'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

ஆசுகவிச்சுழல் - 1

முதல் அமர்வு:
தலைவர்: மரபுமாமணி பாவலர் மா வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே!

வான்மழை பெய்யும் போது
   வகைபிரித் தொழுக லில்லை
தேன்தரு மலர்கள் நல்லோர்
   தேடியே சேர்வ தில்லை
ஏனுனக் கினிமை யென்றே
   இசைக்குயில் கூவ லில்லை
நானெனக் கென்று வாழும்
   நசைமிகு வுள்ளங் கொண்டோம் 1

கொண்டவிவ் வாழ்வில் உள்ளக்
   குறுக்கமே அதிகம் கொண்டோம்
நண்டென வினைகள் செய்தோம்
   நரித்தனம் பலவும் செய்தோம்
கண்டிலாக் கொடுமை யெல்லாம்
   கலங்காமற் செய்து வந்தோம்
உண்டுகொல் மாந்த நேயம்?
   உணர்வினில் அன்பு முண்டோ? 2

அன்பினை மறந்த தாலிங்
   கவலமே மிகுக்கக் கண்டோம்
துன்பிலே உழலும் வாழ்வைத்
   துய்க்கிறார் பலபே ரீங்கே
என்புள வுயிர்கட் கெல்லாம்
   ஏற்றதோர் பண்பே யன்பாம்
இன்பமாய் வாழ வேண்டின்
   ஏற்றநல் லன்பைக் கொள்வோம்! 3

கொள்வதும் குறைப டாது
   கொடுப்பதுங் குறைப டாது
தெள்ளிய ஆற்று நீராய்த்
   தெளிந்தநல் வாழ்வைக் காண
அள்ளிநாம் தெளிப்போம் இன்ப
   அன்பெனும் அமுதம் தன்னை
உள்ளுவீர் உண்மை வாழ்வின்
   உயர்வுதான் அன்பென் றேனே! 4
              ★★★

கவிஞர் இரா.கண்ணன் 

உயர்வுதான் அன்பென் றேனே
   உளமதி லின்பத் தேனே
அயலரும் யாரு மில்லை
   அன்பினால் சொந்த மாவார்
வயல்வெளி செழுமை போலே
   வாழ்வினில் இன்ப மாகும்
கயமைகள் நெஞ்சில் வேண்டா
   கடமையாய் அன்பைச் செய்வோம் 1

அன்பினை நெஞ்சில் ஏற்றி
   அறவழி நடப்போம் நாளும்
இன்னலும் இதனால் போகும்
   இன்பமே வாழ்வென் றாகும்
கன்னலாய்க் காலம் செல்லும்
   காட்சிகள் யாவும் மாறும்
தென்னையில் தென்றல் போலே
   தேனிசை காதில் ஓதும் 2

ஓதுவோம் உலகோர் காதில்
   உண்மையை உரக்க நாமும்
தீதுகள் இன்பம் பெய்யாத்
   தேவைதான் அன்பே இங்குச்
சூதுகள் வேண்டா நம்மில்
   சூக்குமம் உடைப்போ மிங்கே
ஆதியாம் தமிழர் சொல்லை
   அகிலமும் ஏற்கும் தானே 3

தானென எண்ணம் வேண்டா
   தன்னலம் அதுவே யாகும்
வானெனப் பொழிவோம் அன்பை
   வாகையும் இதுவே யாகும்
தேனெனச் சுவையைக் கூட்டித்
   தெளிதமிழ் வளத்தை ஊட்டிப்
பேணுவோம் அன்பை நாளும்
   பெருமையாம் உலகி லன்பே 4
             ★★★

கவிஞர் ஜெனிஅசோக்

பெருமையாம் உலகில் அன்பே
   பெரியவர் சொன்னார் அன்றே!
இருளினைக் கிழித்துச் சென்றே
   இமைகளில் உறைய நாடும்
கரும்பெனத் தானும் சேர்ந்தே
   கசப்பினை நீக்கக் தூண்டும்
அருமருந் தன்பொன் றென்றே
   அனைவரும் உணர்தல் நன்றே..! 1

அனைவரும் உணரும் நாளில்
   அவனியே அமைதி கொள்ளும்
சினங்களும் ஓடிப் போகும்
   சிறுவரின் பண்பும் கூடும்
இனங்களில் இணக்கம் வாரும்
   இகழ்ச்சிகள் மறைந்தே போகும்
எனக்கென யாரும் வாழார்
   எதனையும் தாங்கும் அன்பே.! 2

