16. பைந்தமிழ்ச் சுடர் விசு. இம்மானுவேல், பெங்களூரு
கவிஞர் அழைப்பு
பண்பு நிறைந்த கவிஞரிவர்
பாக்கள் நாளும் பலதருவார்
எண்ணம் சிந்தும் கருத்துதனை
எழிலாய்க் கோத்துக் கவிபுனைவார்
கன்னல் மொழியில் கவிபாடக்
கனிவாய் இங்கே அழைக்கின்றேன்
மன்றம் மகிழும் உம்வரவில்
மகிழ்வாய் வந்து கூறுங்கள்
இம்மானுவேல் ஐயா வருக!
இன்றமிழ்த் தேன்தருக!
தமிழ் வணக்கம்
செந்நாப் புலவோர் செழுமிய நாவினில்
எந்நாளும் குந்திய என்றமிழே – முந்தியென்
நாவிலுங் கோலோச்சு நன்றாய்ப் பணிகின்றேன்
ஆவிக்குள் உன்னை அருள்
தலைவர், அவை வணக்கம்
சோலைக் கவிகளின் சொந்த நடுவரே
காலைக் குயிலாம் கவிஞரே – மாலை
தொடுத்தேன் கவிதையில் தோன்றி வணங்கக்
கொடுத்தேன் குரலினில் கோத்து
கதவைத் திறந்து வை
வழியடைக்கிற பெருந்தடைகளும் வலுவிழந்தினி போகும்
குழிபறிக்கிற குறுமதியினர் குழப்பியதெலாஞ் சாகும்
மொழிநலத்தினை விழியெனவுரை முழுநலமதுஞ் சேரும்
அழிவுறுநிலை யகலவுநிதம் அறிவினிலது சாரும் (1)
பரவியபிணி இருளினில்நமை படுத்தியதெலாம் போதும்
வரவினியெது வழிநெடுகவே வருந்திகிலது மீதம்
தரவுகளெலாம் தனிமனிதனின் தலைசுழற்றவே செய்யும்
தரணியிலிழி நிலையகற்றிடத் தலைமுறைகளும் உய்யும் (2)
அறையெனுஞ்சிறை யடைபடும்நிலை அலையுறவுடன் நின்றோம்
குறைபலவதன் குவியுணர்வினைக் குளிர்கவிதையால் வென்றோம்
நிறைவுகளது நிலவிடும்வரை நிகழ்கலைகளு மில்லை
உறைநிலைகளும் அகன்றிடவரும் உணர்ந்தெழுவதன் எல்லை (3)
மனஞ்சுருங்கினால் விழிபெருகினால் மலர்வனமெங்கே ஈர்க்கும்
கனவழிவதால் களம்மறுப்பதால் கனலுறைக்குமே யார்க்கும்
தினந்திருவிழா வெறும்வெளியிலா திகைப்புறுவது நெஞ்சம்
சினமொதுக்கிய சிலநகைப்புகள் சிதைவறுக்குமே கொஞ்சம் (4)
படிப்பறிவினை நடந்தொருவிடம் பயனுறுவதும் மாறி
இடித்திழுத்ததே புதிர்க்கிருமிகள் இருப்பிடமதி லேறி
வடித்தொழித்ததோ வதைத்தழித்ததோ வரைமுறைகளைத் தேய்த்துக்
குடிநிலையினை நெறிமுறையினைக் குதறியேநிலஞ் சாய்த்து (5)
இருள்மடியினில் பலதொழில்களை இழுத்திறக்கிய காலம்
பொருள்வழிகளின் கதவடைத்ததே பொதுவினிலொரு கோலம்
மருள்நிலையினில் சிரிப்பொலிகளும் மறைந்திருந்தது தூரம்
தெருவளைவுகள் வெறுமையில்விழத் தினக்கொடுமைகள் கோரம் (6)
நிலமுழுபவர் தலைமுறையினை நிலைநிறுத்தவே வேண்டும்
வலம்வருகவே சமத்துவநிலை வழிதிறக்கவே யாண்டும்
பலவதிர்வுகள் பலியிடும்நிலை பனியகல்வதைப் போன்றே
நலமுரைத்தினி துயில்முறிக்குமோ நதிப்புனலென நன்றே (7)
புதுவருடமே மலரெடுத்துவா புகழ்க்கவிதையைத் தீட்டு
பொதுக்கதவினைத் திறந்திருக்கிறோம் பொலிவதனையே காட்டு
மதுமயக்கமும் மதிக்கலக்கமும் மனந்துறந்தெழச் செய்வாய்
இதுவரையினில் களைப்பருளிய இழிநிலைகளைக் கொய்வாய் (8)
நன்றி நவிலல்
எளியோ னெனக்கு மிடமளித்த சோலை
களிப்பில் திளைக்கிறேன் காண்பீர் – வளிவழி
நெஞ்சனுப்பி நன்றியால் நேர்கிறேன் மாசிருப்பின்
கொஞ்சம் பொறுப்பீரே கொண்டு
வாழ்த்து
வழியடைக்கும் பெருந்தடைகள் விலகிச் சென்றால்
வாழ்வினிலே பிணியெல்லாம் நீங்கு மென்றார்
குழிபறிக்கும் குறுமதியர் செய்த தெல்லாம்
குழிதோண்டிப் புதைக்கவேண்டு மென்றும் சொன்னார்
விழிகாணும் குறையெல்லாம் நீங்கிச் சென்றால்
விடியல்கள் யாவருக்கும் பிறக்கு மென்றார்
முழக்கமிட்டுக் கூறியவை உண்மை தானே
முகமலர வாழ்த்துகளைச் சொல்லு வோமே
No comments:
Post a Comment