'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 15, 2019

தமிழ்க்குதிர் - 2050 கன்னி மின்னிதழ்

 தமிழ்குதிர் - கன்னி மின்னிதழ்

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிரின் பத்தாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பைந்தமிழ்ச் சோலையின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து மகிழ்ச்சியோடு பயணம் செய்துகொண்டிருக்கிறோம். பாட்டியற்றும் அடிப்படைப் பாடங்கள் முடிந்து, அதன் புரிதலுக்கான திறனறி தேர்வும் முடிந்து, ஒவ்வொரு வாரமும் ஒரு பயிற்சி என வரையறுக்கப்பட்டு, இவ்வாண்டுக்கான பாட்டியற்றுக பயிற்சிகள் தொடங்கப்பட்டு 16.09.2019 முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 40 கவிஞர்கள் பயிற்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

அனைத்துப் பயிற்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டும், ஆண்டு முடிவில் பட்டத் தேர்வில் கலந்து கொண்டும் உங்கள் யாப்பியலறிவை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். பயிற்சிப் பதிவில் அந்தப் பதிவின் ஆசான் சொல்வதற்கேற்ப உங்கள் கற்றல் இருக்கட்டும். பதிவில் கொடுக்கப்படும் கருத்தூன்றுக மற்றும் பொது இலக்கணம் ஆகிய பகுதிகளை நன்கு கருத்தூன்றிப் படிக்கவும். ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் கேளுங்கள். ஒருவரின் பாட்டுக்குப் பிழைதிருத்தி விளக்குவதை நீங்களும் கவனியுங்கள். அதே பிழையை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம். மேலும் இலக்கணத்தில் செம்மையாகலாம். இத்தளம் மரபைப் பிழையின்றிக் கற்கவும், கற்பிக்கவும், பரப்பவும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயங்கிவருகின்ற தளமாகும். இங்கு வேண்டியது ஒன்றுதான். அது… தமிழின் மீதான பணிவும், சோலையின் கட்டுப்பாட்டை மீறாத கற்றலும் மட்டுமே. அனைவருமே பைந்தமிழ்ச் சோலைக் குடும்பத்தினர் என்ற உணர்வோடு பயணம் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

Oct 14, 2019

யாதுமாகி நின்றாள்!


பைந்தமிழ்ப் பாமணி ஆசுகவி
இல. சுந்தர ராசன்

வீரத் திருவிழிப் பார்வை நயந்தெனை
    வேக முறச்செய லேற்றி மொழியினில்
    வித்தை கொடுத்திவன் கத்தும் மழலையைக்
    கேட்டு ரசிப்பவளாம்! அதி
காரத் திமிரெனை அச்ச முறச்செயும்
    போது நொடியினில் கூட இருந்திவன்
    கேடு விலகிடக் கீழ்மை நொறுங்கிடக்
    கண்டு சிரிப்பவளாம்!
சோரத் தனங்களைச் சொல்லி அடிப்பவள்! 
    சீறுந் துயர்களை வெட்டி யழிப்பவள்!
    ஏறுந் தலைக்கனம் எட்டி உதைப்பவள்!
    என்றும் இருப்பவளாம்! ஒரு
நேரம் தனிலெனைக் கட்டி யணைப்பவள்
    நேருஞ் சிலபொழு தெட்டி யிருந்திடப்
    பாலன் தனிமையில் பாடு படுவதைப்
     பார்த்து மகிழ்பவளாம்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!

சுற்றிப் பிணக்குவை பற்றி எரிந்திடத்
    தக்கத் தகத்திமி தாள நடத்துடன்
    சொக்கப் பனையென மக்க ளிடர்களைச்
    சுட்டுப் பொசுக்கிடுவாள்! விதி
முற்றிப் பழவினை முட்டித் தளநமைக்
    கட்டி அவளடிக் காவென் றலறிடத்
    துட்ட வினைகளை பட்பட் படவென
     வெட்டி எறிந்திடுவாள்!
பற்றைத் துறந்தவர் பற்றி இருப்பவள்!
    கொட்டி வெளியினிற் கோடி யுருண்டைகள்
    சுற்றிச் சுழன்றிட விட்டுச் சுகிப்பவள்!
    அட்ட புயகரத்தாள்!தமைக்
குற்ற மிழைத்திடின் கூடப் பொறுப்பவள்!
    பற்று மடியவர்க் கூறு நினைந்திடின்
    ஒற்றைக் கணத்தினிற் றோன்றி யவர்தமை
    முற்று மழித்திடுவாள்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!

மோகத் தமிழ்பவர் மோக மவள்நகை!
    யோகத் திருப்பவர் யோக மவட்கொடை
    சோகத் துடைபவர் சோகந் துடைத்தொரு
    வேகங் கொடுப்பவளாம்! வெள்ளை
நாகத் தணையினில் நீளத் துயில்பயில்
    நீலத் திறையவன் பூமித் தமக்கையாய்
    யோக மாயாவெனும் பேரில் புவியினில்
    வந்து மறைந்தவளாம்!
பாகத் திருந்துநல் யோகத் திருச்சிவ
    நாத னருட்செயல் யாவுந் தடையற்
    மேவி நுழைந்திடுஞ் சக்தி யெனவுடன்
    கூட இருப்பவளாம்! கடுந்
தாகத் தினில்மழை கோடை வெயிற்குடை
    யாக அடியவர்க் காக விரைவினில்
    ஓடி அருள்தர வேக முடன்சி(ம்)ம
    மேறி வருபவளாம்!

