிறான்.

புலவர்: நன்றி ஐயனே! 

(தொடரும்)

எங்கே முனியப்பன்?

 (சிறுகதை)

இரா. இரத்திசு குமரன்


ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை அவன் கடக்கும்போது மனம் ஏனோ சங்கடத்திற்கு உள்ளானது.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் அது. நந்தாவின் கிராமத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் கிராமத்தின் கிழக்கே அந்த நிலம் இருந்தது. தன் மூதாதையார் சம்பாதித்ததில் மீதம் விட்டுப்போன 1.8 ஏக்கர் நிலம். அந்த நிலத்துக்கு வடக்கே மூன்று ஏக்கர் நிலம் தன் பூட்டன் காலத்தில் எப்போதோ விற்றாகிவிட்டதாம். சிறிது நிலம்தான் என்றாலும் பனை மரங்கள் அடர்த்தியாக வரிசையாக ஒரு பக்கமும் மற்றொரு பக்கம் இடைவெளிவிட்டு 8 பனைமரங்கள், இடையிடையே புதர்ச்செடிகள்,  அருகிலேயே சிறிய பாறை மற்றும் பாறையின் ஒருபுறம் பெரிய வேலிகாத்தான் மரமும் மற்றொரு புறம் சிறிய வேப்ப மரமும் இருந்தன. 


பள்ளி விடுமுறைக் காலங்களில் பனை நுங்குக்காக அவ்வப்போது தனது சகாக்களுடன் வந்துபோவது நந்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. அந்த நிலத்தில் நடந்து போனால்  கால் பாதங்களை வருடி வரவேற்கும் மனப்பாங்கு பூமி அது. நந்தாவின் நினைவு தெரிந்த நாளில் இருந்து பாசனப் பயிர் ஏதும்  வைத்ததாக அவன்  நினைவிலில்லை. அங்குக் கிணறு இல்லை என்பதால் அது சாத்தியப் படவில்லை. பாட்டன் முப்பாட்டன் காலங்களில் பக்கத்து நிலத்தாரிடம் இருந்து நீர்கொண்டு பாசனப் பயிர் செய்தனரோ என்னவோ. யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வில்லை. 


மானாவாரி  வேர்க்கடலை, துவரை, உளுந்து, கொள்ளு மற்றும் சோளம் போன்ற தானிய வகைப் பயிர்களைத் தன் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் அறுவடை செய்ததைக்  கண்டுள்ளான். அந்த இடத்திற்கு வந்து போவதே நந்தாவுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக  இருக்கும். ஏன் அப்படி? அங்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடக்குமா? ஆம். ஆனால் எப்போதோ ஒரு சில முறைகள்தான். அவை மறக்க முடியாத நினைவுகளாக மனத்தில் பதிந்துவிடும். அது ஏன் அப்படி? அந்த நிலம் அவனுக்கும் சொந்தமானதாக இருந்ததனாலா?  இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம் அங்கு இருந்ததுதான். 


நிலத்தின் வடகிழக்கு மூலையில் வரப்பு ஒட்டிக் கருக்கு, பற்றுக் கொடிகள் நிறைந்த ஒரு பனை மரம்; அதைத் தொட்டுக் கொண்டே வளர்ந்த ஒரு வேப்ப மரம்; அதன் அடியில்தான் அமர்ந்திருந்தார் முனியப்பன் சாமி. முனை மழுங்கிய முக்கோணக் கல்தான் நந்தாவின் குல தெய்வம் முனியப்பன். முனியப்பனின் சிறப்பு அவரை எங்கு வைத்து வேண்டுமானாலும் வழிபடலாம். நிலத்திற்கும் அவரே காவல்; குடும்பத்திற்கும் அவரே காவல். கருங்கல்லைக் கழுவி விபூதி பூசிவிட்டால் போதும் முனியப்பன் பிரவேசம் செய்துவிட்டார் என்று பொருள். ஆணிவேராக இருக்கும் இந்த நம்பிக்கைதான் கிராமங்களில் வாழும் மக்களின் யதார்த்த பக்தியை ஊற்றெடுக்க வைக்கும். 


