'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

வேரை வெறுத்த விழுது

பா. ஜெயசக்கரவர்த்தி கோவில்பட்டி.

கடற்கரை தனது மகன் பாலனுடன் பாதசாரியாக நடந்து வந்தார்.

வரும் வழியில் அமைந்திருந்த சுப்பையா மிட்டாய் கடையைக் கண்டதும் பாலனுக்கு பூந்தி சாப்பிடும் ஆவல் மேலிட்டது.

''ஐயா! ஐயா! எனக்கு பூந்தி வாங்கித் தாருங்களேன்'' எனப் பாலன் இறைஞ்சினான்.

''கொஞ்சம் பொறு! ஐயா உனக்கு நிறைய வாங்கித்தருகிறேன்.'' என்று கடற்கரை கூறவும், பாலன் மிகவும் உவகையுற்றான்.

ஏனென்றால் அனைவரும் 100 பூந்தி, 100 சேவு என்று சிறுசிறு பொட்டலங்களாக வாங்கிக் கொண்டிருந்தனர். தனது தந்தை பெரிய பொட்டலமாக வாங்கித் தருகிறேன் என்று கூறியவுடன், சிறுசிறு பொட்டலங்களை வாங்கிக் கொண்டு சென்ற நுகர்வோரைக் கேலிச் சிரிப்புடன் கண்டுகொண்டிருந்தான்.

அவன் முறை வந்தது.

அவன் கேலிசெய்து சிரித்த சிறு பொட்டலத்தை விடவும் சிறியதான 50 கிராம் பொட்டலத்தைத் தனது தந்தை வாங்கியதை எண்ணி மனதுக்குள் குமைந்தான்.

மறுநாள் தனது வாடகை வீட்டினருகே மகிழுந்து சென்று கொண்டிருப்பதைக் கண்ணுற்ற பாலன் தனது தந்தையிடம், ''ஐயா! நாமும் மகிழுந்து வாங்குவோம், ஐயா'' எனக் கூறினான்.

கடற்கரையும், ''வாங்கலாமே...'' என்று கூறவும், பாலன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அன்று மாலை அவன் வீட்டினருகே ஒரு மகிழுந்து நின்று கொண்டிருந்தது. அதனைக் கண்டதும் தனது தந்தைதான் தனக்காக மகிழுந்து வாங்கியுள்ளார் என்றெண்ணி அவன் கர்வப்பட்டான்.

தந்தையை எண்ணி மிகவும் பெருமைப்பட்டான்.

கடற்கரை, பாலனைத் தூக்கிக்கொண்டு அந்த மகிழுந்தின் அருகே வரவும் அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

மகிழுந்தின் மேலே அவனைத் தந்தை உட்கார வைத்தது, அவனை சொர்க்கத்திற்கே அழைத்து சென்றது போல் இருந்தது.

அந்நேரம் பார்த்து, மகிழுந்தின் உரிமையாளர் அருகே வரவும், தனது மைந்தனை அங்கிருந்து தூக்கி நகன்று சென்றார்.

மைந்தனும் தனது இதயம் என்னும் மகிழுந்தின் உச்சியில் அமர வைத்திருந்த தனது தந்தையை அங்கிருந்து தூக்கிக் கீழே இறக்கினான்.

No comments:

Post a Comment