'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 14, 2019

சோலை விழா – திருவண்ணாமலை - நிகழ்ச்சிகள்

 பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன்

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா 22-09-2019  அன்று  மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பெண்பாற் கவிஞர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர். கவிஞர் மு.இராசாபாபு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். பாவலர் எ.மோகன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கவிஞர் அ.அமலா அவர்கள் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நெறியாளர் தமிழ்த்திரு அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நெறியாளர் தமிழ்த்திரு சொல்லினியன் அவர்கள் முன்னிலையுரை ஆற்றினார். முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். கவிஞர் தமிழகழ்வன் அவர்கள் ஆண்டறிக்கை வழங்கினார். புலவர் ந.சண்முகம், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் ச.பாலமுருகன், நன்னூலகர் த.வெங்கடேசன், பேராசிரியர் முனைவர் பிரேம்குமார், புயல்மொழிப் புலவர் அ. கோவிந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அடுத்ததாகக் கவிப்பொழிவு நிகழ்வில் 'பைந்தமிழ்ச்சோலை' என்னும் தலைப்பில் கவிஞர்கள் தமிழகழ்வன், அமலா, சியாமளா ராசசேகர், சொ.சாந்தி, எ.மோகன், செஞ்சி அ.சிவநாதன் ஆகியோர் கவிதைகள் பாடினர்.

விழாவின் அடுத்த அரங்கமான நூல் வெளியீட்டு அரங்கத்திற்குத் தமிழ்த்திரு திருமால் அவர்கள் தலைமை தாங்கினார். பைந்தமிழ்ச்சோலை - தலைமைக் கழகத் தலைவர் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள், சோலைக் கவிஞர்களின் பயிற்சிப் பாடல்கள் அடங்கிய தொகுப்பான 'பாவினம் பாடுவோம்' நூலை வெளியிட்டார். முனைவர் த.உமாராணி, தமிழகழ்வன், சியாமளா ராசசேகர், எ.மோகன் மற்றும் பல கவிஞர்கள் நூலைப் பெற்றுக் கொண்டனர். முனைவர் அர.விவேகானந்தன் அவர்களின் 'தமிழ்க்கணை' என்னும் நூலைப் பல்லுறுப்பி வேதியியல் ஆராய்ச்சி மேலாளர் இரா.கண்ணதாசன் அவர்கள் வெளியிட்டார். கவிஞர்கள் மூ.மாரிமுத்து, செஞ்சி அ.சிவநாதன் மற்றும் பலர் நூலைப் பெற்றுக்கொண்டனர். நூலாசிரியர் முனைவர் அர.விவேகானந்தன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

விழாவின் அடுத்த அரங்கமான சோலை விருதரங்க நிகழ்விற்குத் தமிழ்த்திரு கே.ஆ.ராமகிருட்டிணன் (புலவர் அந்தணர்கோ) அவர்கள் தலைமையேற்றார். தமிழ்த்திரு அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்களுக்குப் 'பைந்தமிழ்க்குவை' விருது வழங்கப்பட்டது. செல்வி வே.இலக்கியா அவர்களுக்குப் 'பைந்தமிழ்க்குருத்து' விருது வழங்கப்பட்டது. இவ்விரு விருதுகளும் பைந்தமிழ்ச்சோலை - தலைமைக் கழகத்தால் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பைந்தமிழ்ச்சோலை - தலைமைக் கழகத் தலைவர் பாவலர் மா. வரதராசனார் அவர்களுக்குப் 'பைந்தமிழேணி' என்னும் விருது வழங்கப்பட்டது. முனைவர் அர. விவேகானந்தன் அவர்களுக்குப் 'பைந்தமிழ்த்தோணி' என்னும் விருது வழங்கப்பட்டது.
அடுத்த அமர்வான இலக்கியப் போட்டிகளுக்கான பரிசரங்கத்திற்குக் கவிஞர் சுதா ஜெயராமன் அவர்கள் தலைமையேற்றார். தமிழ்ச்செம்மல் சொ.நாகராசன் அவர்கள் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். கவிஞர் செஞ்சி அ.சிவநாதன் அவர்கள் பன்னிரண்டு பேரைப் புதிய உறுப்பினர்களாக இணைத்துச் சோலையின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியுள்ளார். புதிய உறுப்பினர்களுக்கு நூல்பரிசு வழங்கப்பட்டது.

அடுத்த அமர்வான சிறப்புரையரங்கத்துக்குத் தமிழ்த்திரு சி.பாலாஜி அவர்கள் தலைமையேற்றார். பாவலர் பட்டத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் 'பைந்தமிழ்க்கதிர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. ஆண்டு முழுதும் சோலைக்காகத் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கிச் சோலையின் மீது உண்மையான பற்றுக்கொண்டு சோலையின் வளர்ச்சிக்காகவும், பைந்தமிழின் மணம் பரப்பவும் செயலாற்றிய தமிழ்ச்சான்றோர்களுக்குப் 'பைந்தமிழ்ச்சீர் பரவுவார்' என்னும் விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டது. தொல்காப்பியப் புலவர் வெற்றியழகனார் அவர்கள் தொல்காப்பிய இலக்கணத்தை யாவருக்கும் புரியும்படி மிகமிக எளிமையாக எடுத்துரைத்து, இயற்கையாய் உருவான மொழி நம் தமிழ்மொழி என்பதை நிலைநாட்டிச் சிறப்புரையாற்றினார். தமிழ்த்திரு. ருக்கேசுகுமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

பின்னர் சோலையின் அடுத்த நிகழ்வுகள், பணிகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட தண்டமிழ்ச் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறோம். நன்றி! நன்றி!!

1 comment:

  1. மிகச் சிறப்பாய் நடைபெற்ற விழாவில் நானும் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete