'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 15, 2020

குதிர் 2 - கதிர் 10 - கடகம்

 

ஆசிரியர் பக்கம்

அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!  அனைவரையும் அடுத்த மின்னிதழின் வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அயல்மொழிகளின் கலப்பை ஆள்வது எப்படி என்பதற்குத் தமிழின் ஒலிப்பியல்பு மாறாமல் மொழிப்படுத்திக் கொள்ளலாம் என்றனர் இலக்கணம் வகுத்தார். அயல்மொழிகளின் படைப்புகளை மொழிபெயர்க்கலாம் என்றார் பாரதியார். அவர்கள் நம் மொழியைப் பற்றிக் கருதிய நல்லுள்ளங்கள் ஆவர். 

ஆனால் இக்காலத்தில் இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மொழியையே பெயர்த்துவிடும் செயலைச் செய்யத் துணிகிறது இந்திய ஒன்றிய அரசு. அவ்விந்திய ஒன்றியம் மொழிவாரி மாநிலங்களாகப் பகுக்கப்பட்டும் மாநிலத்தின் உரிமைகள் காக்கப்படவில்லை. திணிப்புகள் மூலமாகப் பல மொழிகளை அழித்த பெருமை இந்திக்கு உண்டு. 

இந்திய ஒன்றியம் உருவான நாளிலிருந்து அரசு முறைமையைக் கண்டால் மொழியழிப்பு நடந்துகொண்டே வருகிறது என்பது தெளிவாக விளங்குகிறது. சங்கதத்தையும் இந்தியையும் இந்திய ஒன்றியம் முழுவதும் ஏற்க வேண்டும் என்பது விரும்பத்தகாத சுயநலமுடைய அறிவிலிக் கொள்கையாகும். அது வேற்றுமையில் ஒற்றுமை காணும் நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பதாகும்.

மொழிக்கே விடுதலை இல்லாதபோது மொழியின் வளத்தை உளத்துக் கொண்டு உளவளம் பெறுவது இயல்வதுண்டோ? அது மட்டுமன்றித் தமிழரே தமிழைப் புறக்கணிப்பது தன் தாய்மீது பற்றிலாது வீட்டைவிட்டுத் துரத்தும் நிலையைப் போன்றது. ஐரோப்பியரோ சீனரோ சப்பானியரோ தம் தாய்மொழிப்பற்றை விடவில்லை. தமிழர்க்குத் தாய்மொழிப் பற்றே இல்லாமல் போவது வருத்தத்திற்குரிய செய்தி. 

விடுதலைநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


                                                                       என்றும் தமிழன்புடன்,

                                                                                                  பாவலர் மா.வரதராசன்

Aug 14, 2020

வள்ளி திருப்புகழ்

                                        பைந்தமிழ்ச் செம்மல் 

                                        சியாமளா ராஜசேகர்

                                             வண்ணப்பா

தான தனதன தான தனதன

        தான தனதன              தனதானா


தோகை யிளமயி லேறி வலம்வரு

        தூய வடிவனின்          வலமாய்நீ

    தோடு செவிகளி லாட மரையொடு

        தோளொ டழகனை   யணைவாயே

பாகு கனிமொழி யாளு னிதயமும்

        பாச மிகுதியில்           நனையாதோ

    பாத மலரடி நாடி யுனதிரு

        பார்வை படுமிடம்      படர்வேனே

தேக வெழிலொடு வேல னுடனிணை

        தேவி முகமது              மொளிவீசும்

    தேடு விழிகளில் நாணு மிமையொடு

        தேவை யெதுவென    வுளம்பேசும்

மேக வலைகளி னூடு நடமிடு

        வேல னொடுவரு        குறமாதே

    வேடர் மடமக ளேவு னுறவிடம்

        வீடு மருளிட                மொழிவாயே !!

அம்மை குறைபோக்கு செம்மை இறையோனே!

 

பைந்தமிழ்ச் செம்மல்

செல்லையா வாமதேவன்

                                                              வண்ணப்பா

தனதாத்த தன்ன தனதாத்த தன்ன

        தனதாத்தா தன்ன      தனதானா

 

அறிவூட்டி என்னை உயிரூட்டி இன்னல் 

        அலைபோக்கி இம்மை             இனிதாக

    அமுதூட்டி இன்னம் அழகூட்டி மின்னும்

        அவையேற்றி அன்னை            மகிழ்வாளே

நெறிகாட்டி நன்மை வழிகாட்டி வெம்மை

        நிலைபோக்கி மண்ணில்        நிறைவாக

    நிலையாக்கு மெண்ணம் அதுவாட்ட நன்னி

        நிதிகூட்ட முன்னு                      செயலாலே

வறிதோட்ட வன்மை தலையேற்றி வண்ண 

        வகைகூட்ட உன்னி                   யெழுவாளே

    வரலாற்றில் என்னை இனிதேற்ற எண்ணி

        வயலாற்றில் விம்மி                  அழுபாடோ

குறியேட்டில் என்ன உளவேட்டில் மண்ணு

        கொலுவேற்று பண்ணில்         வரைவேனே

    குறைபோக்கி விண்ணன் எனவாக்கு மம்மை

        குறைபோக்கு செம்மை           இறையோனே!

இயற்கையைக் காப்போம்

பைந்தமிழ்ப் பாமணி மதுரா

 வண்ணப்பா


 தத்தன தனதன தத்தன தனதன

        தத்தன தனதன          தனதானா


சிற்றலை தனிலொரு சிக்கிய இலையது

        சுற்றிடு மிதயமு                        மெழிலாக

    சித்திரை வருகையி லித்தரை மலருது

        கொத்தென நிறையுது             வளமாக


முற்றிய நிலவொளி உட்புக மனையிடை

        முற்றமு நிறைவது                    நிலவாலே

    மொட்டுக ளசையுது சிட்டதை யுரசிட

        இப்புவி மகிழுது                        களிப்பாலே


சுற்றிடு புவியது சுற்றிலு மெழிலுட

        னித்தமு முழலுது                      கனிவாக

    சுத்தமு மவசிய மிக்கண மெனநினை

        விட்டிடு நெகிழியை                 மனிதாநீ


கற்றவ ரனைவரு மொற்றுமை யுடனொரு

        மித்தநி லையிலினி                  யிணைவோமே

    கட்டிட வனமது பச்சையம் பருகிட

        நித்தமு மரமது                          நடுவோமே!

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

 

பைந்தமிழ்த் தொண்டர்

தெய்வத்திரு

அருள்வேந்தன் பாவைச்செல்வி

  

 

திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் அதன் தலைவரும் திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மூத்த  தமிழாசிரியரும் பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளரும் ஆகிய ஐயா அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 2020 ஆகத்துத் திங்கள் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவருடைய ஆன்மா இறைநிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறோம். அவருடைய நினைவை ஏந்தும் விதமாக அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அருள்வேந்தன் பாவைச்செல்வி அவர்கள் 1959ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் சாமுவேல் - அன்னம்மாள் அவர்கள். அவருடைய சொந்த ஊர் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலம். ஜான்சன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமிழ்மீது கொண்ட தீராத காதலால் இராசசேகர் என மாற்றிக் கொண்டார். பின்னர் அதுவும் தமிழில்லை என்றறிந்து அருள்வேந்தன் என மாற்றிக் கொண்ட தனித்தமிழ்ப்பற்றுடையவர் அவர்.


விருத்தாசலம் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் படித்தபோதே மேடை நாடகங்களில் விரும்பி நடித்துப் புகழ் பெற்றார். மிக அழகாகப் பாடுவார். அரசை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாத அவசர நிலை அறிவிக்கப்பட்ட அந்த இக்கட்டான சூழலிலும் கபிலர் நாடகத்தில் நடித்தபோது "சோதனைமேல் சோதனை போதுமடா தமிழா" எனக் கம்பீரமாக மேடையில் பாடியவர்.

 

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியிலும் தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்ற அவர் முதுகலைத்தமிழ்ப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் (M.A., M.Phil) பெற்றவர். இவருக்குத் தமிழுணர்வை - அறிவை ஊட்டிய ஆசிரியர்கள் புலவர் கண்ணப்பனார், புலவர். பரசுராமனார், திரு. வீர.தர்மராசனார் முதலியோர். கல்லூரியில் கவின் கலை மன்றத் தலைவராகப் பொறுப்பேற்று முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் நா.காமராசன் போன்ற தமிழ் ஆளுமைகளைக் கல்லூரிக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்தார்.

அவர் தனது பெயருடன் இணையரின் பெயரையும் இணைத்து அருள்வேந்தன் பாவைச்செல்வி என எப்போதும் அவருடன் இணைந்து வலம் வருபவர். அவருடைய துணைவியார் திருமதி இதயாள் பாவைச்செல்வி அவர்கள். அவரும் பள்ளி ஆசிரியரே. அவர்களிடம் பயின்ற மாணவ மாணவியரையே தம் மக்களாய்க் கருதி மகனே, மகளே என அழைத்து அன்பு செலுத்திய பெருந்தகைமை உடைய இணையினர் அவர்கள்.


கள்ளம் கபடமில்லாது உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றித் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கும் திண்ணிய நெஞ்சினர் அவர். எந்நேரமும் தமிழ்ச்சிந்தனை ஊற்றெடுக்கும் எண்ணம் உடையவர். சிறந்த தமிழ்ப்பற்றாளர்; சமய நல்லிணக்கம் போற்றியவர்; சமூகச் சிந்தனை யாளர். பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, இளமையிலிருந்தே மானுட அக்கறையோடு தன் பயணத்தைத் தொடங்கியவர்; திராவிட இயக்கப் பற்றாளர். பள்ளி மாணவ மாணவியருக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இன்முகத்தோடு பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர். அன்பு நிறைந்த தமிழறிஞர். அழகு நிறைந்த செந்தமிழ்ப் பாட்டுக்காரர். ஏற்றத்தாழ்வு காணாத கனிவு மொழி பேசும் அற்புதப் பண்புக்காரர்.

அவர் 1999ஆம் ஆண்டு சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் முன்னிலையில் திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சங்கத்தைக் கட்டிக் காத்தார். பல்வேறு இலக்கியக் கூடல்களை நிகழ்த்தி வெற்றி கண்ட தூய தமிழ்த்தொண்டர் அவர். மறைந்த தமிழறிஞர்களை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள, அவர்களின் வழித் தோன்றல்களை அழைத்து வேர்கள் எனும் சிறப்பு நிகழ்சியைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தி வந்தார். பலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகத் ‘தமிழாய்ந்த தமிழ்மகன் - கலைஞர்’, ‘மொழிஞாயிறு பாவாணர்’ முதலிய நுல்களை வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

தமிழும் தேசிய இயக்கங்களும், தமிழும் திராவிட இயக்கங்களும், தமிழும் தமிழ்த்தேசிய இயக்கங்களும், தமிழும் பொதுவுடைமை இயக்கங்களும் எனப்பலவாறாக ஆயும் நோக்கோடு செயல்பட்டவர். அதற்கேற்பத் தமிழகத்தின் பெருந்தலைவர்கள் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தா.பாண்டியன்,  நாஞ்சில் சம்பத், மருத்துவர் இராமதாசு, வைகோ, திருமாவளவன், சீமான், பெ.மணியரசன், ஆளூர் ஷாநவாஸ், கோவி. இலெனின், மணவை முசுதபா, கொளத்தூர் மணி, முகில்வண்ணன், சீனி.சம்பத், முதலிய மிகச்சிறந்த ஆளுமைகளையும் முனைவர். மா. நன்னன், முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், கவிஞர் வாலிதாசன், கவிஞர் அறிவுமதி, காசிஆனந்தன் முதலிய தமிழறிஞர்களையும் சிறப்பு விருந்தினராகத் திருவண்ணாமலை மண்ணுக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தந்து தமிழ்வளர்த்த ஐயா அவர்களின் சேவை நெஞ்சார்ந்த பாராட்டுதலுக்குரியது. அதனால் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று தனித்த அடையாளத்தைப் பதித்தவர்.

திரு அலிமுகமது, பழ கருப்பையா, ஜெகத்கஸ்பர் முதலிய பல்சமயச் சான்றோர்கள் கலந்துகொண்ட பல்வேறு சமய நல்லிணக்கப் பெருவிழாக்களை நடத்திக் காட்டிச்  சமய நல்லிணக்க நாயகராகவும் திகழ்ந்தார். திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக 200 நிகழ்வுகளுக்கு மேல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர் அவர். பல்வேறு நூல்களைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார். திருவண்ணாமலையின் இலக்கிய வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்த தன்னலமற்ற தமிழ்த்தொண்டர்.

உலகத் தொல்காப்பிய மன்றத் திருவண்ணா மலைக் கிளையின் ஒருங்கிணைப்பாளராகப் பேருதவி செய்தவர். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைந்தமிழ்ச்சோலையின் திருவண்ணாமலைக் கிளையின் நெறியாளராக இருந்து அரும்பணியாற்றினார். திருவண்ணா மலை, ஆரணி, தேவிகாபுரம், ஆவணியாபுரம், பள்ளிகொண்டாப்பட்டு எனத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பைந்தமிழ்ச் சோலையின் ஒவ்வொரு இலக்கியக் கூடலிலும் தொடர்ந்து பங்கேற்று ஊக்கமும் ஆக்கமும் தந்து வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். இவ்வாறு தமிழ்ச்சங்கம் மட்டுமன்றித் திருவண்ணாமலையில் பல்வேறு தமிழிலக்கிய அமைப்புகள் உருவாகி வளரத் தளராத ஊக்கமும் ஆக்கமும் தந்து சிறப்புச் செய்தவர்.

இளைஞர்களை நல்வழிப்படுத்தித் தமிழ்மீது காதல் கொள்ளச் செய்தார். பல கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்தார். ‘ஊக்குவிப்பார் ஊக்குவித்தால் ஊக்குவிற்பான் தேக்குவிற்பான்’ எனும் பொன்மொழிக்கிணக்க, எப்போதும் மாறாத புன்னகையோடும், வாஞ்சையோடும், தமிழோடும் தோழமையோடும் அரவணைத்துச் சென்றவர். இளைஞர்களை, மாணவர்களை இனம், மொழி குறித்துச் சிந்திக்க வைத்தவர்; செயல்படத் தூண்டியவர். ஒரு தமிழ்ச்சங்கம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கு முன்னுதாரண மாக நின்று நடத்திக் காட்டியவர். ஆடம்பரமோ, ஆரவாரமோ இல்லாமல் செயலில் வேகம் காட்டியவர். விளம்பரத்தையோ வெற்றுக் கூச்சலையோ ஒரு நாளும் விரும்பாதவர். மிகக்கடும் உடல் உபாதைகளுக்கு இடையேயும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும், அதற்கு அவர் ஆற்றிய சேவைகளும் அளப்பரியன.

மதம் கடந்த மாமனிதர் அவர். 

“இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்

இல்லை என்று சொல்லுவதில்லை”

என இசைமுரசு நாகூர் அனிபாவின் குரலில் உச்ச தொனியில் ஓங்கிக் குரலெடுத்துப் பாடுவார்.

“நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயில்

படமாடக் கோயில் பகவற்கு அதாமே – திருமூலர்”

“இறையரசு உங்களுக்குள்ளேயே இருக்கிறது –இயேசு” என எச்சமயக் கருத்துகளையும் ஒப்பிட்டு மெச்சுபவர். கிறித்துவராக இருந்தாலும் திருவண்ணாமலை அறுபத்து மூவர் ஆய்வு மையம் சார்பில் திங்கள் தோறும் அண்ணாமலையார் திருக்கோயில் கோபுர வாயில் முன்பு நடைபெறும் ஆன்மீகச் சொற்பொழிவில் கலந்து கொண்டு தூய தமிழில் அழகிய ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்.

செந்தமிழன் சீமான் அவர்களால் பாராட்டப்பட்டுத் தமிழ்நெறிக்காவலர் எனும் விருது பெற்றார். பைந்தமிழ்த் தொண்டாற்றிவரும் மூத்த தமிழறிஞருக்கு வழங்கப்படும் பைந்தமிழ்ச் சோலையின் பைந்தமிழ்க்குவை விருது பெற்றார். மேலும் வீறுகவி முடியரசனார் விருது, கவிச்சுடர், பைந்தமிழ்ச்சீர் பரவுவார் விருது, பைந்தமிழ்த் தொண்டர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்.


கிறித்துவத் தமிழ்த்தொண்டராயினும் சமய நல்லிணக்கம் போற்றிய அவரது நல்லுடல் மனிதநேயமிக்க தமுமுக தோழர்களால் கிறித்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. யாருக்கும் கிடைக்காத இப்படியான வழியனுப்பல் அவரது நல்லுயிர்க்குக் கிடைத்தது நாட்டின் சமய நல்லிணக்க ஒருமைப்பாட்டைப் பறைசாற்றுகிறது. அவருடைய பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை எனும் மொழிக்கேற்பக் காலத்தால் அவருடைய புகழ் நின்று நிலைக்கும்.

போய்வாரீர் அருள்வேந்தே!

பைந்தமிழ்ச் செம்மல்

முனைவர் அர.விவேகானந்தன்

பைந்தமிழ்ச்சோலை, தி.மலை


அருள்வேந்தன் பேர்கொண்டீர் அன்பைத் தந்தீர்

    அருந்தமிழின் சீர்கண்டீர் அருமை கொண்டீர்

இருள்தன்னை எங்களுக்கு விட்டுச் சென்றீர்

    இனியென்ன செய்வோமோ தமிழின் வாழ்வில்

பொருளீந்தே முத்தமிழைப் பொலியச் செய்தீர்

    பொன்னடியை இனியென்று காண்போம் மண்ணில்

மருள்தன்னை விளக்குகின்ற மாலை யானீர்

    மங்காத உந்தமிழைப் போற்றி நிற்போம்!                   1


செந்தமிழை ஊருக்குள் ஏற்றி வைத்தீர்

    சொல்லிசையும் தொல்லிசையும் மீட்டி வைத்தீர்

பந்தமென்றே பைந்தமிழைப் பற்றி நின்றீர்

    பண்பான உறவுகளைப் பக்கம் கொண்டீர்

நொந்தபோது நொடிப்பொழுதில் நோதல் மாய்ப்பீர்

    நொந்துமனம் வேகின்றோம் ஏது செய்வோம்

அந்தமிலா வாழ்வன்றோ உம்மின் வாழ்வும்

    அடிமறந்து தவிக்கின்றோம் அன்பில் நாங்கள்!         2


அழைக்கும்போ தெல்லாமன் பைப்பொ ழிந்தீர்!

    அண்ணாம லையாகக் கண்டோ மும்மை

கழைக்கூத்தின் நூல்போலும் ஆடு கின்றோம்

    கண்ணொன்றை இழந்ததைப்போல் வாடு கின்றோம்

அழைத்தாலி னிவருவீரோ  இல்லை இல்லை

    அருந்தமிழி லாழ்வீரோ விதியின் தொல்லை

இழையோடும் தமிழோடு வாழ்ந்த வும்மை

     எம்வாழ்வில் நிறைப்போம்போய் வாரீர் வேந்தே!     3


***


பைந்தமிழ்ச் செம்மல்

தமிழகழ்வன் சுப்பிரமணி


அருள்வேந்தன் என்றாய்ந்(து) அழகான பேர்கொண்டு

திருவண்ணா மலையென்னும் தெய்வமனம் கமழூரில்

அருந்தமிழ்க்குச் சங்கத்தை ஆக்கிவைத்துத் தமிழாய்ந்தீர்

பெருந்தெய்வ மாயின்று பேர்நிறுத்திச் சென்றீரே!                             1                           


கொஞ்சுகின்ற பேச்சுக்குக் குறைவின்றி நிறைவெய்திப்

பஞ்சுபோன்ற மெல்லுள்ளம் படைத்தவரே ஆசானே

நெஞ்செலாம் வேகுமாறு நினைவெலாம் எமைவருத்தத்

துஞ்சியதேன் இன்றுநீர் துயரத்தைத் தந்தீரே!                                    2


ஆற்றொணாத் துயரத்தால் அகம்நொந்து கிடக்கின்றோம்

மாற்றொணாக் கவலையினால் வாடுகிறோம் வருந்துகிறோம்

ஊற்றெனவே தோன்றியவரே ஊர்வளர்த்த வள்ளல்நீர்

வீற்றிருப்பீர் உள்ளத்தில் விலகாத உணர்வோடே!                            3


*** 


பைந்தமிழ்க்கதிர்

முனைவர் த.உமாராணி


தங்களுயிர் பிரிந்த தகவல றிந்தவுடன்

தவித்தேன் மனம் தளர்ந்தேன் அருள்வேந்தே!


தமிழுக்குத் தொண்டாற்றத் தமிழ்ச்சங்கம் நிறுவித்

தமிழுக்காக வாழ்ந்தவர்; தண்ணென நிறைந்தவர்!

மலர்போன்று பூத்து; மதியொளியாய்த் திகழ்ந்து;

பலர்போற்ற அன்பைப் பகர்ந்து களித்தவர்!


மாணவர் பலரை மதியால் வென்று

மாண்புற நற்புகழை மலையெனப் பெற்றவர்!

கடைமூச்சு வரையில் கலங்காமல் ஓவியமாய்

விடைபெற்றவர் காவியத்தில் இடம்பெறுவார்!


அருள்வேந்தன் ஐயாவின் ஆன்மா அமைதி யடைய இறையை இறைஞ்சுகிறேன்.

பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

(மாறுரையும் நேருரையும்)

 பைந்தமிழ்ப்பாமணி

பொன். இனியன் 

kuralsindhanai@gmail.com

 


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

எனும் அழுக்காறாமை அதிகாரப் பாடலுக் கமைந்த உரைகள் குறளின் நுவல்பொருட்கு எவ்வாறு இயைபு அல்லது முரண்படுவன எனச் சுட்டுதலும் அதன் நேர்ப்பொருளை யறிய முயலுதலும் இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

பிறனொருவன் மற்றவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினால் விலக்குமவனது சுற்றம் உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்பது மணக்குடவருரை. 

பிறர்க்குத் தருவதைப் பார்த்துப் பொறாமைப் படுகிறவனின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெட்டுவிடும் என்கிறார்  வீ.முனிசாமி.

சுற்றமும் என்பதன் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொக்கது எனக் கொண்டு, பொறாமைக்காரனேயன்றி அவன் சுற்றமும் கெடுவர் என்கிறார் குழந்தை.

சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது எனக் குறித்துத் தடுப்பவன் மட்டுமல்லாது அவன் உறவினரும் உண்பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர் என்கிறார் பாவாணர்.

அழுக்கறுப்பான் சுற்றம் என்பதை அழுக்காற்றைச் செய்வானது சுற்றம் என உரை செய்து, ‘சுற்றம் கெடும்’ எனவே அவன் கேடு சொல்லாமலேயே பெறப்பட்டது என உரை விரிவு காட்டுகிறார் பரிமேலழகர்.

நல்லவர் ஒருவர் மற்றவர்க்குக் கொடுத்தபோது பொறாமை காரணமாக ஒருவன் தடுப்பான் எனில் அவன் உடுப்பதற்கு உடையின்றியும் உண்பதற்கு உணவு இன்றியும் அழிவான் என்பது அறவாணன் உரை.

மேற்குறித்த மூன்றனுள், முதலாவதில் பொறாமை கொள்பவனின் சுற்றம் கெடும் என்பது தவறிழைத்தவன் ஒறுக்கப்பட வேண்டுவது இயற்கை நீதியாம். தவறிழைக்கத் தூண்டியவரும் அதற்குத் துணை நின்றவரும்கூடத் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதில் எவரும் உடன்படுவர்.

