'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 23, 2021

தமிழ்க்குதிர் - மீனம் 2052 - மின்னிதழ்


 

ஆசிரியர் பக்கம்

அன்பானவர்களே! வணக்கம்.

ஓரினத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தாரின் மொழியை அழித்தால் போதும் என்பர் மொழியியலார். 

கோடிக்கணக்கானோர் பேசுகின்ற, எழுதுகின்ற ஒரு மொழியை அழிக்கவியலுமா? கடைசி மாந்தன் இருக்கும்வரை அம்மொழியின் பேச்சு வழக்கிருக்கும். அம்மொழியின் இலக்கியங்கள் வாயிலாக எழுத்துவழக்கிருக்கும்.

ஆயினும் மொழியை அழித்தலென்பது அதனைச் சிதைப்பதைக் குறிக்கும். சிதைத்தலாவது அதன் தூய்மையான தனித்தன்மையைச் சிதைக்கு மாற்றான் அம்மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதாம். 

இது வெளிப்படையான மொழிக்கலப்பின்வழி ஒருமொழியைச் சிதைப்பதாகும்.

மற்றொரு வழியிருக்கிறது. அது... அம்மொழியின் பெயரைத் திரித்தும், அதன் தொன்மையைக் குறைத்தும், அதன் மூலத்தை வேறொரு மொழியாகக் காட்டியும், அம்மொழியுணர்வை வீறுகொளச் செய்யாதிருத்தலும், அவ்வாறு வீறுகொள்வோரை "இனவெறியன், சாதி வெறியன் என்று முத்திரை குத்தித் தனிமைப்படுத்துவதும் என்பனவாகிய பல தீய செயல்முறைகளை உள்ளடக்கிய கொடிய வழியாகும்.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை அம்மொழியை அழிக்கும் செயல்களில் முதல்வழியை ஆரிய மற்றும் பிறமொழியினர்  செய்து வருகிறார்கள்.

கொடிதான இரண்டாவது வழியை… 

நம்மோடு நம்மவர்போலவே கலந்தும், நம்மொழியைத் தெளிவுறக் கற்றும், ஆனால்  தங்கள் தாய்மொழிப் பற்றை உள்ளத்தில் ஆழப் பதித்தும், தமிழை அழிக்கும் வண்ணம் எத்தகைய இழிசெயலையும் செய்யத் தயங்காத திராவிடரே செய்து வருகிறார்கள்.


தமிழா !  விழித்தெழு!


இனவுணர்வு கொள்.! 

நாம் தமிழினம்.


மொழியுணர்வு கொள்.! 

நம்மொழி தமிழ்


நாட்டுணர்வு கொள்.! 

நம்நாடு தமிழ்நாடு!


வாழிய செந்தமிழ்!  

வாழ்க நற்றமிழர்!  

வாழிய தமிழ்த்திரு நாடு!


அன்புடன் 

பாவலர் மா.வரதராசன்.

Apr 18, 2021

மழை வரமாமே!

பைந்தமிழ்ச் செம்மல்
செல்லையா வாமதேவன்

தான தனதன தான தனதன
தான தனதன தனதானா

கோடை யெழுகதி ரோடு படமிடு
கோர வெயிலது கொடிதாமே
கோப முறுவிழி யோடு முகிலுறு
கோல மெரிதழ லுருவாமே

வாடை வருவழி யோடு குளிரையு
வாரி வருவது சுகமாமே
வாதை ஒருவழி யாக விடைபெற
வான மொழியது திருவாமே

பீடை குறையவு மோடை நதியொடு
பீடு நிறையவு முருகாதோ
பீலி நடமிடு பீலி தருவிடை
பேடை யிணையுடன் இதமாமே

மூடை நிறைவுறு மாறு வயலுறு
மூடு விளைவொடு கனியாமே
மோடு நிலையுற மோதி இடியொடு
மோலி யணிமழை வரமாமே!

( பீலி - மயில், மலை
மூடை - தானியக்கோட்டை
மோடு - பெருமை, மேடை
மோலி – கிரீடம் )

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
பகுதி – 12

கொங்கை இரண்டும் குவிந்தமுகிழ் கோங்கரும்பு
செங்கை விரிந்தவிதழ்ச் செங்கழுநீர்ப் பூவாகும்

பார்க்குவிழி பூங்குவளை பாதம் அனிச்சமலர்
வேர்க்கும் முகமதுவோ வெண்பனித் தாமரை

வட்ட இதழிரண்டும் வண்ணத்துப் பூச்சியொட்டா
மொட்டவிழ் செம்பருத்தி! மோகம் உயிர்த்தெழுப்பும்

ஏழுவகைப் பூச்சுமந்(து) ஏந்திழையாள் ஊர்ந்துவர
வாழும் நிலம்வியக்கும் வையகம் கண்மயக்கும்..!

அந்த மலர்போலும் மங்கைதன்னைக் கண்டெந்தன்
நொந்த நிலையெடுத்து நீயியம்(பு)..! ஆமாம்

கரடிகுளம் வள்ளிமுத்தார் காதலுக்குத் தூதாய்
வரும்நிலை சொன்னவுடன் மைவிழியாள் கண்விரியும்..!

பொய்யில்லை அன்பில் புரட்டில்லை என்பதவள்
மெய்தோன்றும் மாற்றம் மிகத்தெளிவாய்க் காட்டிநிற்கும்..!

வாலைக் குமரியவள் வாள்விழியில் தோயாமல்
ஆலைக் கரும்பெனநான் ஆனநிலை ஆங்குச்சொல்..!

மாலை வருவதற்குள் மான்விழியாள் சூடிவைத்த
மாலை மலரேனும் வாங்கிவா..! நானோ

மனையாளின் பொன்விரலில் மாட்டிவைத்த பொன்செய்
கணையாழி கண்ட இராமன்போல் காத்திருப்பேன்..!

ஏங்கிநிற்கும் என்னுள்ள ஏக்கத்தை தீர்க்கமலர்
வாங்கிவந்தால் காக்கையே உன்னை வரவேற்று..!

நெய்யைக் கலந்தநெல் சோற்றில் பருப்பூற்றிக்
கையிற் பிசைந்து கவளம் பலவைப்பேன்..!

வாழையிலை வைத்து வகைவகைச் சோற்றோடு
நாளையிளம் காலை நனிவிருந்து செய்துவைப்பேன்..!

செந்தழல் வாட்டிச் செழுங்கறி ஆட்டிறைச்சி
பொன்கலம் வைத்துப் புசித்துண்ண நான்தருவேன்..!

வெங்கலக் கும்பாவில் வேகவைத்த இட்டலியை
உண்ணென்று சட்டினியை உட்கலந்து கூரைவைப்பேன்..!

கோழிக் குழம்பும் கொதித்துவெந்த முட்டையொடு
நாழி வரகரிசிச் சோற்றையும் நான்வைப்பேன்

ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி மீன்நண்டு பன்றியொடு
காட்டிறைச்சி பற்பலவும் காட்டியுனை நானழைப்பேன்..!

வெங்காயம் பூண்டு மிளகொடு சீரகமும்
செம்மையுடன் சேர்த்துப் புளிச்சாறும் செய்துவைப்பேன்..!

எட்டுக் கலம்நிறைய எல்லா உணவமைத்துத்
தொட்டுண்ணக் கூட்டும் துவையல் பலசமைத்து

அன்பும் கலந்தமைத்த ஆசை விருந்திதுவாம்
துன்பம் விலக்கியென்றன் தூய உளத்தோடு

காகாகா என்றழைப்பேன் காக்கை விருந்துண்ண
வாவாவா என்றழைப்பேன் வள்ளிமுத்து செய்விருந்தால்..!

வாயும் வயிறும் நிரம்பியுன்றன் கூட்டமெல்லாம்
நோயும் நொடியும் விலகிக் களிப்புடன்

நூறாண்டு நூறாண்டு வாழ்க நுவலுதமிழ்
சீராண்ட தன்மைபோல் சேர்ந்து..!

தூது முற்றும்...!

முருகாதலம் - காரிகை

பகுதி – 2
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி

வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!
விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!
அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து
செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே! 11

சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்
திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்
வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!
திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே! 12

சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி
உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!
உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)
அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே! 13

மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே
கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்
அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!
கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன் 14

கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்
வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ
கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்
தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே 15

தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!
இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்
நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த
பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே 16

பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை
அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்
பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்
வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே! 17

பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்
விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்
ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த
அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே 18

அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே
தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!
உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்
எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே! 19

எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே
பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்
இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்
தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20

(தொடரும்)

மனக்கண்ணாடி

கவிஞர் இரா. இரத்திசு குமரன்

பெயர்ப்பலகையில் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவகம் என்று பொறிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் நந்தாவும் அவனுடைய நண்பன் ராஜீவ்காந்தியும் நுழைந்தார்கள். வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் வந்து செல்லக்கூடிய பரபரப்பான உணவகம்தான் அது. உணவு ஆர்டர் எடுப்பதிலும் உணவைக் கொண்டுவந்து டேபிளில் அலங்கரிக்கவும் வைட்டர்ஸ் பிஸியாக இருந்தனர். ஒவ்வொரு டேபிளிலும் நான்கு இருக்கைகள் எனப் பத்து டேபிள்களுக்கு நாற்பது இருக்கைகள் இருந்தன. ஒவ்வொரு டேபிள்களிலும் பேச்சு சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. மீன், காடை, கோழி, ஆடு, மாடு எனப் பாகுபாடு பார்க்காமல் அனைத்தும் கிடைக்கும் இந்த சமத்துவ உணவு விடுதிதான் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது. பேருந்து நிலையத்திலிருந்து தள்ளி இருந்தாலும் உணவு பிரியர்கள் நடந்து வந்துகூட அந்த உணவகத்தில் சாப்பிட்டுப் போவார்கள். அறையின் இடது புறம் நடுப்பகுதியில் உள்ள ஒரு டேபிளில் இரண்டு இருக்கைகள் காலியானதும் பேருந்தில் இருக்கைக்கு இடம் பிடிப்பதுபோல் வேகமாய்ப் போய் அமர்ந்தனர் எதிர் எதிரே நந்தாவும் ராஜீவும்.

"நீ என்ன சாப்பிடற?" நந்தா தன் நண்பனைக் கேட்டான்.

"எனக்கு சாம்பார் சாதம் போதும். நேத்துதான் வீட்ல நான்வெஜி சாப்பிட்டேன் ". பசி எடுக்கவில்லை மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக சாப்பிடுபவன் போல பதில் அளித்தான் ராஜீவ்.

"இங்க காடை நல்லா இருக்கும். ஒன்னு சைடு டிஷ் மாதிரி தொட்டுக்கோ." நந்தா ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டம்பளர்களை நிமிர்த்தி வைத்துக்கொண்டே பரிந்துரைத்தான்.

"ஹே... அத பாக்கவே பாவமா இல்ல? குட்டி பேர்ட்ஸ். அத எப்படி சாப்பிட மனசு வருது உங்களுக்கெல்லாம்."? இறக்கும் குஞ்சுக்காகப் பரிதாபப்படும் தாய்ப்பறவையின் முகத்தைப் போல அவன் முகம் உணர்வுகளை வெளிப்படுத்தியது.

"நீ பழக்கப்பட்ட பிராணியோட கறி சாப்பிடும்போது உனக்கு எப்படி மனசு வருதோ அதே மாதிரி தான் மக்களுக்கு அவங்கவங்க பழக்கப்பட்ட பிராணியை சாப்பிடும் போது மனசு வருது." சிறு புன்னகையுடன் இரண்டு தோள்பட்டைகளையும் மேலே தூக்கி அசைத்து சாதாரணமாக கூறினான்.

ம்ம்ம்ம்... என்று தலையை அசைத்துக்கொண்டு "நம்ம உணவு நம்ம கேரக்டர வடிவமைக்கறது இல்லனு தெரியும்.

பியூர் சைவமா இருக்கலாம். பட் அதனாலே செயலும் சைவமா இருக்கும்னு சொல்லிட முடியாதுல?" எனத் தானக்குத்தானே இராஜீவ் பேசிக் கொள்வதுபோல் மெதுவாகப் பேசினான். அதனால் அது யாருடைய காதிலும் விழவில்லை.

அவர்கள் இருவருக்கும் ஆர்டர் செய்த உணவு பரிமாறப்படுகிறது. உணவு உட்கொண்டிருக்கும் சமயத்தில் இராஜீவ் நந்தாவிடம் கேட்டான். "நீ ஏதோ ஆர்ட்டிகள் எழுதப் போறதா சொன்னியே?" டாபிக்கை மாற்றினான் இராஜீவ்.

