'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

நடுப்பக்க நயம்

                                                   கம்பனைப் போலொரு

பகுதி – 5

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

 

இப்போது இலக்கியக் காட்டுக்குள் நுழைவோம்.

தமிழ்மொழியே திராவிடம் என்பது உண்மையானால் நிகழ்காலத்தில் வழங்குகின்ற சொல்லே திரிபடைந்த சொல்லாக இருக்க வேண்டும். அஃதாவது, நிகழ்காலத்தில் மக்கள் வழக்காக ஒருசொல் இருக்கிறதென்றால் முற்காலத்தில் அச்சொல்லுக்கு முந்தைய வடிவத்தில் அச்சொல் மூலமாக இருந்திருக்க வேண்டும். இதுவே இயற்கை. அட... சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

ஆக, முன்னரே தமிழ் என்ற பெயருடன் ஆளப்பட்டிருந்த ஒருசொல்லே திரிபடைந்தது என்று வைத்துக் கொண்டால் அந்த மூலச்சொல்லே முதன்மைச் சொல்லாகிறது.

தமிழ், தமிழர், தமிழகம் என்றுதான் நம் தமிழிலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளன. ஆனால், திராவிடம் என்றோ, திராவிடத்தின் மூலமாகப் பாவாணர் குறித்த தமிழம் என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.

தமிழிலக்கியங்களில் தமிழ் என்ற சொல் வழங்கப்பட்டிருத்தலைக் காண்போம்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே (புறம்.58)

அதூஉம் சாலுநற் றமிழ்முழு தறிதல் (புறம் 50)

தமிழ் வையை தண்ணம் புனல் (பரி.6. 60)

தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே (திருமந்.81)

(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். இவை போதுமானவை. மற்றவற்றைத் தேடிக் காண்க)
***
தமிழர் என்ற சொல் வழங்கும் நூல்கள்:

மண்டினிக் கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் (புறம் 35)

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட (சிலம்பு.நீர்ப்படைக் காதை)

(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். இவை போதுமானவை. மற்றவற்றைத் தேடிக் காண்க)

****
தமிழகம் என்ற சொல் வழங்கப்பட்ட நூல்கள்:

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்
(தொல். சி.பாயிரம்)

தமிழகப் படுத்த இமிழிசை முரசின் (அகம் 227)

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறிந்த (சில. அரங்)

தென்தமிழ் நாட்டுச் செழுவில் (சில.காட்சி)

(இன்னும் பல சான்றுகள் இருக்கலாம். ..இவை போதுமானவை. மற்றவற்றைத் தேடிக் காண்க)

****
இப்படியாக நம் இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ள தமிழ், தமிழர், தமிழகம் என்னும் சொற்கள் எதைக் குறிக்கின்றன.?

தமிழ் மொழியையா? திராவிட மொழியையா?
தமிழ் இனத்தையா? திராவிட இனத்தையா?
தமிழ்நாட்டையா? திராவிட நாட்டையா?

தமிழ் என்ற சொல்லின் திரிபே திராவிடம் ஆமாயின் ஏன் நம் இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லால் குறிக்கப்படவில்லை.?

திராவிடம் பின்னெழுந்ததென்றால், முன்பே செழித்திருந்ததும் இன்றும் தொடர்வதுமான ஒருசொல்லை ஏன் திரிக்க வேண்டும்? அதற்குத் தேவையென்ன வந்தது?

ஏனெனில்,

திரிப்பில் உருவானதே திராவிடம் என்னும் சொல். திரிக்க உருவானதே திராவிடம் என்னும் சொல். தமிழ் என்ற உணர்வைத் திருப்ப உருவானதே திராவிடம் என்னும் சொல்.

இல்லாத ஒன்றை இருப்பதுபோல் காட்டி இருக்கும் ஒன்றைச் சிதைக்கவும், தமிழ், தமிழர் என்னும் உணர்வை நசுக்கவும் மடைமாற்றவும் உருவானதே திராவிடம் என்பதை உணருங்கள்.

 

எனவே, நாம் யார் என்று புரிகிறதா? நம் மொழி எது என்று புரிகிறதா? நம் நாடு எது என்று புரிகிறதா?

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகைச் சேர்ந்தவர் நாம். நாம் தமிழர். நம் மொழி தமிழ். நம் நாடு தமிழ்நாடு.

வடக்கே வேங்கடத்தை இழந்தாலும் மேற்கே தேவிகுளத்தை இழந்தாலும் இப்போதுள்ள நிலப்பரப்பைத் தமிழ்நாடாகக் கொண்ட நாம் தமிழர்கள். நம் மொழி தமிழ். நம் நாடு தமிழ்நாடு.

நந்தமிழ்ப் பண்பாட்டை உலகோர் மெச்சத் தகுசெயல் புரிவதே நம் நோக்கமாகும். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு உயிர்க்கும் அதுவே கொள்கையாகும்.

நண்பர்களே!

நாம் யார்? நம்மினம் எது? நம் நாடு எது? என்பனவற்றைக் கண்டாயிற்று.

கம்பனை எதிர்ப்பவர்கள் யார் என்ற வினாவுக்கு முதற்காரணம் யார் என்பதையும் சுட்டியாயிற்று.

இனி...                   

                                                              (…தொடரும்…)

No comments:

Post a Comment