'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

(மாறுரையும் நேருரையும்)

 பைந்தமிழ்ப்பாமணி

பொன். இனியன் 

kuralsindhanai@gmail.com

 


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்

எனும் அழுக்காறாமை அதிகாரப் பாடலுக் கமைந்த உரைகள் குறளின் நுவல்பொருட்கு எவ்வாறு இயைபு அல்லது முரண்படுவன எனச் சுட்டுதலும் அதன் நேர்ப்பொருளை யறிய முயலுதலும் இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

பிறனொருவன் மற்றவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினால் விலக்குமவனது சுற்றம் உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்பது மணக்குடவருரை. 

பிறர்க்குத் தருவதைப் பார்த்துப் பொறாமைப் படுகிறவனின் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெட்டுவிடும் என்கிறார்  வீ.முனிசாமி.

சுற்றமும் என்பதன் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொக்கது எனக் கொண்டு, பொறாமைக்காரனேயன்றி அவன் சுற்றமும் கெடுவர் என்கிறார் குழந்தை.

சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது எனக் குறித்துத் தடுப்பவன் மட்டுமல்லாது அவன் உறவினரும் உண்பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர் என்கிறார் பாவாணர்.

அழுக்கறுப்பான் சுற்றம் என்பதை அழுக்காற்றைச் செய்வானது சுற்றம் என உரை செய்து, ‘சுற்றம் கெடும்’ எனவே அவன் கேடு சொல்லாமலேயே பெறப்பட்டது என உரை விரிவு காட்டுகிறார் பரிமேலழகர்.

நல்லவர் ஒருவர் மற்றவர்க்குக் கொடுத்தபோது பொறாமை காரணமாக ஒருவன் தடுப்பான் எனில் அவன் உடுப்பதற்கு உடையின்றியும் உண்பதற்கு உணவு இன்றியும் அழிவான் என்பது அறவாணன் உரை.

மேற்குறித்த மூன்றனுள், முதலாவதில் பொறாமை கொள்பவனின் சுற்றம் கெடும் என்பது தவறிழைத்தவன் ஒறுக்கப்பட வேண்டுவது இயற்கை நீதியாம். தவறிழைக்கத் தூண்டியவரும் அதற்குத் துணை நின்றவரும்கூடத் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதில் எவரும் உடன்படுவர்.

அழுக்காறு கொண்டு அடுத்தவர் அடைய விருக்கும் நன்மையைத் தடுப்பவனின் வினை விளைவான் உண்டாம் ஏதம் அவனுக்கே யாவதன்றி அவனின் சுற்றம் கெடல் என்பது நீதியாமா எனும் கேள்வி எழுவதாகிறது. ஒருவன் செய்யும் பாவத்திற்கான பழியைப் பிறிதொருவன் மேற் சுமத்துதல் முறையாகாது என்பது கருதி இதனை  உரையன்மை எனலாம்.

சுற்றங் கெடும் எனும் தம்முரைக்கு ஒரு நியாயப் பாட்டைக் காட்டக் கருதி, ஒருவனுடைய ஒழுக லாற்றுக்கு அவன் வாழும் சுற்றமும் சமுதாயச் சூழ்நிலைகளும் காரணம் என்பதால் ‘சுற்றம் உண்பதூஉம் உடுப்பதூஉம் இன்றிக்கெடும் என்றார்’ எனும் குன்றக்குடி யடிகளாரின் கூற்று பொருந்தாததும் புறந்தள்ளற்குரியதுமாகும். என்னையா மெனில், அதே சமூகச் சூழலில் ஈத்துவக்கும் வேறொருவனும் இருத்தலான்.

மேலும், காரியமாற்றியவனைக் குற்றத்துக்குப் பொறுப்பாக்காது காரணமா யமைந்த சமூகத்தை மட்டும் சார்பு காட்டிப் பழிப்பது முறையின்றாம்.

அடுத்ததாகச், சுற்றமும் எனும் எச்ச உம்மை தொக்கதாகக் கொண்டு, பொறாமையால் தடுப்பவன் மட்டுமன்றி அவன் உறவினரும் கெடற்குரியராகக் காட்டுவன.