படையல்  தயாராகிவிட்டது. ஆவி பறக்கப் பொங்கல், அரிசிமா விளக்கில் தீபம், மூன்று, நான்கு வெற்றிலையில் சில பாக்குக் கொட்டைகள், இரண்டு வாழைப் பழங்கள் ஜோடியாக, ஊதுவத்தி, கற்பூரம் எனப் பொதுவான பூஜை பொருட்களுடன் பொரி, அவல், சுருட்டு, சாராயம், கருமணி கருவறை போன்ற சிறப்புப் பொருட்களும் காணப்பட்டன. அரைக்கால் சட்டையுடன் கருப்பு வெள்ளைக் கட்டம் போட்ட சட்டை போட்ட பத்து வயது சிறுவனாக ஓடிவந்து இவற்றைக் கண்டான் நந்தா.


"எல்லாம் தயார், கற்பூரம் ஏத்துங்க" அம்மாவின் அழைப்பின்படி படையல் அருகே அப்பா நெருங்கினார். தன் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்தார்.


"வரிசையா நில்லுங்க" எங்களை வரிசைப்படுத்தி அம்மா பக்தியுடன் மௌனமாக நின்றதை நந்தா கவனித்தான்.


"ம்ம்… கற்பூரம் ஏத்திடலாமா?" அப்பா அனைவரையும் பொதுவாகக் கேட்டார்.  எல்லோரும் அங்கு வந்து நிற்க வேண்டும் அல்லவா? அதற்காகத்தான். கற்பூரக் கட்டி ஏற்றப்படுகிறது. ஒரே அடியில் தேங்காய் ஏறக்குறைய சமமாக பகிரப்படுகிறது. பத்து பதினைந்து அடி தள்ளிச் சென்று கொண்டுவந்த சேவலின் கால்களில் இருந்து சணல் கயிற்றை அவிழ்த்தார் நந்தாவின் அப்பா.


"கெட்டியா புடிச்சுக்கோ, ரத்தம் மேல பட்டுடப் போகுது. உடனே கீழே போட்டுவிடு" என்று கூறிக்கொண்டே கொடுவாளோடு  தயாராக நின்றார். சேவலின் தலையில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டது. சேவலின் சம்மதத்தை வாங்க அனைவரும் காத்திருக்க உடனே சேவலும் தன் தலையைக் குலுக்கி சம்மதம் தெரிவித்தது. தலையைத் தான் பிடித்துக்கொண்டு மற்ற உடல் பாகங்களைக் கொத்தாகப் பிடிக்கச் சொல்லி நீட்டினார் நந்தாவின் அப்பா. சில நொடிகளிலேயே தலை வேறு உடல் வேறாக பிரிக்கப்பட்டுவிட்டது.


"தூர தூக்கி கீழே போடு... கீழ போடு" அம்மா ஒரு திசையைக் காட்டிக்கொண்டே கூறியதும் தன் முழு பலத்தையும் சேர்த்து அந்த தலையில்லாச் சேவலைத் தூரத் தூக்கி போட்டான் நந்தா. அந்தச் சிறு வயதில் சிரித்துக்கொண்டே உற்றுப் பார்த்தான் சேவல் துடித்துக்கொண்டே இருந்ததை.  அந்தச் சேவலுக்கு உயிர்போன வலிதான் அதைத் துடிதுடிக்கச் செய்தது.


