இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து
நகரசபைகள் - குடியிருப்புகள் - கட்டுமாணங்கள்
அரசானது மக்களுக்கான வாழ்விடங்களை அமைப்பதிலும், அப்பகுதிகளில் மக்களுக்கான
தேவைகள் என்ன என்பதனையும் நிறைவாகச் செயற்படுத்துவதிலேயே கவனம் செலுத்தும். அரசானது
அதிக அதிகாரங்களை நகரசபைகளுக்கு வழங்கி அதன் மூலம் மக்களுக்கு எளிதாகக் கிடைக்குமாறு கட்டமைப் புகளை
உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு நகரசபையும் தன்னிச்சையாகச் செயற்படச் சட்டம் இடமளிக்கின்றது.
ஒரு நகரசபையின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அவ்வெல்லைகளுக்குள் உருவாக்கப்படும் அனைத்து
வளர்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் கைகளில் இருந்தாலும் நகர சபைகளின்
அனுமதியோடுதான் அப்பகுதிகளை ஊடறுத்து நெடுஞ்சாலைகளை உருவாக்க முடியும்.
நான் இருக்கும் பகுதியிலிருந்து டென்மார்க்கின் இரண்டாவது பெருநகருக்கான
நெடுஞ்சாலைத் திட்டம் வகுக்கப்பட்டபொழுது நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்லும் பகுதிக்குள்
வரும் ஒரு நகரசபை இதனை அனுமதிக்க மறுத்து விட்டது. அதற்காகத் திட்டம் கைவிடப்படவுமில்லை;
நகரசபை எங்கள் நாட்டில் நடப்பதுபோலக் கலைக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட நகரசபை எல்லையினைத்
தவிர்த்து நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. எனினும் பெருநகரை அடைவதற்கான அனைத்து வாகனங்களும்
நெடுஞ்சாலையில் பயணித்துப் பின் குறிப்பிட்ட நகரசபையிலுள்ள வழியினூடாகச் சென்று மீண்டும்
நெடுஞ்சாலை வழியாகச் செல்லத் தொடங்கின. நான்கு ஆண்டுகளின் பின் அந்நகரசபை போக்குவரத்துப்
பிரச்சனைக்குள் சிக்கித் தவித்தது. இப்போது நகரசபையானது விடுபட்ட நெடுஞ்சாலையினைத்
தொடருமாறு மத்திய அரசின் உதவியைப் பெற்றதனால் நெடுஞ்சாலை பூர்த்தியடைந்துள்ளது என்பதனைச்
சுட்டிக் காட்டலாம்.
நகரசபைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உயர்மாடிக் குடியிருப்புகளை
உருவாக்கும்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்குமிடத்து அத்திட்டத்தினைச் செயற்படுத்தமாட்டார்கள்.
மக்களின் விருப்பிற்கு மாறாக நகரசபைகளும், நகரசபை விருப்பிற்கு மாறாக மத்திய அரசும்
எத்திட்டங்களையும் திணிக்கமாட்டாது.
பெருநகர்ப்பகுதிகளில் அதிகமான உயர்மாடிக் குடியிருப்புகளும், சிறு நகரங்களில்
மக்கள் தொகைக்கேற்ப உயர்மாடிக் குடியிருப்புகளும் அமைக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களே
இதனை நிர்மாணிக்கின்றன. பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள உயர்மாடிக் குடியிருப்புகளில்
குறிப்பிட்டளவு வீடுகள் கல்வி கற்கும் மானவர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதியாக
உள்ளது. மாணவர்களுக்கான விடுதிகள் இருந்தாலும் அவை போதுமானதல்ல என்பதனால் இவ்வாறான
நடைமுறை கையாளப்படுகின்றது.
தனியாக வீடுகளை அமைத்து வாழ்வதற்கும் வழிவகைகள் உண்டு. நிலங்களினை நகரசபையினரிடம்
வாங்கி வீடு அமைக்கலாம், எனினும் நிலவரியினை ஆண்டுதோறும் வீட்டு உரிமையாளர் செலுத்த
வேண்டும்.
மேலும் வீட்டார் பயன்பாட்டிற்காகப் பெறப்படும் நீருக்காகவும் பணம் செலுத்த
வேண்டும், அதேபோல் பயன்படுத்திய நீரானது கழிவாக மீளஅனுப்பப்படுவதாகக் கணிக்கப்பட்டு
அதனைச் சுத்திகரிப்பதற்கான செலவினையும் குடியிருப்பாளரிடமிருந்தே நகரசபையானது பெற்றுக்
கொள்கின்றது.
மின்சாரம் தனியார் நிறுவனங்களிடமிருந்து அனைவருக்கும் கிடைக்கின்றது.
இதற்கான பாவனைக்கான செலவினை வீட்டில் வசிப்பவர்கள் ஆண்டிற்கு மூன்றுமுறை செலுத்த வேண்டும்.
தனியார் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட வீட்டின் உட்பகுதியினை
எவர் அனுமதியுமின்றி மாற்றி அமைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆயினும் வீட்டிற்காக
அனுமதிக்கப்பட்ட பகுதியுடன் சேர்த்தோ அல்லது சற்று விலகியோ ஏதாவது மூடிய அறைகள் அல்லது
அது போன்றவற்றை அமைப்பதற்கான அனுமதியினைப் பெற்றால் மட்டுமே விரிவாக்கம் செய்யலாம்.
நில அமைப்பு, அயல்வீட்டின் அமைப்புப் போன்றவறை அடிப்படையாக வைத்து அனுமதி வழங்கப்படும்.
வாடகைக் குடியிருப்பினில் வசிப்பவர்களின் வருமானமானது போதுமானது அல்ல
என்னும் நிலை வரும்போது வீட்டிற்கான வாடகைக்காக உதவித் தொகையினைப் பெற்றுக் கொள்ளும்
உரிமையும் உண்டு.
மேலும் பாடசாலைகள், மருத்துவமனைகள், வியாபார நிலையங்கள் என அத்தனையும்
அப்பகுதிகளுக்குள் அமைக்கப்படும். வியாபார நிலையங்கள் போதுமானவை என்னும் நிலையில் வேறு
வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியினை நகரசபை யாருக்கும் வழங்காது.
ஒவ்வொரு நகரசபையோடும் அங்கு வாழும் மக்கள் அனைவரும் தமக்கான அடையாள
அட்டையினையும், கடவுச்சீட்டினையும், பெற்றுக் கொள்கிறார்கள். அதே போன்று ஒருவர் தான்
வசிக்கும் கிராமத்திலிருந்து வேறொரு நகருக்கு இடம்பெயரும்போது தனது அடையாள அட்டையினை
நகராட்சியிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
எதனையும் எதற்காகவும் போராடிப் பெற வேண்டும் என்னும் நிலையில்லை என்பதனைக்
கண்ணுறும்போது எம் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்வு கிட்டுமா என ஏங்குகின்றேன்...
தொடரும்...
No comments:
Post a Comment