'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

செண்டு

 பைந்தமிழ்ச் சுடர் 

                                                             மெய்யன் நடராஜ்

விதியேயென இருந்தாலுனை விளையாடிடும் துன்பம்

    விரைவாயதைத் தடுத்தாலுனை விலகாதினி இன்பம்

நதிபோல்வெகு சிறப்பாயொரு நடைபோட்டிடு நித்தம்

    நலிவேயிலை உயர்வேகிட நலமாகிடும் சித்தம்

மதிதானுனக் கிருக்கேயதை மதிப்பாக்கிடு நன்று

    மதியாதவ ரெவராகினும் மதிப்பாரதைக் கண்டு  

புதிதாயுனைப் பரிசீலனை புரிவாயெனில் இந்தப்

    புவிமீதொரு புதுப்பூமழை பொழிவாய்சுக மென்றே!


உழைப்பேயுனை உயர்வாக்கிடும் உணர்வாயிதை நீயே

    உழைக்காவுனை விரும்பாதெரு உறவாகிய நாயும்

அழைப்பாரென இருந்தேதினம் அடுப்போரமு றங்கி

    அலுத்தாலொரு தொழிலானது அணுகாதுனை நெருங்கி

பிழைப்போரது பிழைப்பானது பிழையானதும் அல்ல

    பிழைக்காதுளப் பிழைப்பானது பிழையாகுவ துண்டு

நுழைவாயிலை அடைப்பார்மனம் நுகைவாகிடச் செய்து

    நுழைந்தேசிறு தொழில்பூவினை நுகர்வாயது செண்டு.

 

நுகை – இளகச்செய்தல்

No comments:

Post a Comment