இப்போது வளர்ந்துவிட்ட நந்தா உணர்ந்தான் ஒரு வலியை. நந்தாவிற்கு வலிக்கிறது. உயிர் போகும் வலியல்ல. உயிர் போகும் வலியை யார்தான் கூறிவிட முடியும்? ஆனாலும் அதைவிட அழுத்தமான வலி இருக்கத்தானே செய்கிறது என்று உணர்வதைப்போல் துடிக்கிறான். அந்த நிலத்தில் மண்ணில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்ட வலிதான் அது. வருடங்கள் பல உருண்டோடின. நந்தாவின் மூதோர்  விட்டுச்சென்ற நிலம் விற்று ஆகிவிட்டது. நிலம் விற்று அவர்களுக்குக் கிடைத்த பணம் சரியான முறையில்தான் செலவழிக்கப்பட்டது. நந்தாவின் மேல்படிப்பு, சகோதரிகள் படிப்பு, இரண்டு அறைகள் கொண்ட அரசு இலவச வீட்டிற்கு, குடும்பச் செலவுக்கு எனச் சில வாரங்களிலே…


இப்போது வீடு ஒழுகுவது இல்லை. படித்த படிப்புதான் இன்று குறைவின்றிச் சோறு போடுகிறது. நல்ல மதிப்போடு வாழ வைக்கிறது. நல்லதுதான். ஆனால் எங்கே சென்று முனியப்பனுக்குப் பொங்கலிடுவது?


உடனடியாகத் தோன்றும் வலி நாளடைவில் குறைந்து போகலாம். சிறுகச் சிறுகத் தோன்றும் வலி நீடித்துக் கொண்டே இருக்கும். சில காயங்கள் வலியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பது அவை தோன்றும்போது உணரப்படுவதில்லை. 


இம்முறை தன் வண்டியை அந்த நிலத்தின் பக்கம் திருப்பினான். சீரான இடைவெளியில் இருந்த பனை மரங்களுக்கு பதில் கருங்கற்கள். தானியங்களுக்கு பதில் மழுங்கடிக்கப்பட்ட தலையில் வரும் மயிர்ப்பூச்சிகளைப் போல புற்கள்.  பாதங்கள் வருடப்படவில்லை. தனியாய் நின்ற ஒற்றைப் பனை மரம் இல்லை. துணையாய் நின்ற வேப்ப மரமும் இல்லை. முனியப்பன் எங்கே?  அங்கு இல்லை. அவன் வீடு அகற்றப்பட்டுவிட்டது. அந்த இடம் புல்டோசர் கொண்டு சுரண்டப்பட்டுவிட்டது. நந்தாவின் கண்ணில் நீர் மட்டும்தான் சொரியவில்லை. ஏதோ ஓர் உணர்வு தன் நெஞ்சை அழுத்துவதாக  நந்தா உணர்ந்தான். என்ன அது? பால்ய வயது ஞாபகங்களா? மண் வாசனையா?  அந்த மண்ணில் அனுபவித்த சந்தோஷங்களா?  இனி, தன் வாழ்வில் எந்த நிகழ்வும் இந்த மண்ணில் இல்லை என்ற கவலையா?  இல்லை என்றால் காணாமல் போன முனியப்பனா?

காலத்தை வெல்லும் முத்தமிழ்

 கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை


இனிது தமிழே இயம்பிடுவேன் என்றும்

மனித மொழிகளில் வாழும் - தனித்த

சிறப்பொடு செம்மொழியாய்ச் சீர்பெற்று நின்று

திறங்காட்டும் தன்மை தெரிந்து. 1


தெரிந்தவொரு பேச்சில் திசையெலாம் நன்கு

விரிந்த மொழியொன்றே வெல்லும் - புரியும்

இலக்கியங்கள் மிக்க இசைஞானங் கொண்ட

நிலைத்ததமிழ் நின்றிடும் நேர். 2


நேர்மறை காலமெல்லாம்; நெஞ்சம் உவந்திடும்;

