'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

தமிழ்க்குதிர் - நளி 2051 - மின்னிதழ்




 

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

காலம் சுழன்று கொண்டுதானிருக்கிறது. ஆனால் காட்சிகள் பலவும் அப்படியேதான் இன்னும் தொடர்கின்றன. காலம் மாறும்போதும் இவை மாறாமல் தன் பழைய துருப்பிடித்த கதவை இழுத்து மூடியே வைத்திருக்கின்றன.

முடியாட்சிக் காலம்வரை முடிசூடி ஓங்கியிருந்த நந்தமிழ்மொழி, குடியாட்சிக் காலத்தில் ஆள்வோரின் உணர்வுக்குட்பட்டுச் சிதைவதும் தேய்வதும், பின் மொழியுணர்வேற்பட்டு மீள்வதுமாய்த் தன் வாணாளை ஓட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நிலத்தை ஆண்ட தமிழ்மன்னர்கள் வரை எச்சிக்கலும் வந்ததில்லை. பிறநாட்டவர் ஆண்டபோது தொடங்கிய மொழிச்சிதைவு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

திராவிடர்கள் எனப்படும் பிற இனத்தைச் சார்ந்தோர் இந்த மொழிச்சிதைப்பில் முற்றிலும் வேறுபட்டு, நம் மொழி, இனம், நாடு என்பனவற்றையே இல்லாதாக்கி, அவற்றைத் "திராவிடம்" என்ற சுழலில் மூழ்கடித்து, இன்னும் கூடத் தொடர்ந்து அரசியல் இச்சையை, இனவெறியைத், தமிழின அழிப்பைத் தடையின்றிச் செய்து வருகின்றனர்.

நந்தமிழ்ப் பெரியோரும், செல்வங்களும் இதன் உண்மைத்தன்மையை அறியாதிருக்கும் அவலத்தைக் காணும்போது உள்ளம் மருகுகிறது... நோகிறது... தேய்கிறது. மாற்றம் வேண்டித் தமிழுணர்வை முன்னெடுப்போர்க்கு இந்தத் திராவிட வெறியர் சூட்டும் பெயர் "சாதிவெறித்தமிழன்".

ஏ தமிழ்மகனே! எப்போது விழிக்கப் போகிறாய்?  உன்னைச் சுற்றியிருப்போர் தமிழர் என்ற போர்வையில் திரியும் "திராவிட நரிகள்" என்பதை எப்போது உணரப்போகிறாய்?

வா!  தமிழினத்தை மீட்போம்!

தாளாத் துயருடன்...

பாவலர் மா.வரதராசன்

அன்னை அந்தாதி

ஒருபா ஒருபஃது


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


காப்பு

அந்தாதி நானெழுத அன்னை வரமருளத் 

தொந்தி கணேசா துணையிருப்பாய் - செந்தமிழில் 

சொல்லடுக்கி மாலையாய்ச் சூட்டிடுவேன் ஏற்றென்றன் 

வல்வினை கள்போக்கு வாய்


நூல்

வாயாரப் பாடி வணங்கிடுவேன் எந்தாயே 

ஓயாதுன் நாமமே ஓதுவேன் - சேயாக 

நெஞ்சோ டணைத்து நிலவாய்க் குளிர்ந்திடுவாய்

கொஞ்சுதமிழ்ப் பாடலைக் கேட்டு 1


கேட்டு மிளகலையோ? கீதம் பிடிக்கலையோ ?

வாட்டவும்  எண்ணமோ? வாணியே ! - மீட்டும் 

குழலிசை இன்பமது கூட்டலையோ? தாயே !

மழலையெனை ஏற்பாய் மகிழ்ந்து 2


மகிழ்ந்து வரங்கள் மனமுவந்(து) ஈந்து  

நெகிழ்ந்திடச் செய்தவள் நீயே ! - அகிலத்தில் 

கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தருவாயே 

வெண்டா மரைமலர் மேல் 3


மேலகம் நீயளிப்பாய் மெய்ம்மையுணர்த்திடுவாய்

கால னணுகாமல் காத்திடுவாய் - ஞாலத்தில் 

தீராப் பிணிகளைத் தீர்த்திட வாராய்,கண் 

பாராய்! அகமலர்விப் பாய் 4


பாயில் கிடவாமல் பாவியெனை ஏற்றுக்கொள்  

கோயில் குடிகொண்ட கோமளமே ! - நோயுற்று 

வெந்துமனம் நோகுமுன்னே வேண்டுகிறேன் சக்தியே

வந்தெனையாட் கொண்டிடு வாய்! 5


வாய்ப்பொன்று நல்கினாய் வையகத்தில் வந்துதித்தேன் 

தாய்மனத் தோடெனைத் தாலாட்டு ! -மேய்ப்பனிலா 

ஆடாய்த் தடுமாறி அல்லலுற்றேன்! இல்வாழ்வில் 

ஓடாகத் தேய்ந்தேன் உழன்று 6


உழன்று திரிந்தேன் உலகை வெறுத்தேன் 

கழலைப் பிடித்துக் கசிந்தேன் - குழவியின் 

விம்மலின்னும் காதில் விழவில்லை யோ?எனக்குச்   

சும்மாவோர் ஆறுதல் சொல் 7


சொல்லும் மொழியில் சுகப்படுவேன் உன்னாலே! 

நல்லழகு நாயகியே ஞாலத்தில் - வெல்வதற்குன்

ஆசியொன்றே போதும்; அனுதினம் பாக்களால்

பூசிப்பேன் பொன்னுளம் பூத்து 8


பூத்துக் குலுங்கும் புதுமலரின் பேரழகே 

காத்திட வேண்டுமம்மா கற்பகமே ! - மூத்தவளே!

கண்மலர்ந்து பாருமம்மா! காற்சதங்கை கொஞ்சிடவே

அண்டம் அசைந்திட ஆடு 9


ஆடுமயில் மீதுவரும் ஆறுமுகன் அன்னையே! 

வேடுவத்தி மாமியே! மீனாளே ! - கூடுவிட்டென்  

ஆவி பிரியுமுனே அன்புடனுன் காட்சியினை

மாவிருந்தாய்த் தந்திடு வாய் 10

கோர மதுவது கூடாதே!

 பைந்தமிழ்ச் செம்மல்

செல்லையா வாமதேவன்


தானன தனன தானன தான

  தானன தனன தானானா


பாவியு னுடலு மேமெழு காகு

  பாதக மதுவை நாடாதே

    பாரினி லறிவு மேநிறை வான

      பாரக னிதனை நாடானே

கூவிய படியு நீவரு வேளை

  கோலம யிலுளம் வாடாதோ

    கூளியர் அணுகு கூளனு மாகு

      கோரம துவது கூடாதே

தாவியு மனைவி நோயுரு வோடு

  சாயுமு னுடலை வீழாது

    தானழு தழுது போதையி லாடு

      தாவடி முனையில் நோவாளே

பூவிரி நறவ மாய்நிறை வீடு

  போதையில் நலிவ தாகாதே

    பூசனை புரியும் ஈசனை நாடு

       பூரண விடிவில் வாழ்வாயே!


(பாரகன் - நன்கு கற்றவன்; 

கூளியர் – கெட்டவர்; 

கூளன் – பயனற்றவன்; 

தாவடி - போர்)

ஆளும் மரம்

 இரா. இரத்திசு குமரன்

கடுமையான சூறைக் காற்றால் கிளைகள் ஒடிக்கப்பட்டுப் பொலிவை இழந்த மரம்போல், காதல் சிறகுகள் முறிக்கப்பட்டுப் பறக்க முடியாமல் தரையில் தவழும் பறவைபோல், 'தலைவிதியா' என்று திகைத்துக்கொண்டிருந்தான். அவன் அருகில் இருந்த ஓர் ஆல மரத்திற்கும் அதே நிலைதான். 

மரங்கள் இறைவன் வரைந்த ஓவியங்கள். காதலர் வருகைக்குப் பார்வை வீசும் கண்கள்போல் சூரியன் முகம்பார்க்கக் கிளைகள் வீசும் மரங்கள். கடுமையான வெயில், அதைக்கூடப் பொருட்படுத் தாமல் விளையாடிவிட்டு வீடு திரும்புகையில் நிழலுக்குக் கொஞ்சம் அடைக்கலம் புகுவான் நந்தா. பெரிய ஆலமரம் அது. எத்தனை வருடங்களாக இருக்கிறது என அவனுடைய கிராமத்தில் இருக்கும் யாருக்குமே தெரியாது.

'எனக்குக் கருத்துத் தெரிஞ்சதிலிருந்தே இந்த மரம் ரொம்ப பெருசாத்தான் இருந்துச்சி' என அவனுடைய சொந்தக்காரத் தாத்தா சொன்னது நினைவில் வந்தது. நந்தாவும் யோசிச்சதுண்டு. ஒருவேளை 150 அல்லது 200 வயதாகுமோ என்று. பறவைகள் பல இங்கு வந்து ஆலம் பழங்களைச் சுவைத்து மீதியை அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள்மீது சிதறவிடும். அப்போதெல்லாம் சிறுவர்கள் கல்வீசி விரட்ட முயல்வார்கள். எத்தனையோ பேருக்கு முதல் விளையாட்டுத் திடல் அந்த ஆலமர நிழல்தான். நந்தாவுக்கும் அதுதான் முதல் திடல். விடுமுறை நாட்களில் அது வீடாகவே மாறிவிடும். ஓடிவந்து மரத்தின் கிளைகளைத் தாழ்த்தி அதன்மீது உட்கார்ந்து சுகமாகக் காற்று வாங்குவான். ரொம்ப அடர்த்தியான புதர்ப்பக்கம் ஓணாங் கொடி இருக்கும். அதை அறுத்து ஆலம் விழுதோடு இணைத்துக் கட்டி ஊஞ்சல் ஆடுவது நந்தாவிற்குச் சிறுவயது பொழுதுபோக்கு. 

இரவு நேரங்களில் அந்தப் பக்கம் போகவே யாரும் யோசிப்பார்கள். பெரியவர்களே போவதில்லை. வழக்கமான இருட்டு அச்சம் நந்தாவிற்கும் இருந்தது. 'பாதி ராவுல அங்குக் கன்னிமார் சாமிங்க நடந்துபோகும். அப்போ நாம குறுக்குல போனா நம்மை அடிச்சிடும். அதிலும் கடைசிக் கன்னிமார் ரொம்ப கோபமானது' எனப் பாட்டிகள் சொல்வதை ஆர்வமாகக் கவனிப்பான். பிறகு நந்தாவுக்குள் கேள்வி எழ ஆரம்பித்தது. இங்குதான்  ஐயனார் சாமி இருக்காரே, ஏன் பயப்பட வேண்டுமென்று.

பகல் நேரத்தில் மரத்தின் பொந்துகளில், கோயில் உள்பக்கத்தில் ஒளிஞ்சி விளையாடுவான். ஆனால் இருளில் அந்தப் பக்கம் போகும்போது சாமி பாட்டு மனசினுள்ளே நினைத்துக் கொள்ளும் பழக்கம், மெல்லத்தான் குறைந்தது.  

மழை பொழிகிற நேரங்களில் மரத்தடி வேருடன் ஒட்டிக்கொண்டு நின்று மின்னல் வராத சமயம் பார்த்து ஓட்டம் பிடிக்கும் சிறுவர்களுள் அவனும் ஒருவனாக இருந்தவன். மழையில் வேண்டுமென்றே நனையக் காரணங்களை உண்டாக்கிக் கொள்பவனாக நந்தா மாறினான். மழை இயற்கையின் உயிர்ப்பரிசுதானே. அதனால்தான் எவ்வளவு வறட்சி வந்தாலும் மரம் பட்டுப் போனதாகவே தெரியவில்லை. 

பக்கத்துக் கொல்லையில் கரும்பு உடைத்துக் கொண்டு மரக்கிளைகளில் அமர்ந்து கதைகள் பேசிச் சுவைத்த மீதியைக் குரங்குகளுக்குக் கொடுப்பான். தேங்காய் பத்தையைக் கையில் வைத்துக்கொண்டு குரங்குகளின் கைகளில் கொடுப்பதை தீரமான செயலென மகிழ்வான். இதுபோல நந்தா மற்றும் பலரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட அந்த ஆலமரத்தில் இருந்து எவ்வளவோ பயனடைந்தனர். மழைக்காலக் காற்றில் காய்ந்த கிளைகள், சில நேரங்களில் உயிருள்ள சிறுசிறு கிளைகளும் ஒடிந்துவிழும். அதைப் பற்றிக்கொள்ள மகிழ்ச்சியாக ஓடி வரும் கிராமத்துப் பெண்களின் ஆர்வத்தைச் சிரித்துக் கொண்டே பார்ப்பான்.  அந்த மகிழ்ச்சி, ஆர்வம் எல்லாமே இழந்துவிட்டான் நந்தா. காற்றுக்குத் தங்கள் மரத்தின்மீது என்னதான் கோபமோ தெரியவில்லை. பெரிய பெரிய கிளைகளை ஒடித்துத் தள்ள, மழை வந்ததே என்று மகிழ்வதா, மரத்தின் பொலிவு அழிஞ்சிடுச்சே என வருந்துவதா எனத் தெரியாமல் போன சில மணி நேரங்களும் உண்டு. மரக்கிளைகளைக் கீழே பார்த்ததும் அவனுக்குள் துயரம் அதிகமானது. இன்னும் மரம் உயிரோடுதான் இருக்கிறது. வயசானவங்க நடக்க முடியாம வருந்தும்போது எழும் பரிதாபம் போல அந்த மரத்துக்கும் வயசாகிவிட்டதோ என்று தோன்றும். தன்னைப் பார்க்க வந்த நண்பனும் மரத்தைப் பற்றியே கேட்டு உணர்வுகளை மீட்டி விட்டான்.

“என்ன நந்தா இது? மரம் இப்படி ஆகிடுச்சி”, “எவ்வளவோ பெரிசா இருந்துச்சி. என்ன செய்வது? இப்படி ஆகிடுச்சே!” “இயற்கை, கவிதை, காதல் என உன் நினைவுகளுக்கு இந்த மரந்தான் அடித்தளம் போல”, கூறினான் நந்தாவின் கல்லூரி நண்பன்.

ஆம். அது உண்மையுங்கூட. பொதுவாக நந்தாவிற்கு மரங்கள் பிடிக்கும். இந்த ஆல மரந்தான் அதற்குக் காரணம். அம்புகள் தைத்துக் காயங்கள் பட்டும் இரத்த சகதியோடு எழுந்து நின்று கர்ஜிக்கும் போர்வீரன் போல அம்மரம் நின்று கொண்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவன் அனுபவித்து வந்த மகிழ்ச்சியான தருணங்கள் திரும்ப வராதுதான். எனினும் நந்தா நம்பினான். அவன் உயிரோடு இருக்கும்வரை அந்த மரம் இருக்கும். அவன் உறங்கிக் கொண்டு போனாலும் அது தலையசைத்துத் தாலாட்டுப் பாடும். அவன் காதல் நினைவுகளைப் போல. 

காலையில் சூரியனின் முதல் கதிரையும் மாலையில் இறுதிக் கதிரையும் யார் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதுபோலத்தான் நந்தாவின் ஆலமரத்தின் முதல் தளிர் விட்டபோது யார் பார்த்தது? இறுதி இலை உதிரும்போது யார் பார்ப்பார்கள் என்று கூறிவிட முடியாது. 

விதியெனத் திகைத்து விழுந்த நந்தாவின் நிலையும் எப்படி இருக்கும் என யாராலும் கூறிவிட முடியாதுதான். ஓர் பெண்ணை நேசிக்கும் எந்த நந்தாவும் சமூகத்தால் வீழ்த்தப்படலாம். ஆனால் இயற்கையை நேசிக்கும் எந்தவொரு நந்தாவும் மீண்டும் எழுவான்.

தமிழ் மணமே

பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்


தமிழ்போலொரு மொழிதானினி தரைமீதினில் வருமோ

        தமிழோடுள சுவைபோல்பிற மொழியானவை தருமோ

உமிநீங்கிட வருமோரரி உணவாகிட வருமே

        உயிர்போலுள தமிழ்மேலுன துணர்வோங்கிடத் தகுமே

அமிழ்தாம்தமி ழதையேகுடி அறிவோங்கிடு முறையே

        அழகாய்விரிந் திடுமேமல ரதுபோல்தமிழ் மணமே

நிமிராதுள திதுநாயதன் பெருவாலென நினையா

        திருந்தேதமிழ் படித்தாயெனில்  நிறைவாகிடு முளமே

ஆசுகவியாட்டம்

பாவலர் மா.வரதராசன்

பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன்

பைந்தமிழ்ச் சுடர் இராஜ் குமார் ஜெயபால்


“முப்பத்து நான்கு நாள்களாகின்றன. கைவிரல்கள் ஓரளவு இயங்கத் தலைப்பட்டுள்ளன. தேக்கிவைத்த எழுத்துகள் என்னிலிருந்து புறப்படத் தயார் நிலையில் உள்ளன. எழுதியே ஆக வேண்டிய மனநிலையில் நான். என்னோடு போட்டியிட்டுப் பாடப்போவது யார்? 

தத்துவப் பாடல்கள் (சமூகம், இயற்கை, இறைமை)

பாவகை: ஈரடி கலித்தாழிசையில் தொடங்குகிறேன். எந்தெந்த வகை வருகிறதோ வரட்டும்...

வா...சுந்தரா!  வா...

கையிலே காசிருந்தால் காக்கைககள் ஓடிவரும்

பையிலே இல்லையெனில் பையவே ஓடுமப்பா”


எனக் கடந்த 01-12-2020  அன்று பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுவில் பாவலர் மா.வரதராசனார் அவர்கள் அழைக்கப்  பைந்தமிழ்ப் பாமணி சுந்தர ராசன் அவர்களும்  பைந்தமிழ்ச் சுடர் இராஜ் குமார் ஜெயபால் அவர்களும் இணைந்து ஆடிய ஆசுகவியாட்டம்.


பாவலர் மா.வரதராசன்:

கையிலே காசிருந்தால் காக்கைகள் ஓடிவரும் 

பையிலே இல்லையெனில் பையவே ஓடுமப்பா!    1


சுந்தர ராசன்:

ஓடுவதால் உன்பேர் உவந்தனையோ செல்வமென?

மாடெனும்நீ மேய்க்க வருவதென்றோ சொல்லம்மா?              2


பாவலர்:

அம்மாவுங் கூட அருகிருக்க மாட்டாளே

செம்மை யெனப்பிள்ளை சீர்பெறா தானாகில்.    3


சுந்தரா:

தானாகுஞ் செல்வம் தனையடைந்து மூழ்கிவிடின்

நானாரும் போக நமையண்டும் ஞானமதே!          4


பாவலர்:

ஞானத்தை வேண்டி நடக்கும் மதிமுன்னம்

ஊனத்தை நாடி உழலுவதேன் என்தம்பி.?            5


சுந்தரா:

என்னென்று சொல்வேன் எமதையா! எல்லாம்நம்

முன்வினைகள் செய்யும் முனைப்பேதாம் கண்டீரே! 6


பாவலர்:

கண்டாலும் உள்ளம் கனவென்று  தானம்பி

மண்டாகி நின்று மருள்கிறதே ஏன்தம்பி?               7


சுந்தரா:

ஏனென் றிதுதேடி இற்றார் பலகோடி!

நானொன்றைக் கொல்லநலம் நாடிடுமாம் சொல்வரையா! 8


பாவலர்:

நானென்னும் பற்றறுத்து நாதன்றாள் நாடிப்புகின்

ஊனந்தான் ஏதுமில்லை உண்மைச்சொல் கேட்டதுண்டே 9


சுந்தரா:

கேட்டதையே நம்பிக் கிடத்துகிறேன் வாழ்வையுமே!

நாட்டம் அனுபவத்தில் நண்ணுகின்ற நாள்நோக்கி!           10


பாவலர்:

நோக்கும் விழிப்பார்வை நுண்மை யதைப்பெறில்

தேக்குகின்ற வெற்றித் திருமகளும் சேர்ந்திடுவாள்.             11


சுந்தரா:

சேரட்டும் என்றே செபிக்கின்றேன் பேரைநிதம்!

ஈரெட்டும் எட்டுமவள் இட்டத்தால் ஏகிடுமே           12


பாவலர்:

ஏகும் துயரங்கள் எல்லாமுன் நல்வினையால்

வேகும் நிலைவிடுத்து வேண்டுவினை யாற்றிடுவாய்             13


இராஜ்குமார் ஜெயபால்:

ஆற்றுவதும் போற்றுவதும் ஆரிங்கே செய்தாலும்,

தூற்றுவதும் தூக்குவதும் தூயோனின் தூவினையே!             14


சுந்தரா:

தூமணியே உள்ளே துலங்குகின்ற பேரொளியே

மாமணியே ஏழை மரகதமே வாழியநீ             15


பாவலர்:

நீபடைத்த செல்வம் நெடுங்காலம் வாராதே

பேர்படைத்து வாழ்தல் பெரும்பய னாகுமப்பா     16


இராஜ்:

பாரினிலே பேரெடுக்க பார்த்தவற்றைக் கொல்லாது

பாரிலிடம் கொள்ளாது பாசத்தைக் கொள்வாயே!            17


சுந்தரா:

கொள்வை யெனக்கொடுத்தால் கொள்ளுபுகழ் மட்டின்றி

அள்ளவள்ள ஊறும் அவர்செல்வம் ஆமாமே!            18


பாவலர்:

மேட்டினீர் பள்ளத்தில் வீழும்நிலை நீரறிவீர்

காட்டுமின் அன்பைக் கனிவோ டிருமினே             19


இராஜ்:

நேற்றுவீழும் நீரின்றோ ஏறும்வானில் என்பதனைத்

தோற்றுவீழும் நாளில் துவளாது எண்மின்னோய்!             20


சுந்தரா:

எண்மின் இறையருளை எப்போதும் ஈசனுரு

கண்முன்னே காணுவரை காணாதீர் ஓய்வினையே!             21


பாவலர்:

ஓய்வில்லாச் சிந்தை உருவாக என்னுள்ளில்

தாய்ப்பாலைத் தந்துவந்து தாமணைப்பாய் என்னம்மே             22


இராஜ்:

மேன்மையான சிந்தனைகள் மேலிட்டால் வான்புகழாம்!

ஊன்வளர்த்தே ஆட்டமிட்டால் ஊழ்வினைகள் ஓங்கிடுமே!        23


சுந்தரா:

ஓங்குபுகழ் வாணாள் உயர்செல்வம் வேண்டுபவர்

தீங்கு நினையாரே தேடிநிதம்! தாங்கும்

இறைமறவார் வாழ்வில் இயங்கும் செயலில்

குறைகூறார் கொள்வார் குணம்!             24


பாவலர்:

கொள்ளும் குணங்கொண்டால் கோண லெனவாகும்

தெள்ளத் தெளிமின் திரைநெஞ்சே - அள்ளக்

குறையாத அன்பே குறைவற்ற வாழ்வாம்

நிறைவான வாழ்வின் நிசம்.             25


இராஜ்:

நிசவல் லியற்கையும் நீசச் செயற்கை

விசமெனத் தாக்குதலில் வீழ்ந்தால் - வசமான

வாழ்விலே ஏற்றமேது வாலிபரே கண்டுநீவிர்

தாழ்வழித்தல் ஏற்பீர் தலை!                            26


சுந்தரா:

தலையே சிவனாரின் தாள்வணங்கு! கைலை

நிலையே மனமே நினைப்பாய்! உலையே

கரம்வைத்தான் கங்கை சிரம்வைத்தான் காமி

புறம்வைத்தான் தானே புகல்!             27


பாவலர்:

புகல லெளிதாமோ புண்ணிய னீசன்

தகவை யளத்தல் தகுமோ - இகலை

அழிக்க முனைவீர் அவனிரு பாதம்

வழிக்குத் துணையாய் வரும்.             28


இராஜ்:

வருவாய் வளர்பிறையா வாரி வனைந்து

தருவாயே கங்கைநீர்த் தண்மை - குருவாய்நீ

ஆலமர்ந்து தீக்காணா ஆன்மத்தின் சூக்குமத்தைத்

தாலாடாச் சொன்னதேன்வேந் தா!             29


சுந்தரா:

வேந்தன் விழிமூன்றன் வேக விடையேறும்

காந்தன் அயில்வேல் கரங்கொண்ட ஏந்தலைப்

பெற்ற எழிலோன்! பிறப்பிலான் ! என்பிறப்பை

முற்ற அருளும் முதல்!             30


பாவலர்:

முதலும் முடிவுமாய் நின்ற முதல்வா

கதவைத் திறந்துவை வீட்டில் - பதமாய்

அருகமர்ந்(து) உன்னை அகமகிழக் காண

அருகணிந் தோனவன் காப்பு             31


இராஜ்:

காப்பாற்றப் பல்லுயிரைக் கானகத்தில் தந்ததனை

தீப்போலப் பற்றியபின் தீர்ப்பதோ! – கைப்பிடிக்கத்

தந்தகரம் பல்லின் தடம்பதித்தல் நன்றாமோ?

இந்தவுண்மை ஆய்வோமே இன்று!             32


சுந்தரா:

இன்றோர் இனியநாள் எங்களின் ஐயாவோ

டொன்றாய் அமர்ந்தும் உயர்தமிழால் - நன்றாக

அந்தாதி சாற்றும் அரியநாள்! ஈங்கிதனைத்

தந்ததும் ஈசன் தயை!             33


பாவலர்:

ஈசன் தயையை எவர்தடுப்பார் இவ்வாழ்வின்

பேசும் மறைபொருளின் பெற்றியன்றோ - காசுக்கு

வாழ்வோர் தயையெல்லாம் வாட்டும் ஒருநாளில்

தாழ்த்தாதே உன்றன் தலை             34


சுந்தரா:

தலைமேல் அணிந்துள்ள தண்மதியம் தன்னின்

கலைபோற் குளிரும் தமிழை - அலையாகப்

பொங்குவண்ணம் தந்தவனின் பூங்கழலை அண்டியபின்

இங்கெனக்கு மோர்கவலை ஏது?             35


பாவலர்:

ஏதுமில்லை ஈசன்றாள் ஈங்கிணைந்த பின்னாலே

ஏதமில்லை நெஞ்சில் இருளுமிலை - வேதனவன்

காக்கும் இறைவனாய்க் காணின் உமையோடு

காக்கும் இறைவ னவன்!             36


சுந்தரா:

அவனே இறையாம் அவனே குருவாம்

அவனே இலக்கோடும் ஆறாம்! - அவனே

தமிழாம் அவனே தருமத் துருவாம்!

அமிழ்தாம் அவனே அரண்!             37


பாவலர்:

அரனு மவனே அரியு மவனே

சிரமேற் குவிப்போம் கரமக் - கரமே

அபயக் கரமாய் அணைக்கும் கரமாய்

உபய மளிக்குங் கரம்.             38


சுந்தரா:

கரமேநீ கூப்பு! கனிவாயே பேர்சொல்!

சிரமேநீ ஈசன் கழல்சேர்! பரமே!

பதியே! விதியே! பசுவை அருகே

கதிகாட் டெனநெஞ்சே கெஞ்சு!             39


பாவலர்:

கெஞ்சுக நெஞ்சேநீ கேடில் இறைவீட்டைத்

தஞ்சமெனச் சேர்க தாழ்தலையாய் - விஞ்சுபுகழ்

சேர்ப்பான் இறையீசன்  தேய்ப்பான் துயரத்தைக்

காப்பானே தன்னருளைத் தந்து!             40

பாட்டும் இசையும்

பைந்தமிழ் பாமணி சரஸ்வதி ராசேந்திரன்

வளையற் சிந்து


அசைந்தாடும் மனத்தினையே

அமைதியாக்கும் பாட்டு - அதை 

அகங்குளிரக்  கேட்டு - பிறர்

அன்பதனைக் கூட்டு - மிக

அருமையான இசைகேட்டு

அல்லலைநீ ஓட்டு


இசையினிலே மனமயங்கும்

இன்பமெலா மொன்றே - தரும்

இறையுணர்வு நன்றே - மன 

இருளகலும் இன்றே - அதை

இயல்புடனே பயின்றவர்கள்

இலகுவென்பார் வென்றே

திருவே சரணடைந்தேன்

 பைந்தமிழ்ப் பாமணி மதுரா

திருவேசர ணடைந்தேனுனை திசையாயெனைக் காப்பாய்

இருளேயதை யழித்தேவொளிச் சுடராலெமைச் சேர்வாய்

உருவாகிய உருவாலொரு உலகேயிது மோங்க

அருளாலினி மழைபோலொரு அகமேகுளிர் விப்பாய்


குறையேயிலை எனையேயொரு மகவாயினி நினைந்தே

முறையாயொரு வரமேதரத் தடையேதினி சொல்வாய்

சிறைபோலொரு உலகேயிது துணையாயிரு தேவி

மறையோதிடு முனிபோலொரு நிலையாகிட அருள்வாய்


சுழலேயிது முழுகாதெனைக் கரைசேரவு மருள்வாய்

தொழுதேனுனை விலகாதிடத் துணிவேகொடு அம்மா

பழுதோயிவள் குறையோயெனப் பிழைநீக்கிடு தாயே

முழுதாயுனைப் பணிவேனெனை முறையாய்க்கரை சேர்ப்பாய்

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு…

பகுதி – 9

மரபு மாமணி 

பாவலர் மா.வரதராசன்


சாதியம் என்பது எல்லா இனத்தாரிடமும் உள்ளதே. இந்துக்களிடம் மட்டும் உள்ளதன்று. அது மனிதர்க்கிடையேயுள்ள உயர்வு தாழ்வு குறித்தான நிலையைச் சுட்டும். உயர்வு தாழ்வு நிலையிலாத போதே இந்தக் கட்டமைப்பு சிதையும். ஆனால் ஏற்றத்தாழ்வு என்னும் நிலையைப் பார்க்கப் புகின் அது எல்லாவுயிரிடத்தும் பரவியிருப்பதை அவற்றின் வாழ்வியலை உற்றுநோக்கின் அறிதற்கேலும். ஆக, ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை சாதியம் என்ற கட்டமைப்பை யாராலும் சிதைக்கவோ அழிக்கவோ இயலாது.


ஆனால் சமயம் என்பது அந்தந்த இனத்தாரிடையே ஒரு முறையான கருத்தியலால் பொதுவில் வைத்துச் சுட்டப்படும் அடையாளமாகும். அது மாந்த வாழ்வின் ஒழுக்க நிலையைச் சார்ந்த நெறியைக் கூறி அதற்கேற்ப மனங்களைச் சமைக்கும் வழியாகும். இந்த வழியில் அந்தந்த இனத்தார்க்குரிய "மதவொழுக்கம்" பொதுவாகவே இருக்கும். சான்றாக, இந்துக்களிடம் உள்ள கடவுள் வழிபாடு அனைத்து இந்துக்களிடமும் ஒரே மாதிரியாக இருக்கும். அஃதாவது, காளியை வணங்கும் முறையும், சிவனை வணங்கும் முறையும் மற்ற கடவுளை வணங்கும் முறையும் ஒரே விதத்தில் அமையும். அதேபோல்தான் இசுலாத்திலும் கிறித்துவத்திலும்.


எனவே, சாதி என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு இறைமையை ஒழிக்கவோ, இறைமை என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு சாதியை ஒழிக்கவோ எக்காலத்தும் இயலாது.


இந்நிலையில் பெரியார் முன்னெடுத்த சாதியொழிப்பு என்பது குறிப்பிட்ட மதம் (இந்து) சார்ந்த நிலையிலேயே நின்றுவிட்டது. அதிலும் கூடத் தம்மை உயர்சாதியினராகச் சொல்லிக் கொண்ட ஆரிய பார்ப்பனர்களை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது.


★இதன் காரணமாகவே இராசாசி என்ற பார்ப்பனர் கொண்டுவந்த குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்தது. (சமூகம் சார்ந்த சீர்திருத்தங்களில் இது மட்டுமே அவர் பெற்ற வெற்றியாகும். இதுவே அவரைப் புகழிலேற்றியது) ★


"சங்கக் காலத்திற்குப் பிறகு" கல்வியை அனைவருமே கற்கலாம் என்ற நன்னிலை இம்மண்ணில் உள்ளதென்றால் பெரியாரின் இந்த வெற்றியே... அவருடைய இந்தத் தொண்டு மட்டுமே மிகப்பெரிய காரணம் எனலாம்.


மற்றபடி தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் அவர் எந்த முன்னேற்றத்தையும் செய்ததில்லை. அது அவருடைய நோக்கமுமன்று. அவருடைய நோக்கமே "திராவிடம் என்ற போர்வையில்" தமிழினம் என்ற தொன்மையினத்தை "திராவிட இனம்" என்று மாற்றுவதாகவே இருந்தது. அதன் ஒரு கூறுதான் தமிழிலக்கியங்களைக் குப்பை யென்றும், பயனில்லாதவையென்றும் இழித்தும் பழித்தும் கூறியது. அதுமட்டுமன்றித் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் ஆரிய அடிவருடி நூல்களென்றும் கூறுகின்ற திராவிடர் கழகத்தின் உண்மையான உளப்பாடு இதுவேயாம். அதே மனப்பான்மைதான் கம்பராமாயணத்தை அவர்கள் எதிர்ப்பதும்.


மூட நம்பிக்கை எதிர்ப்பைக் கடவுள் மறுப்பாக மாற்றிய பெரியார், ஆரிய - திராவிடர் பற்றிய எவ்வித ஆய்வு அறிவுமின்றி ஆரிய பார்ப்பனியத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் அந்த உணர்வு தமிழுணர்வாக மாறிவிடாதபடி திராவிட எழுச்சி என்பதாகவே உருப்பெறச் செய்தார்.


கடவுள் மறுப்பின் வழியாகப் பார்ப்பனர்களை எதிர்க்க அவர் மேற்கொண்டதே கம்பராமாயண எ(திர்)ரிப்பாகும். கடவுள் மறுப்பு என்பதில் இராமனையும், கண்ணனையும் மட்டுமே குறியாகக் கொண்ட அவர்கள் அதன்மூலம் ஆரிய-திராவிடக் கருத்தியலைத் தமிழ் மக்களிடையே ஆழமாகப் பதிய வைத்தனர். திராவிடமே தமிழினம் என்பதை "எடுப்பார் கைப்பிள்ளை யான" தமிழரிடையே மிக நுட்பமாகப் பரப்பினர். அதற்கு அவர்களின் அமைப்பும், அவரைத் தொடர்ந்து திராவிடக் கட்சிகளும் மிகவும் உதவியாயிருந்தன. ★


இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குள் நுழைவோம். இக்கட்டுரையைத் தொடங்கும்போது கம்ப ராமாயணத்தை இவர்கள் எதிர்ப்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றுள் மிக முதன்மையான ஒரு காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அது "கம்பர் ஆரியத்தைத் (இராமனை) தமிழகத்தில் பரப்பினார். ஆரிய அடிவருடியானார்" என்பது.


விளக்கம்: பெரியாரும் சரி... அவருடைய தொண்டர்களும் சரி... எதையும் ஆராயாமலே ஒரு முடிவுக்கு வருவதையும், அதுவே சரியானது என்று அழுத்தமாக வாதிடும் இயல்பினர் என்பதற்கு இந்தக் குற்றச்சாட்டே சிறப்பான எடுத்துக் காட்டாகும்.


திராவிடத்தை வளர்ப்பதே ஒரே நோக்கமாகக் கொண்டதால் அவர் பார்ப்பன எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் கையிலெடுத்துக் கொண்டார் எனக்கண்டோம். 


இராமன் ஆரியன் என்றும், இராவணன் திராவிடன் என்றும் அவர்களாகவே ஒரு கருத்தைக் கற்பித்துக் கொண்டனர். "இராமன் ஆரியன் என்பதால் அவனை நல்லவனாகவும், இராவணன் திராவிடன் என்பதால் அவனைக் கெட்டவனாகவும் இராமாயணம் கூறுகிறது" என்று தமிழ் மக்களிடையே பரப்பினர். 


இவர்களுடைய கம்பராமாயண எதிர்ப்பென்பது “தமிழர் தனி இனமல்லர்; அவர்கள் திராவிடரே" என்னும் கருத்தைப் பதிய வைக்கும் கருவியாகவே பயன்பட்டது. அதன் காரணமாக இராமாயணத் திற்கு மாற்றாகக் கீமாயணம் என்றும், இராவணக் காவியம் என்றும் இவர்களால் எழுதப்பட்டன.


இப்போது நாம் விளக்கத்திற்குள் உள்விளக்கமாக இராமாயணம் தோன்றிய மூலத்தைச் சற்றே ஆய்வோமா...!.?         


                                                                                                                               ...தொடரும்...

சூரிய வெளிச்சம்

 பகுதி-3

பைந்தமிழ்ச்செம்மல்

முனைவர் அர.விவேகானந்தன்


2. குறிஞ்சி வளம்!


படர்ந்திடு மூங்கில் தோட்டம்

    பக்கமாய்க் கமுகு தோட்டம்

அடர்ந்திடும் வனத்தின் நாட்டம்

    அழகென வியற்கை கூட்டும்

இடர்தரும் விலங்கே எல்லாம்

    இசைவினைக் காட்டிச் செல்லும்

தொடர்ந்திடு மழலை யன்ன

    தொடுமலை சிறப்பின் குன்றாம் 31


பவளமா மலையு முண்டாம்

    பளிங்கென வொளிரும் நன்றாம்

தவமதை முனைய வேண்டித்

    தவத்தினில் கனிந்தோ ருண்டாம்

அவமென வந்த போதும்

    அதிர்ந்திடா அறவோ ருண்டாம்

நவமணி விளைச்சல் நல்கும்

    நல்வழி நாட்டுங் குன்றாம் 32


வேலவ னருளுங் குன்றாம்

    வெள்ளைக ளொலிக்குங் குன்றாம்

கோலமே கூடுங் குன்றாம்

    குறமகள் வாழுங் குன்றாம்

சீலமே காட்டும் மன்றம்

    சேர்ந்துமே வாழு முற்றம்

பாலமா யுலகி லோங்கும்

    பைம்முறை காட்டுங் குன்றாம் 33


பற்பல விளைச்ச லாக்கிப்

    படையலி லோங்கி நிற்கும்

சிற்சில வின்னல் நேரின்

    செழுமையா யாக்கிக் கொள்ளும்

பற்பல பழமை தேக்கிப்

    பாங்கெனும் பண்பை நாட்டும்

வெற்பென நிமிர்ந்து நிற்கும்

    வெற்றியை யாக்குங் குன்றாம் 34


வரிசையா யூர்திக் கூட்டம்

    வழியினில் செல்லல் போலும்

வரிசையாய்க் குன்றின் தோற்றம்

    வளமையைச் சுமந்து நிற்கும்

சரிவினில் கதிரோன் செல்லத்

    தருவெனும் மணிகள் மின்னும்

பரிவுடன் வந்த பேர்க்குப்

     பலவளந் தேக்குங் குன்றாம் 35


பலாவினைச் சுமக்கு மந்தி

    பகலினில் பந்தி வைக்க

உலாவரும் புள்ளின் கூட்டம்

    உரிமையாய்க் கொத்தித் தின்னும்

கலாவெனுங் கனியைக் காட்டிக்

    கணக்கெனப் பங்கைப் போடும்

துலாவிய கையின் நாற்றம்

    தொலைவினில் மணக்குங் குன்றாம் 36


பெருமலை யுடைத்தல் போலும்

    பிசினெனுங் கிழங்கைத் தோண்ட

வருமுறை சொல்லா நேர்வாய்

    வரிசையாய் நாடிச் செல்வார்

ஒருவரு மோய மாட்டார்

    ஒருநிழ லமர்ந்தே உண்பார்

தருநிழல் செழிக்குங் குன்றம்

    தவிப்பெலா மில்லாக் குன்றாம் 37


இடுப்பினில் தழையா மாடை

    இருப்பெனக் குறவோர் கட்ட

மிடுப்பினில் மழலைக் கூட்டம்

    மிஞ்சியே ஆட்டிப் பார்க்கும்

துடிப்பென ஒளிருங் கூட்டம்

    துயரதை நின்றே போக்கும்

உடுப்பென இல்லா வாழ்வில்

    உலகதை மயக்குங் குன்றாம் 38


கூத்திடும் கலைஞர் கூட்டம்

    குறையெனக் கூறி நிற்க

வேத்தெனப் பாரா வண்ணம்

    வென்றிடும் வழியைச் சொல்வார்

பூத்திடும் மலர்கள் போலும்

    புவியினில் செழிக்கச் சொல்வார்

காத்திடுங் குறவர் குன்றம்

    கருணையு மொளிருங் குன்றாம் 39


மணிவளஞ் சுரக்குங் குன்றம்

    மனவளம் சிறக்கும் குன்றம்

கனிவளம் பெருக்குங் குன்றம்

    கரும்பென இனிக்கும் குன்றம்

குணவளங் குறவோர் குன்றம்

    குறையது மில்லாக் குன்றம்

தனியெனத் தழைக்குங் குன்றம்

    தகையெலாங் கூட்டுங் குன்றாம் 40


வெளிச்சம் தொடரும்…

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி



பைந்தமிழ்ச்செம்மல் 

திருவாளர்  பே.வள்ளிமுத்து அவர்கள்


கட்டுரையாக்கம்: 

பைந்தமிழ்ச்செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


புதுக்கவி நாயகராம் - இவர்

    புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்

மதுதரும் போதையைப்போல் - மனம்

   மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!

சீரொடு யாப்பறிந்தே - தனிச்

   சீருடன் பாக்களை யாத்திடுவார்

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், புதுக்கவிதைப் புயல், சிலேடைச் சிங்கம், இயற்கையை வியந்து வியந்து பாடும் இன்னிசைக் கவிஞர் பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்.

அவர்  தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கரடிகுளம் என்னும் ஊரில் 1982-ஆம் ஆண்டு பிறந்தார். முத்தாகத் தமிழ் பாடும் இவரைப் பெற்றோர் பேச்சிமுத்து – ராமுத்தாய் அவர்கள் மட்டுமன்று; இந்நாட்டு மக்களுந்தான்.

கல்வியின் மீது தீராத காதல் கொண்ட அவர் முதுகலைத் தமிழ் (M.A.), இளநிலைக் கல்வியியல் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறுகொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர் (எடப்பாடி ஒன்றியம் -சேலம் மாவட்டம்) ஆவார்.


தமிழ்ப்பணி: அவர் 13 வயதில் கவிதை இயற்றத் தொடங்கினார். பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுமத்தில் பாவலர் மா.வரதராசனாரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று மரபு கவிதை எழுதி வருகின்றார். பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் உறுப்பினராகவும், மரபு பாக்களைப் பயிற்று விக்கும் துணையாசிரியருள் ஒருவராகவும், தமிழ்க்குதிரின் துணையாசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.


சிலேடைக் கவிஞரான அவருக்குப் பாவலர் மா.வரதராசனார் இயற்றிய சிலேடைக் கவிதை:

வள்ளியைச் சேர்த்ததால் வண்டமிழ் தேர்தலால்

தெள்ளிய சோலை திரிதலால் - உள்ள

முருகுதமிழ்ப் பாவி லுறைதலால் ஒன்றும்

முருகனும் வள்ளிமுத்து வும்!


இயற்கை இயம்பி: அவர் எப்போதும் கற்பனை ஓடையில் கவித்துவம் நிறைந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர். மண்மீன்களைச் சுவைப்பது மட்டுமன்றி விண்மீன்களையும் ஒரு கை பார்ப்பவர். காட்டருவிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பவர். வயல்வெளிகளிலும், பூஞ்சோலைகளிலும் சுற்றித் திரியும் அவருக்கு முகிலும் மகிழ்மதியும் சொந்தப் பிள்ளைகள். இத்தகு இயற்கைக் கவிஞரின் இலக்கியப் படைப்புகளாவன:

இரட்டுற மொழிதல் நூறு (சிலேடை வெண்பாக்கள்) என்ற இவரின் முதல் நூல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலைச் சிறந்த நூலாகத் தேர்வுசெய்து ஈரோடு தமிழ்ச் சங்கம்  மூன்றாம் பரிசு வழங்கியது. 

மேலும் அவர்,

வள்ளிமுத்து கவித்துவம் 100 

காக்கைவிடு தூது 

இயற்கைப் பாவை

பட்டாம்பூச்சி (சிறுவர் பாடல்)

ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை அச்சில் உள்ளன. இவற்றோடு அணியில் ஆயிரம் என்ற நூலைத் தொடராக எழுதிவருகிறார்.


அவருடைய கவித்துவத்திற்கு ஒரு சான்று:

வாய்க்கால் வழிந்தோடும் நீர்வரப்பில் செந்தட்டான்

பூக்கால் மிதித்தருகம் புல்வளைக்கும் -நோக்குங்கால்

வில்வளைந்து நீர்கிழித்து மெல்லிசை தோற்றுவிக்க

நெல்வயலும் ஆடும் நெளிந்து...!


புரட்சிப் புயல்: ‘உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்’ என்னுமாறு உயரிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொஞ்சு தமிழில் உலகமெல்லாம் கொண்டு சேர்ப்பவர். இவரது பாடல்களில் புரட்சிக் கருத்துகள் வெடிக்கும். புரட்டுக் கதைகள் மடியும். காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் கருக்கொண்ட கவிஞர் அவர். ஆம்.. அதற்கொரு சான்று:

சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற 

சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!

ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்

அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!

பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும் 

பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!

நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்

நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!


பட்டங்களும் விருதுகளும்: அவர் 

பைந்தமிழ்ச்செம்மல்

நற்றமிழாசான்

சந்தக்கவிமணி 

விரைகவி வேந்தர் 

பைந்தமிழ்ச்சுடர் 

ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பைந்தமிழ்ச்சோலையில் பெற்றுள்ளார். மேலும்

சிலேடைச் செம்மல் (ஈரோடு தமிழ்ச்சங்கம்)

கவியொளி (ஈரோடு தமிழ்ச்சங்கம்)

கவி காளமேகம் (உலகப் பாவலர் தமிழன்னைத்  தமிழ்ப்பேரவை)

வீறுகவி முடியரசனார் விருது

முதலிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.


தொடர்ந்து மரபு கவிதையின் பல்வேறு யாப்பிலக்கியங்களையும் படைத்து வருகின்றார். இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நல்வழிகள்

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


மாண்பினில் சிறக்கும் மானிடர் வாழ்வில்

    மதுவது வீழ்ச்சியைக் கொடுக்கும்

ஆன்றோர் கூறும் வாழ்வியல் வழிகள்

    அகமதில் ஏற்பது நன்று

மாண்டவர் பலரே குடியினில் வீழ்ந்து

    மதுவினைத் தொட்டதி னாலே

வேண்டுவேன் கெட்ட குடியினை மறந்து

    மீச்செல வினையெலாம் விடுவாய் 1


விடுகிற  தவறைத்  திருத்திட வழிகள் 

    விரைவெனத் தேடிடக் கிட்டும்

இடரினைத்  தகர்த்துத்  தொடர்ந்திட யாவும்

    இன்னலும் தீயுமே உணர்வாய்   

கடுகென நினைத்துப் பொய்தனைச் சொல்லிக் 

    கலங்கிட வைத்திட  வேண்டா 

அடக்கிடு  மனத்தை நல்லவை நினைத்தே 

    அகன்றிடும் தீயவை மறைந்து 2


மறைவினில் நின்று சூழ்ச்சிகள்  செய்து

    மற்றவர் வாழ்வதைக்  குலைத்தால்   

குறையினைக் கேட்பாய் நல்லவர் விலகக்  

    குடிகளும் வெறுப்பினைக் காட்டும் 

கறைபடும் வாழ்வு நற்பெயர் கெடுமே

    களங்கமும் தொடரென வருமே

இறைவனை வணங்கி நல்லவை செய்ய 

    இதயமும் வெறுக்குமே ஏய்ப்பை


ஏய்ப்பினைச் செய்ய ஈன்றவர் வெறுப்பர்

    ஏற்றமும் வாழ்வினில் இழப்பாய்

தூய்மையும் கெட்டு மதிப்பதும் நீங்கும்

    தூயவர் அற்றவர் என்பர்

வாய்மையைப் போற்றும் வழியினில் செல்ல

    மகிழ்வுற இல்லமும் சிறக்கும்

சாய்வதற் கொருவர் நாளுமே இருப்பர்

    தயக்கமும் விரைவென நீங்கும் 4


நீங்கிடும் நேரம் திரும்பவும் வராது 

    நெஞ்சினில் நன்றென ஏற்பாய்  

தூங்கிடச் சோம்பல் தொற்றுமே விரைவாய்த் 

    துரிதமாய்க் கடமைகள் செய்வாய்

தீங்கினைச் செய்து திரிகிற வேளை 

    தெய்வமும் அருளினைத் தராது  


பாங்கெனப் பணியைத் தொடர்ந்திட  நாளும் 

    பாரினில் உயர்வினைப் பெறுவாய் 5


உயர்வினைப் பெற்றால் உதவிகள் நல்கி  

    உன்னத வாழ்வினை வாழ்வாய் 

வியர்வையைச்  சிந்தி உழைப்பவர் மீது 

    விருப்புடன் மதிப்பினை நல்கு 

துயரதை நீக்க முயற்சியை எடுக்கத்   

    துன்பமும் விலகிடும் நம்பு 

பயன்தரும் செயல்கள் நாளுமே செய்யப்  

    பதவியில் உயர்வது கிட்டும் 6


உயர்வது கிட்டும் போதினி லென்றும்  

    உயரிய ஒழுக்கமும் வேண்டும் 

மயங்கியே நீயும் பிறர்மனை நோக்க

    வசந்தமும் அகன்றிடும் தூரம் 

தயக்கமும் மனத்தில் நிரந்தர மாகித் 

    தரணியில் தாழ்ந்திடு வாயே

வியத்தகு செயல்கள் ஆற்றிட வேண்டும்

    வினைதரும் யாவையும் நீக்கு  7


குணத்தினில் உயர்வு நிலைத்திட என்றும் 

    கொள்கையில் உறுதியும் வேண்டும் 

பணத்தினை வீணே செலவழி த்திடவே 

    பழக்கமும் மாறிடும் உணர்வாய் 

இணங்கலர் சேர்ந்தால்  கொலைகளும் செய்வர் 

    எதிரியை அறிந்ததும் விலகு

உணர்ந்திடு உண்மை நிலையது யாவும்   

    உலகினில் மாறிடும் காண்பாய்  8


காண்பவை யெல்லாம் நல்லவை என்றே 

    கற்பனை செய்யவே வேண்டா 

ஆண்டுகள் கடக்கும் அவலமும் தீரும்  

    ஆசைகள் துயரினை நல்கும்  

நாண்மதி போல நிறைவுற வாழ 

    நன்மைகள் சூழ்ந்துமே கிட்டும்  

வேண்டுவ தெல்லாம் நிறைவுற என்றும் 

    விழுமிய தொண்டினைச் செய்வாய் 9


தொண்டுகள் செய்ய நல்வழி காட்டும்

    துடிப்புடன் செயல்படு பாரில் 

எண்ணுவ தெல்லாம் நல்லன எண்ணு 

    ஏற்றமும் வருமே நாடி

கண்ணியம் காக்கக் கடமைகள் யாவும் 

    கடிதென முடிவுறும் நம்பு

திண்மையும் மனத்தில் நிலைபெற வாழ்வில் 

    தெய்வமும் அருளினைத் தருமே! 10

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி - 8

பிரிந்தவர் நினைத்துப் புலம்பல்


பூக்குளித்தல் போலும் புனற்குளத்தில் நீராடத்

தீக்குளித்தல் போல்நான் திமிர்ந்தழகால் வெந்ததுவும்!


பூவணி போதாதோ..! புன்னகை காணாதோ!

தாவணியும் நீவியவள் தற்கொலைக்குத் தூண்டியதும்!


பொன்னடி பூப்போல் புலம்பெயரப் பூவிழியாள்

கண்ணடி பட்டுக் கலங்கித் தவித்ததுவும்..!


செம்மண் வழித்தடத்தில் சிள்வண்டு பாட்டிசைக்க

அம்மன் விழாவுக்(கு) அவள்பின் நடந்ததுவும்


மார்கழி முன்பனியில் மஞ்சள் நிலாமுகத்தாள்

கூர்விழி காணவே கோவிலுக்குப் போனதுவும்?


தென்றல் மிதிவண்டித் தேரேறி ஊர்ந்துவரச்

சென்று தவங்கிடந்து சேல்விழியால் செத்ததுவும்!


வாரத்தில் மூன்றுநாள் வைகறையில் நீர்வரும்..அந்

நேரத்தில் முக்குடம் தாங்கியென் தேர்வர!


ஈக்கள் பலசுற்றும் மின்சாரப் பூவின்கீழ்

பாக்கள் எழுதல்போல் பன்னாள் நடித்ததுவும்!


அந்தி அடங்கிய அன்றொருநாள்..! அன்னதானப்

பந்தியில் பார்வையால் என்னைப் பருகியதும்


கூத்துக் கரகாட்டாம் கூடியூர் பார்த்திருக்க

ஆத்தாடி கண்ணிரண்டால் ஆளை விழுங்கியதும்


முந்தானை மாட்டி முளைப்பாரி தானெடுத்து

வந்தவளை எண்ணியெண்ணி வாழ்வைத் தொலைத்ததுவும்


வாய்நீர் பருக வரங்கேட்டு வந்தெனக்குத்

தேநீர் சுடச்சுடத் தேர்ந்தெடுத்துத் தந்ததுவும்


புத்தகம் மார்பணைத்துப் பூவையர் சூழ்ந்துவரப்

பத்தனைப்போல் பாலத்தில் நித்தம் கிடந்ததுவும்


எள்ளுப்பூப் போலென்னைப் பார்த்துத் தலைகவிழ்ந்தாள்

கள்ளம் விலகியது காதல் எனவறிந்து


சொல்லி விடத்துணிந்து சொல்லைக் கவியெழுதிச்

சொல்ல முடியாமல் சொல்லை ஒளித்ததுவும்.!


எத்தனை பாக்கள் எழுதிவைத்தும் இன்னுமின்னும்

எத்தனை பூக்கள் பறித்துவைத்தும் நேர்வரப்


புத்தனைப் போல ஒளித்துவைத்துப் பூவைமுன்

பித்தனைப் போலப் பிதற்றிக் கிடந்ததுவும்


வேலாடும் மைவிழியாள் வேட்கைதனை யாமறிந்து

நாளும் பொழுதோடு பேசிக் கிடந்ததுவும்!


முத்தம் கொடுத்ததில்லை கட்டிப் பிடித்ததில்லை

பத்து விரல்புதைத்து மோகம் தொலைத்ததில்லை!


சித்தம் அடக்கிச் சிரித்தெதிர் தாமர்ந்து

புத்தம் புதுமைபல பேசி மகிழ்ந்ததுவும்


கற்றைக் குழல்விரிய கார்மழையில் கால்நனைய

ஒற்றைக் குடைக்குள் உயிர்நனைந்து போனதுவும்!


காலம் பிரித்ததினால் காதல் மிகுந்தோடக்

கோலஞ் சிதைந்தவளைக் கொள்ளும் வழிதேடி


ஏங்கித் தவிக்கின்றேன் ஏதோ புலம்புகின்றேன்

வீங்கி மனங்கிடக்க வெந்து தொலைக்கின்றேன்!


பொட்டழகும் போர்செய்கண் வெட்டழகும் கொங்கையிரு

மொட்டழகும் எட்டழகைப் போலிடைக் கட்டழகும்!


அன்ன நடையழகும் அந்தி உடையழகும்

பின்னல் சடையழகும் கண்டால் படைதுவளும்!


தூது தொடரும்...

திருமுருகாற்றுப்படை - உரையாடல்

பகுதி - 7

பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் 


புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: மற்றுமொரு சிறப்பான இடத்தைக் காணலாமா புலவரே?

புலவர்: ஆம் ஐயனே! அறிவுறுத்தி அகம் குளிரச் செய்க!

நக்கீரர்: அறுவகைப் பணிகளைச் செய்வோர் யாவர்?

புலவர்: அறுவகைப் பணிகளா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் ஆகியன.

புலவர்: ஓ! நூல்களைக் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுதல், மற்றவர்களுக்குப் பொருளைக்கொடுத்து உதவுதல் என்பன.

நக்கீரர்: ஆம். அந்த ஆறு வகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்கள் அந்தணர்கள்.

புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

நக்கீரர்: அவர்கள் பழம்பெரும் குடியில் தோன்றியவர்கள்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் திருமணம் புரியாது வாழ்பவர்கள்; அறம் பொருந்திய கோட்பாடு உடையவர்கள்; மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்கள்; இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவுமுதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்கள்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தைக் கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்கள். ஒவ்வொரு புரியிலும் மூன்று நூல் இழைகளைக் கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிந்து கொண்டிருப்பவர்கள்.

புலவர்: அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: நீராடிய பின்னர் ஈரமான அந்த ஆடையையே அணிந்து தலையுச்சி மீது இரு கைகளையும் குவித்து, ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லித், தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவித் திருமுருகப் பெருமானை வழிபடுகின்றார்கள்.

புலவர்: அருமை அருமை!