"தப்பு செய்யறவங்க மனநிலை எப்படி இருக்குங்கிறத பத்தி ஆராய்ச்சி கட்டுரை எழுத ஆசை. ஆனா இத யார வச்சி ஆராய்ச்சி செய்யறது. யார்கிட்ட போய் நாம கேட்க முடியும். குற்றம் செஞ்சவங்க யாராகிலும் இருந்தாங்க அப்படின்னா நீ சொல்லு நாம ஒரு இண்டர்வியூ மாதிரி வச்சுப் பேசலாம்." சீரியசாக நந்தா தன் நினைப்பை வெளிப்படுத்தினான்.

“எனக்கு அந்த அளவுக்கு பழக்கமில்லை. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா. பேசாம நீயே குற்றவாளியாக முயற்சி பண்ணு. அப்புறம் உனக்கு எழுதுறதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்." நக்கலாகச் சிரித்து கொண்டே சொன்னான் இராஜீவ்.

“நான் அதுமாதிரி குற்றம் ஏதும் செய்ய மாட்டேன். தப்பு எதுவும் செய்யுறது இல்லையே." தீர்க்கமான குரலில் ஆணித்தரமாக அடித்துக் கூறினான் நந்தா.

அவன் சற்று வேகமாக அடித்து விட்டான் என்பது போல. அவனுக்கு பக்கத்தில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேராவது அவனை உற்று நோக்கியே இருந்தனர்.

சிறிது நேரத்தில் நண்பர்களின் மதிய உணவு முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பிறகு சந்திப்பதாக சொல்லிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

ஒரு வாரம் கடந்தது. மதிய உணவு முடித்துவிட்டு இளைப்பாற ஓய்வு எடுப்பதற்காக நந்தா வீட்டிலேயே இருந்தான். தன் வீட்டில் காலிங்பெல் சத்தம் ஒலித்தது. யார் என்று அவன் எழுந்து திறந்து பார்த்தான். தன் வயதை ஒத்த ஓர் ஆள் நின்று கொண்டிருந்தான். அயர்ன் போட்ட முழுச்சட்டை வெளிர் இளம் சிவப்பு நிறத்தில் டக் இன் செய்து இருந்தது. கருப்பு பெல்ட் அணிந்திருந்தான். கால் சட்டையின் நிறம் சரியாகச் சொல்லிவிடும் அளவுக்குப் பளிச்சிடவில்லை. சட்டை பாக்கெட்டில் ஒரு பால் பாயிண்ட் பேனா இருந்தது.

“மே ஐ கம் இன் சார்?" என்று அந்த மனிதன் அனுமதி கேட்டான்.

"வாங்க. நீங்க யாரு? என்ன வேணும்?" என்று இயல்பான தோரணையில் விசாரித்தான் நந்தா.

"சார், நான் உங்கள பார்க்கத்தான் வந்தேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."

"ம்ம்ம் சரி உள்ள வாங்க" என்று தனது அறைக்குள் அழைத்தான்.

"நீங்க தப்பா நினைக்கலனா உங்கக்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாமா?" சற்றுத் தயக்கத்துடன் அந்த திடீர் விருந்தாளி கேட்டான்.

"தாராளமாக சொல்லுங்க. நான் தப்பா நினைக்க மாட்டேன்." பெருந்தன்மை முன் பின் தெரியாதவர்களிடம் இயல்பாக வருவதை நந்தா உணர்ந்தான்.

"போன வாரம் நீங்க ஒரு ஹோட்டலுக்கு உங்க பிரண்டு கூட சாப்பிட வந்தீங்க இல்லையா? அப்போது நீங்க பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். குற்றவாளிகளைப் பற்றி நீங்க எழுதறதுக்கு ஆசைப்படுவதாகப் பேசிட்டு இருந்தீங்க இல்லையா..." சிறுகுழந்தை குழைவதுபோல தொடர்ந்துகொண்டே இருந்தான் வந்தவன்.

"ஆமாம். உண்மைதான்."

"அப்படியென்ன வித்தியாசமான ஒரு விருப்பம் உங்களுடையது" எனக் கேட்டுவிட்டு, பதிலை உடனே எதிர் பார்க்காதவன் போல் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அதில் அமர அனுமதி கேட்டான் அந்த மனிதன்.

“ஐ ஆம் சாரி. ஏதோ ஞாபகத்துல உங்கள நிக்க வச்சே பேசிக்கிட்டு இருந்துட்டேன். வெரி சாரி. தாராளமாக உட்காருங்க" கையை நாற்காலியின் திசையில் காண்பித்தான் நந்தா.

"நான் மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி எழுதுவதில் விருப்பம் உடையவன் ஒவ்வொரு மனிதனும் தவறு செய்கிறான். குற்றங்கள் நிகழ்கின்றன. அவன் திருந்த வேண்டும். மேலும் குற்றம் செய்யும் மனிதனின் அணுகுமுறைகளை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் தான். " யாரும் கொண்டிராத விசித்திர விருப்பம் தான் கொண்டிருப்பதாகத் தன்னைத் தனிமைப்படுத்தி நினைத்துக்கொண்டான் நந்தா. பேசும் தோணியும் மாறியது.

"நீங்கள் குற்றம் மற்றும் குற்றம் புரிபவர்கள் உணர்வுகளைப் பற்றி எழுதுவதால் குற்றம் புரிபவர்கள் திருந்துவார்கள் என்று உங்களால் நிச்சயம் கூற முடியுமா?" கேள்வியின் தடிமன் அதிகரித்தது. வந்தவரின் மொழியும் மாறியது.

இந்த இளைஞன் ஏன் இப்படிக் கேள்விகள் கேட்கிறான் என்று ஏதும் புரியாதவனாய் அமைதியாய் பதிலளித்தான் நந்தா.

“எல்லோரும் திருந்திவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தான் திருந்தி விட்டதாக ஏதாகிலும் ஒரு மனிதன் கூறினாலும் அது எனக்கு கிடைக்கும் பெரிய வெற்றிதான்" என்று தீர்க்கமாக கூறினான் நந்தா.

குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? அருகிலிருந்த தண்ணீர்க் குவளையைப் பார்த்துக் கேட்டான் அந்த ஆள். தனது அருகே இருந்த குவளையை நீட்டினான் நந்தா.

மடமடவெனக் குடித்துவிட்டு அமைதியானான் அவன். இருவரும் சற்று நேரம் மௌனம் காத்தனர். ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் போல வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"நானும் குற்றவாளி தான். நானும் தவறு செய்பவன் தான். ஆனால் நான் என்ன தவறு செய்கிறேன் என்று இப்போது நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. ஆனால் என்னுள் ஏற்படக்கூடிய உணர்வுகளை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நீங்கள் அனுமதித்தால்..." அனுமதியைப் பிடுங்கினான்.

"நீங்கள் குற்றவாளியா? குற்றம் செய்தவரா? என்ன குற்றம்? " சற்றுப் பதற்றமான குரலில் கேள்விகள் வெளிவந்தன.

நந்தாவின் முகம் மாறுவதைக் கண்ட அந்த இளைஞன். சிரித்துக்கொண்டே "நீங்கள் பதற்றப்படும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும் போது நான் பல உணர்வுகளை வித்தியாசமாக உணர்கிறேன். அதை யாரிடமாவது சொல்லி விடவேண்டும் என எப்போதிலிருந்தே துடித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அன்று இது பற்றிப் பேசியபோது உங்களைச் சந்தித்து உங்களிடம் இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்."

“சரி பேசுங்கள். குற்றம், தப்பு என்று உங்களுக்கு தெரியுது பிறகு ஏன் அதைத் தொடர்ந்து செய்கின்றீர்கள் ?"

"அதுவும் சேர்ந்துதான் எனது வாழ்க்கை என்றாகிவிட்டது அதை அவ்வளவு எளிதாக என்னால் விட்டுவிட முடிவதில்லை."

"அதை நீங்களாகத்தான் தேர்வு செய்தீர்கள் அல்லவா?"

"அது அப்படியே நிகழ்ந்தது அதை நான் பற்றிக்கொண்டேனா அல்லது அது என்னைப் பற்றிக் கொண்டதா? எனத் தெரியவில்லை." நாற்காலியின் வலது கையின் நுனியில் தன் வலது உள்ளங் கையால் தட்டினான்.

"அதை விடுவதாக உத்தேசம் இருக்கிறதா?" நந்தாவின் விரிந்த கண்கள் கேள்வியின் முடிவில் சுருங்கின.

"தெரியவில்லை. எதிர்காலத்தில் விட்டுவிட வேண்டும் என்று தோன்றுகிறது" கண்கள் தொடக்கத்தில் சுருங்கி இறுதியில் அகலமாக விரிந்தன.

"அப்படியானால் நல்லதுதான்." மூச்சுக்காற்று முழுமையாக உள் இழுத்து வெளியில் விட்டான் நந்தா.

"நீங்க அன்னைக்கு ஹோட்டல்லே பேசியதிலிருந்து எனக்குள் ஒரு பெரிய குழப்பம் உண்டானது . உண்மையில் உங்க வாழ்க்கையில நீங்க எந்தத் தப்பும் செஞ்சது இல்லையா ?" பேசும் தோணி இயல்பானது.

"நான் அப்படி எந்தப் பெரிய தப்பும் செஞ்சதா எனக்கு நினைவு இல்லை. என் மேல எந்தப் புகாரும் வந்ததில்லையே." பதிலும் இயல்பானது.

"அப்படிங்களா சரி.. சரி..

என்னைப் பற்றி நீங்க மத்தவங்கக்கிட்ட சொல்லுவீங்களா? நம்முடைய சந்திப்பு சீக்ரெட் ஆகவே எப்போதுமே இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் எனக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா?"

"நிச்சயமா... நீங்க என்ன நம்பலாம்."

தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் குறுஞ்செய்தி வந்திருப்பதுபோல் அதை வாசிக்க ஆரம்பித்தான் அந்த ரகசிய மனிதன் . தன் முகம் மாறியது. " ஒரு நிமிஷம் இருங்க சார்." போன் செய்தான். "என்ன நிஜமாவா? சரி இன்னும் ஒன் அவர்ல பஸ் ஸ்டாண்ட்ல இருப்பேன். அங்க வெயிட் பண்ணு."

"இது நான் நடக்கும்னு நினைச்சேன். சாரி சார் நான் இப்ப கிளம்பனும். நான் உங்களைப் பிறகு முடிஞ்சா வந்து பார்க்கிறேன் சார் . ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படிங்க சார் ". ஒரு கடிதத்தை நந்தாவின் கையில் திணித்துவிட்டு விர்ரென்று வெளியே சென்று விட்டான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. பேப்பரைத் திறந்து பார்த்தான் நந்தா. "மன்னித்துவிடுங்கள். இனி உங்களைக் காண வரமாட்டேன். அதனால் சில விஷயங்களைக் கடிதத்தில் சொல்கிறேன். சில குற்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லதுதான். எல்லா குற்றங்களையும் தவறுகளையும்ஒத்துக்கொள்ளும் மனிதன் இதுவரையில் பூமியில் வந்ததாக எனக்கு தெரியவில்லை.எல்லா உணர்வும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.இது எனக்குத்தான் என எடுத்துக்கொள்ளவோ, இது எனக்கானது இல்லை என ஒதுக்கி விடவோ யாராலும் முடியாது. என்னுடைய குற்றங்களை உங்களிடம் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என எனக்குத் தெரியும். ஐம்பது பைசா மிட்டாயைக் கடையில் திருடினேன். சொந்த வீட்டிலே உண்டியல் உடைத்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துச் சிரிக்கிறேன். பருவத்தில் பாலின ஆராய்ச்சி கொண்டேன் . அது இயல்புதானே எனத் தேற்றிக் கொண்டேன். பெற்றோர்களிடம் கோபமாய்ப் பேசியுள்ளேன் . அவர்கள் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் முடியவில்லை. சிலரிடம் பொய் பேசியுள்ளேன். தவிர்க்க முடியவில்லை என்பதனால்... வீடுகளில் புகும் பாம்புகள் பலவற்றைக் கொன்றுள்ளேன். அப்போது வேறு வழி இல்லை என்பதால் எனக்கு வலிக்கவில்லை. இன்னும் பல இதுபோன்று நம் வாழ்வில் நடந்திருக்கும். குற்றங்களை நான் நியாயப்படுத்தவில்லை. ஏனெனில் பெரிய குற்றங்கள் திடீரென நடந்துவிடலாம். ஆனால் குற்றம் செய்யும் உணர்வு தானாக முளைத்துவிடுவதில்லை. நல்லது செய்யும் உணர்வும் அதே போலத்தான். இந்தக் கடிதம் என் நினைவாக எப்போதும் வைத்திருங்கள்.