அழுக்காறு கொண்டு அடுத்தவர் அடைய விருக்கும் நன்மையைத் தடுப்பவனின் வினை விளைவான் உண்டாம் ஏதம் அவனுக்கே யாவதன்றி அவனின் சுற்றம் கெடல் என்பது நீதியாமா எனும் கேள்வி எழுவதாகிறது. ஒருவன் செய்யும் பாவத்திற்கான பழியைப் பிறிதொருவன் மேற் சுமத்துதல் முறையாகாது என்பது கருதி இதனை  உரையன்மை எனலாம்.

சுற்றங் கெடும் எனும் தம்முரைக்கு ஒரு நியாயப் பாட்டைக் காட்டக் கருதி, ஒருவனுடைய ஒழுக லாற்றுக்கு அவன் வாழும் சுற்றமும் சமுதாயச் சூழ்நிலைகளும் காரணம் என்பதால் ‘சுற்றம் உண்பதூஉம் உடுப்பதூஉம் இன்றிக்கெடும் என்றார்’ எனும் குன்றக்குடி யடிகளாரின் கூற்று பொருந்தாததும் புறந்தள்ளற்குரியதுமாகும். என்னையா மெனில், அதே சமூகச் சூழலில் ஈத்துவக்கும் வேறொருவனும் இருத்தலான்.

மேலும், காரியமாற்றியவனைக் குற்றத்துக்குப் பொறுப்பாக்காது காரணமா யமைந்த சமூகத்தை மட்டும் சார்பு காட்டிப் பழிப்பது முறையின்றாம்.

அடுத்ததாகச், சுற்றமும் எனும் எச்ச உம்மை தொக்கதாகக் கொண்டு, பொறாமையால் தடுப்பவன் மட்டுமன்றி அவன் உறவினரும் கெடற்குரியராகக் காட்டுவன.

பேதை பிறந்த குடி மடியும் (603) என்றதனாலும் அடுத்தூன்றும் நல்லாள் இல்லாத குடி இடுக்கண் கால் கொன்றிட வீழும் (1030) என்றதனாலும் அழுக்காறுடையானின் கேடு அவனின் கிளைஞ ரெனப்படும் உறவினர்க்குமாம் என்பது ஏற்புடையதே.

வேரிற் பட்ட நச்சானது செடியின் தண்டு கிளை எனப் பரவி நுனிக்கொம்பர்வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும். எனினும், அது அக்கிளைகளில் வந்தமரும் பறவைகளுக்காவ தில்லை யென்ப துன்னுக. கேளிர் எனப்படும் சுற்றத்தார் பறவைகளை ஒப்பர் என்பது கொண்டு, ஒருவன்றன் கேடு அவன் ‘சுற்றத்தையும்’ சூழும்  என்பது பொருந்துமா என எண்ண வேண்டுவதாம்.

மூன்றாவதாக, நல்லவர் ஒருவர் மற்றவர்க்குக் கொடுத்துதவும்போது பொறாமை காரணமாக ஒருவன் தடுப்பான் எனில் அவன் உடுப்பதற்கு உடையின்றியும் உண்பதற்கு உணவு இன்றியும் அழிவான் எனும் அறவாணனின் உரை குறட்கு இயைபுடையதாயினும், ‘சுற்றம் என்னும் அதன் சொல்லாட்சியைப் பொருட்படுத்தாமல் தவி்ர்த்து விட்டமையால் அது முழுமையற்ற தாகிறது.

குறளிற் குறிக்காதனவற்றைப் புறத்திருந்து வருவித்துப் பொருள் புகட்டுதல் போன்றே குறள் குறிப்பைப் தவி்ர்த்தவாறு உரை செய்வதும் வழுவே யாகும்.

இவை இவ்வாறாகக், குறளின் நுவல்பொருள்தா னென்னாம்  என்பது குறித்து இனிச் சிந்திப்போம்.

குறள், அறம் பொருள் இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டிருப்பினும் அம்மூன்றனுள்ளேயும் ஊடாடி இயைந்து நிற்பது அறமேயாகும். அஞ்சுவதோறும் அறனே (366), ஒல்லும் வகையான் அறம் ஓவாதே செயல் (33), அறத்தான் வருவதே இன்பம் (39) என்பவற்றைக்  காண்க. அழுக்காறு எனுங் குற்றத்தாலாம் பழிக்கும் கேட்டிற்கும் ஆளாக வேண்டியவன் அஃதுடையவனே யாவதல்லால் அவன் சுற்றத்துக்குக் கேடு சூழ்தல் என்பது முறையாகாது. வள்ளுவம் எல்லாவற்றிலும் அறத்தையே முதன்மைப்படுத்திக் காட்டுகிறது. அதனதன் படுபாக்கு ஏதம் அதைச் செய்தவனுக்காதலே அறமாம். அதனைப் பிறர்க்காக்கிக் காட்டியிரார்  என்பது திண்ணம். 