யாதவன் சோதரி காளி - புரி
    யாதபல் போக்குடை நீலி!
தீதிகழ்ந் தெத்திடுஞ் சூலி! தலை
    திங்கள் அணிந்த ஒய்யாரி!

கம்பனின் காவியம்


கவிஞர்
சிதம்பரம் சு.மோகன்

ஈற்றடி இன்பம் : 1
“மெய்ந்நெறி நோன்மையான் பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்”

ஈற்றடி என்றாலே நமக்கு வெண்பாவின் ஈற்றடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அதன் ஈற்றடிச்  சீர்கள்தான் கச்சிதமாகக் கருத்தை உரைக்கவல்லவை. நயமானவை. நச்சென்று நம் மனத்தில் பதிபவை. ஆனால், ஈற்றடி என்பதற்குப் பாட்டொன்றின் இறுதியில் அமைந்துள்ள அடி என்றே பொருளல்லவா? பாடல் என்றால் வெண்பா மட்டுந்தானா?

‘விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்’ என்று கம்பரைப் பாராட்டுவர் சான்றோர். அவர் படைத்தளித்த காவியத்தில் பல பாடல்களில் உள்ள ஈற்றடிகளின் பேரழகும் இனிமையும் உட்பொருளும் அறியப்படவேண்டியவை. அவற்றிலிருந்து சிலவற்றை இங்குப் பகிர்ந்துகொள்கிறேன்.

இவ்வாறு எழுத நினைக்கிறேன் என்று என் நண்பர் ஒருவரிடம் தெரிவித்தபோது, ‘உனக்கு என்னவிதமான தகுதியோ துணிவோ இருக்கிறதென்று நினைத்து இச்செயலில் ஈடுபடப்போகிறாய்? என்று கேட்டார்.  சற்று யோசித்து, ‘இரண்டும் இல்லை. ஆசையால் ஏற்பட்ட உந்துதல்’ என்றேன். ‘அப்படியானால் இடைக்கண் முறியுமோ?’ என்றார். ‘ஈற்றடி வரை இன்பம் தொடரும்’ என்றேன். சிறப்பாக வரும்; செய் – என்று வாழ்த்தினார். மாசிலா மனத்தவர் அவர்.

‘மெய்ந்நெறி நோன்மையனாய் விளங்கும் இறைவனின் பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்’ என்று துறவு நெறியைச் சொன்ன அடுத்த பாடலிலேயே, காவியத்தை ஆசைபற்றி அறையலுற்றேன் என்று சொல்கிறார் கம்பர். இது ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுவதால் இதனையே முதற்சிந்தனையாக முன்வைக்கிறேன்.

செய்யும் செயலை வேண்டாவெறுப்பாகச் செய்யாமல் முழுமையான மன ஈடுபாட்டோடு செய்யவேண்டும். அது ஒருவித ஒழுங்குமுறையையும், செயலுக்கு ஓர் உயர்வையும் கொடுக்கும்.  புரிதலைத் தூண்டும். திட்டமிடவைக்கும். அதனை முயற்சி என்பார்கள் சிலர். ஆற்றல் என்பார்கள் சிலர். அறிவு என்பார்கள் சிலர். தகுதி என்பார்கள் சிலர். இதனைப் புரிந்துகொண்டால் எவரும் எதனையும் செய்து முடிக்க முடியும். சாதனைகள் யாவும் விடாமுயற்சியால் செய்யப்படுவதல்ல. மன விருப்பத்தால் செய்யப்படுபவை.

விடாமுயற்சி பயிற்சியை மட்டுமே தரும். ஆனால் வெற்றியையும் நிறைவையும் தருவது இந்த ஆசையே. இந்த ஆசைபற்றியே கம்பர், காசில் கொற்றத்து இராம காதையை விரித்துரைத்தார். அவர் கொண்டது உலகியல் ஆசையன்று. தமிழ்ப்பற்று. இப்பற்றை முற்றத் துறந்தாரும் துறந்திலர்.

உத்தம குரு - பகுதி 5


பைந்தமிழ்ச் செம்மல்
விவேக்பாரதி

அந்தக் கொடியன் நம்நாட்டில்
   அடிவைத் துள்ளான் வெளியிலதை
முந்திக் கண்ட ஒற்றன்சொல
   முறையாய் அறிந்தேன் மன்னவனே!
சிந்தித் திடுக! எச்சரிக்கை
   செலுத்த வந்தேன் எனச்சொல்லி,
அந்தத் தூதன் அவையிருந்தான்
   அருமைப் புலவர் அமைதியிலே! 

அரசன் இந்தக் கதைகேட்டான்
   அவையும் மனையும் அதிர்ந்திடவே
சிரித்தான் தூதா நீசெல்க
   சிறந்த தகவல் எனச்சொன்னான்
அருகே யிருந்த புலவரிடம்
   அறிந்தீ ராயென் றவன்கேட்டான்
உரைசொல் லாமல் புலவர்களும்
   உறைந்தார் ஆழ்ந்த மௌனத்தில்

செய்யுள் நலமும் சொல்நலமும்
   செய்ய கற்ப னைவளமும்
உய்யும் படிக்குப் பாடல்செய்
   உயர்ந்த புலவீர்! அவன்நல்லன்!
வெய்ய கருவம் கொண்டிருந்த
   வேந்தன் திருந்தும் வகைசெய்தான்
ஐய! அவனே கவிஞனென
   அகத்தே மகிழ்வோம் ஆனாலும்

அவனும் கருவம் கொண்டவனாய்
   அடுத்த வூர்கள் சிற்றூரில்
கவிதை என்றே அறம்பாடிக்
   கலகம் புரிந்தான்! அவன்கொட்டம்
எவரே அடக்க வல்லாரென்
   றீசன் நினைத்தான் கல்வியெனில்
தவமாய்க் கற்கும் நம்நாட்டில்
   சேர்த்தான் இதுவே நடந்திருக்கும்!

முன்னோன் வேந்தன் தோற்றகதை
   முனிந்த செருக்குப் பேச்சாலே
பின்னோர் எல்லாம் தோற்றகதை
   பிழையாய்க் கற்ற கல்வியினால்
இன்னும் ஓரூர் வீழுமென
   இங்கே நினைத்து வந்திருப்பான்
நன்று நமக்குள் கர்வமிலை
   நந்தம் படிப்பும் நற்படிப்பே!

சித்த முத்தன் வந்திடட்டும்
   சிறப்பாய்க் கவிதை சொல்லிடட்டும்!
தத்தும் கர்வம் ஏதுமின்றி
   தகுந்த பதிலாய் நாம்சொல்வோம்!
கத்தும் சண்டை இல்லாமல்
   கவிதை அரங்கம் நிகழட்டும்!
சத்து நிறைந்த பாட்டுமழை
   சரியா என்றான்! புலவர்கள்,

நாமாய் ஏதும் செயவேண்டா
   நாடி வருவோன் சிந்தனையில்
தாமாய் என்ன நினைந்தானோ
   தடைகள் இன்றிச் செய்யட்டும்
ஆமாம் நாங்கள் நாற்பதுபேர் 
   அரசைச் சேர்த்து! நமக்கென்ன
தேமா புளிமா தெரியாதா
   தேடி வருக அவன்முடிவை!

என்றார் புலவர் பலேபலே
   என்றான் மன்னன் சொல்முடிவில்
நின்றான் வாயிற் காவலனும்
   நிறைந்த சடையும் கையினிலோர்
குன்றாய் முடித்த மூடையையும்
   கொண்டே ஒருவர் வந்துள்ளார்
மன்னா என்றான்! அரசகவி
   வரட்டும் உள்ளே என்றுரைத்தான்!

சித்த முத்தன் அவைவந்தான்
   சிரித்த படியே அவைவந்தான்
புத்தம் புதுமை அரசவையில் 
   புத்த கங்கள் அவன்கண்டான்!
சத்தம் இட்டு மூட்டைக்குள்
   சினுங்கிக் கிடந்த ஓலைசில
பொத்து பொத்தென் றேவீழப்
   புலவன் அவையின் முன்வந்தான் 

கையில் கொண்ட மூட்டையைமன்
   கண்ணின் முன்னே சிறுபிள்ளை
கொய்து மலரை வீசுதல்போல்
   கொண்டு போட்டுச் சிரிக்கின்றான்!
ஐய வருக வெனப்புலவர்
   அழகு நாதர் வரவேற்கப் 
பைய வந்தேன் எனச்சொல்லிப்
   பகடி செய்து நகைக்கின்றான்!

யாழும் முரசும் தாமிசைக்கும்
   எவரும் அவனோ டங்கில்லை!
சூழும் சுற்றம் அன்றில்லை!
   தனியே வந்தான் சித்தமுத்தன்!
வாழும் புலவர் வழிகளிலே
   வலியச் சென்று தலைகவிழ்த்தித்
தாழும் நிலைகண் டேசிரிக்கும்
   தருக்குப் புலவன் சித்தமுத்தன்!

இனிதாய்க் கவிதை வரியாக்கும்
   இசையில் வல்ல வருந்தமிழ
மனமே மகிழ வரவேற்றோம்
   வருக வருக வெனமன்னன்
கனிந்த குரலில் வரவேற்றான்
   கவிஞன் நமட்டுச் சிரிப்போடு
தனியா சனத்தில் அமர்கின்றான்
   தங்கை யேட்டைப் பிரிக்கின்றான்!

வேறு

நகைப்ப டங்கிட மன்றினில் அன்னவன்
மிகுந்த ஆணவம் பொங்கிட மன்னனூர்
புகுந்த சேதிபு கன்றிடக் கத்தினான்
தகுந்த நூலவர் தம்செவிக் கெட்டவே

மன்ன வாநினை நாடியாம் வந்தது
என்ன வென்றுநீ எண்ணினால் சொல்லுவோம்
முன்னம் பாடுவோர் மூண்டுள சபையிதில்
ஒன்று யாமுனை வாழ்த்திட வந்திடோம்!

ஏடு கொண்டிவண் ஏகிய பாவலர்
பாடல் கேட்டுநீ பாடினோர் வாழ்வினில்
பீடு செல்வமே பெய்தநின் பெற்றியை
நாடு வாழ்த்திடும் நாமதைச் செய்திடோம்!

தூக்குச் செய்தொரு தூரமே நின்றுதம்
பாக்க ளிற்பொருள் கேட்டுவி டுத்திடும்
காக்கைக் கூட்டமாய்க் கத்துவார்! அவ்வித
யாக்கைத் தேவையை யாம்நினைத் தோதிடோம்!

