'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

உத்தம குரு - பகுதி 5


பைந்தமிழ்ச் செம்மல்
விவேக்பாரதி

அந்தக் கொடியன் நம்நாட்டில்
   அடிவைத் துள்ளான் வெளியிலதை
முந்திக் கண்ட ஒற்றன்சொல
   முறையாய் அறிந்தேன் மன்னவனே!
சிந்தித் திடுக! எச்சரிக்கை
   செலுத்த வந்தேன் எனச்சொல்லி,
அந்தத் தூதன் அவையிருந்தான்
   அருமைப் புலவர் அமைதியிலே! 

அரசன் இந்தக் கதைகேட்டான்
   அவையும் மனையும் அதிர்ந்திடவே
சிரித்தான் தூதா நீசெல்க
   சிறந்த தகவல் எனச்சொன்னான்
அருகே யிருந்த புலவரிடம்
   அறிந்தீ ராயென் றவன்கேட்டான்
உரைசொல் லாமல் புலவர்களும்
   உறைந்தார் ஆழ்ந்த மௌனத்தில்

செய்யுள் நலமும் சொல்நலமும்
   செய்ய கற்ப னைவளமும்
உய்யும் படிக்குப் பாடல்செய்
   உயர்ந்த புலவீர்! அவன்நல்லன்!
வெய்ய கருவம் கொண்டிருந்த
   வேந்தன் திருந்தும் வகைசெய்தான்
ஐய! அவனே கவிஞனென
   அகத்தே மகிழ்வோம் ஆனாலும்

அவனும் கருவம் கொண்டவனாய்
   அடுத்த வூர்கள் சிற்றூரில்
கவிதை என்றே அறம்பாடிக்
   கலகம் புரிந்தான்! அவன்கொட்டம்
எவரே அடக்க வல்லாரென்
   றீசன் நினைத்தான் கல்வியெனில்
தவமாய்க் கற்கும் நம்நாட்டில்
   சேர்த்தான் இதுவே நடந்திருக்கும்!

முன்னோன் வேந்தன் தோற்றகதை
   முனிந்த செருக்குப் பேச்சாலே
பின்னோர் எல்லாம் தோற்றகதை
   பிழையாய்க் கற்ற கல்வியினால்
இன்னும் ஓரூர் வீழுமென
   இங்கே நினைத்து வந்திருப்பான்
நன்று நமக்குள் கர்வமிலை
   நந்தம் படிப்பும் நற்படிப்பே!

சித்த முத்தன் வந்திடட்டும்
   சிறப்பாய்க் கவிதை சொல்லிடட்டும்!
தத்தும் கர்வம் ஏதுமின்றி
   தகுந்த பதிலாய் நாம்சொல்வோம்!
கத்தும் சண்டை இல்லாமல்
   கவிதை அரங்கம் நிகழட்டும்!
சத்து நிறைந்த பாட்டுமழை
   சரியா என்றான்! புலவர்கள்,

நாமாய் ஏதும் செயவேண்டா
   நாடி வருவோன் சிந்தனையில்
தாமாய் என்ன நினைந்தானோ
   தடைகள் இன்றிச் செய்யட்டும்
ஆமாம் நாங்கள் நாற்பதுபேர் 
   அரசைச் சேர்த்து! நமக்கென்ன
தேமா புளிமா தெரியாதா
   தேடி வருக அவன்முடிவை!

என்றார் புலவர் பலேபலே
   என்றான் மன்னன் சொல்முடிவில்
நின்றான் வாயிற் காவலனும்
   நிறைந்த சடையும் கையினிலோர்
குன்றாய் முடித்த மூடையையும்
   கொண்டே ஒருவர் வந்துள்ளார்
மன்னா என்றான்! அரசகவி
   வரட்டும் உள்ளே என்றுரைத்தான்!

சித்த முத்தன் அவைவந்தான்
   சிரித்த படியே அவைவந்தான்
புத்தம் புதுமை அரசவையில் 
   புத்த கங்கள் அவன்கண்டான்!
சத்தம் இட்டு மூட்டைக்குள்
   சினுங்கிக் கிடந்த ஓலைசில
பொத்து பொத்தென் றேவீழப்
   புலவன் அவையின் முன்வந்தான் 

கையில் கொண்ட மூட்டையைமன்
   கண்ணின் முன்னே சிறுபிள்ளை
கொய்து மலரை வீசுதல்போல்
   கொண்டு போட்டுச் சிரிக்கின்றான்!
ஐய வருக வெனப்புலவர்
   அழகு நாதர் வரவேற்கப் 
பைய வந்தேன் எனச்சொல்லிப்
   பகடி செய்து நகைக்கின்றான்!