நக்கீரர்: அத்தகு அந்தணர்கள் வாழ்ந்துவரும் திருவேரகத்திலும் திருமுருகப் பெருமான் மன மகிழ்வோடு அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமா…

புலவர்: அடடா! இன்னும் வேறு யாரெல்லாம் திருமுருகனை வணங்குகிறார்கள் ஐயனே!

நக்கீரர்: வேலனின் குரவைக் கூத்தைக் கண்டீரா?

புலவர்: குரவைக் கூத்தா? அஃது என்னவென்று அறியத் தருவீர் ஐயனே!

நக்கீரர்: பசுமையான கொடியால் நறுமணமுடைய சாதிக்காயையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயையும் நடுவில் வைத்துக் காட்டு மல்லிகை மலருடன் வெண்கூதாள மலரையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலை முடி மீது அணிந்திருப்பான் வேலன். அவன் நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற மஞ்சள் நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன். கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்பவன். அவன், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுவான்.

புலவர்: குரவைக் கூத்தைப் பற்றி இன்னும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங் குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் கடம்பு மரத்தின் மலர்க்கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும் வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப் பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர் களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர் களாகவும் விளங்கிய மகளிரொடு ஆடுவான் வேலன்.

புலவர்: ஓ! மகிழ்ச்சியோடு ஆரவாரிக்கும் கூத்தாக இருக்குமோ?

நக்கீரர்: ஆமாம் புலவரே! திருமுருகனே உள்ளத்தில் புகுந்தவனாக வேலினைக் கையில் கொண்டு ஆடுவதால் அவன் வேலன் ஆவான். 

புலவர்: கேட்கவே ஆவலாக உள்ளதே! நேரில் கண்டால் எப்படி இருக்கும்..?

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன். கேளுங்கள் புலவரே! அந்த வேலன் சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களைத் தலைமுடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழல், ஊதுகொம்பு, இன்னும் பல இசைக் கருவிகளை உடையவன்; ஆடு, மயில், அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்ற தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளும் நறுமணமும் குளிர்ச்சியும் அழகும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன். குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவான்.

                                                                                                                               தொடரும்…

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 22

 சந்தக் கலிவிருத்தம்

1. கவிஞர் மதுரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டிக்

கருவாயெனை மகிழ்வோடொரு கனவாயவ ளேற்றே

உருவாக்கிய உறவேயிது உயர்வானது மென்பாள்

வரமேயவ ளெனையீன்றவ ளமுதூட்டிய தாயே!


2. கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை. 

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

வருபோழ்தினில் மாறாதெனும் நிலைமாறிடத் தீட்டித்

தருவாழ்வினில் தீராத்துயர் தடம்மாறிட வேண்டித்

திருவாழ்ந்திடும் சீரார்பதம் தொழுதேத்திடு வேனே.


3. கவிஞர் இல.சுந்தரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

இருபோழ்தினி லீராயிர மெனவேயருள் மாலின்

திருவேயுறை மார்பாமதி லெளியேனுறை வெய்த

அருமாமறை நாலாயிர மதுவேவழி யாமே!


4. கவிஞர் வசந்தன் குருக்கள்

தெருவோரமாய்த் திரிவோர்தனைச் சிறப்பாய்நிலை பேண

வருவார்சிலர் இவரின்வழி  மலரும்பலர் வாழ்வு

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

தருவார்பலன் நிறைவாய்வரச் சரியாய்வரு மன்றே!


5. கவிஞர் வ.க.கன்னியப்பன்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

விரைந்தோடிடும் கருணையுள விலையேயிலா வாழ்வாய்த்

தருவேனென இறையேசொலும் தகையாயுள கல்வி!

வருமோயினி அரிதாகிய வளமாயுள செல்வம்? 


6. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

திருவாக்கினைத் தந்தாயுனைத் தினம்வாழ்த்திடத் தானே

இருள்சூழ்ந்திடு மிவ்வாழ்வினி லிடையூறுகள் போக்கி

யருள்தந்தெனை யாட்கொண்டிடு மரன்தாள்களே போற்றி!


7. கவிஞர் கேசவதாஸ்

திருவாகிய ஒருபொருளெனத் திண்மதியினை ஊட்டி

ஒருபோழ்தினி லேரோயிர முணர்வாயன காட்டி

அருவாகியே கருவானவா உத்தமாயுனைப் பாடக்

குருவாயெனக் கொருவழியினைக் குவலயத்தினில் காட்டு.

பாட்டியற்றுக 23

அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்”

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இந்தத் தலைப்பில் எழுந்த கும்மிச் சிந்துப் பாக்களுக்கான காரணத்தை இன்னும் அறியாதவர் கவிஞர் தங்கமணி சுகுமாறன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறு இதனால் யாவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

கும்மிச் சிந்து

தங்கமணி சுகுமாறன்

பெண்களி லேஅவள் பேரமு தம் - அவள்

   கண்களில் நானதைக் கண்டுகொண் டேன்


பாவலர் மா.வரதராசனார்

கண்களில் காட்டிய சாடைமொழி - அந்தக்

    காட்சியின் ஆட்சியில் வீழ்ந்தனடி.!               1


தங்கமணி சுகுமாறன்

வீழ்ந்துவிட் டேநானும் வீழ்ந்துவிட் டேன் - அந்த

  வெண்ணில வுமுகப் பெண்ணழ கில்

வாழ்ந்தது போதுமிப் போமரிப் பேன்- அந்த

   வஞ்சிக்கு நேரில்லை மூவுல கில்               2


பாவலர் மா.வரதராசனார்

மூவுல கத்திலும் மொய்க்கும் அழகுள்ள

    மோகினி யோவிவள் ஊர்வசி யோ?

மேவும் திரிபுர சுந்தரி யோ - தம்பி

   மேனியில் காய்ச்சலும் கொண்டனை யோ?         3 


தங்கமணி சுகுமாறன்

காய்ச்சலைக் கண்டிவ்வு யிர்துறந் தேன் - அவள்

   கண்மருந் துண்டுபி றந்துவந் தேன்

மோச்சம டைந்திட எண்ணியெண்ணி - அவள்

   முந்தானை யில்குடி கொண்டுவிட் டேன்               4

பாவலர் மா.வரதராசனார்

முந்தானை யாஅது நம்மைந சுக்கியே

   மூச்சைய டக்கிடும்  காலன்வலை 

முந்தானை தந்தவள் மூச்சென வாகிடில்

    மூவே ழுலகிலும் வெற்றிநி லை               5


தங்கமணி சுகுமாறன்

நன்றாய்ப்பு ரிந்தது பாவல ரே- நான்

   நல்லபிள் ளையுங்கள் செல்லப்பிள் ளை

கன்றாயி ருந்தெந்தன் காதற்ப சுவினைக்

   காலமெல் லாம்சுற்று வேன்பொய்யில் லை          6


பாவலர் மா.வரதராசனார்

காலமெல் லாம்சுற்றி வந்திட வேயுன்னைக் 

   கைப்பிடித் தாலவள் வீட்டிருக் க

வேலைகெட் டுப்பிற பெண்களை "நோக்குதல்" 

    மேன்மையோ நீவிடை சொல்லுதம் பீ               7


தங்கமணி சுகுமாறன்

மேன்மையில் லையையா உள்ளம்தெ ளிந்தேனே

   மீண்டுமித் தப்பினைச் செய்யமாட் டேன்

ஆண்மைக்கி ழுக்குப்பி றன்மனை நோக்குதல்

   ஆதலால் வீட்டிலி ருந்திடு வேன்               8


பாவலர் மா.வரதராசனார்

வீட்டிலி ருப்பவள் வேதம டாதம்பி 

    வீட்டுத்தெய் வத்தினைப் போற்றிடு வோம்.

நாட்டும்வ ளத்துடன் வாழ்ந்திட வேநாமும்

   நங்கைய ரைப்போற்றி வாழ்குவ மே.!               9


தங்கமணி சுகுமாறன்

ஆகட்டும் ஆசானே உங்கள்சொல் லைப்போல

   அன்புசெய் வோமிந்த நங்கைகள் பால்

போகட்டு மேபெண்கள் கண்டதுன் பங்களும்

   போற்றிடு வோம்புகழ் நாட்டுவோ மே             10

 

உன்னையே அறிவாய்

கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை


உற்றார் எவருள ரோவெனில் சிந்தை

உற்றார் பெற்றோர் உறவோர் நெஞ்சில்

உற்றார் நட்பால் உள்ளக் கோவிலில்

உற்றார் தெய்வம் உறுதுணை கொண்டார். 


மற்றோர் போவார் வாழ்க்கை வழியில்

மற்றோர் மாற்றார் வழித்துணை எனினும்

மற்றோர் கடைவழி மயங்கிட நிற்பார்

மற்றோர் உற்றார் மனமிக ஆகார்


விற்றார் கொள்வார் விலைமுதல் சரக்கை

விற்றார் உடம்பை வினைவழி மயக்கை

விற்றார் புலன்களை விதிவழி பெருக்கி

விற்றார் கொள்ளார் விழைமன மடக்கி 


முற்றார் துறந்தார் முனிவதை மறந்தார்

முற்றார் மனத்தில் முழுது மிறந்தார்

முற்றார் இருவினை முடித்தார் பிறந்தார்

முற்றார் சொல்லற முயன்றார் பயின்றார்


கற்றார் மனமதைக் கண்டார் அடக்கக்

கற்றார் நானுள் கண்டார் நானதைக் 

கற்றார் புலன்வழிக் கடந்தார் முழுவதும்

கற்றார் தாமே கடவுள் ஆனார்.

