பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன்
பைந்தமிழ்ச்
சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலைக் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க
விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் வணங்குகிறேன்.
பொழுது
போனால்
பொழுது
விடிந்தால்
கணினியின்
முன்னே
காலம்
கடந்துவிடுகிறது
இறைவா!
இப்படிப்பட்ட
யுகத்தில்
ஏன் எனக்குப்
பிறப்புக்
கொடுத்தாய்
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரோ
இருநூறு
ஆண்டுகளுக்கு முன்னரோ
நான் பிறந்திருக்கக்
கூடாதா?
காலம்
கடந்தவர்தம் வாழ்வை
எண்ணிப்
பார்க்கும்போது
அவர்தம்
கவிதைகளையும் வரலாறுகளையும்
கண்முன்னே
கொண்டுவந்து
நிறுத்தும்போது
என்னுள்ளம்
எத்துணைப்
பூரிப்பை எய்துகிறது!
என்னுடன்
அவர்கள்
நேரில்
நின்று பேசுவதாகவே
எனக்குப்
படுகிறது
அவர்தம்
கற்பனைக் குரல்களிலேயே
என் அகத்துள்
பேசும்போது
நான் நானாகவே
இல்லை
இந்தக்
கணினி யுகத்தில்
எல்லாவற்றினுள்ளும்
கட்டுண்டவனாய்க்
காண்கிறேன் என்னை
விடுதலைச்
சிறகுகள் முளைக்காத
சிறுகூட்டுப்
பறவையாய்!
இப்படி
ஓர் ஏக்கம் எனக்கு இருந்தது. இதைப் போலவே கவிஞர்கள் பலருக்கும் ஓர் ஏக்கம் இருக்கும்.
இந்த ஏக்கங்களுக்கு விடைசொல்லும் விதமாகத் தற்காலத்தில் இயங்கி வருவது பைந்தமிழ்ச்சோலை
என்னும் முகநூற் குழுமம். இக்குழுமம் 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மற்ற இலக்கியக் குழுக்களைப்போல் அல்லாமல், மரபு கவிதை எழுதப் பயிற்றுவித்தல், மரபுகவிதை பரப்புதல், தமிழின் யாப்புச்
சிறப்புகளைத் தெரிவித்தல்,
இலக்கண இலக்கியங்களை விரித்துரைத்தல் முதலியவற்றை முதன்மை
நோக்கமாகக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
பைந்தமிழ்ச் சோலை முகநூற் குழுவை நிறுவியர் பாவலர் மா.வரதராசனார். மரபில் ஊறித்திளைத்து, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் கொள்கையோடு மற்றவர்க்கும் மரபைக் கற்பித்து மிகப்பெரிய பாமரமாய் விளங்கி விழுதுகள் பல
விட்டு உயர்ந்தோங்கி நிற்பவர்; பைந்தமிழாசான், பைந்தமிழரசு, மரபு
மாமணி, யாப்புச்சீர் பரவுவார் என்னும் விருதுகளுக்குச் சொந்தக்காரர் பாவலர் மா.வரதராசனார்.
முகநூல் குழுமமாகத் தொடங்கப்பட்ட
பைந்தமிழ்ச்சோலை சென்ற ஆண்டுமுதல் ஓர் இலக்கியப் பேரவையாகச் சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது.
திங்கள்தோறும் இலக்கியக் கூடல் நடைபெற்று, மரபு
தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, குவைத் நாட்டிலும்,
நம்முடைய திருவண்ணாமலை மாவட்டத்திலும் கிளை இலக்கியப் பேரவைகள்
தொடங்கப்பட்டுள்ளன.
பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை
மாவட்டக் கிளையின் தலைவர் முனைவர் அர.விவேகானந்தன்
அவர்கள் பைந்தமிழ்ச்செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான், பைந்தமிழ்க்குருத்து, சந்தக்கவிமணி
எனப் பல விருதுகளைப் பெற்றவர். அஞ்சிறைத் தும்பி, பட்டுக் கிளியே வா வா, துரிகைப் பூக்கள், விரல் நுனி விளக்குகள் முதலிய 14 நூல்களை இயற்றியுள்ளார். இன்று
இவருடைய அடுத்த நூலான தமிழ்க்கணை என்னும் நூல் வெளியிடப்படவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டக் கிளை தொடக்க விழா சென்ற ஆண்டு அக்டோபர்த் திங்கள் இதே அரங்கத்தில் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்குத் திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்த்திரு.
அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் தலைமையேற்றார். பைந்தமிழரசு மரபுமாமணி பாவலர் மா.வரதராசனார்
அவர்கள் விழாவைத் தொடங்கிவைத்துப் பேருரையாற்றினார். புதுவை பேராசிரியர் செம்மொழி இளமறிஞர்
முனைவர் மு.இளங்கோவனார் 'தமிழ்க் கவிதைகளின் நோக்கும் போக்கும்' என்னும் தலைப்பில்
சிறப்புரையாற்றினார். பேரவையின் தலைவர் முனைவர் அர.விவேகானந்தனார் அவர்களின் தலைமையில்
'கலையாத கனவுகள்' என்னும் தலைப்பில் முதல் கவியரங்கம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இலக்கியப் பேரவையின்
சார்பாக ஒரு புலனக்குழுவும், பாட்டெழுதும் பயிற்சிகளுக்காகப் ‘பாட்டெழுதுவோம்’ என்னும்
பெயரில் ஒரு புலனக் குழுவும், பைந்தமிழ்ச்சோலையின் பல்வேறு பணிகளை ஆவணப் படுத்தும்பொருட்டு painthamizhchsolai-tvm.blogspot.com
என்னும் பெயரில் வலைத்தளமும் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திங்கள்தோறும் இலக்கியக்
கூடல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை எட்டுக் கூடல்களைப் பைந்தமிழ்ச்
சோலை நடத்தியுள்ளது.
இரண்டாம் கூடல் தேவிகாபுரம் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்
சிறப்பு விருந்தினராகப் பட்டுக்கோட்டை சத்யன் அவர்கள் கலந்துகொண்டு உணர்வுப் பெருக்குடன்
‘சருக்கரைப்பாகே சங்கத்தமிழ்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பைந்தமிழ்ச்சோலையின்
நெறியாளர் பாவலர் சொ.சொல்லினியன் தலைமையில் ‘என்னை எழுதச் சொன்னது' என்னும் தலைப்பில்,
இரண்டாம் கவியரங்கம் நடைபெற்றது. முனைவர் அர.விவேகானந்தன் அவர்களால் யாப்பிலக்கணப்
பாடம் நடத்தப்பட்டது.
மூன்றாம் கூடல், ஆவணியாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்த்திரு. எ.மோகன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்திரு கவிஞர் பி.மாலவன் அவர்கள்
'கவியின்பம்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், கவிஞர் ரேவதி முருகதாசு
அவர்கள் எழுதிய 'அம்மாவின் விரல்பிடித்து' என்னும் நூல் வெளியிடப்பட்டது. முனைவர் அர.விவேகானந்தன்
அவர்கள் யாப்பிலக்கணப் பயிற்சியளித்தார்.
நான்காம் கூடல், பள்ளிகொண்டாப்பட்டு - சின்னக்காங்கியனுர் திரு க.குப்புசாமி
நினைவு உயர்நிலைப்பள்ளியில், பைந்தமிழ்ச்சோலையின் நெறியாளர் தமிழ்த்திரு அருள்வேந்தன்
பாவைச்செல்வி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்
திரு. காந்தி அவர்கள் 'திருக்குறளில் கணிதவியல்' எனும் தலைப்பில் திருக்குறளின் பல
கருத்துகளைக் கணித வழியில் அணுகிச் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முன்னாள் தமிழாசிரியர்
திரு. க.இராசு அவர்கள் கவிதை நடையில் பள்ளியைப் பற்றியும் மாணவர்களுக்குத் தேவையான
சிறந்த அறங்களையும் எடுத்துரைத்துச் சீரிய தமிழுரை ஆற்றினார். தமிழ்த்திரு அருள்வேந்தன்
பாவைச்செல்வி அவர்கள் யாப்பிலக்கணப் பயிற்சியளித்து, மாணவர்களைப் பாட்டெழுத ஊக்குவித்தார்.