ஒருவனின் நலந்தீது ஆக்கங்கேடு புகழ்பழி ஆகியவை அவனின் நீங்காத உறவாகிய இயல்புடைய மூவரைச் சார்தலும் உண்டு. ஆனால் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழித் தீர்வதாகிய சுற்றத்தை அது பற்றுதல் இல்லை. எனவே, சுற்றம் எனத் தனித்தும் சுற்றமும் எனச் சேர்த்தும் கெடும் எனக் காட்டியது பொருந்தா தென்பது தெளியலாம். மேலும், வினைப்பகை வீயாது பின்சென்று அடும் (207) என்பது கொண்டு, கெடும் எனக் குறள் குறித்தது அழுக்கறுப்பானையே என்பதும் பெறப்படும். இக்குறட் பொருளுக்கான கருத்தும் பொருட்டெளிவும் இத்தோடு (மட்டும்) நிறைவுடைய வாதல் இல்லை.

இதில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியதோர் அதிநுட்பம் இன்னொன்றுமுண்டு. அது அவனுக்கு  உண்டாகுங்  கேடு  எது  என்பதைப் பற்றியதாகும்.  இக்குறட்பாவின் பொருள் முடிவு காட்டுவதாகிய ஈற்றுச் சீரான கெடும் என்பது அழுக்காறுடையா னொடுபோய்ப் பொருந்தியது போல, ஈற்றயல் சீராகிய ‘இன்றி’ எனும் வினையெச்சம் எதனோடு பொருந்தி நிற்க வேண்டுவது என்பதே அடுத்து நாம் அறிய வேண்டியதாகும்.

உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும் என்பது பரிமேலழகருரை. தடுப்பவன் மட்டுமின்றி அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர் என்பது பாவாணருரை. அவன் மற்றும் அவன் உறவினரின் வாழ்வில் வறுமை சூழும் என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

இவரெல்லாம் பொருட்கேடு வந்துசேரும் என்பதையே பொருட்டாக்கிக் காட்டினர். மேனோட்டதில் இவை உண்மைபோல்  தோற்றினும் வள்ளுவத்தின் நுவல்பொருள் அதுவன்றாம்.

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் (153) என்பது குறள். உடைப்பெருஞ் செல்வர்க்கழகு பலரோடிருந்து உண்ணுதல். அழுக்கறுப்பானை எவரும் அண்டார் என்பதால் பலரோடு இருந்து உண்ணும் பேற்றினை அவன் இழந்தவனாவான் என்கிறது குறள். அதாவது துய்ப்பு இருந்தும் அதில் துப்பிருக்காது என்றதாம்.

குறள் சுட்டுவது பொருள் வறுமையை நோக்கிய தன்றாம்; அவனோடு பொருந்துவா ரிலாமையால் அவன் பொன்றுதலைக் காட்டியதாம். இனன் இல் ஊர் வாழ்தலாகிய இன்னாமையைச்  சுட்டியவா றாவது இது. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகலே செல்வம் பெற்றதால் ஒருவன் பெறத்தக்க பயனாகும் (524). ஈதல் இலாதான் பெருஞ்செல்வத்து இயல்பு ஏதம் (1006) எனப்பட்டது. பகிர்ந்துகொள்ளப்பட்ட துன்பம் காணாமற் போகும். இன்பம் பகிர்ந்துகொள்ளப்படும்போது இரட்டிப்பாகும் என்று சொல்வதுண்டு. அது பற்றியே ஈத்துவத்தல்  எனப்பட்டது.

அறங்கூறான் அல்ல செயினும் புறங்கூறாமை ஒருவற்கு இனிது என்புழிப்போலத், தான் கொடா னாயினும் பிறர் கொடுப்பதைக் கெடுக்காமல் இருப்பதும் ஓர் அறமே. அவ்வாறு கெடுப்பவனை ஒருவரும் அண்டுதல் இல்லை.

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்

மருங்குடையார் மாநிலத் தில்                    (526)

என்பது ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

இக்குறட்பா, கொடுப்பது அழுக்கறுப்பான் உண்பதூஉம் உடுப்பதூஉம் சுற்றம் இன்றிக் கெடும் எனும் வைப்பில் பொருள் காணற்குரியதாகும்.

மற்றவர் அடையும் உதவியைக் கண்டு பொறாமை கொண்டு அதைத் தடுப்பவன் பலரோடு கூடித் துய்த்தற் கேலாதவாறான கேடடைவான் என்பது இதன் நேரிய தெளிபொருளாகிறது.

கொடுப்பதைக் கெடுப்பவன் தன் இனத்தோடு கூடியிருந்து எதையும் துய்க்க இயலாத தனியனாகிக் கெடுவான் என்பது இதன் கருத்து.

காக்கைவிடுதூது

                                                                பகுதி - 4

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து


புன்செய் வளம்..!