பேதை பிறந்த குடி மடியும் (603) என்றதனாலும் அடுத்தூன்றும் நல்லாள் இல்லாத குடி இடுக்கண் கால் கொன்றிட வீழும் (1030) என்றதனாலும் அழுக்காறுடையானின் கேடு அவனின் கிளைஞ ரெனப்படும் உறவினர்க்குமாம் என்பது ஏற்புடையதே.

வேரிற் பட்ட நச்சானது செடியின் தண்டு கிளை எனப் பரவி நுனிக்கொம்பர்வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும். எனினும், அது அக்கிளைகளில் வந்தமரும் பறவைகளுக்காவ தில்லை யென்ப துன்னுக. கேளிர் எனப்படும் சுற்றத்தார் பறவைகளை ஒப்பர் என்பது கொண்டு, ஒருவன்றன் கேடு அவன் ‘சுற்றத்தையும்’ சூழும்  என்பது பொருந்துமா என எண்ண வேண்டுவதாம்.

மூன்றாவதாக, நல்லவர் ஒருவர் மற்றவர்க்குக் கொடுத்துதவும்போது பொறாமை காரணமாக ஒருவன் தடுப்பான் எனில் அவன் உடுப்பதற்கு உடையின்றியும் உண்பதற்கு உணவு இன்றியும் அழிவான் எனும் அறவாணனின் உரை குறட்கு இயைபுடையதாயினும், ‘சுற்றம் என்னும் அதன் சொல்லாட்சியைப் பொருட்படுத்தாமல் தவி்ர்த்து விட்டமையால் அது முழுமையற்ற தாகிறது.

குறளிற் குறிக்காதனவற்றைப் புறத்திருந்து வருவித்துப் பொருள் புகட்டுதல் போன்றே குறள் குறிப்பைப் தவி்ர்த்தவாறு உரை செய்வதும் வழுவே யாகும்.

இவை இவ்வாறாகக், குறளின் நுவல்பொருள்தா னென்னாம்  என்பது குறித்து இனிச் சிந்திப்போம்.

குறள், அறம் பொருள் இன்பம் என முப்பாலாகப் பகுக்கப்பட்டிருப்பினும் அம்மூன்றனுள்ளேயும் ஊடாடி இயைந்து நிற்பது அறமேயாகும். அஞ்சுவதோறும் அறனே (366), ஒல்லும் வகையான் அறம் ஓவாதே செயல் (33), அறத்தான் வருவதே இன்பம் (39) என்பவற்றைக்  காண்க. அழுக்காறு எனுங் குற்றத்தாலாம் பழிக்கும் கேட்டிற்கும் ஆளாக வேண்டியவன் அஃதுடையவனே யாவதல்லால் அவன் சுற்றத்துக்குக் கேடு சூழ்தல் என்பது முறையாகாது. வள்ளுவம் எல்லாவற்றிலும் அறத்தையே முதன்மைப்படுத்திக் காட்டுகிறது. அதனதன் படுபாக்கு ஏதம் அதைச் செய்தவனுக்காதலே அறமாம். அதனைப் பிறர்க்காக்கிக் காட்டியிரார்  என்பது திண்ணம். 

ஒருவனின் நலந்தீது ஆக்கங்கேடு புகழ்பழி ஆகியவை அவனின் நீங்காத உறவாகிய இயல்புடைய மூவரைச் சார்தலும் உண்டு. ஆனால் அறுநீர்ப்பறவைபோல் உற்றுழித் தீர்வதாகிய சுற்றத்தை அது பற்றுதல் இல்லை. எனவே, சுற்றம் எனத் தனித்தும் சுற்றமும் எனச் சேர்த்தும் கெடும் எனக் காட்டியது பொருந்தா தென்பது தெளியலாம். மேலும், வினைப்பகை வீயாது பின்சென்று அடும் (207) என்பது கொண்டு, கெடும் எனக் குறள் குறித்தது அழுக்கறுப்பானையே என்பதும் பெறப்படும். இக்குறட் பொருளுக்கான கருத்தும் பொருட்டெளிவும் இத்தோடு (மட்டும்) நிறைவுடைய வாதல் இல்லை.