நன்றி
இப்படிக்கு,
****

பெயர் இருக்கவேண்டிய இடத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. பெயர் புரியவில்லை. நந்தா அதைத் தெரிந்துகொள்ள மெனக்கெடவில்லை. அலமாரியின் கண்ணாடி முன் நடந்து வந்துவிட்டிருந்தான் நந்தா. அதில் இரண்டு முகங்கள் தெரிவதைக் கண்டு அமைதியானான். நண்பனுக்கு போன் செய்து கேட்டான் "ஹலோ ராஜீவ் ... நல்லத அதிகமா செய்யுற ஆளுங்க உனக்குத் தெரிஞ்சா சொல்லேன். அவங்களப் பத்தி எழுதலாம்னு தோணுது ".

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 26

1. கவிஞர் பா.இந்திரன்

பச்சிளம் பிள்ளையைப் பாரிலே கோபமாய்க்

குச்சியால் குத்தும் குணத்தோரை - அச்சமிலா

உச்சமாய் நிற்கும் உணர்வாம் அவர்களே

நச்சரவு போல்வார் நசுக்கு


2. கவிஞர் பொன்.இனியன்  பட்டாபிராம்

வனைத்தன வேயுரைக்கும் வன்கணா ரெல்லாம்

மனைகெழீஇ மன்றில் பழிப்பார் - எனைத்தானும்

இச்சகம் பேசி யிருந்துற வாடுவார்

நச்சரவம் போல்வார் நசுக்கு


3. கவிஞர் தில்லை வேந்தன்

கூடி இருந்து குழிபறித்துத் தள்ளியதை

மூடிக் கதையும் முடித்துப்பின் - ஓடியொளி

பச்சைப்புல் உள்ளே பதுங்கி மறைந்திருக்கும்

நச்சரவு போல்வார் நசுக்கு!


4. கவிஞர் "சங்கத்தமிழ் வேள்"

எதிரிற் புகழுரைத் தில்லாத போழ்து

குதறி யிகழ்வர் குசலர் - இதயமற்றுச்

சச்சரவை யெஞ்ஞான்றுஞ் சாற்று மிழிவான

நச்சரவு போல்வார் நசுக்கு!


5. கவிஞர் சுந்தரா

தன்னால் உழைத்துயரும் தன்மையிலார்; வென்றோரைப்

பின்னால் இழித்துப் பிழைபேசி - முன்னாலே

இச்சகமும் பேச இளித்தபடி வந்துநிற்பார்

நச்சரவு போல்வார் நசுக்கு!


6. கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ

அச்சமில்லா ஆணவத்தி லாளுமவர் மாற்றுவராந்

துச்சமுயி ரென்பர் தமிழ்மக்கள்! - மிச்சமின்றி

யச்சந் தமிழ்நாட்டின் பேர்மாற்றி னல்லலாம்

நச்சரவு போல்வார் நசுக்கு!


7. கவிஞர் அபூ முஜாகித்

உச்சியிலே யெம்மை உயர்த்தி யிருத்திடுவார்

நிச்சலனை யெண்ணி நினைந்தெழுவார் - நிச்சயித்துத்

துச்சமென நல்மனத்தைத் தூக்குஞ் சுழியரவர்

நச்சரவு போல்வார் நமக்கு


8. கவிஞர் செல்லையா வாமதேவன்

மெச்சி முகத்தில், மிதிப்பார் முதுகிற்றான்

துச்சமாய் மற்றோர்முன் தூற்றுவார் - அச்சமின்றிச்

சச்சரவு மூட்டிச் சமரசம் தேனென்பார்

நச்சரவு போல்வார் நசுக்கு 

பாட்டியற்றுக 27

அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“உள்ள மிருந்தால் உயர்ந்தன செய்யலாம்”

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு… பகுதி – 13

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்


இராமாயணம் என்பது இரு மன்னர்களுக்குள் நடைபெற்ற நிகழ்வுதான் என்பதற்கும், லங்கா என்பது நீர்சூழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கும் வடநாட்டுச் சொல்வழக்கம் என்பதற்கும், இராமாயண லங்காவிற்கும், ஈழ இலங்கைக்கும் சற்றும் தொடர்பில்லை என்பதற்கும், தனுக்கோடி, சேதுபாலம், அனுமன் கடல்தாவியது, மகேந்தரமலை போன்றவை கம்பர் காலத்து நிகழ் உண்மைகளால் காப்பியத்துள் வைக்கப்பட்டன என்பதற்கும், அவற்றில் பலவும் இடைச்செருகல் என்பதற்கும், இராமாயண நிகழ்வு கங்கையின் இருகரைப் பகுதிகளுக்கிடையே நடைபெற்றது என்பதற்குமான புவியியல் வரைபடச் சான்றுகளுடன், வரலாற்று உண்மைகளுடன் விளக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட கட்டுரையை ஆழ்ந்து படிக்குமாறு தமிழர்களையும், திராவிட நண்பர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஆய்வும் மிகமிகச் சரியாகவே சென்று கொண்டிருக்கிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன், இந்தக் கட்டுரையைச் சான்றுகளுடன் வழங்கிய நண்பர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


★★


இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஓர் அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலக்கட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது)


தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாகத் தொடர்புகொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்துச் சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச்சூழலில் அதை அறிமுகப் படுத்த வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அதைப் பிரதி எடுத்து உடனடியாக அனுப்பவும் செய்தார். இன்றைய சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து, அந்த பிரக்ஞை எதுவுமற்றுச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது இந்நூல். ‘Ramayana and Lanka’ என்கிற இந்த சுமார் 100 பக்கம் உள்ள ஆங்கில நூலை எழுதியவர் கூ.பரமசிவ அய்யர் என்ற ஒரு தமிழர்.


பெங்களூர் நகரத்திலிருந்து பெங்களூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1940ல் வெளி வந்துள்ளது இந்நூல். தான் மிக மதிக்கும் தனது மூத்த சகோதரர் மறைந்த நீதிநாயகம் சர். கூ.சதாசிவ அய்யர், எம்.எல்., அவர்கட்கு மிக்க பணிவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்நூல். காலத்தின் தூசு படிந்து கிடந்த இந்நூலைக் கண்டு பிடித்து ராமாநுஜத்திடம் அளித்தவர் திரு. எஸ்.விஜயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த, எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் (ஏ.பி) அவர்கள் நூலாசிரியர் பரமசிவ அய்யரின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


நூலாசிரியர் பரமசிவ அய்யர் ஒரு நாத்திகரோ, இல்லை, அவரே சொல்வது போன்று காந்தியடிகளைப் போல ‘இராமாயணம் என்பது ஒரு வெறும் கற்பனைக் காவியம்’ என்று கருதுபவரோ அல்ல. சிறுவயது முதற்கொண்டு வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் பலமுறை பயின்றவர். தனது வழிகாட்டியாகக் கருதிய அவரது தமயனாரோ வால்மீகி இராமாயணத்தைப் பாராயணம் செய்தவர். பரமசிவ அய்யர் அவர்களின் கருத்துப்படி, ‘பால காண்டம் சிறு பிள்ளைத்தனமான புராணிக சம்பவங்களின் தொகுப்பு; சுந்தர காண்டம் அதீத அலங்காரங்கள் மிகுந்த அழகிய விவரணக் கவிதை’.


1922ல் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தபோது அவர் இதர மூன்று காண்டங்களையும் ஆழமாகப் பயின்று இருக்கிறார். அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில் நம்பத்தகுந்த உண்மையான, வரலாறு பொதிந்துள்ளது என அவர் உணர்ந்தார். ‘ஆதிகாவ்யம்’ என இந்திய மரபில் போற்றப்படும் இராமாயணத்தில் அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வு குறித்த ஒரு விமர்சன பூர்வமான ஆய்வை உருவாக்குவதில் அவரது எஞ்சிய வாழ்நாள் கழிந்தது. அயோத்யா காண்டத்தில் (சர்கம்:8, பாடல்:16) ஒரு வரி: “கிரஹணத்திற்கு ஆட்பட்ட சூரியனைப் போலவும், உண்மையற்ற ஒன்றைச் சொல்ல நேர்ந்த ஒரு ரிஷியைப் போலவும் தசரதன் (திகைத்து) நின்றான்”. பொய் சொல்ல நேர்வது என்பது எத்தகைய ஒரு பேரவலம் என்று வால்மீகி கருதியது பரமசிவ அய்யரின் கவனத்தை ஈர்த்தது. வால்மீகி முனிவரின் உண்மையின் மீதான விசுவாசத்தை வியந்து ஏற்று அந்த அடிப்படையில் அவரது ஆதி காவ்யத்தின் புவியியலை ஆராயத் தொடங்கினார்.


மைசூரில் உள்ள சிவசமுத்திர நீர்மின் ஆற்றல் திட்டத்தை நிறுவிய புகழ்மிக்க பொறியாளர் சர்.கே.சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் பரமசிவ அய்யருக்கு கைகொடுத்தது. பிரிட்டிஷ் அரசு வெளியிட்டிருந்த புவியியல் நுண்விளக்க வரைபடத் தாள்களை (Coloured mile to inch Toppo Sheets) பார்த்துப் புரிந்து கொள்ளும் பயிற்சி இதன் மூலம் அவருக்கு வாய்த்திருந்தது. எனவே, அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் ‘சர்வே’ துறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை (Survey of India Standard Sheet – 63) பெற்று அவர் ஆய்வு செய்தபோது வால்மீகி குறிப்பிடும் தமஸா, வேடஸ்ருதி, கோமதி, சயந்திகா, ஸ்சிறிங்கவேரபுரம் ஆகிய கங்கையின் வடகரைப் பகுதிகள் அனைத்தும் இன்றும் டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேரபுரம்) என கிட்டத்தட்ட அதே பெயர்களில் நிலவுவது அவருக்கு வியப்பளித்தது.


தொடர்ந்து அவர் செய்த ஆய்வுகள் அயோத்தியிலிருந்து ‘லங்கா’ வரை ராமர் கடந்த பாதையைத் துல்லியமாகக் கண்டறிய வைத்தது. மிக விரிவான, பிரமாண்டமான வரைபடங்களின் உதவியோடு துல்லியமாக இதை நிறுவுகிறார் பரமசிவ அய்யர். தாமோ மாவட்டத்தின் 800 சதுர மைல்கள் பரப்புள்ள சோனார் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வற்றாது வளமூட்டப்பட்ட ‘ஜனாஸ்தன்’ எனப்படும் வண்டல் படிந்த, மக்கள் செறிவுமிக்க பகுதிகளில் ‘கோண்டு’ பழங்குடியினருக்கும் பரவிவந்த ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்ட வரலாறே இராமாயணம் என்கிற உறுதியான முடிவுக்கு வந்தார்.


இடையில் தமயனார் இறந்துபோன (1928) சோகத்தில் உறைந்து செயலற்றுப்போன பரமசிவர் 1934ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து தனது அரிய ஆய்வு முடிவுகளை ஒரு நூலாக்கி வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ‘இந்து’ நாளிதழில் வெளியான செய்திதான் அது. பரமசிவரால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரும் கவிஞரான ரவீந்தரநாத தாகூர் அவர்கள் சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “அயோத்தியின் அரசி (சீதை) ஒரு 10 தலை ராட்ஷசனால் கடத்திச் சென்று சிறை வைக்கப்பட்டது உங்களுடைய தீவில்தான் என நான் சிலோன் மக்களிடம் சொன்னேன்”, எனக் குறிப்பிட்டிருந்தார்.


“தெய்வீகப் பண்புகள் நிறைந்த அம்மாமனிதர் உதிர்த்த இச்சொற்கள் என்னை அதிர்ச்சியடைய மட்டுமல்ல, வேதனையுறவும் செய்தன” என்கிறார் பரமசிவ அய்யர். கவி தாகூர் மட்டுமல்ல, பண்டித நேரு, ஸ்ரீராஜாஜி ஆகிய பெரும் அறிஞர்களும் கூட இந்தக் கருத்தை அவ்வப்போது உதிர்த்தது பரமசிவ அய்யரைத் துன்புறுத்தியது. ஜுன் 1934ல் சிலோனில் பேசும்போது பண்டித நேரு ‘லங்கா’வையும் ‘சிலோனை’யும் ஒன்றாகவே குறிப்பிட்டார். திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டபோது, பண்டித நேரு “அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து”, வந்ததாக ராஜாஜி குறிப்பிட்டார். இராமாயணப் ‘போர்’ இல்லாமலேயே தனது முயற்சிகளில் நேரு வெல்வார் எனவும் ராஜாஜி வாழ்த்தினார்.


