'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

ஸ்ரீதசகம் – திருப்பத்து

                                                         பைந்தமிழ்ப் பாமணி

இல.சுந்தரராசன்

 பொருட்டாகப் பொருளினைக் கருதிலேன் நாடோறும்

புத்தகம் தூக்கி வாழ்ந்தேன்!

பொன்னுக்குப் பின்னரே சென்றிலேன் பொழுதெல்லாம்

பூசைவா ணிக்கே செய்தேன்!

வருகின்ற காசினைப் போற்றிச்சே மிக்காமல்

வள்ளலைப் போல்ந டித்தேன்!

வறுமையுடைப் பிடியிலும் வருந்திலேன் வாழ்விலதை

வர்க்கமென் றேசு கித்தேன்!

கருவோடு வந்ததோர் தமிழெனும் காரிகையின்

கைப்பிடித் தேந டந்தேன்!

கற்றோரின் முன்கைகள் கட்டினேன் காசுள்ளோர்

கண்முனி மிர்ந்த லைந்தேன்!

உருவான நாள்முதல் உன்பதம் போற்றாமல்

உலவினேன் தூற்றி லேனே!

உயர்மாலன் மார்பிலே உவந்துறை திருவேயின்

றோடிவா வேண்டி நின்றேன்!                        (1)

 

வாவந்து தங்கம்மா நீங்காமல் நின்றிடு

வைத்துனை பூசைசெய்வேன்!

வாடா துனைப்போற்றி வணங்குவேன் வறியோரின்

வாட்டமும் ஓட்டி வாழ்வேன்!

தாவென்று கேட்பார்க்குத் தந்துதவு நிலைகாணத்

தாவென்றுனைக் கேட்கிறேன்!

தாளாத ருணமென்னும் மூட்டைசுமக்கிறேன்

தயைகாட்டு மூச்சுவிடுவேன்!

நாவுள்ள வாணியின் நல்லருள் யாவுமுன்

நலம்பாடவே வைக்கிறேன்!

நற்றமிழ் மாலையால் நாரணன் தேவியே

நாளுமுனை அணிசெய்கிறேன்!

காவலென் றுன்னையே அண்டினேன் கதிவேறு

காண்கிலேன் காக்கதாயே!

காகுத்தன் பாதியே கருணைமகராணியே

கடுகிவா இன்றுநீயே!                                     (2)

 

நில்லாம லோடலுன் இயல்பான போதிலும்

நின்றுநீ காக்கவேண்டும்!

நீருக்கு மணைகட்டல் போல்பதம் கட்டினேன்

நின்றுதான் ஆகவேண்டும்!

சொல்லாரம் சூட்டுமோர் பிள்ளைக்கு நீபதில்

பொன்னாரம் சூட்டவேண்டும்!

சொர்ணத்தின் தேவிக்கும் கடனுண்டு கொல்லென்ற

சொல்லின்றி ஆக்கவேண்டும்!

இல்லாமை என்னுமோர் இழிநிலை என்னிடம்

இல்லாமல் ஆகவேண்டும்!

இதுவேண்டும் அதுவேண்டும் என்றுன்னை மீண்டும்நான்

இறைஞ்சாமல் யாவும்வேண்டும்!

வில்லாளன் ராமனை விழியாலே ஆண்டிடும்

வீணையே வைதேகியே!

விழிபார்த்துச் சுழிமாற்றி விடலைக்கு வழிகாட்ட

ஓடிவா ஸ்ரீதேவியே!                                         (3)

 

வேதாந்தி சங்கரர் வேதாந்த தேசிகர்

வேண்டப் பொன்மாரி யானாய்!

வேறேதுங் கதியிலா விளையாட்டுச் சிறுபிள்ளை

வேண்டினேன் ஓடிவாராய்!

ஆதாரம் நீயென அண்டிடும் அடியேனுக்

கருளவே நேரஞ்செய்யின்

அதுதாங்கு வல்லமை அகமிலாச் சிறுவனும்

அழுதிடின் தாங்குவாயோ?

