'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 18

நேரிசை வெண்பா

1. கவிஞர் சு.வி.லட்சுமி
உள்ளத்தில் தேளாய் உதட்டில் மதுமொழியாய்க்
கள்ளம் மறைக்கும் கயவராய் - முள்ளெல்லாந் 
தன்னுள் நிறைத்தசெந் தாழைபோல் நீசருடன் 
அன்போடு வாழ்தல் அரிது!

2. கவிஞர் பொன்  இனியன், பட்டாபிராம் 
அடுத்தவர் வாழ வகம்பொறாத ழுங்கி  
மடுத்தவா யெல்லாமும் மாய்வர் - கெடுத்தடல்
என்பதோர் கீழ்மைகைக் கொள்வரா லெந்நாளு   
மன்போடு வாழ்த லரிது

3. கவிஞர் வெ. நாதமணி
தொட்டா லுயிர்போகும் தூரவில கென்னும்இக்
கட்டான காலமிதில் யாவருமே - எட்டியே
நின்றெதிர்க் காண்பவர்க்கும் நோயுளதோ யென்றஞ்ச
அன்போடு வாழ்த லரிது

4. கவிஞர் செந்தில் 
தேராத் தலைவனைத் தேருங்கால் வாக்குதனைத்
தீரா விலைக்குநாம் தீர்க்குங்கால் - வாராத
துன்புகள் வந்து துரத்துங்கால் மன்பதையார்
அன்போடு வாழ்த லரிது

5. கவிஞர் பட்டுக்கோட்டை சத்யன் (எ) சங்கத்தமிழ் வேள்
என்புதோல் போர்த்திய ஈனர் பலருடை
யின்னலூட்டுஞ் செய்கைதா னெங்குமே! - தென்தீவில்
இன்பந் தொலைத்த எளியோர் மிகுந்ததால்
அன்போடு வாழ்தல் அரிது!

6. கவிஞர் அபூ முஜாஹித்
இன்பத்தி லெல்லா மிணைந்தொரு மித்துவரும்
இன்னலிலே தள்ளி இருப்பாரே - என்றும்நற்
பண்பிலா நெஞ்சம் படைத்தோர் அவருடனே
அன்போடு வாழ்தல் அரிது

அறுசீர்விருத்தம்

7. கவிஞர் பா.வசந்தக் குருக்கள், இலண்டன்
நிலையான இன்ப மெங்கும் 
    நிறைவாகப் பெற்றோர் இல்லை
மலைபோலத் துன்பம் வருமே 
    மனங்கொண்டு மகிழ்வாய்த் தீர்ப்போம்!
கலையாத உறவும் நட்பும்
    கலந்துதானே  நின்றால் போதும்
அலையாக வஞ்சங் கூடின்
    அன்போடு வாழ்தல் அரிது

வஞ்சி வருத்தம்

8. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
முன்கோபம் கொண்டு பேச
வன்பாடு வந்து சேரும்
தன்னோடு சொந்தம் என்றும்
அன்போடு வாழ்தல் அரிதே!

No comments:

Post a Comment