'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

தனித்தியங்கும் ஆற்றலும், தன்கிளையாகப் பல மொழிகளையுண்டாக்கும் ஆற்றலும் கொண்ட நம் இனிய தாய்மொழியைச் சிதைக்கவும், அதன் பெருமையைக் குன்றச் செய்யவுமான பல கமுக்கச் செயல்கள் மிக வேகமாக நடந்து வருகின்றன.  மொழிப்பெருமை பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பதையே தமிழ்ப்பணி என்றிருந்து விடாமல், ஒத்த உணர்வுடைய அனைவரும் நம் மொழியைக் காக்க அணியமாக வேண்டிய தருணமிது.

ஆட்சியாளர்களும், அவர்களைப் பின்னிருந்து இயக்குவோரும் தமிழுக்கு நேரும் இழிவினைக் கண்டு பதைப்பதுமில்லை. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை. தன் தாய்மொழியின் அழிவைக் கண்டும் சுரணையற்றிருப்பவன் தன் தாய் அழிவதைக் கண்டு மனம் இன்புறுவான் போலும். இக்காலத் தமிழர்தம் இழிநிலை இதுவேயாம்.

கல்வித்துறையென்பது அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியை அடியொற்றியதாக இருந்தால் தானே அம்மாநில மக்கள் தம் மொழியில் பயின்று முன்னேறுவதுடன், தங்கள் முன்னோரின் ஆற்றலையும், பெருமையையும் அறிந்துகொள்ள ஏதுவாகும்? வெறுமனே மதிப்பெண்ணுக்கும், எதிர்கால வருவாய்க்குமாக மட்டுமே நம் கல்விமுறை கட்டமைக்கப்படுகிறது. இதன் விளைவை இன்னும் சில ஆண்டுகளிலேயே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இக்காலத் தலைமுறையே தமிழையொதுக்கிப் பிறமொழியைத் தேர்ந்தடுப்பதும், தம் தாய்நாட்டில் தங்கள் அறிவைச் செலவழிக்காமல் அயல்நாட்டிற் கடிமையாய் இருப்பதும்  மிக்கோங்கியிருக்க,  இன்றைய ஆட்சியாளர்களும் தங்கள் பங்காக நம் தமிழை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் செயல்படுகின்றனர். தாய்மொழியை விடுத்துப் பிறமொழியை நாடுவதால் நம்மினத்தின் அடையாளம் மறைந்துபோய், ‘இவன் தமிழன்’ என்னும் குறியீட்டிற்கும்கூட ஒருவருமில்லா இழிநிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை நினைவிற்கொள்க.

நம் வயிற்றுவலிக்கு நாமே மருந்துண்ண வேண்டும். நம்பசிக்கு நாம்தான் அழவேண்டும். நம் பிள்ளைகளைத் தமிழ்வழியில்  படிக்கச் செய்வோம். கல்லூரி வரை தமிழிலேயே பயிலச் செய்வோம். (பன்னாட்டுத் தொடர்பு மொழியறிவு வேண்டுமாயின் ஆங்கிலத்தைப் பயில்வோம். ஆனால் ஆங்கிலமே சிறந்ததென்னும் மாயையில் வீழாதிருப்போம்). தமிழ்ப்பற்றுடையோரை அரசாளச் செய்வோம்! 

தமிழோரே! அணியமாகுக! தாய்மொழியைக் காக்க அணிதிரள்க.!!
தமிழன்புடன் 
பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஆசிரியர்
அலைப்பேசி : 7418867669

பாட்டியற்றுக - 4

அன்பான கவிஞர்களே!

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

1. ஒருவர் ஒரு பாடல் மட்டும் எழுத வேண்டும்.
2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் "குறித்தபடி தொடுத்த பாடல்கள்" என்ற பகுதியில் வெளியிடப்படும்.
3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

அமிழாதா தமிழென்று பகைவர் நெஞ்சில் 
  அறமில்லாக் கோட்டைகளைக் கட்டு கின்றார்

குறித்தபடி தொடுத்த பாடல்கள்

சென்ற இதழில் கொடுத்த அடியின் பாவகை: வஞ்சி விருத்தம்

1. ச. பாலாஜி, சோளிங்கர்.

மண்ணில் மூத்த மொழியான
அன்னைத் தமிழைக் கற்கின்ற
எண்ணம் எங்கும் மேலோங்கக்
கண்ணே பாப்பா தமிழ்பேசு

2. தமிழகழ்வன் சுப்பிரமணி

எண்ணம் தமிழில் இயங்கட்டும்
பண்ணில் இன்பம் பெருகட்டும்
கண்ணாய்த் தமிழைக் காத்திடவே
கண்ணே பாப்பா தமிழ்பேசு

பைந்தமிழ்ச் சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை கிளையின் ஆறாம் கூடல்!


பைந்தமிழ்ச்சோலை இலக்கியப்பேரவை திருவண்ணாமலை கிளையின் ஆறாம் கூடல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிளை நூலகத்தில் தமிழ்த்திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களின் தலைமையில் 21/04/2019 அன்று மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.

தமிழ்த்திரு. .அமலா வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் அந்தணர்கோ, தமிழ்த்திரு. சொல்லினியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்த்திரு. .உமாராணி அவர்கள் நோக்க வுரையாற்றிப் பேரவையின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஆரணி கிளை நூலகர் தமிழ்த்திரு. முகுந்த் அவர்கள் வாழ்த்துரை கூறினார்.

கவிஞர் சி.ஆறுமுகம் அவர்கள்குறளமுதம்எனும் தலைப்பில் குறளமுதமூட்டிச் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் முனைவர் .உமாராணி அவர்கள் இலக்கியச் சாரலில் அனைவரையும் நனையவைத்தார். அர.விவேகானந்தன் அவர்கள் தலைமையில் யாப்பிலக்கண வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மழலை அனுஜா திருக்குறள் மழைபொழியக்,  கலந்து கொண்ட அனைவருக்கும் அர.விவேகானந்தன் அவர்களின் எழுதிய 'விரல்நுனி விளக்குகள்' எனும் நூலை நெறியாளர் அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் நினைவுப் பரிசாக வழங்கினார்.

நிறைவாகத் தமிழ்த்திரு.சுதா அவர்கள் நன்றி நவில நிகழ்வு  இனிமையாக நடந்தேறியது. நிகழ்வு முழுவதையும் ஆவணப்படுத்தும் நோக்கில் தமிழ்த்திரு. ருக்கேஷ்குமார் அவர்கள் ஒளிப்படம் எடுத்துச்சிறப்பித்தார். இந்நிகழ்விற்குப் பாவலர் .மோகன், பாவலர் வித்யா, பாவலர் பாரதி, பாவலர் செல்வக்குமாரி உள்ளிட்ட பாவலர்களும், பல்வேறு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்சான்றோர் பெருமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக, அடுத்த நிகழ்விற்கான இனிய பொழுதை மனத்திலேற்றுப் பிரிய மனமில்லாது அனைவரும் இல்லம் அடைந்தனர்.

இலக்கியச் சாரல் - 1

முனைவர் . உமாராணி
    
இலக்கியங்கள் யாவும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அறிவதற்கான நல்லதொரு வாய்பை அளிக்கவல்லன. அந்த நிலையில், இலக்கியத்தை நாம் படிக்கும்போது மனத்தில் ஏற்படும் சில்லென்ற சாரலை ஏற்படுத்தும் பாடல்களை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற திருமூலரின் இனிய வரிகளுக்கேற்ப, இவ்வின்பத்தை அனைவரும் பெறுக!

தலைவி,தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல்,

நள்ளென் றன்றே யாமம் சொல்அவிந்(து)
இனி(து)அடங் கினரே மாக்கள் முனி(வு)இன்றி,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே!
    
அதாவது, நடு இரவு இருட்டாக இருக்கின்றது. சொற்கள் அடங்கிவிட்டன. வெறுப்பு எதுவும் இன்றி, உலகத்திலுள்ள மக்கள் இனிமையாக உறங்குகின்றனர். ஆனால், நான் மட்டும் உறங்காமல் இருக்கின்றேன் என்று தலைவனின் பிரிவைத் தாங்காமல் தோழியிடம், தலைவி கூறுவதாக இயற்றப்பட்டுள்ளது.
    
அதே மனநிலையில், திருவள்ளுவரின் குறளானது,

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

அன்று கடலும் தாங்க முடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள் இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றனஎன்று தலைவி புலம்புவதாக இக்குறள் அமைந்துள்ளது.

கானுறங்குது காற்றும் உறங்குது
நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

என்று கண்ணதாசனின் பாடலும் இயம்புகின்றது.
    