சிறப்பாகப் பாட்டெழுதிய மாணவர்களுக்கும் கவிதை படித்த மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
ஐந்தாம் கூடல், உலகத்தாய்மொழி நாளை முன்வைத்துத், தச்சூர் அரசு உயர்நிலைப்
பள்ளியில் தமிழ்த்திரு அந்தோணிசோபியா அவர்களின் முன்னெடுப்பில் சிறப்புடன் நடைபெற்றது.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று அரும்புகள் அன்புத் தாலாட்டிசைத்தனர். அழகிய உரைநடைவழி
அருந்தமிழின் பெருமைகளை உலவவிட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கவிச்சாரல் வீசத்
தொடங்கியது. தமிழ்த்திரு. அமலா அவர்களின் 'தமிழால் தழைப்போம்' உரை அனைவரின் மனத்திலும்
அன்னைமொழியின் அவசியத்தை நிலைநிறுத்தியது.
முனைவர் அர.விவேகானந்தன் தலைமையில் யாப்பிலக்கணப்
பயிற்சி நடைபெற்றது.
ஆறாம் கூடல், ஆரணி கிளை நூலகத்தில் தமிழ்த்திரு. அருள்வேந்தன் பாவைச்செல்வி
அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்புரையாகக் கவிஞர் சி.ஆறுமுகம் அவர்கள் “குறளமுதம்”
எனும் தலைப்பில் குறளமுதமூட்டினார். நிகழ்வில் முனைவர் த.உமாராணி அவர்கள் இலக்கியச்
சாரலில் அனைவரையும் நனைய வைத்தார். முனைவர் அர.விவேகானந்தன் அவர்களின் தலைமையில் யாப்பிலக்கண
வகுப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் முனைவர் அர.விவேகானந்தன் அவர்களின்
'விரல்நுனி விளக்குகள்' எனும் நூல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
ஏழாவது இலக்கியக் கூடல் முனைவர் த.உமாராணி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவாக நடந்தேறியது. மாவட்டக்கல்வி
அலுவலர் திரு.சம்பத், எம்.என்.சேகர், கே.விழியரசு ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். மாவட்டக்கல்வி
அலுவலர் நூலை வெளியிட்டார். நூல் பற்றிய ஆய்வுரையை கவிஞர் நா.முத்துவேலன் அவர்கள் சிறப்பாக
நிகழ்த்தினார்.
எட்டாம் இலக்கியக்கூடல் தேவிகாபுரம் பெண்கள் பள்ளியில் தமிழ்த்திரு.
ருக்கேஷ்குமார் அவர்களின் முன்னெடுப்பில் சிறப்புற நடைபெற்றது. கவிஞர் சேகர்நாகரத்தினம்
தலைமையுரை நிகழ்த்தினார். திறனாய்வு செம்மல் வே.எழிலரசு அவர்கள் 'பண்டைய இலக்கியம்'
எனும் தலைப்பில் மிகச்சிறந்த உரையாற்றிச் சங்க இலக்கியங்கள் செவ்விலக்கியங்களாகத் திகழ்வதை
நிலைநிறுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து மழலைகள் செழியன், சுடர்விழி
ஆகியோர் தங்களின் சிறார் பாடல்கள் மூலம் அனைவரையும் மகிழ்வித்தனர். நிகழ்வில் பைந்தமிழ்ச்செம்மல்
தமிழகழ்வன் தலைமையில் 'சங்ககாலக் காதலும் எங்கள்காலக் காதலும்' எனும் தலைப்பில் மூன்றாம்
கவியரங்கம் நடைபெற்றது.