 

ஆவிபோய் வெம்மை

அனல்பறக்கும் உப்பளமாய்ப்

பாவியேன் காதல்

படுநோயில் வேகின்றேன்..!                     73

 

வாவி மலர்பெய்து

வண்டார் குழலாடும்

பூவிழியாள் ஊர்தேடிப்

போவாய்நீ தூதெனக்குக்..!                      74

 

காமன் விடுகணையால்

காதல் உயிர்கொய்யக்

காலன் வருமுன்னே

காக்காய்போ காப்பாய்வா..!                  75

 

காதலியாள் ஊரோ

கழுகுமலைப் பக்கம்தான்

ஆதலால் வேலன்

அருளுண்டாம் அஞ்சாதே..!                     76

 

ஈரெட்டுக் கல்தாண்டின்

என்னவள் ஊர்கிடக்கும்

காரெட்டும் பூமரங்கள்

காற்றால் முகில்துடைக்கும்                   77

 

வானுரசி நிற்கும்

வளப்பனையின் கள்ளருந்தி

மீனுரசும் பொய்கையிலே

மேகங்கள் தள்ளாடும்..!                           78

 

முன்னங்கால் தூக்கி

மறியினம் மாவுதிர்க்கக்

கன்னங்கள் போல்சிவந்து

கால்வாய் படகோட்டும்.!                          79

 

ஊழிவெள்ளம் வந்ததுபோல்

ஊர்ந்தோடும் செம்மறியை

ஆலமரம் மேலேறி

அஞ்சி அணில்பார்க்கும்..!                       80

 

செங்களம் காயும்

சிவந்த மிளகாயை

வெங்களம் என்றே

விரும்பிப் பருந்தாயும்..!                           81

 

மேய்ந்த களைப்பாற..!

வேல மரத்தடியில்,

சாய்ந்துகண் மூடி

எருமை அசைபோட                                 82

 

வாயொழுகும் நீரெல்லாம்

வானருவி என்றெண்ணி

ஈமுழுகும் காட்சி

நினைவூட்டும் குற்றாலம்.!                      83

 

கோணப் புளிதின்று

கொட்டை கிளிசிந்தத்

தேனுண்வண் டெண்ணித்

தெறித்துக் குரங்கோடும்..                      84

 

ஆட்காட்டிக் கீச்சொலியும்

நாகணவாய்ப் பேச்சொலியும்

பூக்காட்டின் கௌதாரிப்

புள்ளொலியும் ஆர்ப்பரிக்கும்!                   85

 

மஞ்சள் உடற்பூசிக்

கள்ளி மலரழைக்கக்

கொஞ்சிக் குலவுவண்டு

கூடல் திளைத்திருக்கும்..!                           86

 

வேம்பில் குயிலமர்ந்து

மெல்லிசையால் தாலாட்டக்

கூம்பும் சிறகுடைய

கூஉகை கண்ணுறங்கும்..!                          87

 

மூங்கா வெருகோடி

முட்புதரில் தாம்ஒளியத்

தூங்கா முயல்கலை..

யத் துரத்தி நாயோடும்                               88

 

பஞ்சுருட்டான் கூடிப்

பறக்கும்; கரிச்சான்கள்

கொம்பமர்ந்த பாட்டுக்குக் ..!

கொண்டலாத்தி சென்னியாட்டும்..!         89

 

கற்பனை இல்லாக்

கவிபோல் வறள்நிலத்தில்,

ஒப்பனை இன்றி

ஒயிலாய் மயில்நடக்கும்..!                          90

காளைக் கழுத்துமணி

கம்பீரப் பாட்டுக்கு

வாலைத் தரையூன்றி

வாகாகப் பாம்பாடும்.                                 91

 

பால்வெண்ணெய் போலும்

பருத்தி வெடித்துநிற்க

மால்வண்ணன் அன்ன

மழையோ மகிழ்ந்திறங்கும்..!                     92

 

வண்டல் நிலம்வெடித்து

வான்பார்த்து வாய்திறக்கக்

கொண்டலோ தாயாகிக்

கொங்கை குளிர்விக்கும்.!                          93

 

புன்செய் நிலத்தின்

பொழிலழகைக் கூறிவிட்டேன்

நெஞ்சில் நிறைத்ததை

நீகடந்து போனபின்..!                                   94

 

நஞ்சைவரும், நண்டோடும்

நாற்றங்கால் நீள்வரப்பில்,

துஞ்சவரும் மீனெண்ணித்

தூயவெள்ளைக் கொக்குகளும்..!           95

                                                                     (தூது தொடரும்...!)

(மறி – ஆடு; மா – மாம்பழம்; மூங்கா – கீரி; வெருகு – காட்டுப்பூனை; பஞ்சுருட்டான் – ஒருவகைப் பறவை; கரிச்சான் - கரிக்குருவி, ரெட்டைவால் குருவி என்றும் அழைப்பர்; கொண்டலாத்தி - கொண்டையலச்சான் என்றும் கூறுவர், மரங்கொத்திப் பறவைகளில் ஒருவகை).