அப்போது ராஜாஜி சென்னைப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரங்களில் உள்ளவர்கள், பொறுப்புமிக்க உயர் பதவிகளில் உள்ளவர்கள், அறிஞர் பெருமக்கள் இரு நாட்டு மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடிய, தவறான தகவல்களின் அடிப்படையிலான வார்த்தைகளை உமிழ்வது பரமசிவரைத் துன்புறுத்தியது. “அப்படியானால் சர். பரோன் ஜெயதிலக (அன்றைய இலங்கைப் பிரதமர்?) இராவணனா?” என ஸ்ரீ.எஸ்.சீனிவாச அய்யங்கார் விமர்சித்ததும் பரமசிவரைக் கவர்ந்தது.


கிட்டத்தட்ட அயர்லாந்தை ஒத்த இலங்கைத் தீவில் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட, ‘பவுத்த சிங்களர்களுக்கும், பிராமணியப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கும்’ இடையில் உருவாகியுள்ள பகை உணர்வுக்கு அடிப்படையாகச் சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள், நிறுவிய கட்டாயக் குடியிருப்புகள் ஆகியன பின்னணியில் உள்ளதை நினைவு கூறுகிறார் பரமசிவர். மஹா வம்சத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. அனுராத புரத்தையும் பொலனறுவையும், தீக்கிரையாக்கி ‘ஜனநாத மங்கலம்’ எனத் தன் பெயரை அவற்றிற்கு ராஜராஜ சோழன் சூட்டியதை நாமும் அறிவோம்.


இந்தப் பின்னணியில் பரமசிவ அய்யர் தனது நூலை அச்சிட்டு வெளியிடுகிறார் (1940). புவியியல் அடிப்படையில் கல்வி சார்ந்த ஆழமான அணுகல் முறையுடன் எழுதப்பட்ட இந்நூலைத் தமிழில் பெயர்த்து வெளியிடுவது இன்றைய சூழலில் மிக அவசியமான பணி, என்ற போதிலும் பரமசிவர் வந்தடைந்த சில முடிவுகளை மட்டும் இங்குத் தொகுத்துத் தர முயற்சிக்கப்படுகிறது.


கிருஸ்துவுக்கு முந்திய/பிந்திய சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்திலும் போஜ மன்னனின் (கி.பி. 1010 – 1050) ஜம்பு ராமாயணம் வரைக்கும் சிங்களம் (சிலோன்) என்பது திரிகூட மலைமீது உள்ள இராவணனின் ‘லங்கா’வுடன் இணைத்துப் பேசப்பட்டதில்லை. குணாத்யாவின் காலம் தொடங்கி சாதவாகனர்களின் காலக் கட்டத்திலிருந்தே சிங்களம் என்பது நாகரீக மேம்பாடு அடைந்த ஒரு பவுத்த அரசாகக் குறிப்பிடப்படுகிறது. இரத்தினக்கற்களுக்குப் பேர் பெற்றதாக அது கருதப்பட்டது. கி.பி.330ல் சிங்கள அரசன் மேகவர்மன் பேரரசன் சமுத்ரகுப்தனுக்கு விலையுயர்ந்த பரிசு பொருளுடன் தூது ஒன்றை அனுப்பினான்.


புகழ்பெற்ற சீனப் பயணி பாஹியான் (கி.பி.5ம் நூற்றாண்டு) தமிழகத்திலிருந்து 14 நாள் பயணத்தில் சிலோனை அடைந்து புத்தரின் புனிதப் பல்லைக் காட்சிப்படுத்திய திருவிழாவில் கலந்து கொண்டார். ஹர்ஷ மன்னரின் (கி.பி.608-648) ‘இரத்னாவளி’யில் சிங்களம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன. இராமாயணம் குறித்த அறிதல் ஹர்ஷருக்கு உண்டு. ‘இரத்னாவளி’யில் மேகநாதன் லட்சுமணனை வென்றது பற்றிய பதிவும் உண்டு. இருந்தபோதிலும் இராவணின் ‘லங்கா’வை அவர் சிங்களத்துடன் ஒன்றாக்கவில்லை.


வால்மீகி இராமாயணத்தில் ஒரே ஓரிடத்தில்தான் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று எனப் பொருள்படும் குறிப்பு உள்ளது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:41, பாடல்கள்:17-25). சிங்களம் என்கிற பெயர் குறிப்பிடப்படா விட்டாலும் மகேந்திரமலைக்கு எதிரே உள்ள தீவு எனப்படுகிறது. ‘பாண்டிய காவ்வதம்’ அல்லது கொற்கைக்கு அருகில் தாமிரபரணி கடலுக்குள் கலக்குமிடத்தில் அகஸ்தியர் அதை அமைத்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பின்னாளில் சிலோனையும் கொற்கைத் துறைமுகத்தையும் படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய இந்திய மன்னனை முகஸ்துதி செய்யும் நோக்குடன் இந்த வரிகளை இடைச்செருகலாகச் சேர்த்தனர் என்பதை விரிவான ஆதாரங்களுடன் பரமசிவர் நிறுவுகிறார்.


10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர்கள் (ராஜராஜன், ராஜேந்திரன்) மிகப்பெரிய ஆற்றலாக வளர்ந்த காலத்தில்தான் இராமாயண ‘லங்கா’வும், இன்றைய சிலோனும் ‘ஒன்றாகப்பட்டது’. சுமார் 2 நூற்றாண்டுக் காலம் சூரிய வம்சத்தவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் சிலோன், ‘ஈழ’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘ஈழ’ என்பது இலங்கை என்பதன் சுருக்கமாக இருக்கலாம். சோழ மன்னர்களின் காலத்தவரான கம்பர் தனது இராமாவதாரத்தின் கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில் ‘லங்கை’யைத் தமிழ்நாட்டிற்குத் தெற்கே உள்ளதாக ‘தெளிவாக’ வரையறுத்துவிடுகிறார்.


சற்று முன் குறிப்பிட்டடபடி போஜனின் காலம் வரை (கி.பி.1050) இராவணனின் ‘லங்கா’வும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டதில்லை. லட்சுமண சூரிதான் தனது யுத்த காண்டத்தில் முதன்முதலாக ‘சிங்களதீபம்’ என்கிற பொய்யை இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும். “(திரிகூட) மலையுச்சி நகரமான லங்காவும் சிலோன் தீவும் மட்டுமல்ல. இராமேஸ்வரத்துக்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையில் அமைந்த மணற்திட்டுகளின் தொடரான ஆதம் பாலமும், கற்கள், மலைப்பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் இராமனின் உத்தரவின் பேரில் (யுத்தகாண்டம், சர்கம்:22, பாடல்கள்:50-70) வானரங்களால் அமைக்கப்பட்ட ‘நளசேது’வும் கூட இவ்வாறு ஒன்றாக்கப்பட்டது”.


ஒரு காலத்தில் ஆதம்பாலம் ஒரு தொடர்ச்சியான பூசந்தியாக இருந்து கி.பி.1480ல் புயல் ஒன்றில் சிதைக்கப்பட்டது என ராமேஸ்வரம் கோயில் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி இராமயணத்தில் குறிப்பிடப்படும் மகேந்திர மலைக்கும் சுவேல மலைக்குமிடையில் 100 யோஜனை நீளமுள்ள வடக்குத் தெற்காகக் கட்டப்பட்ட ‘நளசேது’விற்கும் ஆதம் பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டையும் ஒன்றாக்கியதன் மூலம் இராமனின் படையெடுப்பைக் கொற்கைத் துறைமுகத்தி லிருந்து தனுஷ்கோடி என்பதாக மாற்றிய செயல், இராமேஸ்வரத்தில் லிங்கம் நிறுவப்பட்டு இராமேஸ்வரக் கோயில் கட்டப்பட்ட காலத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆக ஆதம்பாலம் ‘நளசேது’வாக – ‘இராமர் சேது’வாக மாற்றப்பட்டது கி.பி.1000-1100 காலக்கட்டத்தில்தான் என்பது பரமசிவரின் உறுதியான முடிவு.


தொடர்ந்து இதையொட்டிப் பல கதைகள் கட்டப்பட்டன. கிழக்கிலங்கையில் அமிர்தகலி என்னுமிடத்திலுள்ள ஒரு குளம்தான் அனுமான் தீர்த்தம், அதாவது ‘லங்கை’யை எரித்தபின் தனது வால் நெருப்பை அனுமன் அணைத்த இடம் அது எனவும் குறிப்பிடப்படுகிறது. அமிர்தகலியில் உள்ள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது இராமன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் (சுந்தரகாண்டம், சர்கம்:54, பாடல்:50) அனுமன் தன் வால்நெருப்பை சமுத்திரத்தில் அணைத்ததாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.


ஈஸ்வரன் அதாவது சிவன் ராட்சசர்களின் கடவுள். இராவணன்தான் லிங்கத்தை வணங்குபவன். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும், இராமன் சென்ற இடமெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகக் கதை கட்டியது சமயவெறி பிடித்த சைவர்களின் வேலை என்கிறார் பரமசிவ அய்யர். கி.மு.180ல் ப்ருகத்ரதனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பவுத்தம் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளதை நாம் அறிவோம் (‘பார்ப்பனியத்தின் வெற்றி’). சிரமண முனிவர்களின் தலைக்கு 100 தினார்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தைப் பரமசிவரும் குறிப்பிடுகிறார்.


புஷ்யமித்ரனைப் புகழ்ந்து எழுதியுள்ள வடமொழியின் முக்கிய இலக்கண ஆசிரியன் பதஞ்சலி அசோக மன்னனைப் புறக்கணிப்பதையும், அவர் காலத்தில் உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகிறார். இராமாயணத்திலும்கூட இராமனைப் பயன்படுத்தி புத்தரை இழிவு செய்யும் போக்கு மதவெறியர்களால் இடைச்செருகலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை. ஆனால் அயோத்தியா கண்டத்தில் (சர்கம்:109, பாடல்:34) இராமன் புத்தரைத் திருடன் எனவும், நாஸ்திகன் எனவும் ஏசுகிறான். எல்லாம் புஷ்யமித்ரன் மற்றும் பதஞ்சலியின் காலத்திற்குப் பிந்திய செயல்கள் என்கிறார் பரமசிவ அய்யர். இப்படித்தான் சிங்கள தீபம், திரிகூட ‘லங்கா’வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் ராட்சசர்களாகவும், புத்தர் திருடராகவும் கட்டமைக்கப்பட்டது. கி.பி.1000க்கு பின் இதுவே இந்திய வரலாறாக மாறியது. ‘இன்றைய தென்னிந்தியாவின் ஸ்ரீ ராமனான ராஜாஜிவாள்’, “இன்னொரு இராமாயண யுத்தத்தைத் தூண்டாதே”, என சிலோன் ஆட்சியாளர்களை எச்சரிக்கவும் நேர்ந்தது.


அயோத்தியாவில் தொடங்கி சரபுங்க மற்றும் பைசுனி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்த சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம் வரைக்குமான இராமனின் பயண வழியைத் தெளிவாக வரைகிறார் பரமசிவர். கங்கையின் வடகரையில் உள்ள சிங்ரார் (ஸ்சிறிங்க வேரபுரம்) தொடங்கி அவரது பாதை வருமாறு:


1. பிரயாகை, 2. யமுனையின் தென்கரையிலுள்ள புனித ஆலமரம் (வடசியாமா), 3. சித்ரகூடமலை, 4. அத்ரியின் ஆஸ்ரமம், 5. ராட்சசன் விராடன் புதையுண்ட குழி, 6. சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம். இவற்றில் சிங்ராரும் சித்ரகூடமும் (இராமாயணத்தின் ஸ்சிறிங்கவேரபுரமும்) மாவட்ட கெஸட்டியரில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பரமசிவர் விரிவான ஆதாரங்களுடன் பிரயாகை எனப்படுவது கங்கையும், யமுனையும் கலந்து உருவான ஒரு பெரிய ஏரி என நிறுவுகிறார்.


தேவலுக்கு அருகில் உள்ள கத்ராவில் (அட்சம் 250 15’, தீர்க்கம் 810 30’) வளர்ந்த புனித ஆலமரம் கஜினி முகமதின் படையெடுப்பின்போது அழிந்திருக்கலாம். அத்ரியின் ஆஸ்ரமம் சித்ரகூட மலையிலிருந்து, 9 மைல் தொலைவிலுள்ள அனசுயா மலைதான். ‘டோப்போ’ வரைபடத்தில் அனசுயா குன்றுகளுக்குத் தெற்கே 3 மைல்கள் தொலைவில் உள்ள பீரத் குண்டுதான் இராம-லட்சுமணர்களால் விராடன் புதையுண்ட குழி. பீரத் குண்டுக்குத் தெற்கே ஒரு யோஜனை தொலைவில் இரு நதிகளின் சங்கத்தில் அமைந்தது சரபுங்க ஆஸ்ரமம்.