மனம் தவிக்கும்போது கண்கள் உறங்க மறுப்பதை எண்ணும்போது, மனத்திற்கும் உடல் உறுப்பிற்கும் உறவுண்டு என்ற உளவியல் உண்மையை  அறிய முடிகிறது.

வேரை வெறுத்த விழுது

பா. ஜெயசக்கரவர்த்தி கோவில்பட்டி.

கடற்கரை தனது மகன் பாலனுடன் பாதசாரியாக நடந்து வந்தார்.

வரும் வழியில் அமைந்திருந்த சுப்பையா மிட்டாய் கடையைக் கண்டதும் பாலனுக்கு பூந்தி சாப்பிடும் ஆவல் மேலிட்டது.

''ஐயா! ஐயா! எனக்கு பூந்தி வாங்கித் தாருங்களேன்'' எனப் பாலன் இறைஞ்சினான்.

''கொஞ்சம் பொறு! ஐயா உனக்கு நிறைய வாங்கித்தருகிறேன்.'' என்று கடற்கரை கூறவும், பாலன் மிகவும் உவகையுற்றான்.

ஏனென்றால் அனைவரும் 100 பூந்தி, 100 சேவு என்று சிறுசிறு பொட்டலங்களாக வாங்கிக் கொண்டிருந்தனர். தனது தந்தை பெரிய பொட்டலமாக வாங்கித் தருகிறேன் என்று கூறியவுடன், சிறுசிறு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு சென்ற நுகர்வோரைக் கேலிச் சிரிப்புடன் கண்டுகொண்டிருந்தான்.

அவன் முறை வந்தது.

அவன் கேலிசெய்து சிரித்த சிறு பொட்டலத்தை விடவும் சிறியதான 50 கிராம் பொட்டலத்தைத் தனது தந்தை வாங்கியதை எண்ணி மனதுக்குள் குமைந்தான்.

மறுநாள் தனது வாடகை வீட்டினருகே மகிழுந்து சென்று கொண்டிருப்பதைக் கண்ணுற்ற பாலன் தனது தந்தையிடம், ''ஐயா! நாமும் மகிழுந்து வாங்குவோம், ஐயா'' எனக் கூறினான்.

கடற்கரையும், ''வாங்கலாமே...'' என்று கூறவும், பாலன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அன்று மாலை அவன் வீட்டினருகே ஒரு மகிழுந்து நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் தனது தந்தைதான் தனக்காக மகிழுந்து வாங்கியுள்ளார் என்றெண்ணி அவன் கர்வப்பட்டான்.

தந்தையை எண்ணி மிகவும் பெருமைப்பட்டான்.

கடற்கரை, பாலனைத் தூக்கிக்கொண்டு அந்த மகிழுந்தின் அருகே வரவும் அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

மகிழுந்தின் மேலே அவனைத் தந்தை உட்கார வைத்தது, அவனை சொர்க்கத்திற்கே அழைத்து சென்றது போல் இருந்தது.

அந்நேரம் பார்த்து, மகிழுந்தின் உரிமையாளர் அருகே வரவும், தனது மைந்தனை அங்கிருந்து தூக்கி நகன்று சென்றார்.

மைந்தனும் தனது இதயம் என்னும் மகிழுந்தின் உச்சியில் அமர வைத்திருந்த தனது தந்தையை அங்கிருந்து தூக்கிக் கீழே இறக்கினான்.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ… பகுதி - 3

தமிழகழ்வன் சுப்பிரமணி

மொழி இறுதி எழுத்துகள்

தமிழார்வலர்களுக்கு வணக்கம்!

சென்ற பகுதியில் மொழிமுதல் எழுத்துகளைப் பற்றிப் பார்த்தோம். இப்பகுதியில் மொழி இறுதி எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

சொற்களின் இறுதியில் நிற்கும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.

1.            உயிரெழுத்துகள்

             ஒளகாரம் தவிர மற்ற 11 உயிர்களும் மொழி ஈறாக அமையும். அவற்றுள்

             நெடில் எழுத்துகள் தனித்து (ஓரெழுத்து ஒருமொழியாய்) ஈறாகும். .கா: , , , , , .

             குறில் எழுத்துகள் அளபெடையில் ஈறாகும். .கா: கடாஅ, குரீஇ, ஆடூஉ, நசைஇ, என்னேஎ, அதோஒ.