அன்பிலா வாழ்வில் உண்டோ
   அகநலம் சொல்வாய் நெஞ்சே..
தன்னலம் சேருங் கால்நீ
   தன்னையே மறக்க லாமோ?
என்பிலாத் தேகம் போலே
   எத்தனைக் காலம் வாழ்வாய்?
இன்புறு, பேதம் இன்றி
   இத்தரை நேசித் தாள்வாய்! 3

நேசமே பகையை வெல்லும்
   நிரந்தர மகிழ்வைத் தாரும்.
பாசமே கபடம் கொல்லும்
   பார்வையைத் தூய்மை யாக்கும்.
மாசுகள் போக்கிப் பாரில்
   மனிதனைச் செழிக்க வைக்கும்.
பேசுவோர் நாவைக் காக்கும்
   பெரும்புகழ் சேர்க்கும் அன்பே! 4
             ★★★

கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி

பெரும்புகழ் சேர்க்கும் அன்பே
   பேதைமை களையும் அன்பே
அரும்பிய குழந்தை காட்டும்
   அரும்பெனும் முறுவல் கண்டே
திருந்துதல் வேண்டும் வையம்
   செழிப்பினைக் கூட்டும் உள்ளச்
செருக்கினை அடக்கும் வெள்ளப்
   பெருக்கெனத் திகழும் அன்பே 1

அன்பிலா உள்ளத் தாலே
   அவலமே மிஞ்சும் மிஞ்சும்
இன்பிலா வாழ்க்கை எங்கே
   எதனையும் ஈயார் தேடித்
துன்பமே சூழ வாழ்வார்
   துணையென யாரு மில்லார்
நன்மைகள் சேர்க்க மாட்டார்
   நானிலம் போற்ற வாழார் 2

வாழ்க்கையென் சக்க ரத்தில்
   வண்டியை ஓட்டு தற்குக்
காழ்ப்புகள் நீக்க வேண்டும்
   காதலைப் பொழிவ தற்குப்
பாழ்படச் செய்விக் கின்ற
   பணமது வேண்டா வேண்டா
ஆழ்மனம் சொல்லும் உண்மை
   அன்பொடு வாழ நன்மை 3

நன்மைசேர்த் தின்பம் நல்கும்
   நயமிகு வாழ்வை நல்கும்
என்பையும் பிறருக் கீவார்
   இணையிலா அன்பு கொண்டார்
வன்மைசேர் பாலை தன்னில்
   வற்றிய மரந்த ளிர்த்தல்
அன்பகத் தில்லா வாழ்க்கை
   அறிகுவீர் அகிலத் தோரே 4
                           ★★★

கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி 

அறிகுவீர் அகிலத் தாரே
   அகத்தினில் அன்பை நன்றாய்ச்
செறிவுடன் புகுத்த நாளும்
   சிறக்குமே எண்ணம் யாவும்
நெறிபல வைத்தார் சான்றோர்
   நிதமதைப் பற்றி வாழ்வில்
அறிவுடன் ஏற்றம் காண
   அனைவரும் கூட லாமே 1

மேதினி வாழும் மக்கள்
   மிருகமும் புள்ளும் பூவும்
யாதொரு இனமே யானும்
   இனிதுயிர் ஒன்றே என்போம்
தீதொரு எண்ணம் நீக்கித்
   தெளிவுடன் அன்பைக் கூட்டிச்
சோதனை தீண்டும் போது
   துயரினைத் துடைப்போம் ஒன்றாய் 2

ஒன்றதே குலம்தான் என்போம்
   உயர்வதே நெறியாய்க் கொள்வோம்
தன்னலம் பாரா தென்றும்
   தருமமே வழியாய்க் கொண்டு
வன்செயல் ஏதும் செய்யா
   வளம்தரும் செயல்கள் நோக்கி
இன்முகம் கொண்டே என்றும்
   இயன்றதைச் செய்வோம் இன்றே 3

இன்றுள வாழ்வில் எங்கும்
   இடர்நிறை உண்டென் பேனே
தன்னலம் போற்றும் மாந்தர்
   சதிகளைத் தூண்டும் தீயோர்
இன்னலை மற்றோர் காண
   இன்புறும் நெஞ்சத் தாரை
இன்றுடன் இயல்பை மாற்றி
   இணைகுவோம் அன்பி னாலே
                            ★★★

கவிஞர் கற்றுப்பட்டு பி.கே.அ. தாரா. 

இணைகுவோம் அன்பி னாலே
   இனிதென உயிரின் மீதே
அணைப்பினால் சுகமும் கூட்டி
   அன்பென வழியைத் தேற்றித்
துணையெனத் தொடர்ந்து வந்தால்
   துயரமே ஏது மில்லை
விணைகளும் செய்யு மீசன்
   விடையென யாது மாவே!
                          (தொடரும்)

No comments:

Post a Comment