ஏதானுஞ் செயலாற்றி என்னுயிர்க் காப்பைநீ

என்பதை அறிவனாயின்

எதுசெய்த போதினும் இப்போதே செய்யெனு

மிறைஞ்சலைச் சொல்லவந்தேன்!

சாதாரணர்க் காற்றும் சாக்குகள் வேண்டிலேன்!

சற்றுன்றன் பார்வையாலே

சட்டென்று பிள்ளையின் மிடிநீக்கு நோக்கினைச்

சாதிக்க வேண்டினேனே!                               (4)

 

வறியமால் உள்ளத்தை வாட்டுமால் நெஞ்செலாம்

வதங்குமா றுழலலானேன்!

வானமாற் போல்நீயும் வழங்குமா றுன்னையான்

வழுத்துமா றெழுதலானேன்!

உரியமால் வந்ததும் ஓடுமாம் வெக்கையும்

ஒண்டுமா மமைதியாங்கே! 

உள்ளமால் தூண்டலால் ஒண்டமிழ் கொண்டுனை

ஓதுமா றாக்கிவைத்தாய்!

பெரியமால் வேண்டுவோர்ப் பிழறுமாற் கஞ்சுவார்

பேதையான் அஞ்சலெல்லாம்

பிசையுமா றுறுத்திடும் பிணியதாம் மிடியவன்

பிடியதாம்! மீளவேதான்

கரியமால் செயலெலாம் கண்களின் அசைவினால்

கட்டுக்குள் வைத்தவுன்னை

காக்குமா றண்டினேன்! கலங்குமா றின்றிநீ

கடுகிவா ஸ்ரீதேவியே                                      (5)

 

வறியமால் - வறுமையாகிய மயக்கம்;

வானமால் – மேகம்;

உரியமால் - உரித்தான காற்று;

உள்ளமால் – வேட்கை;

பெரியமால் – பெருமை;

கரியமால் - மாயோன்

 

ஈயெனக் கேட்பவர்க் கில்லையென் னாதீய

இன்றமிழ் சொலவிலையோ?

எல்லார்க்கும் கேட்பதைத் தருகின்ற அன்னைக்கிங்

கெளியேன்கண் படவில்லையோ?

நாயன்னன் என்றாலும் நாரணன் மனம்வாழும்

நாயகியுன் நாயில்லையோ?

நற்றமிழ்ப் பாவென்னும் வால்கொண்டு நன்றியாய்

நானாட்டல் போதவிலையோ?

தாயுள்ளம் என்பதே தட்டாமல் தருவதாம்

நீயென்றன் தாயில்லையோ?

தடுமாற்றம் தள்ளடா தனயனே என்றுடன்

தமிழ்கூற வாயில்லையோ?

காயங்க ளானபின் களிம்புகள் வேண்டிலேன்

காக்கமுனம் வருகநீயே!

கனகதா ராத்தவம் கழன்றதும் சொர்ணமழை

ககனத்தில் பெய்ததாயே!                              (6)

 

அந்தவான் தோன்றவே அதனுடன் வந்ததால்

அமைந்ததோ உனதுநோக்கு?

அத்துவா னடவியுள் ளலைகிறே னம்மையே

ஆதிவான் நீயும்நோக்கு!

முந்துவான் பொழிவென மூண்டவா றென்னிடர்

முற்றுவா னெய்துவண்ணம்

முழங்குவா னாகநீ முகிழ்க்கையில் துயரெலாம்

மூடுவா னாகிடாதோ?

நந்தவான் குழவியாய் வந்தவான் சோதியாம்

நாரணன் மார்பிலாடும்

நல்லவான் தேவிநீ நாடுவான் வானெலாம்

நாட்டுவா யென்றுதானே

குந்தவா வென்றுனைக் கூவினேன் கேட்டதுங்

கோலவான் காட்டுவாயே!