அரச வைகளில் அண்டிநி லைத்திடும்
மரபில் வந்திடோம் மாமழை போலவும்
உரசத் தீயெழும் கானகம் போலவும்
விரைவி லின்கவி ஆக்கிட வல்லயாம்

நினது மன்றுநி றைந்துள பாவலர்
தனது வீச்சினைச் சோதனை செய்திட
நினைப்பின் என்னுடன் நின்றுசொல் வீசுகென்
றினிய வாய்ப்பினை நல்கிட வந்தனம்!

போட்டி யிட்டவர் பொற்புக வித்திறம்
வேட்டென் தாளினி லர்ப்பணம் என்றுசொல்
கேட்டுத் துள்ளிடுங் கேண்மையான் வந்தனம்
மீட்டு கென்றனன் மேலும்யான் இங்கொரு

கவிதை பாடினால் கார்மழை கொட்டிடும்
கவிதை நிற்குமேல் காணுமிவ் வாழியும்
புவியும் முற்றிலும் நின்றும யங்கிடும்
செவிகள் என்கவிக் கேங்கிடுங் காணுக!

மின்னல் வந்துமண் தொட்டுவிண் மீளுதல்
அன்ன பாடலை அச்சர சுத்தமாய்
சொன்ன லம்பெறப் பாடுவன் இவ்விடம்
என்னை மிஞ்சிட வல்லவர் உண்டெனில்

எம்மு டன்கவி பாடுக! மன்றமே
கம்மி நிற்பதென் காரணம்? என்றெலாம்
சிம்மம் கண்டுசி ரித்தவோ நாயெனக்
கும்மி கொட்டியம் மன்றிடைத் துள்ளினான்!
                                                     -தொடரும்

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 6


இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து

நகரசபைகள் - குடியிருப்புகள் - கட்டுமாணங்கள்

அரசானது மக்களுக்கான வாழ்விடங்களை அமைப்பதிலும், அப்பகுதிகளில் மக்களுக்கான தேவைகள் என்ன என்பதனையும் நிறைவாகச் செயற்படுத்துவதிலேயே கவனம் செலுத்தும். அரசானது அதிக அதிகாரங்களை நகரசபைகளுக்கு வழங்கி அதன் மூலம்  மக்களுக்கு எளிதாகக் கிடைக்குமாறு கட்டமைப் புகளை உருவாக்கியுள்ளது.

ஒவ்வொரு நகரசபையும் தன்னிச்சையாகச் செயற்படச் சட்டம் இடமளிக்கின்றது. ஒரு நகரசபையின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அவ்வெல்லைகளுக்குள் உருவாக்கப்படும் அனைத்து வளர்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் கைகளில் இருந்தாலும் நகர சபைகளின் அனுமதியோடுதான் அப்பகுதிகளை ஊடறுத்து நெடுஞ்சாலைகளை உருவாக்க முடியும்.

நான் இருக்கும் பகுதியிலிருந்து டென்மார்க்கின் இரண்டாவது பெருநகருக்கான நெடுஞ்சாலைத் திட்டம் வகுக்கப்பட்டபொழுது நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் பகுதிக்குள் வரும் ஒரு நகரசபை இதனை அனுமதிக்க மறுத்து விட்டது. அதற்காகத் திட்டம் கைவிடப்படவுமில்லை; நகரசபை எங்கள் நாட்டில் நடப்பதுபோலக் கலைக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட நகரசபை எல்லையினைத் தவிர்த்து நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. எனினும் பெருநகரை அடைவதற்கான அனைத்து வாகனங்களும் நெடுஞ்சாலையில் பயணித்துப் பின் குறிப்பிட்ட நகரசபையிலுள்ள வழியினூடாகச் சென்று மீண்டும் நெடுஞ்சாலை வழியாகச் செல்லத் தொடங்கின. நான்கு ஆண்டுகளின் பின் அந்நகரசபை போக்குவரத்துப் பிரச்சனைக்குள் சிக்கித் தவித்தது. இப்போது நகரசபையானது விடுபட்ட நெடுஞ்சாலையினைத் தொடருமாறு மத்திய அரசின் உதவியைப் பெற்றதனால் நெடுஞ்சாலை பூர்த்தியடைந்துள்ளது என்பதனைச் சுட்டிக் காட்டலாம்.

நகரசபைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உயர்மாடிக் குடியிருப்புகளை உருவாக்கும்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்குமிடத்து அத்திட்டத்தினைச் செயற்படுத்தமாட்டார்கள். மக்களின் விருப்பிற்கு மாறாக நகரசபைகளும், நகரசபை விருப்பிற்கு மாறாக மத்திய அரசும் எத்திட்டங்களையும் திணிக்கமாட்டாது. 

பெருநகர்ப்பகுதிகளில் அதிகமான உயர்மாடிக் குடியிருப்புகளும், சிறு நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப உயர்மாடிக் குடியிருப்புகளும் அமைக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களே இதனை நிர்மாணிக்கின்றன. பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள உயர்மாடிக் குடியிருப்புகளில் குறிப்பிட்டளவு வீடுகள் கல்வி கற்கும் மானவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதியாக உள்ளது. மாணவர்களுக்கான விடுதிகள் இருந்தாலும் அவை போதுமானதல்ல என்பதனால் இவ்வாறான நடைமுறை கையாளப்படுகின்றது.