பார்நிறை செம்மை படைத்திடும்; - தீர்ந்திடாச்

செந்தமிழ் போற்றிச்  சிறுமதியார் பொய்யுரைகள்

வெந்தணலில் ஏற்றியே வீழ்த்து. 3


வீழ்ச்சி தமிழ்க்கில்லை வெற்றி அதனெல்லை

வாழ்ச்சி வரவாக்கி வாழுமே - தாழ்ச்சி

ஒருபோதும் தாரா தொருபோதும் வீழா;

வருபோதும் நின்றுதரும் வாழ்வு. 4


வாழ்வு நமக்குண்டு வண்டமிழ்ச் சீருண்டு

காழ்ப்பு மனமில்லை காண்பீர்நீர் - மூழ்கும்

கடல்கொண்ட முத்தமிழ் காலத்தை வெல்லும்

உடல்கொள் உயிரே உணர். 5

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து


பகுதி – 9  கொரோனாவும்  காதலும்


ஊகான் உருவாகி உச்சம் உலகளந்து

மீகாமன் கண்வலையால் மீனள்ளல் போலவே..!


நச்சுக் கொரோனாஅ நாளும் மனிதரைக்

கொத்தும் குலையுமாய்க் கொள்கொலைக்(கு) அஞ்சுகிறோம்..!


ஊரடங்கால் இன்னும் உலகடங்கிப் போனதால்

யாரெங்கும் செல்ல எதுவும் வழியின்றி


வீட்டுள் முடங்கிக் கிடக்கின்றோம் வேதனைக்

கூட்டுள் அழுந்தித் தவிக்கின்றோம்.. வேறென்ன


ஐம்பது நாளாய் அவள்முகம் காணாது

பைம்புதல்மேல் நூலாம் படைவிரித்த கொல்வலையில்


ஈச்சிக்கித் தப்பிக்க ஏலாது துள்ளல்போல்

பூச்சிக்கும் வண்ணப் பொலிமாலை சூடுமவள்..!


பேச்சுக்கும் கண்விழி வீச்சுக்கும் ஊதுலை

மூச்சுக்கும் ஏங்கி உயிர்சிக்கி வாடுகின்றேன்..!


வாள்மேல் படுத்துறங்கும் தன்மைபோல் இக்கொடிய

நாள்மேல் கிடந்துறங்கி நாளைக் கழிக்கின்றேன்


நங்கை நினைப்பூட்டி நாகணவாய்ப் புள்பாடும்

புங்க மரத்தடியில் இன்னும் புலம்புகின்றேன்..!


செங்கை மலராளைச் சேர வலிகூட்டி

அங்குயில் கூவுகின்ற ஆலடியில் வேகின்றேன்..!


கொங்கை குளிர்காயக் கோல நிலவொளியில்

மங்கை மடிசாய்ந்து மார்பாட ஏங்குகின்றேன்..!


கைகழுவி..! மேலும் கடைத்தெரு போய்வந்தால்

மெய்கழுவி..! இன்னும் முகக்கவசம் மேலணிந்து


நுண்மீ நுழையாது நுட்பமாய்க் காப்பதெல்லாம்

கண்மணியாள் பஞ்சுக் கரம்பற்றல் வேண்டியன்றோ..!


காதலுக்கும் காற்றில் பரவும் கொரோனாக்கும்

நோதல் வலியுண்டு நோய்க்குமருந் தில்லை


தனித்திருந்தால் காதலோ சாகவைக்கும்.! நுண்மீ

தனித்திருந்தால் மட்டுமே வாழவைக்கும்..! என்பாடோ..!


வாழ்வதற்குச் சாவதும், சாவாதால் வாழ்வதுமாய்,

வீழ்வதற்(கு) எண்ணாமல் வெற்றிமேல் கண்ணாக


நெய்யுண்டேன் நேர்த்தியுடன் செய்தமுட்டை கீரையுண்டேன்

கையிற் கிடைத்தபழம் காய்கறியும் பாலுமுண்டேன்


மெய்யிலெதிர்ப் பாற்றல் மிகுத்தாலே வாழ்வுண்டாம்

பொய்யில்லை காதலுக்கும் நுண்மீ கொரோனாக்கும்


தீண்டாத தன்மையும், தேர்ந்த இடைவெளியும்

மாண்புமிகு காதல் கொரோனாக்கு நேரொக்கும்..!


