15. பைந்தமிழ்ச் சுடர் சோமு சக்தி
• பிறப்பு: முகவை (இராமநாதபுரம்) மாவட்டம்
• இருப்பிடம்: சென்னை.
• பொருளியியல் படித்தவர்.
• மொழிபெயர்ப்புப் பணியாற்றுகிறார்.
• புதுக்கவிதை தொட்டு, மரபில் புகுந்தவர்.
• பைந்தமிழ்ச்சுடர் பட்டம் பெற்றுள்ளார்.
கவிஞர் அழைப்பு
புத்தம் புதிய புதுமைகள் படைக்கும்
சத்த மற்ற தண்டமிழ்க் கவிஞர்
எதற்கும் துணிந்த இன்றமிழ்க் கவிஞரை
இதமாய்க் கவிபாட இனிதாய் அழைக்கிறேன்
பைந்தமிழ்ச் சுடர் சோமுசக்தி ஐயா வருக
சொக்கும் கவிதை தருக
தமிழ் வாழ்த்து
கதவைத் திறந்துவைத்துக் கண்டதைச் சொல்ல
முதலாய்த் தமிழே முயல்வேன் - மதலைக்
கவிநானும் பாடக் கனிந்தருள்க தாயே
புவிசிறக்க வெந்நாப் புகுந்து !
அவை வாழ்த்து
பாவல ராசானாம் பாரில் வரதரொடு
நாவலர் நிர்மலா நற்றலைமை - பாவளர்ச்
சோலைக் கவியரங்கிற் றோன்று மவையோர்க்குக்
காலை வணக்கமிட்டேன் காண் !
கதவைத்திறந்துவை
கதவைத் திறந்தாற் காற்றும் வரலாம்
அதகளப் புயலும் அதிலே நுழையலாம்
திறக்கும் முன்னே திசைகளிற் பார்த்தால்
திறமாய் நிலையைத் தெரிந்துகை யாளலாம்
எதற்கும் மனத்தி லிருக்கும் கருத்தை
இதமாய்ச் சொல்வேன் ஏற்றா லேற்பீர்!
கதவைத் திறந்ததும் கண்டதைச் சொல்வேன்
உதவ வருவதாய் உரைக்கும் கூட்டம்
களப்பிர ராண்ட காலந் திரும்பவோ !
வளத்தைச் சுரண்டவோ வருகிறார் விழிப்பாய்! 10
வெற்றிட மிதுவா! வேறிட மில்லையா ?
சுற்றியே வருகிறார் சூழ்ச்சிக் கேடே
வந்தாரை வாழ வைத்தாய்! பெருமையே !
நொந்துநீ வீழவா? நொடித்துப் போகவா?
மாற்றான் முதல்வனாம் மாரைத் தட்டுவான்
தோற்கடி யவனைச் சூளுரை யேற்றே
தவறினைச் சுட்டித் தலைமை ஏற்பாய்
எவரு முன்னை யெடுத்தாள விடம்கொடாய் !
நல்லனாய் நடிப்பவன் நல்லனு மல்லன்
வல்லனாய் நடிப்பவன் வல்லனு மல்லன் 20
மண்ணின் மொழிக்கு மதிப்பிடம் இல்லை
கண்ணாய் நினைப்போன் கவலை கொளவிலை
உரிமைக் குரல்தர ஒருவனு மிலையேல்
நரியினுங் கேடர் நாட்டுவர் தொல்லை
இன்னும் பேசா திருந்தாற் பயனிலை
முன்னே யெண்ண முடிந்தாற் சிறப்பே
தமிழாற் பிழைப்போர் தரணியில் பலருளர்
தமிழர் பகையே தலைவராய் ஆவதோ
பொறுப்புக் கொண்டாற் புரிந்திதை மாற்றலாம்
அறுத்துக் கொண்டா லாற்றுவோர் யாரோ? 30
காலமும் இடமுங் கருதியே கூறுவேன்
ஞாலத் தவையீர் நன்றி உமக்கே!
வாழ்த்து
அறத்தைப் பேசும் அறிஞர்கள்
அகத்தில் நல்லோர் இல்லையென்றார்
திறமாய் நிலையை உணர்ந்துவிட்டால்
தீர்வும் கிடைக்கப் பாரோங்கும்
குறைகள் யாவும் தீர்ப்பதென்றால்
குணத்தில் சிறந்த தலைமைவேண்டும்
சிறப்பாய் மிடுக்காய்க் கவிதந்தார்
சிந்தை மகிழ வாழ்த்துவமே
No comments:
Post a Comment