தனியாக வீடுகளை அமைத்து வாழ்வதற்கும் வழிவகைகள் உண்டு. நிலங்களினை நகரசபையினரிடம் வாங்கி வீடு அமைக்கலாம், எனினும் நிலவரியினை ஆண்டுதோறும் வீட்டு உரிமையாளர் செலுத்த வேண்டும்.

மேலும் வீட்டார் பயன்பாட்டிற்காகப் பெறப்படும் நீருக்காகவும் பணம் செலுத்த வேண்டும், அதேபோல் பயன்படுத்திய நீரானது கழிவாக மீளஅனுப்பப்படுவதாகக் கணிக்கப்பட்டு அதனைச் சுத்திகரிப்பதற்கான செலவினையும் குடியிருப்பாளரிடமிருந்தே நகரசபையானது பெற்றுக் கொள்கின்றது. 

மின்சாரம் தனியார் நிறுவனங்களிடமிருந்து அனைவருக்கும் கிடைக்கின்றது. இதற்கான பாவனைக்கான செலவினை வீட்டில் வசிப்பவர்கள் ஆண்டிற்கு மூன்றுமுறை செலுத்த வேண்டும்.

தனியார் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட வீட்டின் உட்பகுதியினை எவர் அனுமதியுமின்றி மாற்றி அமைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆயினும் வீட்டிற்காக அனுமதிக்கப்பட்ட பகுதியுடன் சேர்த்தோ அல்லது சற்று விலகியோ ஏதாவது மூடிய அறைகள் அல்லது அது போன்றவற்றை அமைப்பதற்கான அனுமதியினைப் பெற்றால் மட்டுமே விரிவாக்கம் செய்யலாம். நில அமைப்பு, அயல்வீட்டின் அமைப்புப் போன்றவறை அடிப்படையாக வைத்து அனுமதி வழங்கப்படும்.

வாடகைக் குடியிருப்பினில் வசிப்பவர்களின் வருமானமானது போதுமானது அல்ல என்னும் நிலை வரும்போது வீட்டிற்கான வாடகைக்காக உதவித் தொகையினைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும் உண்டு.

மேலும் பாடசாலைகள், மருத்துவமனைகள், வியாபார நிலையங்கள் என அத்தனையும் அப்பகுதிகளுக்குள் அமைக்கப்படும். வியாபார நிலையங்கள் போதுமானவை என்னும் நிலையில் வேறு வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியினை நகரசபை யாருக்கும் வழங்காது.

ஒவ்வொரு நகரசபையோடும் அங்கு வாழும் மக்கள் அனைவரும் தமக்கான அடையாள அட்டையினையும், கடவுச்சீட்டினையும், பெற்றுக் கொள்கிறார்கள். அதே போன்று ஒருவர் தான் வசிக்கும் கிராமத்திலிருந்து வேறொரு நகருக்கு இடம்பெயரும்போது தனது அடையாள அட்டையினை நகராட்சியிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

எதனையும் எதற்காகவும் போராடிப் பெற வேண்டும் என்னும் நிலையில்லை என்பதனைக் கண்ணுறும்போது எம் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்வு கிட்டுமா என ஏங்குகின்றேன்...
                                                                                                                   தொடரும்...

அல்வழிப் பத்து


கவிஞர்
ரா.சேது பாலசுப்பிரமணியன்


௧.
அல்வழி போனாலங் காக்கமென் றொன்றில்லை
நல்வழியில் என்றும் நடக்கவைக்கும் முன்னவர்
சொல்லையென்றும் வைமனத் தோடு

௨.
அல்வழி போவதற் கையுற்று நின்றக்கால்
கல்லாரும் பண்பினால் கற்றாரே நன்மையே
வல்லமை ஈயும் வழி

௩.
அல்லல் உறுங்காலும் அல்வழிச் செல்லாமை
இல்லறம் நன்றாக்கும் ஈண்டு மறந்தேனும்
நல்வழி தள்ளுதல் நாண்

௪.
நல்வழி யில்நிற்கும் நல்லார் இயல்பதுவாம்
நல்வழியி னின்று நழுவார் ஒருபோதும்
அல்லவை தம்மின் அகன்று

௫.
அல்வழி யில்செல்லும் அல்லார் இயல்பதுவாம்
பல்வழிச் செல்வர் பழிச்சொற்கு நாணாது
நல்வழி மாறி நடந்து

௬.
அல்வழி தள்ள அறம்பெருகித் தேய்ந்தொழியும்
அல்லவை என்றும் அறிவுடையார் சொற்படி
நல்வழி கொள்ளல் நலம்

௭.
நல்வழி நிற்போர்க்கெந் நாளும் குறையில்லை
அல்வழிச் சென்றால் அழிவுண்டு யாவர்க்கும்
அல்வழி தள்ளல் அறம்

௮.
நல்வழிச் செல்லின் நலம்பெருகி வாழ்வுயரும்
அல்லல் அளிக்கும் அனைத்தும் பறந்தோடும்
இல்லை இடுக்கணென்றும் இங்கு

௯.
அல்வழிச் செல்லின் அடைவது கானகமே
அல்லல் தொடரும் அனைத்தும் பறிபோகும்
இல்லை உயர்வென்றும் இங்கு

௧௦.
அல்வழிப் பத்திஃதும் அல்லல் தொலைக்கவே
நல்வழி நிற்றல் நலமெனக் கூறவே
கல்லிது வாழ்விற்குக் காப்பு.