குன்றுவா னென்னுமோர் குறையிலா மாதவன்

குலவுஸ்ரீ தேவித்தாயே!                                   (7)

 

அந்தவான் - அந்த அமுதம்;

ஆதிவான் – ஆதிமூலப்ரகிருதி;

முந்துவான் - முந்துகின்ற மேகம்;

முற்றுவான் - முடிவான மோட்சம்;

முழங்குவான் - முழங்குகின்ற இடி;

நந்தவான் - நந்தனுடைய பெருமை;

வந்தவான் - வந்த ஆகாய;

நல்லவான் - நல்ல அழகிய;

நாடுவான் வான் - நாடுகின்றவனுடைய நன்மை;

கோலவான் – கோலச்சிறப்பு;

குன்றுவான் - குறைகின்ற நேர்மை.

 

தழலெனச் சூழ்மிடி தகிக்கையில் அணைத்திடத்

தண்மழை யாகவருவாய்!!

தாளே பிடிப்பென்று தண்டனிட் டோர்க்குநீ

தனமோடே யாவுமருள்வாய்!

விழலுக் கிறைத்தநீர் ஆகுமோ என்வாக்கு

வேதனை நீக்க விரைவாய்!

வேதம் புகழ்ந்திடும் சீதக் கிரணங்களை

விழியாலே இன்று பொழிவாய்! 

நழுவும் நகைப்பிலே நாள்தளும் வித்தைகள்

நானூறு மானதம்மா! 

நன்றொன்று செய்யதையும் இன்றிங்குச் செய்யென்று

நானாணை இடலாகுமா?

வழவழப் பாம்புறை அழகனின் ஆவியே! 

வள்ளன்மை காட்டுவாயே!

வலமிட மாகநீர் தழுவும் அரங்கத்தில்

வாழும் பிராட்டி தாயே!                                  (8)

 

தோலியை உண்டந்தத் தொண்டை யுகந்தவன்!

தோழன் கொணர்ந்த கந்தல்

துண்டினுள் அவலதைத் தூக்கிப் புசித்தவன்

துணைவியே இங்குப்பாராய்! 

பாலினா லானதோர் பரவையின் ஆழத்தைப்

பர்வதம் அறியுஞ்செம்பூப்

பாவையுன் கருணையின் பாடரிய ஆழத்தைப்

பத்தனே அறிவ னம்மே! 

காலிலே விழுமிவன் கழுத்துமுன் காந்தள்நேர்

கழல்கள் உறுத்த விலையோ? 

காதிலே விழுமிவன் கவிதையின் கதறலுன்

கவனத்தை ஈர்க்க விலையோ?

மாலவன் மார்புசூழ் மணக்கின்ற துளசியால்

மந்தமா கினையோநீயே! 

மணியாக் கிடாதிவன் பிணிநீக்க ஓடிவா

மலர்மக ளென்னுந்தாயே!                              (9)

 

பொன்னியே! முன்பந்தப் பொன்னனின் பிள்ளைக்குப்

புகலாக ஓடி வந்தே

பூமியில் வீற்றிரு பொருளெலாம் பூந்தவன்

புகழ்மடி வீற்றிருப்போய்!

தன்னையே எண்ணியே தருக்குறும் என்மனம்

தன்னையா குதியென்றாக்கித்

தருகிறேன் தமிழெனும் வேள்வியாற் றையலே

தருணமீ தபயந் தாராய்!

மன்னியே நின்னருள் கூட்டென்றன் துயரெலாம்

மறலியைக் காணவென்றே!

மாதிக்கு வெளியெலாம் உன்பெயர் எளியனால்

சாதிக்க வேண்டுமன்றே! 

உன்னவோர் காரண மின்றியும் கருணையாம்

ஊற்றினைச் சுரக்குநீயே!

உயர்மால னோடுதின மடியோமுக் கருளவே

ஊடும்ஸ்ரீ தேவித்தாயே!                   (10)

No comments:

Post a Comment