பகுதி - 7
பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்
புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?
நக்கீரர்: மற்றுமொரு சிறப்பான இடத்தைக் காணலாமா புலவரே?
புலவர்: ஆம் ஐயனே! அறிவுறுத்தி அகம் குளிரச் செய்க!
நக்கீரர்: அறுவகைப் பணிகளைச் செய்வோர் யாவர்?
புலவர்: அறுவகைப் பணிகளா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!
நக்கீரர்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் ஆகியன.
புலவர்: ஓ! நூல்களைக் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுதல், மற்றவர்களுக்குப் பொருளைக்கொடுத்து உதவுதல் என்பன.
நக்கீரர்: ஆம். அந்த ஆறு வகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்கள் அந்தணர்கள்.
புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
நக்கீரர்: அவர்கள் பழம்பெரும் குடியில் தோன்றியவர்கள்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் திருமணம் புரியாது வாழ்பவர்கள்; அறம் பொருந்திய கோட்பாடு உடையவர்கள்; மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்கள்; இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவுமுதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்கள்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தைக் கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்கள். ஒவ்வொரு புரியிலும் மூன்று நூல் இழைகளைக் கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிந்து கொண்டிருப்பவர்கள்.
புலவர்: அவர்கள் என்ன செய்கிறார்கள்?
நக்கீரர்: நீராடிய பின்னர் ஈரமான அந்த ஆடையையே அணிந்து தலையுச்சி மீது இரு கைகளையும் குவித்து, ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லித், தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவித் திருமுருகப் பெருமானை வழிபடுகின்றார்கள்.
புலவர்: அருமை அருமை!
நக்கீரர்: அத்தகு அந்தணர்கள் வாழ்ந்துவரும் திருவேரகத்திலும் திருமுருகப் பெருமான் மன மகிழ்வோடு அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமா…
புலவர்: அடடா! இன்னும் வேறு யாரெல்லாம் திருமுருகனை வணங்குகிறார்கள் ஐயனே!
நக்கீரர்: வேலனின் குரவைக் கூத்தைக் கண்டீரா?
புலவர்: குரவைக் கூத்தா? அஃது என்னவென்று அறியத் தருவீர் ஐயனே!
நக்கீரர்: பசுமையான கொடியால் நறுமணமுடைய சாதிக்காயையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயையும் நடுவில் வைத்துக் காட்டு மல்லிகை மலருடன் வெண்கூதாள மலரையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலை முடி மீது அணிந்திருப்பான் வேலன். அவன் நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற மஞ்சள் நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன். கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்பவன். அவன், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுவான்.
புலவர்: குரவைக் கூத்தைப் பற்றி இன்னும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!
நக்கீரர்: விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங் குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் கடம்பு மரத்தின் மலர்க்கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும் வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப் பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர் களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர் களாகவும் விளங்கிய மகளிரொடு ஆடுவான் வேலன்.
புலவர்: ஓ! மகிழ்ச்சியோடு ஆரவாரிக்கும் கூத்தாக இருக்குமோ?
நக்கீரர்: ஆமாம் புலவரே! திருமுருகனே உள்ளத்தில் புகுந்தவனாக வேலினைக் கையில் கொண்டு ஆடுவதால் அவன் வேலன் ஆவான்.
புலவர்: கேட்கவே ஆவலாக உள்ளதே! நேரில் கண்டால் எப்படி இருக்கும்..?
நக்கீரர்: இன்னும் சொல்கிறேன். கேளுங்கள் புலவரே! அந்த வேலன் சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களைத் தலைமுடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழல், ஊதுகொம்பு, இன்னும் பல இசைக் கருவிகளை உடையவன்; ஆடு, மயில், அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்ற தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளும் நறுமணமும் குளிர்ச்சியும் அழகும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன். குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவான்.
தொடரும்…
No comments:
Post a Comment