விந்தியமலைக்கும், சைவலாவிற்கும் இடையில் உள்ளதாகக் கூறப்படும் தாண்டகவனம் (தண்டகாரண்யம்) பண்ணாதொடருக்கும் (வடக்கே) விந்தியத்திற்கும் (தெற்கே) இடைப்பட்ட பகுதி. பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட ‘கெஸட்டியர்’ மற்றும் சர்வே மேப்புகளின் உதவியுடன் பரமசிவர் வந்தடையும் முடிவுகள் இவை. ‘லங்கா’வை உச்சியில் கொண்ட சித்ரகூடமலை அட்சம் 250 10’ தீர்க்கம் 800 51’-ல் அமைந்துள்ளது. மகேந்திர மலையிலிருந்து சுவேல மலையில் உள்ள திரிகூட ‘லங்கா’வை வந்தடைவதற்கு இராவணன், அனுமன், வானரப்படை சகிதம் இராம-லட்சுமணர் ஆகியோர் 100 யோஜனை தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இவர்களில் யாரும் இடையில் நர்மதையைக் கடக்க நேரவில்லை. நர்மதையைத் தாண்டி இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் அறுதியாக பரமசிவர். எந்த வகையிலும் இன்றைய இலங்கை, மலையுச்சி நகரமான வால்மீகியின் ‘லங்கா’ அல்ல.


இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் ‘லங்கா’வில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைத் தூக்கி வந்தான். குதிரை இந்திய மிருகமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பம்பை ஏரி, சீதை தன் ஆபரணங்களை எறிந்த குன்று, இராவணன் சுபார்வாவைச் சந்தித்த மலைப்பிளவு ஆகியன இடையிலுள்ள முக்கிய நிலக்குறிகள். மகேந்திர மலையிலிருந்து அனுமன் கடலைக் கடந்தான் என்பதாகவும் குறிப்பு வருகிறது. ஆக மகேந்திர மலைக்கும் ‘லங்கா’ அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடைப்பகுதி இராவணனால் கழுதை பூட்டிய ரதத்தால் கடக்கப்பட்டது. அனுமன் அதை நீந்திக் கடந்தான். இராமனோ தனது வானரப் படையின் உதவியோடு தற்காலிகப் பாலம் அமைத்துக் கடந்தான்.


இடைப்பட்ட கடலைக் கடந்தது (லங்கண) பற்றிச் சொல்லுகையில் இராவணனைக் குறிக்கும்போது செல்லுதல் (கமண) எனவும், அனுமனைக் குறிக்கும்போது நீந்துதல் (பிளவண) எனவும் குறிப்பிடப்படுகிறது. எங்கும் ‘தயண’ (பறந்து கடத்தல்) எனக் குறிப்பிடப்படவில்லை. அதாவது மகேந்திர மலைக்கும் திரிகூடத்திற்குமுள்ள 100 யோஜனைத் தொலைவு என்பது வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் (மார்ச் – ஜூன்) கழுதை வண்டி ஒன்றால் கடக்கக்கூடிய ஒரு ஆற்று நீர் வற்றிய பகுதிதான் என்பது கவனிக்கத் தக்கது. பிற காலங்களிலேயே நீந்துதலோ, பாலமோ தேவைப்படுகின்றன.


“யோஜனை’ என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே, 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 4 1/2 மைல்கள் என்றாகிறது. பிறிதோரிடத்தில் ‘யோஜனை’ என்பது ஒரு நூறு வில் நாண், அதாவது 600 அடி நீளமுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மகேந்திர கிரிக்கும், ‘லங்கை’க்கும் இடையே ‘கடலால்’ பிரிக்கப்பட்ட தொலைவு ஒரு கணக்கின்படி 450 மைல்கள், இன்னொரு கணக்கின்படி 11 1/2 மைல்கள். இந்த இரண்டுமே தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவு நீளமுள்ள கடற்பகுதியுடன் பொருந்தி வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உண்மையை அருளிய குருவின் முன் சீடன் வீழ்ந்து வணங்கியது போல இந்த உண்மைகளை விளக்கப் படுத்திய 55.M என்கிற எண்ணுள்ள வண்ண டிகிரி வரைபடத்தின் முன் தான் வீழ்ந்து வணங்கியதாக உணர்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் பரமசிவர். பரமசிவர் வந்தடைந்த முக்கிய முடிவுகளை மீண்டும் ஒருமுறைத் தொகுத்துக் கொள்வோம்.


மகாபாரதத்திலிருந்து இலியத் வரையிலான மகா காவியங்களின் அடித்தளமாக சில வரலாற்றுண்மைகள் உள்ளன. அவை குறிப்பிடக் கூடிய புவியியல் பகுதிகள் அடையாளம் காணக் கூடியன. அந்த வகையில் பரமசிவ அய்யர் இராமாயணத்தின் புவியியலைத் துல்லியாக வரைந்துவிடுகிறார்.


இராமேஸ்வரம் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடைப்பட்ட சுமார் 30 கல் தொலைவிலுள்ள மணல் திட்டுகளின் தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகியில் குறிப்பிடப்படும், வானரப் படைகளின் உதவியோடு இராமன் கட்டிய பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேல கிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு உடையது; வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இரண்டும் வேறு வேறு. இராவணனின் ‘லங்கா’ இன்றைய சிலோன் அல்ல.


‘லங்கை’ச் சுற்றியுள்ள ‘சாகரம்’ என்பது என்ன? திரிகூடம் என்பது இந்த்ரான மலை. 1932 அடி உயரம் உடையது. அதன் முப்புறங்களிலும் கிரண் நதி தழுவி ஓடுகிறது. ‘லங்கை’ திரிகூட மலையில் உச்சியில் உள்ளது. (ஆரண்ய காண்டம் – சர்கம்:47 பாடல்:29) ஜபல்பூர் கெஸட்டியர் கூறுவது: “பருவ மாதங்களில் ஹவேலிச் சமவெளி ஒரு மிகப்பெரிய ஏரியைப் போலத் தோற்றமளிக்கும். விந்தியமலை இந்தச் சமவெளியிலிருந்து மேலெழுந்தது போல் தெரியும். இந்த்ரான மலையின் மூன்று பகுதிகளிலும் தழுவிச்செல்லும் கிரண் நதி பனகர் – சிங்கள் தீபம் – மசோலி சாலையில் 15வது மைல்கல் வரை பழங்காலங்களில் ஒரு ஏரியைப் போல் பரவித் தோற்றமளித்திருப்பது சாத்தியம். இந்த மலையுச்சி அமைந்துள்ளது அட்சம் 23 டிகிரி 24’, தீர்க்கம் 79 டிகிரி 54’ல்”. ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை ‘லங்கா’ என்று அழைக்கும் மரபு இந்தியாவில் உண்டு என்பதைப் பல ஆதாரங்களுடன் பரமசிவ அய்யர் நிறுவுகிறார். உதாரணமாக கோதாவரி லங்கா, சோனா லங்கா, ரூப்யா லங்கா போன்றவையும், இதேபோல் தால் ஏரியில் உலார் ஏரியும் பரமசிவரால் குறிப்பிடப்படுகின்றன.


அடுத்ததாக ராட்சசர்கள் என்பது யார்? வானரர்கள் என்பது யார்? கிட்கிந்தை எங்கே இருக்கிறது? இராம – இராவண யுத்தம் எதைக் குறிக்கிறது? என்கிற கேள்விகள் எழுகின்றன. கோண்டுகள் என்னும் பழங்குடியினரே ராட்சசர்கள். பார்ப்பனிய மயமான விபீஷணனும் அவனது வழியில் வந்தவர்களும் ராஜ கோண்டுகள் எனப்படுவர் என்றும், சாதாரண கோண்டுகள் (துர்கோண்டுகள்) இன்றும் மத்திய மாகாணங்களில் இராவண வம்சிகள் என்று அழைக்கப்படுவதாகவும் பரமசிவ அய்யர் குறிப்பிடுகிறார். திரிகூட மலை ஒரு காடு நிறைந்த பகுதி. “தாண்டவ வனத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவோம் (ஆரண்ய காண்டம், சர்கம்:17, பாடல்:28)” என சூர்ப்பனகை இராமனை அழைப்பது குறிப்பிடத்தக்கது.


வன மாமிசங்களில் மிகவும் வேட்கையுடையவர் களாகவும், அழுகிய மாமிசமானாலும்கூட விரும்பி உண்ணுபவர்களாகவும் இவர்களைப் பற்றி மாண்டியா கெஸட்டியர் குறிப்பிடுகிறது. நிமரிலிருந்து ஹசரிபாக் வரை பரவியுள்ள சாத்பூரா, சோட்டா – நாக்பூர் பீடபூமியின் காடுகள் அடர்ந்த பகுதியில் கோண்டுகளோடு வசிக்கக் கூடியவர்கள் கோர்க்கர்கள் (குறவர்கள்). இவர்களைப் பற்றி வழிப்பறி செய்யும் குற்றப் பரம்பரையினர் என்ற வகையில் கெஸட்டியர்கள் குறிப்பிடுகின்றன. கோண்டுகள் ‘கோண்டி’ எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள், கோர்க்கர்கள் ‘முண்டா’ மொழி பேசுவோர். இவர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பது பரமசிவ அய்யரின் முடிவு.


வால்மீகி இவர்களை எங்கும் ஆடையுடுத்தாத அம்மணர்களாகக் குறிப்பிடவில்லை. சுக்ரீவன் தன்னைப் பற்றிச் சொல்லும்போதுகூடத் தனது சகோதரன் வாலி எல்லா மக்களையும் அமைச்சர் களையும் அழைத்துத் தன்னைப்பற்றி ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து ஒற்றைத் துணியுடன் நாடு கடத்தியதாகக் குறிப்பிடுவான். (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:10, பாடல்:26). சுக்ரீவனும், வாலியும் போரிடுவதற்கு முன் தங்கள் இடைக்கச்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்:6, பாடல்:26,27). வளமான ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றிய தற்கான போரே இராம-இராவண யுத்தம்.


விரிவான வரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியற் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறிகள் ஆகியவற்றைக் காட்டும் அட்டவணைகள் ஆகியவை நூலில் பிண்ணினைப்பாகத் தரப்பட்டுள்ளன. நூலின் இரண்டாம் பாகத்தில் இராமன் 11000 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மையா? இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? லட்சுமணன், பரதன் இவர்களில் யார் மூத்தவர்? வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப் படுத்தியது உண்மையா? காயத்ரி இராமாயணம் என்பது என்ன? ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு தமது விளக்கங்களையும் ஆய்வு முடிவு களையும் முன் வைக்கிறார் பரமசிவர்.


வால்மீகியின் ‘லங்கை’ வட இந்தியாவில்தான் உள்ளது என்கிற உண்மை புதிதல்ல. மார்க்சிய அறிஞர்களும் வேறு பல வரலாற்று ஆசிரியர்களும், இதனை நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு மக்களுக்குமிடையேயான முரணே இராமாயண வரலாறு என்பதும் முன்பே பேசப்பட்டுள்ளன (பார்க்க: அ.மா.வால்மீகி ராமாயணம் சில குறிப்புகள், விலகி நடந்த வெளிகள்- கருப்புப்பிரதிகள்).


பரமசிவ அய்யர் அதிர்ச்சியடையக்கூடிய புதிய உண்மை எதனையும் சொல்லிவிட்டார் எனக் கூற முடியாது. எனினும் அவர் எழுதிய காலம், சூழல், இதற்கென அவர் எடுத்துக் கொண்ட பிரயாசை ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. விரிவான ஆய்வு ஆதாரங்களுடன் தனது முடிவுகளை நிறுவும் பாங்கு குறிப்பிடத்தக்கது. பிறப்பால் பார்ப்பனர் ஆயினும் அவரது நேர்மையும், அறிந்த உண்மைகளை அது தமது கருத்தியலுக்கு எதிரானதாக இருந்தபோதிலும், சொல்லத் துணிவதும் நாம் வணங்கத்தக்க பண்புகளா கின்றன. நேர்மை, அறம், அன்பு ஆகியவற்றைக் காட்டிலும் வேறென்ன பண்பு மானுடமாக இருக்க முடியும்?


பரமசிவ அய்யர் எந்தச் சூழ்நிலையில் இதை எழுத நேர்ந்தார் என்பது நம் அனைவரது மனச்சாட்சியையும் உரசிப் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வாக அமைகிறது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று திரிபுகள் ‘உண்மை’களாகவே இறுகி நாமறியாம லேயே நமது ஓர்மையின் ஓரங்கமாகிவிட்ட நிலையில் அதன் வெளிப்பாடுகள், சமகாலத்தில் மானிடர்களுக்கிடையே வெறுப்பையும், பகையையும் ஏற்படுத்திவிடலாகாது என்கிற பதைபதைப்பு… ஓ! எத்தனை உன்னதமானது.


நன்றி.

