'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

உத்தம குரு (குறுங்காவியம்)

  பைந்தமிழ்ச் செம்மல்  விவேக் பாரதி

பகுதி 2
சிறப்புரைப் படலம்

ஆற்றுச் சிறப்பு
(எண்சீர் விருத்தம்)

நந்திமலை விட்டெழுந்து நகருக்குள் ஓடி
  நலமெல்லாம் வளமெல்லாம் நனிசேர்த்துத் தந்து
விந்தைசெயும் ஆறுகளில் வியனுலகம் போற்றும்
  விவசாயத் தாயாற்றின் வனப்புகளைச் சொல்வேன்!
எந்தவொரு தடைவரினும் எதிர்க்கின்ற வெள்ளம்!
  ஏந்திழையர் இடைநடம்போல் நடக்கின்ற வெள்ளம்!
முந்திவரும் பாலாற்றில் மூழ்கியெழுந் தாடி
  முத்தாடும் மக்களது முறுவலெலாம் முத்தே!

பருவத்தின் மழைநம்பிப் பயிர்செய்யும் மக்கள்
  பாசத்தால் அழைத்தவுடன் அணைக்கின்ற தாய்போல்,
உருவத்தில் பெரிதாகி ஓடோடி வந்தே
  உயிர்சேரப் பயிர்வாழ அணைக்கின்ற அன்னை!
புருவத்தில் வில்லுடைய எழில்மாதர் போடும்
  புதிர்போலும் ஆருக்கும் விளங்காத தோற்றம்!
சருமத்தில் கொதிப்பெய்திக் கிடக்கின்ற பூமி
  சார்ந்தயரச் சேர்ந்ததொரு அமிழ்தத்தின் ஓட்டம்!

வெய்யோனின் சுடுங்கனலைச் சமன்செய்ய வந்த
  வெண்ணிலவின் வண்ணத்தில் விளங்கும்பா லாறு!
துய்யவுரு கொண்டெவரும் துக்கங்கள் போக்கத்
  தோன்றியவோர் அமரர்தம் உலகத்தின் ஊற்று!
செய்யாறோ டின்னபிற கிளைபரப்பி மண்ணைச்
  செழுமைக்கே உரித்தாக்கும் உயர்வான எண்ணம்!
கையுறவே வங்காள வரிகுடாவைத் தீண்டும்
  காரிகையை நேரொத்த கவினுறுபா லாறே!

வானரங்கள் ஆங்காங்கே குதிப்பதுவும்! மக்கள்
  வாய்பிளந்தே ஓட்டத்தை வியப்பதுவும்! நல்ல
கானவர்கள் கழுத்தளவுச் சாதகமும்! நெல்லின்
  கதிரெடுத்து பரப்புகின்ற விளையாட்டும்! மேலே
வானவர்கள் நீராட விழைவதுவும்! ஓடும்
  வண்ணமுடைப் பாலாற்றின் வனப்பென்று கண்டோம்!
தேனெனுமிந் நதிபாயும் தேசுடைய நாட்டைச்
  சேர்ந்தபுகழ் யான்சொல்லக் கேட்டிடுவீர் பின்னே!!

நாட்டுச் சிறப்பு
(அறுசீர் விருத்தம்)

கருமருதும் அகிலும் பொன்னும்
  குதிரைபல வணிகம் செய்யும்
பெருநாடு பெரியோர் வாழும்
  பேரருளும் நிரம்பு நாடு
திருவருளும் மன்னும் நாடு
  தினமும்நீர் மீன்கள் சேரும்
வருவாயால் வளரும் நாடு
  வளமெல்லாம் சேரும் நாடு!

பைந்தொடியார் வாழும் நாடு 
  பசுமையெலாம் நிறைந்த நாடு
கூந்தலிலே அகிலைக் காட்டிக்
  குளிக்கின்ற பெண்டிர், தங்கள்
பூந்தொடையில் சந்த னத்தைப்
  பூசுகிற எழிலைக் கண்டு
காந்தருவர் சொர்க்கம் என்று
  கருதிவரும் இயல்பின் நாடு!

மலரினங்கள் கொஞ்சு கின்ற
  மன்றங்கள் நிறைந்த நாடு!
நலமுடனே பயிரை ஈனும் 
  நன்செய்கள் ஓங்கு நாடு!
இலகுடைய கவிதை நூற்கள்
  இலக்கியங்கள் இலக்க ணங்கள்
பலபொதிந்து கிடக்கும் நாடு 
  பத்பநாபன் ஆளும் நாடு!

மானினமும் வேங்கை தாமும்
  மனமொத்துத் திரியும் நாடு!
ஞானமுடை மக்கள் வாழும்
  நன்னாடு! குருவைப் போற்றும்
மானமுள்ள நாடு! இன்பம்
  மாரியெனப் பொழியும் நாடு!
தேனுலுப்பும் மலர்கள் கூடித்
  திசையெங்கும் பாடும் நாடு!

மருங்கெல்லாம் நிழலாய்! மக்கள்
  மனமெல்லாம் அறமாய்! வாழ்க்கை
ஒருங்கெல்லாம் நிறையப் பெற்ற
  ஓங்குதமிழ் மதுராந் தத்தின்
அரும்புகழைச் சொன்னோம்! அங்கே
  அமைகின்ற நீர்த்தேக் கத்தைப்
பெருமையுறக் காண்போம்! ஓட்டம்
  பெறுகின்ற பாலாற் றேரி!

ஏரிச் சிறப்பு
(கலிவிருத்தம்)

நாடும் எத்தனை எத்தனை பெரியதோ
ஆடு மேரியும் அத்தனை பெரியதே!
பாடுஞ் செம்புனல் பாய்ந்திடும் நதியெனும்
பீடு கொண்டபா லாற்றுநீர் நிறைவதே!

வேடந் தாங்கலெ னும்புகழ் பறவைகள்
கூடு மவ்விடம் கொண்டநல் லழகிலே
நாடும் புள்ளினம் நல்லொலி பரவிடும்
ஓடும் மீன்களின் ஒண்மைகள் உடையதே!

தேக்க மற்றதாய்த் தேசுடன் தனதெழில்
ஊக்கம் கொண்டபா லாற்றுநீர் நிறைந்திடத்
ஆக்கும் நெல்லெழில் வாய்ந்திடும் வரப்பெலாம்
பாக்க ளென்னவே பாய்ந்திடுந் திறனதே!

வள்ள லென்னவே வாரிநீர் வழங்கிடும்!
உள்ள மென்னவே உன்னத வெளுப்புறும்!
கள்ள மற்றமா மன்னவன் கவிஞனாம்
தெள்ளு செந்தமிழ் நாடன்நீர் நிலையதே!

ஏரி கொண்டநல் ஏற்றமும் உரைத்தனம்
பேரெ ழில்படும் பெற்றியோ டணிநகர்ச்
சீரை யாண்டிடும் செந்தமி ழரசனின்
பேர ரும்புகழ் பேசுவோம் கவியிலே!
                                                                               (தொடரும்)

No comments:

Post a Comment