'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

காலைக் காட்சி

                                                           பைந்தமிழ்ச் செம்மல்

நிர்மலா சிவராசசிங்கம்

 

அதிகாலைக் கதிரவனின் எழில்மிக்க கோலமதில்

    அருவியெல்லாம் தங்கமாக மின்னக் கண்டேன்

மதுரகவி இசைத்தபடி முன்றினிலே கோலமிட்டு

    மகிழ்வாக வரவேற்கும் பெண்ணைக் கண்டேன்

பொதிகைமலைத் தென்றலென்னை இதமாகத் தாலாட்டப்

    புத்துணர்ச்சி அகமெங்கும் பரவக் கண்டேன்

குதூகலமாய் மானெல்லாம் மிடுக்கோடு நடந்துசெல்லக்

    குவலயமும் அதிசயித்து நோக்கக் கண்டேன்      1

 

கண்கவரும் சோலையிலே அழகாய்ப் பூக்கள்

    கதிரவனின் ஒளிபட்டு மின்னக் கண்டேன்

வண்டுகளும் ஆங்காங்குப் பறந்து சென்று

    வண்ணமலர் மேனியிலே தவழக் கண்டேன்

திண்டாடும் தண்டுகளும் அசைந்து மெல்லத்

    திக்கெல்லாம் அசைகின்ற காட்சி கண்டேன்

கண்மயக்கும் காட்சிதனைக் கண்ட வெய்யோன்

    கதிரினது வெப்பத்தைக் குறைத்து நின்றான்      2

 

நிற்கின்ற இடமெல்லாம் அருவி பாய்ந்து

   நெஞ்சமது குளிர்ந்திடவே மெல்லப் பாயும்

அற்புதமாய்ப் பயிரெல்லாம் வளரச் செய்ய

   அருவியது நிலமெல்லாம் நனைத்துச் செல்லும்

பொற்றாம ரைக்குளங்கள் நிரப்பி யோடப்

   பொற்கதிரோன் புன்சிரிப்பை உதிர்த்து நிற்பான்

நற்காட்சி காண்பதற்குப் பறவை எல்லாம்

   நாடிவந்து மரங்களினில் நின்று பார்க்கும்            3

 

பார்க்கின்ற திக்கெல்லாம் பறவை யெல்லாம்

    பரவசமாய்ச் சத்தமிட்டு வட்டம் போடும்

ஆர்வமாகக் குஞ்சுகளும் எட்டிப் பார்த்தே

    ஆரவார மிட்டபடித் துள்ளி நிற்கும்

ஊர்க்காகம் ஊரெல்லாம் சத்த மிட்டே

    உலகமது விழித்திடவே சேவை செய்யும்

ஆர்க்கின்ற ஒலியினிலே காலை வேளை

    ஆனந்தம் நெஞ்சினிலே பொங்கச் செய்யும்        4

 

நிற்கின்ற மரமெல்லாம் அசைந்தே ஆட

    நெஞ்சமது மலர்ந்திடவே தென்றல் வீசும்

நற்காலை வேளையினில் இதமாய் நீவி

    நானிலமும் உற்சாகம் பொங்க வைக்கும்

விற்பனங்கள் பற்பலவும் காட்டும் தென்றல்

    விதவிதமாய்ச் சுழன்றபடி வித்தை காட்டும்

பொற்கதிரின் வெப்பத்தைக் குறைத்து மேவிப்

    புற்களினில் ஒட்டிநிற்கும் பனியை வீழ்த்தும்      5

 

வீழ்த்துகின்ற அலைகளினை மோதி வள்ளம்

    வீரமுடன் போராடிக் கரையை நாடும்

ஆழ்கடலில் கதிரவனின் கதிர்கள் பாய

    அசைந்தோடும் மீன்களெல்லாம் நிழலைத் தேடும்

சூழ்வளியும் வீசிடவும் அலைக ளோடி

    சுடுமணலைத் தழுவிவரும் குளிர்ச்சி பொங்க

மாழ்தலின்றி அலைகடலும் காலை வேளை

    மகிழ்ச்சியுடன் ஆரவார முடனே ஆர்க்கும்           6

 

ஆர்க்கின்ற மணியொலிகள் ஊரை எழுப்ப

    அர்ச்சகர்கள் பூசைதன்னைத் தொடங்கி நிற்பர்

கீர்த்தனங்கள் பக்தர்கள் இசைத்துப் பாடக்

    கீழ்த்திசையில் கதிரவனும் வாழ்த்தி நிற்பான்

வார்மையாக மக்களெல்லாம் இறையை வேண்டி

    வாஞ்சையோடு பூசையினைப் பார்த்து நிற்பர்

நேர்த்திதனை முடிப்பதற்கு வருவோர் அங்கு

    நெய்விளக்கேற் றியவாறு சுற்று வாரே                  7

 

சுற்றுகின்ற கதிரவனின் ஒளியைக் கண்டு

    துடிப்புடனே உழவர்கள் கழனி செல்வர்

நெற்பயிர்கள் செழிப்பதற்கு நீரைப் பாய்ச்சி

    நெகிழ்ச்சியாகப் பணியதனைச் செய்து நிற்பர்

பொற்கதிர்கள் வயலதனைத் தொட்டுப் பார்க்கப்

    பொன்னொளியாய் மின்னிடுமே பயிர்க ளெல்லாம்

அற்புதமாய் விளங்கிடுமே வயலின் காட்சி

    அகமெல்லாம் களிப்புறுமே காணும் போதே       8

 

உள்ளமெல்லாம் குதூகலிக்கும் பரிதி தோன்ற

    ஊரெல்லாம் விழித்தெழும்பி அவனைப் போற்றும்

புள்ளிபோட்டுக் கோலமதை வாச லிட்டுப்

    புள்ளினங்கள் உண்பதற்கு வழிகள் செய்வர்

துள்ளியோடும் கன்றுகளைப் பிடித்துக் கட்டித்

    தொழுவமதில் தாயோடு சேர்த்து வைப்பர்

பள்ளிசெல்லப் பிள்ளைகளை எழுப்பி விட்டுப்

    பக்குவமாய்க் கல்விகற்க அனுப்பு வாரே              9

 

எண்திசையும் கதிரவனின் வரவு கண்டே

    இன்புற்று வரவேற்பர் உவகை கொள்வர்

விண்ணகமும் ஒளிர்ந்திடுமே கதிரின் வீச்சால்

    வெண்முகிலும் தவழ்ந்திடுமே வான மெங்கும்

மண்ணகத்தில் புள்ளினங்கள் கீதம் பாடி

    மகிழ்வாகச் சுதந்திரமாய்ப் பறந்து செல்லும்

எண்ணமது மலர்ந்திடவே உலக மெல்லாம்

    எழுகதிரைப் போற்றித்தம் பணிசெய் வாரே     10

No comments:

Post a Comment