இதில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியதோர் அதிநுட்பம் இன்னொன்றுமுண்டு. அது அவனுக்கு  உண்டாகுங்  கேடு  எது  என்பதைப் பற்றியதாகும்.  இக்குறட்பாவின் பொருள் முடிவு காட்டுவதாகிய ஈற்றுச் சீரான கெடும் என்பது அழுக்காறுடையா னொடுபோய்ப் பொருந்தியது போல, ஈற்றயல் சீராகிய ‘இன்றி’ எனும் வினையெச்சம் எதனோடு பொருந்தி நிற்க வேண்டுவது என்பதே அடுத்து நாம் அறிய வேண்டியதாகும்.

உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும் என்பது பரிமேலழகருரை. தடுப்பவன் மட்டுமின்றி அவன் உறவினரும் உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளும் இன்றிக் கெடுவர் என்பது பாவாணருரை. அவன் மற்றும் அவன் உறவினரின் வாழ்வில் வறுமை சூழும் என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

இவரெல்லாம் பொருட்கேடு வந்துசேரும் என்பதையே பொருட்டாக்கிக் காட்டினர். மேனோட்டதில் இவை உண்மைபோல்  தோற்றினும் வள்ளுவத்தின் நுவல்பொருள் அதுவன்றாம்.

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் (153) என்பது குறள். உடைப்பெருஞ் செல்வர்க்கழகு பலரோடிருந்து உண்ணுதல். அழுக்கறுப்பானை எவரும் அண்டார் என்பதால் பலரோடு இருந்து உண்ணும் பேற்றினை அவன் இழந்தவனாவான் என்கிறது குறள். அதாவது துய்ப்பு இருந்தும் அதில் துப்பிருக்காது என்றதாம்.

குறள் சுட்டுவது பொருள் வறுமையை நோக்கிய தன்றாம்; அவனோடு பொருந்துவா ரிலாமையால் அவன் பொன்றுதலைக் காட்டியதாம். இனன் இல் ஊர் வாழ்தலாகிய இன்னாமையைச்  சுட்டியவா றாவது இது. சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகலே செல்வம் பெற்றதால் ஒருவன் பெறத்தக்க பயனாகும் (524). ஈதல் இலாதான் பெருஞ்செல்வத்து இயல்பு ஏதம் (1006) எனப்பட்டது. பகிர்ந்துகொள்ளப்பட்ட துன்பம் காணாமற் போகும். இன்பம் பகிர்ந்துகொள்ளப்படும்போது இரட்டிப்பாகும் என்று சொல்வதுண்டு. அது பற்றியே ஈத்துவத்தல்  எனப்பட்டது.

அறங்கூறான் அல்ல செயினும் புறங்கூறாமை ஒருவற்கு இனிது என்புழிப்போலத், தான் கொடா னாயினும் பிறர் கொடுப்பதைக் கெடுக்காமல் இருப்பதும் ஓர் அறமே. அவ்வாறு கெடுப்பவனை ஒருவரும் அண்டுதல் இல்லை.

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்

மருங்குடையார் மாநிலத் தில்                    (526)

என்பது ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

இக்குறட்பா, கொடுப்பது அழுக்கறுப்பான் உண்பதூஉம் உடுப்பதூஉம் சுற்றம் இன்றிக் கெடும் எனும் வைப்பில் பொருள் காணற்குரியதாகும்.

மற்றவர் அடையும் உதவியைக் கண்டு பொறாமை கொண்டு அதைத் தடுப்பவன் பலரோடு கூடித் துய்த்தற் கேலாதவாறான கேடடைவான் என்பது இதன் நேரிய தெளிபொருளாகிறது.

கொடுப்பதைக் கெடுப்பவன் தன் இனத்தோடு கூடியிருந்து எதையும் துய்க்க இயலாத தனியனாகிக் கெடுவான் என்பது இதன் கருத்து.

No comments:

Post a Comment