Ramayana and lanka (K.Paramasiva Iyar)

மற்றும் கட்டுரையாளர் அ.மார்க்ஸ்


இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


 

பைந்தமிழ்ச்செம்மல் 'ஆதிகவி'

சாமி.சுரேஷ் அவர்கள்


கவிஞன் என்பவன் யாவன்? கவிதை என்பது யாது? எனும் வினாக்களை எப்போதும் நெஞ்சில் இருத்தித் தம் கவிதைகளை இணைவைத்துப் பார்க்க இயலாத மிக்க சொல்லாட்சியோடும், பசுமரத்து ஆணி போலப் பதிய வைக்கும் பொருளாழத் தோடும் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்ட கவிஞர்களுள் இவரும் ஒருவர். ஆதிகவி எனும் பெயருக்குப் பொருத்தமானவர்.


மின்னார் சிவனாரின் மென்றமிழின் வாணாளாய்ச்

சின்னவனே வாழ்வாய் சிறந்தோங்கி - நண்ணாரும்

சொல்லோடு வாழ்த்தட்டும் தூய நறுங்கவியே

பல்லாண்டு வாழ்க பணைத்து.!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர் உயர்திருவாளர் சாமி.சுரேஷ் அவர்கள்.


அவர் விழுப்புரத்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் ந.சாமிக்கண்ணு - இராணி அவர்கள். அவருடன் பிறந்தோர் இரு தங்கைகள், ஒரு தம்பி ஆவர்.


அவர் தொழிற்கல்வியும் முதுகலை வரலாறும் படித்தவர். நடுவணரசின் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.


அவருடைய துணைவியார் திருமதி மஞ்சு அவர்கள். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். மூத்தவன் சு.நதின் ஆதித்யா. இளையோன் சு.கவின் கிருஷ்ணா. திருக்குறள் பயிற்சியிலும் சிலம்பாட்டக் கலையிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகளின் பெயரிலிருந்தே ஆதிகவி எனும் புனைபெயருக்கு உரியவரானார்.



ஒரு முறை பைந்தமிழ்ச் சோலையின் சிந்துபாடுக பயிற்சியில் இவர் இயற்றிய

“பன்னிரு கைகள்கொண் டே - இங்குப்

     பற்பல தெய்வத்தின் சிற்பமுண் டாம்

என்னிரு கைகளைத் தான் - நான்

     எப்போதும் போற்றுவேன் தப்பில்லை காண்” 

என்னும் கவிதையைக் கண்ட பாவலர் மா.வரதராசன் அவர்கள் மெய்சிலிர்த்துப் பின்வருமாறு பாராட்டினார். 


“பொறிதட்டும் ஒரு கவிதை; உசுப்பிவிடும் வீச்சு; கிளர்ச்சியைச் சொடுக்கும் புரட்சி; ஏனோ தாராபாரதி ஒரு நொடி மூளையில் பளிச்சிட்டார்.

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்

   விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற தாராபாரதியின் வரிகளை நினைவூட்டியது இந்தக் கவிதை”


ஆம். இவரது கவிதைகள் மின்னல் கீற்றைப்போல் பளிச்சிடும். இசையோடு பாடல்களைப் பாடுவார். இவரது கவிதைகள் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வல்லமை உடையன. இதோ என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகள்.


வானத்தி ருச்சுடர் முன்னே - மண்ணில்

வந்ததி ருத்தமிழ்ப் பெண்ணே - உன்னின்

    வளமானவள் நிலமீதினில் 

   இலையேபுகழ் நனிமேவிய

வனப்பே - உயிர் - கனப்பே


தெளிவான அரசியல் பார்வையும் உண்மையும் பொய்ம்மையும் கலந்த ஊடகத்துறையினூடே உண்மையைத் தேடித் தொடரும் ஒரு தொலைநோக்குப் பார்வையும் உடையவர். இவரது பாடல்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் தொடர்முயற்சியன.


காட்டில்வாழு மிருகமெலாம்

    காவலனாய் வந்து-நம்

    கழுத்தறுத்துக் கொன்று-உடல்

    காயவைத்துத் தின்று-அடக்

    காவலாளி நானென்கும்

    கனைத்தபடி நின்று


ஓட்டைவிற்றுத் தின்றதுதான்

    உலகமகாக் கேடு - பின்

    உருப்படுமா நாடு - நாம்

    உணராவரை பேடு - பலர்

    ஓலமிட்டும் உறங்குவதே

    ஒண்டமிழர் பீடு



இவரது பாடல்கள் உள்ளெழுச்சி ஊட்டுபவை. செயல்படத் தூண்டுபவை. இதோ ஒரு சான்று:


உன்போல வேறாரும் இல்லை-நீயும்

       ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓயாது தொல்லை

மின்மினி பூச்சிக்கு ஈடா-அந்த

        விண்ணிலா சூரியன் நேரில்லை போடா.


‘உண்மைக் கவிஞர் உண்டோ?’ எனும் தலைப்பிலான இவரது எண்ணங்கள், கவிஞர்கள் தம்மையே ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தக்கதாகச் செவியறிவுறூஉவாக இடித்துரைப்பன.


ஈனக் கவலைகள் இறக்கி வைத்து

மானக் கவிஞ னென்பா ரிங்கே

ஈயச் சொல்லில் பொன்முலா மிட்டு

மாயச் சொல்லென் றுரைப்பா ருண்டு

கிழட்டுச் சொல்லில் உவமை கோத்து

முழக்குங் கவிஞர் முக்கா லிங்கே

காமப் புலம்பலைக் கவிதை யென்று

தேமச் சீரில் குழைப்பவ ருண்டு

கள்ளைக் குடித்துப் பெருத்த தொந்திபோல்

வெள்ளைக் காகித வெற்றுப் புலம்பலை

அள்ளக் குறைவிலா வட்சய மென்று

கள்ளச் சிரிப்புடன் கதைப்பவ ருண்டு

தொந்திப் பெரியவர் தோழமை யெண்ணி

சந்தி சிரிக்கிற சந்தங்கள் பாடும்

எந்த வறிவு மில்லாப் பேதையர்

இந்த மண்ணிடை எண்ணில வுண்டு

சாலை வழிகிற செந்நீர் தள்ளி

மாலை நிலவுக்கு மாலைக ளுண்டு

வட்டித் தொழிலுக்கு வந்தவர் போலும்

புட்டிப் பொருளுடன் பொருந்துவ ருண்டே

ஆளுங் காலைக் கழுவிக் குடித்து

நாளுங் கவிதைகள் நெய்பவ ருண்டு

சாதிச் சங்கத்தின் தாதிகள் வந்து

நீதிக் கவிதை நீட்டுவ துண்டு

பொய்யை மட்டுமே பொருளெனக் கொண்டு

மெய்யை விற்பவர் மெத்த வுண்டே

உண்மை மட்டும் உரைக்கும்

திண்மைக் கவிஞர் தரணியி லுண்டோ?


சிறப்பாகக் கவி புனைதலோடு சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவருடைய ‘முகிலில்லா வானம்’, ‘மொழியின் இடைவெளி’, ‘தீதும் நன்றும்’ ஆகிய சிறுகதைகள் தமிழ்க்குதிரில் வெளிவந்துள்ளன. கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ்களில் அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைப் பல்வேறு புனைபெயர்களில்  எழுதி வருகிறார்.


மேலும், தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பல்வேறு களப்போராட்டங்களில் முனைப்புடன் பங்கு பெற்று வருகிறார். சமூக நீதிக்கான போராட்டங்களில் கருத்து வேறுபாடு பார்க்காமல் மற்ற இயக்கங்களிலும் கலந்து கொள்கிறார். அரசியலில் காந்தியும் ஆன்மீகத்தில் ஓஷோவும் இரு கண்கள் என்னும் கருத்துடையவர் இவர். "நீ விரும்பும் மாற்றம் முதலில் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்" என்னும் மகாத்மா காந்தியடிகளின் மேற்கோள் இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.


தொழிற்சங்கப் பணியோடு ஆவடி திண்ணூர்தித் தொழிலக முத்தமிழ் மன்றத்தின் மேனாள் இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். பைந்தமிழ்ச்சோலையோடு இணைந்து பயணிக்கும் அவர் கடந்த இரண்டாண்டுகளாகப் பைந்தமிழ்ச் சோலையில் பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார்.


இவர் பெற்றுள்ள பட்டங்கள்:

கவியருவி (தடாகம் இலக்கிய வட்டம், இலங்கை)

பைந்தமிழ்ப்பாமணி (பைந்தமிழ்ச்சோலை)

பைந்தமிழ்ச்செம்மல் (பைந்தமிழ்ச்சோலை)

விரைகவிவாணர் (பைந்தமிழ்ச்சோலை)

ஆசுகவி (பைந்தமிழ்ச்சோலை)

காரைக்குடி வீறுகவியரசர் முடியரசனார் விருது,

ஈரோடு தமிழ்ச்சங்க விருது- கவியொளி

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கவிதைப் போட்டியில் (சுமார் 700 கவிஞர்களில்) முதற்பரிசு.

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளை நடத்திய ஆண்டுவிழாச் சிறப்பு மரபு கவிதைப் போட்டியில் முதற்பரிசு.



இவர் தனது முதல் நூலான ‘தலைநிமிர்காலம்’ எனும் நூலை  மார்ச்சு 21, 2021 அன்று வெளியிட்டார். இந்நூலை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதியை மதிப்பிற்குரிய நண்பர் திரு.அரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மரபு மாமணி பாவலர் வரதராசன் அவர்களும் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.ஹாஜா கனி அவர்களும் காந்திய மக்கள் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.பா.குமரய்யா அவர்களும், ஆவடி தமிழ்ச்சைவப் பேரவைத் தலைவர் திருமதி கலையரசி நடராசன் அவர்களும் ஆவடி எழில் இலக்கியப் பேரவைத் தலைவர் திரு.எழில்.சோம.பொன்னுசாமி உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.


'நண்பர் சாமி சுரேஷ், பாவேந்தர் பாரதிதாசன் பாசறை தந்த சிந்தனைகளால் செதுக்கப்பட்டவர் என்பதை அவருடைய பல்வேறு கவிதைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றன, தமிழ் வளர்த்தெடுத்த பாவினங்கள் அனைத்தையும் இவர் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் வியப்பு மேலிடுகிறது' என்று தமிழருவி மணியன் அவர்கள் வாழ்த்துகிறார்.


பேச்சில் சுவைகூட்டி இனிக்க இனிக்கப் பேசும் பேராண்மை கொண்டவரான தமிழறிஞர் பைந்தமிழ்ச்செம்மல் “ஆதிகவி” சாமி.சுரேஷ் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய உவகையுடன் வாழ்த்துவோம்.


நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி 

    நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக 

மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி  

    வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற  

சேதிசொல்லிச் செம்மைசெயும் எழுது கோலைத் 

    தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்   

ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க! 

    அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!

             - தமிழகழ்வன் சுப்பிரமணி


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 14. பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன்


படிப்பு: இயந்திரவியில் பொறியாளர்

பணி: ஹூண்டாய் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பராமரிப்புத் துறையில் 22 ஆண்டுகளாகப் பணி.

பட்டம்: 

மரபொளிர் விருது (நிலாமுற்றம் கவிதைகளுக்கான தேடல்), 

பைந்தமிழ்ச்சுடர் பட்டம் (பைந்தமிழ்ச் சோலை)

நூல்வெளியீடு: மரபு கதம்பம்

தமிழின் மீது தீராத பற்றின் காரணத்தால் பைந்தமிழ்ச்சோலையில் அனைத்து வகை யாப்புகளையும் பயின்றும் பாவெழுதியும் வருகின்றார்.


கவிஞர் அழைப்பு


கன்னித் தமிழ்க்கவியைக் கன்னலென நினைக்குமிவர்

என்றும் ஆர்வமுடன் இடைவிடாமல் கவிபுனைவார்

அன்பாய் வருகவென அகமலர அழைக்கின்றேன்

முன்னே வந்தமர்ந்து முழங்குங்கள் உம்கவியை


பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன் ஐயா வருக

செந்தமிழ்ப் பாக்களை அள்ளித் தருக


தமிழ் வாழ்த்து


முத்தமிழே தாயே மூத்தவளும் நீயே

    முன்னின்று காக்கும் என்னுயிரும் நீயே

தித்திக்கும் தேனே திகட்டாத வானே

    திருவென்றும் தீராத் திருமகளும் நீயே

முத்தைப்போல் கருத்தை மொழிக்குள்ளே வைத்து

    முயன்றார்க்கு வாரி இறைக்கின்ற கோனே

எத்திக்கும் விரியும் வான்போல வாழ்வாய்

    இமைபோலக் காப்பேன் இளமையுள்ள தாயே


தலைமை வாழ்த்து


செந்தமிழை உயிர்மூச்சாய்க் கொண்டு

    செம்மலாக வந்ததிந்த வண்டு!