தாமரைபோல் கண்ணுடையாள் தாலாட்டும் பூவிழிகள்

சாமரை வீசத் தனித்துறங்க வேண்டுமன்றோ..!


கார்மேகக் கூந்தல் கருப்பருவி போல்வீழப்

போர்மோகந் தீர்த்தப் புனலாட வேண்டுமன்றோ..!


செம்பவள வாய்க்கடலில் மூச்சடக்கி நாக்குளித்து

வெண்முத்தப் பல்துழவித் தோற்றுவர வேண்டுமன்றோ..!


நெற்றிப் பிறையுதிர்த்த நித்திலங்கள் தாமுருண்டு

முட்டிப் புருவக்கரை மோதி வழிந்திறங்கிக் 


கன்னக் குழிநிரம்பக் கார்வண்ண மீசைகுத்தி

ஒன்றிரண்டாய்த் தூக்கி உருளவிட வேண்டுமன்றோ..! 


பூக்கரங்கள் பற்றிப் புலவியாட வேண்டுமெனின்

தீக்கொரோனாத் தப்பிப் பிழைத்தாக வேண்டியதால்...!


(மீகாமன் - கப்பலோட்டுபவன், மீனவன், 

நூலாம்படை- சிலந்திவலை, 

நாகணவாய்ப் புள் – மைனா, 

நித்திலம் – முத்து, 

நுண்மீ - நச்சு, வைரஸ்)


தூது தொடரும்...

வேளாண்மையே வெற்றி

 பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்


கதைகளைப் பேசிக் கடத்திடுங் காலம்

    கழனியை உழுதிடக் காசு கொட்டும்

சதைநகம் போன்று சலம்நிலம் சேர்ந்த

    சகதியில் பயிரிட சங்கட மோடும் 

விதையினைப் போட்டு விளைச்சலைத் தேடு

    வெற்றியுன் வாசலை விரைவில் தட்டும்

பதைபதைப் பூட்டும் பசியினைத் தீர்க்கப்

    பண்படுத் தியவயல் பால்வார்த் திடுமே!


குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 23

 நேரிசை வெண்பா


1. கவிஞர் செல்லையா வாமதேவன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

புலனின் வழியும் பொறியும் -  நிலவும்

மலத்தை ஒழிக்குநன் மந்திரத் தெண்ணும்

நலமென் நமச்சிவாய வே.


2. கவிஞர் Fakhrudeen ibnu Hamdun


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

உலக இயக்கத்தின் உந்து - புலன்களும்

ஐந்து பொறியென ஆகும் இயல்பினில்

மைந்தரைப் பெற்றது மண்


3. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலமிவை நல்குமே நாடு - நிலத்திடை

நல்வழி நீக்கிநாம் நாளும் நடந்திட

அல்லல் வருமே யறி.


இன்னிசை வெண்பா


4. கவிஞர் Shaick Abdullah 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

இலமெடுத் தேயியற்கை யென்றொன் றிருப்பே!

நலமா முளமுணர் நன்னிலை யுன்னுள்

இலயித் திருவிதியே யின்!