கொல்வார் சிறியர் கொள்வர் பெரியர் (பாடபேதம்)


கவிஞர் பொன். இனியன்
              
திருக்குறள் தோன்றி ஈராயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றளவும் நின்று இலங்கி நெறிகாட்டு நூலாய்த் திகழ்கிறது. இனம், மொழி, இடம், காலங் கடந்து அனைவர்க்கும் உரிய தனிச் சிறப்பு மிக்க உலகு தழுவிய ஒரு பொதுநூல் இதுபோலப் பிற எம்மொழியிலும் இல்லை என்பதும் தமிழுக்கு வாய்த்த பெருஞ்சிறப்புகளுள் ஒன்று .

இற்றைநாள் நம் கையில் உள்ள திருக்குறள் நூலின் அமைப்பு எல்லா வகையிலும் வள்ளுவர் வைத்துச் சென்ற நிலையில் இல்லை என்பதே உண்மை. காலப்போக்கில், இயல், பகுப்பு மற்றும் குறள்வரிசை ஆகிவற்றில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது கண்கூடு. மேலும் பாட பேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாசிரியனும் தனக்கெனச் சில எண்ணங்களை மனத்துட்கொண்டு ஒருபகுதி இவ்வாறிருந்தால் நன்றாக இருக்குமே எனக்கருதிச் சில மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்பதை அதற்குரிய காரணமாக அனுமானிக்கிறார் சவேசு அவர்கள். திருக்குறளின் பொருள் மாறுபாடு கொள்ளும்படியான அத்தகைய பாட பேதங்கள் சற்றேறக்குறைய 516  உள்ளதாக அறிஞர் சவேசு அவர்கள், பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.

கல்லாமை அதிகாரத்தில் உள்ள
கல்லாதா  னொட்பங்  கழியநன் றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்  (குறள் 404)                
எனும் இப்பாடலும் பாட மாற்றத்திற்கு உட்படின் வள்ளுவத்தின் கருத்துத் தெளிவுறும் என்பதோடு மேலும் சிறக்கும் எனத் தோன்றுகிறது. இது குறித்துச் சிந்திக்குமாறு குறளறிஞர்களை வேண்டுகிறேன்.

இக்குறட் பொருளாகக்
‘கல்வியறிவு இல்லாதவனின் கருத்துகள் கூர்த்ததாயிருப்பினும் அறிவுடையோர் அதனை ஏற்கமாட்டார்’ எனும்படியாகவே எல்லா உரைகளும் அமைந்துள்ளன.

இக்குறளுக்கு ஒத்தும் தம்முள் வேறுபட்டும் குறளுக்கே மாறுபட்டும் அமைந்த உரைகள் ஒரு சிலவற்றை சற்றே பார்ப்போம்.

கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார் என்பது மணக்குடவருரை. கல்வியில்லாதவனுடைய உறவு நன்றா யிருந்தாலும் அறிவுடையார் அவனுடன் சினேகம் பண்ணார் என்கிறார் கவிராசபண்டிதர்.  கல்லாதவன் வயதால் பெரியவனாகிலும் அறிவுடையார் கொள்ளார்கள் என்பது பரிதி உரை.

‘நல்லவையே ஆனாலும், நன்றாக இருந்தாலும்’ அதைக் கொள்ளார் என்றது நலம்புரிந்த தன்மையால் ஆளப்படுதலைக் (511) காட்டும் குறளுக்கு மாறாதலைக் காண்க.

கொள்ளாமைக்கு உரிய காரணம் எதுவும் சொல்லாது அமைந்த உரைகளே மிகுதி. அதை, ‘அவ்வப்போது’ ‘தற்செயலாய்’ ‘ஒரோவழி‘ ‘எதிர்பாராமல்’  தோன்றுவது எனக் குறித்தாருமுளர்.

உரையில் ‘நன்றாக இருந்தாலும்’ எனக் காட்டி, அவ்வறிவு நல்லறிவாகாது எனும் பிற்குறிப்பையும் சேர்த்து வைத்து குழந்தை தம் உரையைத் திட்பமிழக்கச் செய்கிறார்.

‘நன்று ஆயினும்’ எனத் திட்பமாயும் திருத்தமாயும் குறளில் குறித்திருக்க, ‘நல்லவை போன்று தோன்றினாலும்’ என  உரைத்தார் சவேசு. நன்று என்பதாக மட்டுமல்லாது கழியநன்று என்பதையும் ஊன்றி யுன்னுக.

கல்லாதவனின் அறிவை முழு அறிவாகக் கொள்ளமாட்டார்கள் என்பது குசஆனந்தனின் உரைக்குறிப்பு. அவ்வாறாயின் கற்றவர் அறிவு முழு அறிவாகுமா? என்பதோர் இடரான கேள்வி எழுவதற்கு இடமுண்டாகிறது. ‘கணந்தோறும் புதுவதும் வளர்ந்து கொண்டே இருப்பதும் அறிவின் தன்மைகள். ‘முழு அறிவு’ என ஒன்றில்லை என்பதே உண்மை. இதை ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ (222) எனச் சுட்டுகிறது திருக்குறள். இந்நிலையில், கல்லாதவனின் அறிவை முழு அறிவாகக் கொள்ள மாட்டார்கள் என்பதில் ஏதும் பொருட்புலப்பாடு உண்டோ என்பது கருதுக.