             ஒளகாரம் பெயராகவும், வினையாகவும் வாராது குறிப்பிடைச் சொல்லாக மொழி ஈறாக அமையும். .கா: ஒள.

2.            மெய்யெழுத்துகள்

             மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொரு எழுத்துகள் மொழி ஈறாய் அமையும். .கா: கண், அறம், மன்னன், சேய், சேர், செல், ஆழ், ஆள்.

             ஞகரப் புள்ளி ஒரு சொல்லில் மட்டுமே ஈறாக வரும்.  .கா. உரிஞ் (உரியும் தோல்).

             நகரப் புள்ளி இரண்டே சொற்களில் ஈறாக வரும். .கா. பொருந் (பொருத்திக்காட்டு), வெரிந் (முதுகு).

             வகரப் புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும். .கா. அவ், இவ், உவ், தெவ் (பகை).

             னகரப் புள்ளியை ஈறாக உடைய (ஈரெழுத்தொரு மொழியல்லாத) தொடர் மொழிகளுள், மகர ஈற்றுத் தொடர்மொழிகளாக மயங்குதலினின்று வரையறுக்கப் பெற்றவை அஃறிணைப் பொருள்மேல் கிளக்கப்பெற்ற ஒன்பது சொற்கள் ஆகும். அவை எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என்பன.

             மெய்யெழுத்துகளில் க், ச், ட், த், ப், ற், ங் ஆகிய ஏழு எழுத்துகள் சொற்களில் ஈற்றெழுத்தாக அமையா. எனவே இவ்வெழுத்துகளை ஈறாகக் கொண்ட பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது திருத்தி எழுத வேண்டும். .கா. தீபக் - தீபன், தீபகன்; நாயக்நாயகன்; மார்க்மார்க்கு; மார்ச்மார்ச்சு; ஆகஸ்ட்ஆகத்து; நாத்நாதன்; வினோத் - விநோதன்; பிரதீப்பிரதீபன்.

3.            உயிர்மெய்யெழுத்துகள்

             ஒளகாரம் ககர, வகர மெய்களோடு மட்டும் கூடி மொழி ஈறாகும். .கா: கௌ, வெள.

             எகரம், மெய்யுடன் கூடி ஈறாகாது. கன்னடம் தமிழோடு இவ்விதியில் வேறுபடுகிறது எனலாம். கன்னடத்தில் பல சொற்களில் எகரம் மெய்யோடு கூடி மொழி ஈறாய் அமையும். .கா: தாவரெ கெரெ (ತಾವರೆ ಕೆರೆ) - தாமரை ஏரி; ஹலெ (ಹಳೆ)  - பழைய; ஹொகெ (ಹೊಗೆ) – புகை.

             ஒகரம் நகர மெய்யுடன் மட்டும் கூடி மொழி ஈறாகும். .கா: நொ, நொக்கொற்றா.

             ஏகார ஓகாரங்கள் ஞகர மெய்யோடு கூடி ஈறாதல் இல்லை. .கா. உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ - இவை எச்சமும், தொழிற்பெயரும் பற்றி வரும். அஞ்ஞை, மஞ்ஞை இவை பெயர். ஏனையைந்தும் விலக்கப்பட்டன.  உரிஞோ  என்பது  'கடிசொல்லில்லை' என்பதனாற் கொள்க.

             உகர ஊகாரங்கள் நகர, வகர மெய்களோடு கூடி ஈறாதல் இல்லை. ஏனைய மெய்களோடு கூடி ஈறாகும். .கா. நகு, உசு, கடு, அணு, அது, தபு, உருமு, உரு, கமு, உறு, மின்னு. நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ.
எனில் கதவு, வரவு, செலவு என்பவை எவ்வாறு வரும்? அவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். எனில் இவை வகர ஈறா? அன்று. அங்கே நிற்கும் வகரமெய், உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் ஆகும்.

             திரிபின்றி முற்றியலுகரமாக வரும் சகர உகரம் (சு) இரண்டு ஆகும். அவை உசு, முசு என்பன. பசு, வசு முதலியவை ஆரியச் சொற்கள். அரசு, முரசு என்றாற்போல வரும்  ஏனையவை,  புணர்மொழி நோக்கி முற்றியலுகரமாயும் குற்றியலுகரமாயும் நிற்றற் கேற்பன.

