'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

தனித்தியங்கும் ஆற்றலும், தன்கிளையாகப் பல மொழிகளையுண்டாக்கும் ஆற்றலும் கொண்ட நம் இனிய தாய்மொழியைச் சிதைக்கவும், அதன் பெருமையைக் குன்றச் செய்யவுமான பல கமுக்கச் செயல்கள் மிக வேகமாக நடந்து வருகின்றன.  மொழிப்பெருமை பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பதையே தமிழ்ப்பணி என்றிருந்து விடாமல், ஒத்த உணர்வுடைய அனைவரும் நம் மொழியைக் காக்க அணியமாக வேண்டிய தருணமிது.

ஆட்சியாளர்களும், அவர்களைப் பின்னிருந்து இயக்குவோரும் தமிழுக்கு நேரும் இழிவினைக் கண்டு பதைப்பதுமில்லை. அவர்களுக்கு அதில் அக்கறையுமில்லை. தன் தாய்மொழியின் அழிவைக் கண்டும் சுரணையற்றிருப்பவன் தன் தாய் அழிவதைக் கண்டு மனம் இன்புறுவான் போலும். இக்காலத் தமிழர்தம் இழிநிலை இதுவேயாம்.

கல்வித்துறையென்பது அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியை அடியொற்றியதாக இருந்தால் தானே அம்மாநில மக்கள் தம் மொழியில் பயின்று முன்னேறுவதுடன், தங்கள் முன்னோரின் ஆற்றலையும், பெருமையையும் அறிந்துகொள்ள ஏதுவாகும்? வெறுமனே மதிப்பெண்ணுக்கும், எதிர்கால வருவாய்க்குமாக மட்டுமே நம் கல்விமுறை கட்டமைக்கப்படுகிறது. இதன் விளைவை இன்னும் சில ஆண்டுகளிலேயே நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இக்காலத் தலைமுறையே தமிழையொதுக்கிப் பிறமொழியைத் தேர்ந்தடுப்பதும், தம் தாய்நாட்டில் தங்கள் அறிவைச் செலவழிக்காமல் அயல்நாட்டிற் கடிமையாய் இருப்பதும்  மிக்கோங்கியிருக்க,  இன்றைய ஆட்சியாளர்களும் தங்கள் பங்காக நம் தமிழை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் செயல்படுகின்றனர். தாய்மொழியை விடுத்துப் பிறமொழியை நாடுவதால் நம்மினத்தின் அடையாளம் மறைந்துபோய், ‘இவன் தமிழன்’ என்னும் குறியீட்டிற்கும்கூட ஒருவருமில்லா இழிநிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை நினைவிற்கொள்க.

நம் வயிற்றுவலிக்கு நாமே மருந்துண்ண வேண்டும். நம்பசிக்கு நாம்தான் அழவேண்டும். நம் பிள்ளைகளைத் தமிழ்வழியில்  படிக்கச் செய்வோம். கல்லூரி வரை தமிழிலேயே பயிலச் செய்வோம். (பன்னாட்டுத் தொடர்பு மொழியறிவு வேண்டுமாயின் ஆங்கிலத்தைப் பயில்வோம். ஆனால் ஆங்கிலமே சிறந்ததென்னும் மாயையில் வீழாதிருப்போம்). தமிழ்ப்பற்றுடையோரை அரசாளச் செய்வோம்! 

தமிழோரே! அணியமாகுக! தாய்மொழியைக் காக்க அணிதிரள்க.!!
தமிழன்புடன் 
பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஆசிரியர்
அலைப்பேசி : 7418867669

No comments:

Post a Comment