செந்தமிழைச் செம்மையாகக் கற்றுச்

    செழுமையுடன் வளர்ந்ததிங்கு நின்று!

சந்தத்தில் சிந்துகவி பாடிச்

    சந்திப்பார் மகிழ்வாகக் கூடி!

பைந்தமிழின் நாயகியே வாழி

    பார்போற்றும் தலைமகளே வாழி!


அவை வாழ்த்து


அன்புநிறை சான்றோர்கள் அமர்ந்திருக்கும் கவியரங்கம்

தன்னுடைய பாவனைத்தும் தரமாகத் தருமரங்கம்

விண்ணதிர வைப்பார்கள் விரைவாகக் கவிபுனைந்து

கண்ணாகத் தமிழ்காக்கும் கவிவாணர் போற்றுகின்றேன்


கதவைத் திறந்து வை


ஏட்டினிலே ஆட்சியாளர் எழுதவிட்டுச் செல்கின்றார்

நாட்டினிலே அன்றாடம் நடக்கின்ற கொடுமைகளை

வீட்டினிலே உள்ளவரை வீதிக்குக் கொண்டுவந்து

நீட்டுகின்றார் சட்டமென நீங்காத தொல்லைகளை 1


பாடாகப் படுத்துகின்றார் பாவிகளாய் ஆக்குகின்றார்

கேடாக விளைவித்துக் கோமாளி யாக்குகின்றார்

மாடாக உழைப்பவரை மனிதனாக மதிக்காமல்

ஓடாமல் ஓடுகின்றார் ஒதுக்கிவிட்டு நமையுந்தான் 2


மதுவருந்தி வீதியிலே மல்லாக்க விழுகின்றார்

முதுமையிலே முடங்கித்தான் மூலையினில் அமர்கின்றார்

மதுவினிலே மூழ்க்கித்தான் மதிமயங்கிச் சாகின்றார்

விதவைகளாய் ஆக்கிவிட்டு வீதியினில் விடுகின்றார் 3


மதுவிலக்கு வேண்டுமென்று மாதர்கள் நிற்கின்றார்

புதுமையாகப் போராட்டம் புவிதனிலே நடத்துகின்றார்

எதுவந்த போதுமென்ன எவர்மாறப் போகின்றார்

பொதுக்கூட்ட மேடையின்பின் போய்பார்க்கச் சொல்கின்றார் 4


போதையிலே இருத்தற்றான் பொதுமக்கள் அரசென்பார்

பொதுமக்கள் பணத்திற்றான் பொழுதெல்லாம் கழிக்கின்றார்

புதுவருடப் பரிசென்றே பொன்பொருளைத் தந்தாலும்

மதுக்கூடம் வழியாக மறுபடியும் பிடுங்குகிறார்! 5


நம்வாழ்க்கை நம்கையில் நம்விழிப்பே நல்வாழ்க்கை

கம்மென்றே இருந்தாலும் காரியத்தில் கண்வேண்டும்

உம்மென்றே இருந்தாலும் உயர்வினிலோர் கண்வேண்டும்

நம்நாடே என்றாலும் நம்முழைப்பே நமக்குயர்வாம்! 6


நன்றியுரை


அன்னைத் தமிழா மருந்தமிழில் பாவெழுதி

அன்பாகக் கேட்கும் அனைவருக்கும் நம்தமிழை

முன்னமர்ந்து கேட்டோர்க்கும் முந்திவந்து தானென்றும்

நன்றிகளைச் செப்பிடுவேன் நான்


வாழ்த்து


ஏட்டினிலே உள்ளதெல்லாம் ஏற்றுக்கொள் வதில்லையென்றார்

நாட்டினிலே எங்கெங்கும் நயவஞ்சக் கூட்டமென்றார்

பாட்டினிலே அனல்பறக்கப் பலகொடுமை எடுத்துரைத்தார்

கூட்டமாக வாருங்கள் கூடிநின்று வாழ்த்துவமே


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 15. பைந்தமிழ்ச் சுடர்  சோமு சக்தி


பிறப்பு: முகவை (இராமநாதபுரம்) மாவட்டம்

இருப்பிடம்: சென்னை.

பொருளியியல் படித்தவர்.

மொழிபெயர்ப்புப் பணியாற்றுகிறார்.

புதுக்கவிதை தொட்டு, மரபில் புகுந்தவர்.

பைந்தமிழ்ச்சுடர் பட்டம் பெற்றுள்ளார்.


கவிஞர் அழைப்பு


புத்தம் புதிய புதுமைகள் படைக்கும் 

சத்த மற்ற தண்டமிழ்க் கவிஞர்

எதற்கும் துணிந்த இன்றமிழ்க் கவிஞரை

இதமாய்க் கவிபாட இனிதாய் அழைக்கிறேன்


பைந்தமிழ்ச் சுடர் சோமுசக்தி ஐயா வருக 

சொக்கும் கவிதை தருக 


தமிழ் வாழ்த்து


கதவைத் திறந்துவைத்துக் கண்டதைச் சொல்ல

முதலாய்த் தமிழே முயல்வேன் -  மதலைக்

கவிநானும் பாடக் கனிந்தருள்க தாயே

புவிசிறக்க வெந்நாப் புகுந்து !


அவை வாழ்த்து


பாவல ராசானாம் பாரில் வரதரொடு

நாவலர் நிர்மலா நற்றலைமை - பாவளர்ச்

சோலைக் கவியரங்கிற் றோன்று மவையோர்க்குக்

காலை வணக்கமிட்டேன் காண் !


கதவைத்திறந்துவை


கதவைத் திறந்தாற் காற்றும் வரலாம்

அதகளப் புயலும் அதிலே நுழையலாம்

திறக்கும் முன்னே திசைகளிற் பார்த்தால்

திறமாய் நிலையைத் தெரிந்துகை யாளலாம்

எதற்கும் மனத்தி லிருக்கும் கருத்தை

இதமாய்ச் சொல்வேன் ஏற்றா லேற்பீர்!

கதவைத் திறந்ததும் கண்டதைச் சொல்வேன்

உதவ வருவதாய் உரைக்கும் கூட்டம்

களப்பிர ராண்ட காலந் திரும்பவோ !

வளத்தைச் சுரண்டவோ வருகிறார் விழிப்பாய்!   10


வெற்றிட மிதுவா! வேறிட மில்லையா ?

சுற்றியே வருகிறார் சூழ்ச்சிக் கேடே

வந்தாரை வாழ வைத்தாய்!  பெருமையே !

நொந்துநீ வீழவா? நொடித்துப்  போகவா?

மாற்றான் முதல்வனாம் மாரைத் தட்டுவான்

தோற்கடி யவனைச் சூளுரை யேற்றே

தவறினைச் சுட்டித் தலைமை ஏற்பாய்

எவரு முன்னை யெடுத்தாள விடம்கொடாய் !

நல்லனாய் நடிப்பவன் நல்லனு மல்லன்

வல்லனாய் நடிப்பவன் வல்லனு மல்லன்             20


மண்ணின் மொழிக்கு மதிப்பிடம் இல்லை

கண்ணாய் நினைப்போன் கவலை கொளவிலை

உரிமைக் குரல்தர ஒருவனு மிலையேல்

நரியினுங் கேடர் நாட்டுவர் தொல்லை

இன்னும் பேசா திருந்தாற் பயனிலை

முன்னே யெண்ண முடிந்தாற் சிறப்பே

தமிழாற் பிழைப்போர் தரணியில் பலருளர்

தமிழர் பகையே தலைவராய் ஆவதோ

பொறுப்புக் கொண்டாற் புரிந்திதை மாற்றலாம்

அறுத்துக் கொண்டா லாற்றுவோர் யாரோ?           30


காலமும்  இடமுங் கருதியே கூறுவேன்

ஞாலத் தவையீர் நன்றி உமக்கே!


வாழ்த்து


அறத்தைப் பேசும் அறிஞர்கள் 

அகத்தில்  நல்லோர் இல்லையென்றார்

திறமாய் நிலையை உணர்ந்துவிட்டால்  

தீர்வும்  கிடைக்கப்  பாரோங்கும்  

குறைகள் யாவும் தீர்ப்பதென்றால்

குணத்தில் சிறந்த தலைமைவேண்டும் 

சிறப்பாய் மிடுக்காய்க் கவிதந்தார் 

சிந்தை மகிழ வாழ்த்துவமே  

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

16.  பைந்தமிழ்ச் சுடர் விசு. இம்மானுவேல், பெங்களூரு


கவிஞர் அழைப்பு

பண்பு நிறைந்த கவிஞரிவர்

    பாக்கள் நாளும் பலதருவார்

எண்ணம் சிந்தும் கருத்துதனை

    எழிலாய்க் கோத்துக் கவிபுனைவார்

கன்னல் மொழியில் கவிபாடக்

    கனிவாய் இங்கே அழைக்கின்றேன்

மன்றம் மகிழும் உம்வரவில்

    மகிழ்வாய் வந்து கூறுங்கள்


இம்மானுவேல் ஐயா வருக!  

இன்றமிழ்த் தேன்தருக!


தமிழ் வணக்கம்

செந்நாப் புலவோர் செழுமிய நாவினில் 

எந்நாளும் குந்திய என்றமிழே – முந்தியென் 

நாவிலுங் கோலோச்சு நன்றாய்ப் பணிகின்றேன் 

ஆவிக்குள் உன்னை அருள் 


தலைவர், அவை வணக்கம்

சோலைக் கவிகளின் சொந்த நடுவரே 

காலைக் குயிலாம் கவிஞரே – மாலை 

தொடுத்தேன் கவிதையில் தோன்றி வணங்கக் 

கொடுத்தேன் குரலினில் கோத்து


கதவைத் திறந்து வை


வழியடைக்கிற பெருந்தடைகளும் வலுவிழந்தினி போகும் 

குழிபறிக்கிற குறுமதியினர் குழப்பியதெலாஞ் சாகும் 

மொழிநலத்தினை விழியெனவுரை முழுநலமதுஞ் சேரும் 

அழிவுறுநிலை யகலவுநிதம் அறிவினிலது சாரும்  (1)


பரவியபிணி இருளினில்நமை படுத்தியதெலாம் போதும் 

வரவினியெது வழிநெடுகவே வருந்திகிலது மீதம் 

தரவுகளெலாம் தனிமனிதனின் தலைசுழற்றவே செய்யும் 

தரணியிலிழி நிலையகற்றிடத் தலைமுறைகளும் உய்யும் (2)


அறையெனுஞ்சிறை யடைபடும்நிலை அலையுறவுடன் நின்றோம்

குறைபலவதன் குவியுணர்வினைக் குளிர்கவிதையால் வென்றோம் 

நிறைவுகளது நிலவிடும்வரை நிகழ்கலைகளு மில்லை 

உறைநிலைகளும் அகன்றிடவரும் உணர்ந்தெழுவதன் எல்லை (3)


மனஞ்சுருங்கினால் விழிபெருகினால் மலர்வனமெங்கே ஈர்க்கும் 

கனவழிவதால் களம்மறுப்பதால் கனலுறைக்குமே யார்க்கும் 

தினந்திருவிழா வெறும்வெளியிலா திகைப்புறுவது நெஞ்சம் 

சினமொதுக்கிய சிலநகைப்புகள் சிதைவறுக்குமே கொஞ்சம் (4)


படிப்பறிவினை நடந்தொருவிடம் பயனுறுவதும் மாறி 

இடித்திழுத்ததே புதிர்க்கிருமிகள் இருப்பிடமதி லேறி 

வடித்தொழித்ததோ வதைத்தழித்ததோ வரைமுறைகளைத் தேய்த்துக்

குடிநிலையினை நெறிமுறையினைக் குதறியேநிலஞ் சாய்த்து (5)


இருள்மடியினில் பலதொழில்களை இழுத்திறக்கிய காலம் 

பொருள்வழிகளின் கதவடைத்ததே பொதுவினிலொரு கோலம் 

மருள்நிலையினில் சிரிப்பொலிகளும் மறைந்திருந்தது தூரம் 

தெருவளைவுகள் வெறுமையில்விழத் தினக்கொடுமைகள் கோரம் (6)


நிலமுழுபவர் தலைமுறையினை நிலைநிறுத்தவே வேண்டும் 

வலம்வருகவே சமத்துவநிலை வழிதிறக்கவே யாண்டும் 

பலவதிர்வுகள் பலியிடும்நிலை பனியகல்வதைப் போன்றே 

நலமுரைத்தினி துயில்முறிக்குமோ நதிப்புனலென நன்றே (7)