             முற்றியலுகரமாக வரும் பகர உகரச் சொல் ஒன்றே. அஃது தொழிற்பெயர், ஏவல்வினை ஆகிய இரண்டிடத்தும் நிற்கும் பொருண்மையுடையதாகும். .கா: 
             தபு - நீதபு! எனவரும். = கெடுவாயாக! 
             பெயராயின் தவறு என்பது பொருளாம். அது இக்காலத்துத்தப்புஎன வழங்கும்.

             இதுகாறும் விதந்து கூறப்பட்ட ஒள, , , , , , என்பவை தவிர்ந்த , , , , ஆகிய ஐந்து உயிர்களும் ஙகரம் தவிர்ந்த எல்லா மெய்களோடும் கூடி ஈறாதற்குக் குறைவில.

             மொழிக்கு ஈறாகா உயிர்மெய்களும், ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண் ஈறாக நின்று புணரும். .கா. நுப்பெரிது, வுச்சிறிது, ஙக்களைந்தார்.

சகர உகரச் சொற்கள் இரண்டே, பகர உகரச்சொல் ஒன்றே, நகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல்  இரண்டே, ஞகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் ஒன்றே, வகரப் புள்ளியை ஈறாய்க் கொண்ட சொல் நான்கே என எண்ணிக்கையோடு காட்டப்பட்டதன் நோக்கம் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற்கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச்சொற்கள் இவையே என அறிதற் பொருட்டு ஆகும்.

4.            குற்றியலுகரம் - குறுகிய உகரம் மொழி இறுதியில் அமையும். .கா. பாகு, காசு, பட்டு, பத்து, காப்பு, ஒன்று.

இவ்வாறு பன்னிரு உயிர்கள், பதினொரு மெய்கள், குற்றுகரம் ஆகிய 24 எழுத்துகள் சொற்களின் இறுதியில் அமையும். மெய் முன்னும், உயிர் பின்னுமாய் ஒலித்து நிற்பது போலவே உயிர்மெய்க்கு மெய் முதலாகும்; உயிர் இறுதியாகும்.
                                                      (தொடரும்)

பைந்தமிழ்ச் சோலை – சென்னை இலக்கியப் பேரவையின் ஆறாம் கூடல்!


பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை சென்னை - இலக்கியக் கூடல்-6,  கடந்த 28/04/2019 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை அசோக்நகர் சங்கமம் உணவகத்தில் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது.

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை சென்னை - நிறுவுனர், தலைவர் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

கடல்கடந்து தமிழைப் பரப்பித் தமிழுணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற, எண்ணற்ற நூல்களின் வழியாகத் தன்னுடைய உணர்வையும் உந்துதலையும் மற்றவர்களுக்குச் சேர்க்கும் விதமாகத் தமிழ்ப்பணியாற்றி வரும் கவிஞர் பரமநாதன் கணேசு அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாகப் பைந்தமிழ்க்குவை விருது வழங்கப்பட்டது. அதனுடன் பைந்தமிழ்ச் செம்மலாகிப் பைந்தமிழ்ச்சோலையில் சிறப்பாகப் பாடம் நடத்தியமைக்காக, நற்றமிழாசான் விருது  வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே தமிழ்மொழியின்பால் நாட்டமும் பேரார்வமும் கொண்டு அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்ற பணியாகச் சாதிக்கின்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகிய பைந்தமிழ்க்குருத்து எனும் விருது பைந்தமிழ்ச் செம்மல், நற்றமிழாசான், ஆசுகவி, பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் தலைவர் முனைவர்  அர.விவேகானந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் முனைவர் இரா.கஸ்தூரிராசா அம்மையார் அவர்கள் விருதுவழங்கிப் பாராட்டி உரையாற்றினார். கவிமழையில் நனைய வைத்தார்.

இருவரையும் கவிஞர்கள் அழகர்சாமி, சியாமளா ராசசேகர், இரா.கண்ணன், சாமிசுரேசு, விவேக் பாரதி, தமிழகழ்வன் ஆகியோர் பாமாலை பொழிந்து பாராட்டினர்.

கவிஞர் பரமநாதன் கணேசு அவர்கள் ஏற்புரையும், கவிஞர் முனைவர்  அர. விவேகானந்தன் அவர்கள் நன்றியுரையும் ஆற்ற, அறுசுவை உணவோடு விழா இனிதே நிறைவுற்றது.