கல்வியறிவில்லாதவன் மிகவும் அழகுடையவனாய் இருந்தாலும் அதனை அறிவுடையார் அழகு எனக் கொள்ளமாட்டார்  எனும்  பழைய உரை (உவேசா). (அழகுத்) தோற்றத்துக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஒரு தெளிவற்ற பார்வை உடையதாகிறது. ‘நடுஒரீஇயால் கல்வியழகே அழகு’ எனும் நாலடியார் கருத்தை உட்கொண்டு  எழுந்த உரையோ இது என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஒட்பம் என்பதற்கு வயது, அழகு, உறவு, கருத்து, உரைத்திறன், மனனம் செய்து ஒப்புவிக்கும் ஆற்றல் என்றெல்லாம் பொருந்தாதவாறு பொருள் புகட்டிய உரைகளுக்கிடையில் மூலத்தில் உள்ளவாறே (ஒண்மை, ஒட்பம் என) வைத்துக் காட்டிய உரைகளும் உளவாயின.

ஒருசொற் பலபொருள் உணர்த்துவதும் பல சொற்களால் ஒரு பொருளைக் குறிப்பதுவும் மொழியின் சிறப்பியல்புகளில் ஒன்று. சொல்லுக்குரிய பொருள் என்பது மட்டும் கொண்டு பொருந்தாத இடத்திலும் ஒன்றைப் புகுத்திக் காட்டுவது உரை ஒழுக்காகாது.

குறளின் ‘சொற்பொருள்’ காண்பதிலும், தம் உரைக்கருத்தை நியாயப்படுத்தக் கருதி விளக்கங்களாலும் வேறுபட்டு நின்ற உரையாசிரியர்கள், ‘கல்லாதவன் காட்டும் கருத்து மிகச்சிறந்ததாக இருந்தபோதிலும் அறிவுடையார் ஏற்றுக்கொள்வதில்லை’ என்பதில் ஒத்து நின்றனர்.

ஆனால், இக்கருத்தும் பொருளும் வள்ளுவத்துக்கு உரியதாகுமா என்பதும் குறள் குறித்தது இதுவேயாமா என்பதும் (இப்போது) ஆய்வுக்குரிய ஒன்றாகிறது.

கல்லாதவன் கூற்றில் உலகோர் ஐயங்கொள்வது பொது இயல்பே. ஆயினும், அறிவுடையார் அதைக் கொள்ளார் என்பது சற்றே நெருடலாகத் தோற்றுகிறது. 

‘அறிவுடையார்’ எனும் குறள் குறிப்பைக் ‘கற்றறிந்தவர்’ என்பதாக மட்டுமே உரை யாசிரியர்கள், கொள்வதாகக் கருத வேண்டி யுள்ளது. அறிவதும் அறிவுடையனாதல் என்பதும் வேறு வேறு. கற்பதால் புதிய ஒன்றை அறிந்து கொள்கிறோம். ‘கற்று அறிந்ததைக்’ கடைப்பிடித்து ஒழுகும்போது மட்டிலுமே அவ்வறிவு ஒருவனின் உடைமையாகிறது. இது கருதியே, ‘கற்றபின் அதற்குத் தக நிற்க’ (80) என வலியுறுத்துகிறது வள்ளுவம்.

அறிய வேண்டுவதும் அறிந்து உணர்ந்ததைப் போற்றிக் கொள்ள வேண்டுவதும் சொல்லப்படு பொருளேயாமன்றிச்  சொல்பவர் யார் என்பதோ, கேட்பவர் யார் என்பதோ பொருட்டன்றாம். சொல்லப்பட்டதன் ஒண்மையும் உண்மையுமே உன்னுதற்குரியது என்பதைச் சுட்டுவதாக, ‘எப்பொருள் யார்வாய் யார்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ (423) எனும் குறள் குறள் சுட்டுகிறது.

கல்லாதவரிடத்துக் காணப்பட்டது என்பதனா லேயே அது ஒட்பம் ஆகாது போகுமோ? மலர்ந்தவிடம் சேறு என்பது கொண்டு செந்தாமரை தன் சிறப்பை இழப்பதில்லையே. களர் நிலத்திலிருந்து பெறப்பட்டது என்பது கருதி உப்பை ஒதுக்குவார் எவரும் இல்லை என்பதும் எண்ணுக. 

பிறர் பயன்சொல் கோடலே மாசற்றார் கோள் (646) எனக் காட்டும் வள்ளுவம் நன்றானதொன்றைக் கொள்ளாமையைப் பரிதல் இல்லையென்க. அதனால், படுபாலால் வினை கொளல் (279) என்பதற்கிணங்க நலம் புரியும் தன்மையின எவரிடமிருந்து வரினும் அதைக் கொள்ளுதலே முறையாமன்றித் தள்ளுதல் அன்றாம்.

மேலும், பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424) என்பதில் ‘பிறர்’ என்றது அறிவுடையர் அல்லாதார் என்பதும் அது கல்லாதானையும் உள்ளடக்கியதே எனவாதலும் எண்ணுக. பின், ஒட்பமுடைய ஒன்றைக் கொள்ளாமற் போதல் ஏற்புடையதாகுமோ? நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்பது குறள். பின், கழிய நன்றாயினும் அதைக் கொள்ளார்  என்றது பொருந்துவதின்றாம்.