பாட்டெழுதுவோம் புலனக் குழுவில் இதுவரை தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்களுக்கான
15 பயிற்சிகள் தரப்பட்டுடுள்ளன. பங்கேற்ற கவிஞர்களின் பாடல்களுக்குத் திருத்தம் சொல்லப்பட்டுச்
செம்மையாக்கப் பட்டபின் அவை தொகுக்கப்பட்டு வலைத்தளத்தில் பதியப்பட்டுள்ளன. இப் பயிற்சியில்
பயிற்றுவிக்கப்பட்ட பாவினங்கள்:
·
குறட்டாழிசை
·
வெள்ளொத்தாழிசை
·
ஆசிரியத் தாழிசை
·
கலித்தாழிசை
·
வஞ்சித்தாழிசை
·
குறள் வெண் செந்துறை
·
ஓரொலி வெண்டுறை
·
ஆசிரியத்துறை
·
கலித்துறை
·
வஞ்சித்துறை
·
வெளிவிருத்தம்
·
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
·
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
·
கலிவிருத்தம்
·
வஞ்சிவிருத்தம்
இவ்வாறு, இவ்வாண்டு நடந்த பாட்டெழுதுவோம் பயிற்சியில் பங்குபெற்ற கவிஞர்களுக்குப் பாவலர் பட்டத்
தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் வெற்றிபெற்ற கவிஞர்களுக்குப் பைந்தமிழ்க்கதிர் எனும் பட்டமளித்துச் சிறப்பிக்கப்படவுள்ளது. இவ்வாண்டு
பைந்தமிழ்க்கதிர் பட்டத்தைப் பெறுவோர்:
1.
கவிஞர் தமிழகழ்வன்
2.
கவிஞர் மாரிமுத்து
3.
கவிஞர் சுதா
4.
கவிஞர் வித்யா
5.
கவிஞர் இராசாபாபு
6.
கவிஞர் மோகன்
7.
கவிஞர் உமாராணி
8.
கவிஞர் திருமால்
பங்கேற்பு சான்றிதழ் பெறுவோர்:
1.
கவிஞர் பகவதி
2.
கவிஞர் பாரதி
இவ்விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில், சிறந்த
மரபு நூல்கள், புதுக்கவிதை நூல்கள், இலக்கிய இலக்கண நூல்கள், சிறுகதை நூல்கள், புதினங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசளிக்கப்படவுள்ளன. மரபுகவிதை, புதுக்கவிதை, சிறுகதைப் போட்டிகள்
நடத்தப்பட்டுப் பரிசளிக்கப் படவுள்ளன.
இவ்வாறு பைந்தமிழ்ச்சோலை தமிழுக்கு
அரும்பணியாற்றி வருகிறது.
என்னுடைய உரையைத் தொடங்கும்போது ஒரு புதுக்கவிதையைச் சொன்னேன்.
அதே கவிதையை மரபு வடிவில் எழுத வைத்தது பைந்தமிழ்ச்சோலைதான். அந்த கவிதை நேரிசைஆசிரியப்பாவாக
உருவெடுத்தது. இதோ அந்தக் கவிதை:
விடிந்தும் முடிந்தும் ஓடும் பொழுது
மடிந்து போகிற தென்றன் வாழ்க்கை
கடத்தப் பட்டது கணினியில் காலம்
கடவுளே! ஏனிங் கென்னைப் படைத்தாய்?
ஈரா யிரமாண் டின்முன் அல்ல(து)
ஓரிரு நூற்றாண் டின்முன் பிறக்க
வழிசெய் திருந்தால் மகிழ்ந்திருப் பேனே!
அக்கா லத்தே வாழ்ந்தோர் தத்தம்
நற்கா லத்துச் சிந்தனை செயல்மொழி
செய்யுள் எல்லாம் என்னுளம் சேர்க்க
எத்துணை மகிழ்வை யானடை கின்றேன்
அவர்தம் கற்பனைக் குரலென் னகத்தே
தவழ்ந்திடும் போதெனை மறக்கின் றேஎன்
இந்தக் கணினி யுகத்தில் எல்லை
இல்லாத் தளைகட் குட்பட் டென்னை
இழக்கின் றேன்விடு தலைச்சிற(கு)
இல்லாப் பறவை என்ன என்னே!
ஆகவே, சான்றோர்களே! பண்புள்ளோரைச் சோலையில்
இணைத்து விடுங்கள். மரபு தமிழின் மணத்தை மண்ணுலகில் பரவச் செய்யுங்கள்.
கெடலெங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்வோம்.
நன்றி!
No comments:
Post a Comment