யாழும் முரசும் தாமிசைக்கும்
   எவரும் அவனோ டங்கில்லை!
சூழும் சுற்றம் அன்றில்லை!
   தனியே வந்தான் சித்தமுத்தன்!
வாழும் புலவர் வழிகளிலே
   வலியச் சென்று தலைகவிழ்த்தித்
தாழும் நிலைகண் டேசிரிக்கும்
   தருக்குப் புலவன் சித்தமுத்தன்!

இனிதாய்க் கவிதை வரியாக்கும்
   இசையில் வல்ல வருந்தமிழ
மனமே மகிழ வரவேற்றோம்
   வருக வருக வெனமன்னன்
கனிந்த குரலில் வரவேற்றான்
   கவிஞன் நமட்டுச் சிரிப்போடு
தனியா சனத்தில் அமர்கின்றான்
   தங்கை யேட்டைப் பிரிக்கின்றான்!

வேறு

நகைப்ப டங்கிட மன்றினில் அன்னவன்
மிகுந்த ஆணவம் பொங்கிட மன்னனூர்
புகுந்த சேதிபு கன்றிடக் கத்தினான்
தகுந்த நூலவர் தம்செவிக் கெட்டவே

மன்ன வாநினை நாடியாம் வந்தது
என்ன வென்றுநீ எண்ணினால் சொல்லுவோம்
முன்னம் பாடுவோர் மூண்டுள சபையிதில்
ஒன்று யாமுனை வாழ்த்திட வந்திடோம்!

ஏடு கொண்டிவண் ஏகிய பாவலர்
பாடல் கேட்டுநீ பாடினோர் வாழ்வினில்
பீடு செல்வமே பெய்தநின் பெற்றியை
நாடு வாழ்த்திடும் நாமதைச் செய்திடோம்!

தூக்குச் செய்தொரு தூரமே நின்றுதம்
பாக்க ளிற்பொருள் கேட்டுவி டுத்திடும்
காக்கைக் கூட்டமாய்க் கத்துவார்! அவ்வித
யாக்கைத் தேவையை யாம்நினைத் தோதிடோம்!

அரச வைகளில் அண்டிநி லைத்திடும்
மரபில் வந்திடோம் மாமழை போலவும்
உரசத் தீயெழும் கானகம் போலவும்
விரைவி லின்கவி ஆக்கிட வல்லயாம்

நினது மன்றுநி றைந்துள பாவலர்
தனது வீச்சினைச் சோதனை செய்திட
நினைப்பின் என்னுடன் நின்றுசொல் வீசுகென்
றினிய வாய்ப்பினை நல்கிட வந்தனம்!

போட்டி யிட்டவர் பொற்புக வித்திறம்
வேட்டென் தாளினி லர்ப்பணம் என்றுசொல்
கேட்டுத் துள்ளிடுங் கேண்மையான் வந்தனம்
மீட்டு கென்றனன் மேலும்யான் இங்கொரு

கவிதை பாடினால் கார்மழை கொட்டிடும்
கவிதை நிற்குமேல் காணுமிவ் வாழியும்
புவியும் முற்றிலும் நின்றும யங்கிடும்
செவிகள் என்கவிக் கேங்கிடுங் காணுக!

மின்னல் வந்துமண் தொட்டுவிண் மீளுதல்
அன்ன பாடலை அச்சர சுத்தமாய்
சொன்ன லம்பெறப் பாடுவன் இவ்விடம்
என்னை மிஞ்சிட வல்லவர் உண்டெனில்

எம்மு டன்கவி பாடுக! மன்றமே
கம்மி நிற்பதென் காரணம்? என்றெலாம்
சிம்மம் கண்டுசி ரித்தவோ நாயெனக்
கும்மி கொட்டியம் மன்றிடைத் துள்ளினான்!
                                                     -தொடரும்

No comments:

Post a Comment