புதுவருடமே மலரெடுத்துவா புகழ்க்கவிதையைத் தீட்டு 

பொதுக்கதவினைத் திறந்திருக்கிறோம் பொலிவதனையே காட்டு 

மதுமயக்கமும் மதிக்கலக்கமும் மனந்துறந்தெழச் செய்வாய் 

இதுவரையினில் களைப்பருளிய இழிநிலைகளைக் கொய்வாய் (8)


நன்றி நவிலல்


எளியோ னெனக்கு மிடமளித்த சோலை 

களிப்பில் திளைக்கிறேன் காண்பீர் – வளிவழி 

நெஞ்சனுப்பி நன்றியால் நேர்கிறேன் மாசிருப்பின் 

கொஞ்சம் பொறுப்பீரே கொண்டு 


வாழ்த்து


வழியடைக்கும்  பெருந்தடைகள் விலகிச் சென்றால்  

    வாழ்வினிலே  பிணியெல்லாம் நீங்கு மென்றார்  

குழிபறிக்கும்  குறுமதியர் செய்த தெல்லாம்

    குழிதோண்டிப் புதைக்கவேண்டு மென்றும்  சொன்னார்

விழிகாணும் குறையெல்லாம் நீங்கிச் சென்றால் 

    விடியல்கள் யாவருக்கும் பிறக்கு மென்றார் 

முழக்கமிட்டுக் கூறியவை  உண்மை தானே 

    முகமலர வாழ்த்துகளைச் சொல்லு வோமே 

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

17.   கவிஞர் சொ.சாந்தி


கவிஞர் அழைப்பு


அன்பில் பண்பு கலந்திருக்கும்

    அறிவில் உயர்வு நிறைந்திருக்கும்

என்றும் முகத்தில் சிரிப்பிருக்கும்

    எதிலும் ஏற்றம் கலந்திருக்கும்

கன்னித் தமிழால் பாட்டியற்றக்

    களிப்பாய் வந்து சேர்ந்தவராம்

இன்பத் தமிழால் அழைக்கின்றேன்

   இனிதே வந்து கவிதருக


கவிஞர் சொ.சாந்தி வருக வருக


கதவைத் திறந்து வை


சுற்றிலு மாயிரம் கதவுக ளிருக்கச்

    சூழ்நிலைக் கைதிகள் நாம்

வெற்றிக் கதவுகள் மூடுகின் றாரே

    வேதனை கூட்டலில் தான்! 1


தட்டத் திறக்கும் கதவில் எல்லாம்

    தாளினை இடுகின்றார் - பலர்

முட்டி மோதிய போராட்டத்தில்

    உயிரினை விடுகின்றார்..! 2


காத்துக் கிடப்பின் கனியும் வீழும்

    நம்பிக் கிடக்கின்றோம்

பூத்து வெடிக்கும் இலவம் கண்டு

    பொத்தெனச் சாய்கின்றோம். ! 3


கல்விக் கதவில் திண்டுக்கல்பூட்டு

    உடைத்திட வாருங்கள்

கல்லணை போடும் கல்விக் குருடனைக்

    கல்லால் அடியுங்கள்..! 4


பச்சை வயலுடன் பக்கக் குழாய்கள்

    பாதகம் தொடர்ந்திடுமோ..?

இச்சைகொண்ட இனிய தொழிலுக்கு

    எண்ணெய்க் கதவுகளோ..? 5


வயலில் பதியும் அயலான் பாதம்

    அறுபட வேண்டாமோ..?

ஆதிக்கக் கதவை அடித்து நொறுக்க

    அறுவடை பிழைக்காதோ..? 6


வேற்று மொழியெனும் இரும்புக் கதவால்

    தமிழும் சிறைப்படுமோ.,?

மாற்று நிலையினை இரும்பினைத் தகர்த்துத்- தமிழ்

    இரிடியம் உடைபடுமோ.? 7


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடிந்திடுமோ..?

எத்தர்கள் அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடிந்திடுவோம். ! 8


கதவைத் திறவாய் என்றே கெஞ்சிட

    சன்னலும் திறக்காது

கையில் எடுப்பாய் கன்னக் கோலாம்

    தைரியம் இழக்காது..! 9


மூடிய கதவுகள் யாவு முடைத்திட

    முயல்வோம் துணிவோடு

விடியல் பெருக்கி வெற்றிகள் எட்ட - வரும்

    வெளிச்சங்கள் நம்மோடு. ! 10


வாழ்த்து


எத்தனை காலம் இத்தனை கொடுமை

    என்றிது விடியுமென்றார்

எத்தரை  அழிக்க எழுச்சிகள் வேண்டும்

    இன்றேல் மடியுமென்றார்

புத்துயிர் பெற்றுப் புதுமைகள் தோன்றப்

    புவியினி ஒளிர்ந்திடுமே

முத்தெனப் பாக்கள் மிளிர்ந்தன இங்கே

    முந்தியே  வாழ்த்துவமே  

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

18. பைந்தமிழ்ச் சுடர் வே.அரவிந்தன்


முதுகலை இயற்பியல் துறை மாணவன்

வசிப்பிடம் : கருமலை (கிருட்டிணகிரி மாவட்டம்)


கவிஞர் அழைப்பு


நற்றமிழ்ப் பாக்கள் நன்றென வடிக்கும் 

    நற்றமிழ்க் கவிஞரிவர் 

பற்பலர் போற்றப் பணிவுடன் நடக்கும் 

    பைந்தமிழ்ச் செல்வரிவர் 

சொற்சுவை சேரக் கவிதைகள் இயற்றிச் 

    சுடரென ஒளிருபவர் 

அற்புதம் நிறைந்த கவியினைத் தரவே 

    அரங்கினுள் அழைக்கின்றேன் 


பைந்தமிழ்ச் சுடர் அரவிந்தன் வருக வருக


தமிழ் வணக்கம்

தித்திக்கும் தீம்பாகே! தீதில்லா மாத்தேனே!

புத்திக்குள் நின்றாளும் பொய்க்காநல் முத்தன்ன

சித்தத் தெளிவே! செழுமைமிகு தாயே!

வித்தைக்குள் செய்வாய் விருந்து.


தலைமை மற்றும் அவை வணக்கம்

பைந்தமிழ்ச் செம்மலம்மை பாதம் பணிந்துநல்

பூந்தமிழால் செய்யுமோர் பொன்வணக்கம் மேவுமவைச்

சான்றோரை ஏற்றியுடன் சாற்றும் வணக்கமாம்

யான்செய் வரியால் அழைத்து.


கதவைத் திறந்து வை

ஓரோட்டை ஓட்டவுடன் ஒன்பதோட்டைப் பிண்டம்

    ஓவென்ற ழுதுருளுமாம் உளதாகக் காட்டப்

பாரோடு சேர்க்கும்நல் பாட்டொன்றைக் கூவிப்

    பாழ்மனமும் அறிந்தேங்கும் பாலுண்டும் ஓயும்

தேரோடு வாழ்வெனினும் திறந்தவாயை மூடச்

    செய்பூட்டும் ஒன்றில்லை செய்வருமிங் கில்லை

காரோடு நீரொப்பக் கரைந்தொழுகிக் கொட்டிக்

    கடல்சேர்ந்தும் சாகும்பின் கடைவான்பு கும்மே..


ஓட்டையிதை அடைக்கத்தான் ஓலைகளும் செய்தார்

    உருவெடுத்தார் செய்தாரோ உத்தமமாய்க் காத்தார்

மூட்டையிதைப் பெருக்கத்தான் மூட்டைகளைச் சேர்த்தார்

    மூளைக்குள் கிடத்துங்கால் முணுமுணுத்து ரித்தார்

காட்டையடைக் காலத்தைக் கணக்கினிலே வைத்தார்

    காலத்தைச் சுட்டியிங்குக் களித்துப்பேர் வைத்தார்

நாட்டிலின்னும் திறக்கவேண்டும் நாளைநாளை இன்னும்

    நலம்வாழ மருந்தோடு நற்கதவுந் தானே...


நாளுக்கோர் உறவாகி நலம்தேடிச் சேரும்

    நல்லுலகில் புதிதொன்றாய் நாடியிங்கே கூடும்.

தாளுமேது வென்றறியாத் தாகக்கூட் டத்தில்

    தகிக்கும்நோய் கூடிவந்து தாம்பங்கு கேட்கும்

தேளுமாகி விடமூட்டும் தேகமொன்றும் பெற்றுத்

    தேடியோடி அமிழ்தில்லை தேசத்தே இன்று

மூளுமித்தி ரைநீக்க முழுமுதலி றையே

    மூடியவிக் கதவையுந்தன் முன்திறப்பா யாமே


நன்றி நவிலல்


செவிமடுத்த சான்றோர்க்குச் செப்பி நகர்ந்தேன்

கவிகேட்டீர் எந்நன்றி காண்.


வாழ்த்து


மனத்தினிலே உள்ளவற்றை அவையின் முன்னால் 

    மளமளென வீறுகொண்டு பொழிந்து விட்டார் 

சினந்தவழ நல்மருந்து மில்லை யென்றார் 

    திரைமறைவில் நடக்கின்ற கூத்தும் சொன்னார் 

வினைத்தூய்மை பெற்றுவிட்டால் நடக்கும் நன்மை 

    விருப்பங்கள் நிறைவேற மனிதம் வாழும்

மனிதங்கள் தூய்மையாக மொழிந்தார் பாக்கள் 

    மகிழ்வுறவே நாமெல்லாம் வாழ்த்து வோமே 

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

கவியரங்க நிறைவு கவிதை

பைந்தமிழ்ச் செம்மல்  நிர்மலா சிவராசசிங்கம்


கதவைத் திறந்துவை


தித்திக்கும் பலகவிகள் கவிஞர் பாடத்  

    தீந்தமிழாள் மகிழ்வுற்று மயங்கி விட்டாள்

அத்தனையும் கண்ணுற்ற ஆசான் உள்ளம் 

    அகமலர்ந்து சொற்களின்றித் தவிப்பில் நின்றார்  

சத்தமிட்டுக் குரலெழுப்பித் தவிப்பைக் கூறச்  

    சான்றோரும் பதைபதைத்து  மௌனித் தாரே

புத்தெழுச்சி தழுவிவந்த பாக்க ளெல்லாம்

    பொன்னாக ஒளிர்ந்துநிற்க மகிழ்வுற் றேனே

     

மனக்கதவைத்  திறப்பதில்லை பலரு மிங்கே 

    மனந்திறந்து சொன்னாலும் கேட்பா ரில்லை 

தினந்தோறும் அதிகரிக்கும் சிக்க லெல்லாம் 

    தீர்ப்பதற்கு வழிகளின்றி அடங்கிப் போகும் 

தனியுரிமை ஆங்காங்குப் பறிக்கும் போது 

    தவிப்புதனில் வாடுவோர்கள் பலரு மிங்கே 

இனியெதற்கு வாழவேண்டு மென்றே மாழ்கி

    ஏக்கத்தில் மடிவோரும் உலகில் உண்டு


இல்லறத்தில் காண்கின்ற குறைக ளெல்லாம் 

   இல்லாளின்  மனக்குறைகள் கேட்கத் தீரும்  

கொல்கின்ற ஐயத்தை வளர்த்தால் துன்பம் 

   குதூகலமும் மறைந்தோடும் வாழ்வில் என்றும் 

நல்லறங்கள் செய்வதற்குச்  செல்வம் வேண்டா 

   நலங்காக்க உதவுகின்ற பண்பு காணும் 

இல்லையென்(று) ஒருபோதும் எண்ண வேண்டா 

   இருப்பதினில் நிறைவுதனைக் கண்டால் போதும்


ஏற்றமுறச்  செயல்யாவும் செய்து விட்டால் 

    இழப்புகளைத் தவிர்த்திடலாம் உலகி லெங்கும் 

போற்றுகின்ற மனத்திடத்தை வளர்த்து விட்டால்

    புதுமைகள் படைப்பவர்கள் பெருகு வாரே

வேற்றுமைகள் மனிதரிடம் காட்ட வேண்டா

    வீண்வம்பு செய்தவரை வீழ்த்த வேண்டா 

மாற்றங்கள் காண்பதற்குத்  துணிந்து நின்றால் 

    மனப்புழுக்கம் என்றெல்லாம் உலகில் உண்டோ


நன்றி


நல்வாய்ப்பை  எனக்களித்த ஆசான் போற்றி 

    நன்றிதனைக்  கூறுகின்றேன் இங்கே நானும் 

சில்லென்ற  தென்றல்போல் தழுவும் பாக்கள்  

    சிந்தைதனை மெல்லென்று தழுவி நிற்கும்        

சொல்லுகிறேன் மனமுவந்து நன்றி தன்னைச்

    சொற்சுவையில் கவிபாடிச் சென்ற தற்கு 

நல்வாழ்த்தை அனைவருக்கும் மகிழ்வாய்த் தந்தேன் 

    நலத்தோடு நெடுங்காலம் வாழ்க வாழ்க!