Nov 15, 2020

தமிழ்க்குதிர் - துலை 2051 - மின்னிதழ்

 


ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் தமிழ்க்குதிர் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல சிறப்பான படைப்புகளை உருவாக்கித் தமிழ்க்குதிர் மின்னிதழுக்கு ஆதரவு அளிக்கும் படைப்பாளர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்.

கவிஞரே ஆயினும் பிழைகளின்றிக் கவிதை, கதை, கட்டுரைகள் இயற்றல் இக்காலத்தில் அரிதாகி வருகிறது. இலக்கணம் என்பது ஒரு மொழி எப்படிப் பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவும் அம் மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுவதாகும். ஒரு மொழியின் இயல்புத்தன்மை கெடுவது அம்மொழியைச் சரியாய்க் கல்லாததாலும் பிறமொழிகளின் கலப்பாலும் ஏற்படுகிறது.

பைந்தமிழ்ச் சோலையின் நோக்கம் இவ்வாறு ஏற்படும் பிழைகளைக் களைந்து மொழியைக் கற்க உதவுவதாகும். பைந்தமிழ்ச்சோலை பாட்டியற்றுக பயிற்சிகளின் மூலம் கவிஞர்களைச் செம்மைப்படுத்தி வருகிறது. தமிழ்க்குதிருக்கு அனுப்பப்படும் படைப்புகளிளும் பிழைகள் திருத்தம் செய்யப்பட்ட பின்னரே வெளியிடப் படுகின்றன. இது கவிஞர்கள் தம் படைப்புகளில் காணும் பிழைகளைத் திருத்திக் கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

தமிழைத் தமிழாய்ப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமையும் உரிமையும் ஆகும். தாய்மொழியாம் தமிழைப் பிழையின்றிக் கற்றுக்கொண்டு வளருங்கள். சமுதாயத்தைச் சீர்திருத்தும் நோக்கம் கொண்டு படைப்புகளை உருவாக்குங்கள். மகிழ்ந்திருங்கள்.

வாழ்க தமிழ்! பரவுக மரபு!

தமிழன்புடன்

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

Nov 14, 2020

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

 பகுதி - 7

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

 

காதலியின் அடையாளம் கூறல்

(கேசாதிபாதம்)

 

கொண்டல் சுருட்டிவைத்த கொண்டையில்.! வெள்ளியன்ன

வண்ணமுத்தைச் சூடிவைத்துக் கொண்டவள்...! கொண்டைமுத்தைக்.!

 

கொண்டல் இடைப்பறக்கும் கொக்கென்றே கண்டுகண்டு

கெண்டைரெண்டும் உண்ணுமென்(று) அங்கிங்(கு)ஓடிக்கலங்கும்..!

 

வான்பிறையாய் நெற்றியது தோன்ற..! நிறைகுழலில்

தேனொழுகும் முல்லைமலர் ஊன்ற..! இரவெழிலாய்

 

வந்ததுபோல் மின்மினியைக் காட்டும்.. கழுத்தொளிரும்

அந்தமணிப் பேரொழுங்கின் தோற்றம்..! அடடடடா.!

 

காமன் படைக்கலமோ? கண்மை எழுதிவைத்த

ஏமன் கொலைப்பொருளோ? ஏந்திழையாள் வாள்விழிகள்

 

தாக்கத் தடுக்கும் உறையோஒ?! நீள்கரையோ.?

பார்க்கப் பலபொருளைக் காட்டுவது தான்முறையோ..!

 

என்போல வேகருத்(து)..! இன்னும் உடல்சிறுத்துக்.!

கண்மேல் புருவம் இருக்கும் கலைமிகுத்துக்..!

 

காவிமலர் பூந்த கருப்புவண்டைப் போல்.!உயிர்

ஆவி குடிக்கும் அவள்விழிகள்..! தூவியுடன்

 

அஞ்சனம் பூசி அழகு மொழிபேசி

வஞ்சனை தீர்க்கவந்த வாள்விழிகள்..! பூங்கிளிகள்..!


ஈரிதழ்ப் பூப்போல் இருக்கும்...! அதனழகில்

ஊரிலுள்..ளோர் கண்வண்(டு) ஓயாது வந்துமொய்க்கும்..!


செம்பவளம் போலவெழில் மின்னும்... உதடுகளைச்

செங்கழுநீர்ப் பூவெனலாம் இன்னும்... இதழுள்ளே

 

பாலில் குளிந்ததோ பால்நிலவில் தோய்ந்ததோ

நீலக் கடல்பிறந்த நித்திலமோ யானறியேன்

 

நாலெட்டும் பல்லோ நடுகல்லோ நான்சாக

ஏழெட்டுத் திங்களாய்த் தீட்டியொளி கூட்டினளோ..!

 

தங்கம் படையெடுப்புக் கொள்ளும்..! கழுத்தழகின்

அங்கம் மறைத்தபடி மாலை மணிதுள்ளும்..!

 

கண்ணை உருத்தும் முலைகள் கவின்கலைகள்

முன்னம் கருத்தவிளந் தெங்கின் சிறுகுலைகள்..!

 

கட்டெறும்பைப் போல இடையாள் எழிலுடையாள்

எட்டுமட்டும் தேடினும் காணக் கிடையாஅ..!

 

கொங்கைகுழைந் தாட இடையொடியும் என்றஞ்சித்

தங்கவிழை மேகலையால் தானிறுக்கிக் கட்டுவாள்..!

 

வாழைத் தொடையேறித் தோற்றதோ வாய்புலம்பித்

தாளில் கிடந்து கொலுசரற்றித் தள்ளாடப்!

 

பஞ்சிதழைப் பாதமாக்கிக் கொண்டாள்வான் பால்நிலவை

அஞ்சிரண்டு கால்விரலாய் ஆங்கமைத்துச் சென்றவள்..!

 

வஞ்சியவள் பேரழகை வாய்த்தவெழிற் சீரழகைச்

செந்தமிழில் செப்பச் செவிகொடுத்துக் கேட்டிருந்தாய்..!

 

வானிலவைக் காட்ட வகுப்பெடுக்க வேண்டுமோ..!

தேனிலவாம் தேவதையின் தேகவெழிற் பார்த்தாலே..!

 

என்னவள் என்றே அறிவாய்.! எடுத்துநான்

சொன்னவை எல்லாம் சரிதானெ னப்புரிவாய்.!

 

வள்ளிமுத்துச் சொல்லித்தான் வந்ததாய் வாயெடுத்துச்

சொல்லிப்பார் தோற்றத்தில் மாற்றத்தைக் கூட்டுவாள்..!

 

கண்ணிரண்டைக் காதுவரை நீட்டுவாள் அங்கிலங்கும்

பொன்குழையில் மின்னற் பொலிவுறக்கூர் தீட்டுவாள்..!

 

(கொண்டல் – மேகம், காவிமலர் – தாமரைப்பூ, குழை - கம்மல்)                          


     தூது தொடரும்...

காதலோடு கண்மயங்கும்

 கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை

  

காதலோடு கண்மயங்கும் காமரசம் உள்முயங்கும்

ஆதரவாய்க் கவிதைகளோ பொங்கும் - மனம்

ஆசையலை ஆடிடவே தங்கும்.

 

பாதமுதல் கேசமீது பார்த்தலையும் கண்களுடன்

வாதம் செய்து வம்பிழுக்கும் நெஞ்சம் - அவள்

வடிவழகைக் கண்டுமிகக் கெஞ்சும்

 

மோதவரும் முன்னழகும் மோகமூட்டும் பின்னழகும்

காதலோடு கவிதைசொலத் தூண்டும் - அடடா

காத்திருக்கும் சொற்களெலாம் வேண்டும்

 

பாதரசம் போலமின்னும் பார்வைகளோ போதையூட்டும்

மாதவளோ தேன்வழியும் கிண்ணம் - எனை

மயக்குதடி நினைவிலெழும் எண்ணம்

சிவ நடமாமே!

 பைந்தமிழ்ச் செம்மல் செல்லையா வாமதேவன்

  

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன              தனதானா

 

நட்டத்தொளிர் முத்துத் திருமுகம்

  நக்கச்சடை சித்தத் தவநெறி

  நற்சத்தியும் அச்சத் தழிவதும்                 நிறைவாக

 

நச்சுப்பட நட்புப் பெறுநதி

  நத்தப்பிறை மொத்தச் சரணென

  ஒத்துக்கொள அற்பத் தனமவை         இலையாமே

 

இட்டத்தொடு சொக்குப் புருவமும்

  அட்டிக்குனி வுற்றுக் குறைகறை

  எத்தத்தடை மக்கற் கருணையின்        வடிவாமே

 

இச்சைக்கொரு முற்றுத் திரையென

  அத்தக்கரம் பற்றிப் பணிபவர்

  எக்குற்றமும் அற்றுப் பொலிவுறு       நகையாமே

 

பட்டப்பகல் ஒப்பத் தகுநிறம்

 பத்திப்படை கொட்டுக் கொடுமலம்

 பற்றிப்புனி தத்தைத் தருபவ                      ளமதாமே

 

பெற்றுப்பதி விட்டுக் கழிபொருள்

 இற்றுக்கடை சிச்சக் கரவழி

 மற்றெப்பொருள் அற்றுப்புனிதவெ(ண்) ணிறமாமே

 

வெட்டிப்பகை வெட்டப் பெருவிழி

  நெற்றிக்கலை நிற்கத் தலைநிமிர்

  வெற்றித்திரு முக்கட் பரமனின்   அருளாமே

 

மெச்சப்படை வட்டத் தமருகம்

  கட்டுத்தளை பற்றத் திருவடி

  முத்திக்கனி கொட்டித் தருசிவ    நடமாமே

 

( நச்சு – விரும்பு, நத்து – வளர், அத்தம் – தங்கம்,     அட்டி - பொருத்தமாகச் சேர்ந்து)