உரைகளின் போக்கு இவ்வாறிருக்க, இக்குறளின் கருத்தில் முரண் ஏற்பட்டது எதனால் அல்லது எவ்விதம் என்பது குறித்து இப்போது காண்போம்.

தினல் பொருட்டால் கொள்ளாது உலகு (256) என மணக்குடவர் கொண்டதைக் ‘கொல்லாது’ எனும் பாடமாக்கினார் பரிமேலழகர். பிறர் உரைகளில் உள்ள கூறுகளைச் சான்று காட்டலும் ஒப்புக் கூறுதலும் ஏலுமிடத்திலெல்லாம் இலக்கணக் குறிப்புகளைச் சுட்டிச் செல்வதும் பரிமேலழகரின் உரைச்சிறப்புகளில் குறிப்பிடத்தக்கனவாம். கொல்லாது உலகு எனத் தாம் கொண்ட பாட மாற்றத்திற்கான காரணம் மற்றும் சிறப்புக் குறித்து ஏதும் குறிக்காது அமைதி காத்தது ஏமாற்றத்துக்கு உரியதாகிறது.

பின்வந்த உரையாசிரியர்களுள் ஒருசிலர் கொள்ளாது எனவும், வேறுசிலர் கொல்லாது எனவும் இரு வேறான பாடம்கொண்டு உரை செய்வது  இன்றளவும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது போலவே இக்குறளிலும் அவ்வாறான பாட மாற்றம் நிகழ்ந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒட்பம் எனற்குக் கூரறிவு, அறிவுக் கூர்மை என்பது ஈண்டுக் குறிக்கப்பட்டது.

ஒள் - ஒள்பு. ஒட்பம் - கூர்மை - கூர்மை என்றது அறிவுக் கூர்மையை.

ஒள்ளியர் (714) - ஒள்ளியவர் (487) - கூர்மையர் (997) - கூர்த்த அறிவினர்.

அறிவு - பொதுநிலை. ஒட்பம் (ஒண்மை) - சிறப்பு நிலை.

ஒட்பம் என்பதற்கு ‘உலகம் தழுவிய பட்டறிவின் காரணமாக எதிர்பாராமல் தெறிக்கும் விவேகம் எனும் ஒரு கருத்தை முன்னிருத்தி, அதைக் கூர்மதி எனக் குறிக்கிறார் குசஆனந்தன். இதைத் ‘தற்செயலாகத்’ தோன்றுவது என்கிறார் பாவாணர். இவ்விருவரும், இவ்வுயரிய விவேகம்‘ ஒரோவழி கல்லாதவனிடம் தோன்றுவதுண்டாம் எனக் காட்டுவாராயினர். இது, கற்றறிந்தவர்க்கும் பொருந்துவதே.

இவை யிவ்வாறாகக்
கசடறக் கல்லாத மேற்கொண்டு ஒழுகல் வல்லதூஉம் ஐயம் தரும் (845) என்பதனால்தாம் கல்லாத ஒன்றைக் குறித்த ஓர் கூர்த்த கருத்தை அறிய நேர்ந்தக்கால் அது மிக நன்றாமெனினும் (ஆராயாமல்) அறிஞர்கள் கைக்கொள்ளுதல் இல்லையாம். அறிய  நேர்வது, பிறர்வாய்க் கேட்டறிதலும் தம் உள்ளத்தே ஒளிர்ந்த ஒன்றாதலுமாகிய இருவகைத்தானுமாம்.

நுட்பக் கருத்து எந்த ஒன்றையும் தாங்கற்ற நூலோடு (636) ஒப்பிட்டும் தம் பட்டறிவோடு உரசியும் அதன் உண்மையை உணர்ந்த பின்னரே கைக்கொள்வர். அதையும் உலக நடைக்கு ஒத்தவாறாக இருக்குமாறாற்றுவர் (637) என்பது கருத்து. இப்பண்பே கல்லாதவரிடமிருந்து கற்றவரை வேறுபடுத்திக் காட்டும்.              .               

‘எள்ளற்க யார்வாயின் நல்லுரையும்’ என்கிறது பழமொழி நானூறு. இக்குறட்பா, கல்லாதவரைப் பற்றி அறிவுடையார் கொண்டுள்ள மதிப்பீடு பற்றியதன்றாம். அறிவுடையார்தம் கருத்தின் திறம் பற்றியதாகும்.

கல்லாத  ஒட்பங் கழியநன் றாயினுங்        
கொள்ளா ரறிவுடை யார்  (குறள்404)
எனும்  பாடத்துக்குரியது.

அறிஞர் தாமே கற்றுணராத நுட்பமொன்றை (ஆராயாது) ஏற்றுக்கொள்வதில்லை என்பது கருத்தாம். ஆய்ந்துணராது எதனையும் ஏற்றுக் கொள்ளார் அறிவுடையோர்  என்றவாறு.

அதாவது  நூலறிவோடு தம்மின் நுண்ணறிவுங் கொண்டு தாம் உணராத ஒன்று எத்துணை ஒட்பமுடையதாய்த் தோன்றினும் அதை ஒப்புவதில்லை என்பதாம். எதனையும் ஆய்ந்தறியாமல் ஏற்றுக் கொள்வது அறிவுடையார் செயலாகாது என்றவாறு.