கலிவிருத்தம்


5. கவிஞர் நெடுவை இரவீந்திரன் 


நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

வலம்சேர் வெளியில் வலம்வரும் அன்ன

குலம்சேர் உயிரால் குயவனின் கூட்டில்

நலம்சேர் அளவாய் நயம்படு மாமே


6. கவிஞர் பா.இந்திரன்


நிலம்நீர் வளிதீ நெடுஙீசும் பைந்தாம்

பலந்தந் திடுமே பாரினில் மேவிக்

குலம்தான் வளர்ந்தே குவலயங் காக்கும்

வலம்வந் திறைவனை வரமதும் பெற்றே


7. கவிஞர் வசந்தன் குருக்கள்


சிலம்பும் ஒலிக்கும் சிவனது பார்வைத்

தலங்கள் பலவும் தருவது வளமாம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்

நலங்கொள் இயற்கை நன்மையும் பெறுமே


வெண்டளையானியன்ற கலிவிருத்தம்


8. கவிஞர் வ.க.கன்னியப்பன்


நிலைக்கு முலகில் நிலவுகின்ற வைம்பூதம்

நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்;

அலைக்கின்ற வாழ்வி லதனதன் தாக்கம்

கலக்கம் மிகாதெமைக் காத்திட வேண்டுமே!

படைப்புச் செம்மல் விருது

 


கவிஞர் பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659


தமிழ்க்குதிர் ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டன்று வழங்குகின்ற படைப்புச் செம்மல் விருது இந்த ஆண்டு அன்பு நிறை சான்றாளர், பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினர், திருக்குறள் ஆய்வாளர் பைந்தமிழ்ப் பாமணி பொன்.இனியன் ஐயாவுக்கு வழங்கப்படுகிறது. 

இந்தத் திங்கள் நடைபெறவுள்ள பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை இலக்கியக் கூடலில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.


1. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

குறள்வழி நிற்குங் குணத்தினர் செப்புஞ்

சிறப்புட னாய்வார் குறளைத் - திறந்தமனப்

பொன்னினியர் பாரில் புகழுடன் நின்றோங்க

வென்னிதய வாழ்த்தளித்தே னின்று.


2. கவிஞர் மிழகழ்வன்

குறளுரைபல குடைந்தாய்ந்துரை

மறவாளரை மறவாதிருந்து

இனிதாயொரு வாழ்த்துரைக்கிறேன்

இனிக்க

வாழ்க வாழ்க பல்லாண்டு

வையம் போற்ற வாழ்க வாழ்கவே!


3. கவிஞர் நெடுவை இரவீந்திரன்

அன்புநிறை வாளர் அருமைப் படைப்பாளர்

என்னினிய நண்பர் எழுத்தாளர் - பொன்னினியர்

பல்லாண்டு சீராண்டு பாவாண்டு கூராண்டு

கல்லாண்டு வெற்றிகளைக் காண்.

பாட்டியற்றுக 24

அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்”

தமிழர் திருநாள்

1. மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

கன்னலின் சுவையோ?  வெள்ளைக்

   கற்கண்டின் சுவையோ? நெல்லின்

வெண்பொங்கல் சுவையோ? அன்றி

   வெய்யவன் வரவோ? எங்கள்

இன்னலப் பண்போ?  உங்கள்

   இதயத்தி னன்போ? இல்லை.

தன்னிக ரில்லா எங்கள்

   தமிழர்தம் திருநாள் தானே!


2. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

தைத்திரு நாளே உள்ளத் துவகை

தைத்திரு நாளே வளமும் நலமும்

தைத்திரு நாளே பொங்கல் இன்பம்

தைத்திரு நாளே தமிழர் நாளே


3. கவிஞர் பொன். இனியன்

ஆண்டு வரவுடன் ஆர்க்குந் திருநாளாய்

ஈண்டுவந்த திப்பொங்கல் நன்னாளில் யாண்டும்

இனிமையே பொங்குக வென்றியான் வாழ்த்தி

நனிமகிழ் உற்றேன் நயந்து 

வினாதலும் விடுத்தலும்

வினா: ஒருவரின் பெயரைக் கவிதையில் வகையுளியாக எழுதலாமா?

            - கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்

விடை: வகையுளியைத் தவிர்க்கும்பொருட்டுப் பெயரை மாற்றி எழுதுதல் சரியன்று. எனவே இவ்விடத்தில் வகையுளி ஏற்கப்படும்.