'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


 

பைந்தமிழ்ச்செம்மல் 'ஆதிகவி'

சாமி.சுரேஷ் அவர்கள்


கவிஞன் என்பவன் யாவன்? கவிதை என்பது யாது? எனும் வினாக்களை எப்போதும் நெஞ்சில் இருத்தித் தம் கவிதைகளை இணைவைத்துப் பார்க்க இயலாத மிக்க சொல்லாட்சியோடும், பசுமரத்து ஆணி போலப் பதிய வைக்கும் பொருளாழத் தோடும் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்ட கவிஞர்களுள் இவரும் ஒருவர். ஆதிகவி எனும் பெயருக்குப் பொருத்தமானவர்.


மின்னார் சிவனாரின் மென்றமிழின் வாணாளாய்ச்

சின்னவனே வாழ்வாய் சிறந்தோங்கி - நண்ணாரும்

சொல்லோடு வாழ்த்தட்டும் தூய நறுங்கவியே

பல்லாண்டு வாழ்க பணைத்து.!

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர் உயர்திருவாளர் சாமி.சுரேஷ் அவர்கள்.


அவர் விழுப்புரத்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய பெற்றோர் ந.சாமிக்கண்ணு - இராணி அவர்கள். அவருடன் பிறந்தோர் இரு தங்கைகள், ஒரு தம்பி ஆவர்.


அவர் தொழிற்கல்வியும் முதுகலை வரலாறும் படித்தவர். நடுவணரசின் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் ஆவடி திண்ணூர்தி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.


அவருடைய துணைவியார் திருமதி மஞ்சு அவர்கள். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள். மூத்தவன் சு.நதின் ஆதித்யா. இளையோன் சு.கவின் கிருஷ்ணா. திருக்குறள் பயிற்சியிலும் சிலம்பாட்டக் கலையிலும் சிறந்து விளங்கும் பிள்ளைகளின் பெயரிலிருந்தே ஆதிகவி எனும் புனைபெயருக்கு உரியவரானார்.



ஒரு முறை பைந்தமிழ்ச் சோலையின் சிந்துபாடுக பயிற்சியில் இவர் இயற்றிய

“பன்னிரு கைகள்கொண் டே - இங்குப்

     பற்பல தெய்வத்தின் சிற்பமுண் டாம்

என்னிரு கைகளைத் தான் - நான்

     எப்போதும் போற்றுவேன் தப்பில்லை காண்” 

என்னும் கவிதையைக் கண்ட பாவலர் மா.வரதராசன் அவர்கள் மெய்சிலிர்த்துப் பின்வருமாறு பாராட்டினார். 


“பொறிதட்டும் ஒரு கவிதை; உசுப்பிவிடும் வீச்சு; கிளர்ச்சியைச் சொடுக்கும் புரட்சி; ஏனோ தாராபாரதி ஒரு நொடி மூளையில் பளிச்சிட்டார்.

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்

   விரல்கள் பத்தும் மூலதனம்

என்ற தாராபாரதியின் வரிகளை நினைவூட்டியது இந்தக் கவிதை”


ஆம். இவரது கவிதைகள் மின்னல் கீற்றைப்போல் பளிச்சிடும். இசையோடு பாடல்களைப் பாடுவார். இவரது கவிதைகள் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வல்லமை உடையன. இதோ என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வரிகள்.


வானத்தி ருச்சுடர் முன்னே - மண்ணில்

வந்ததி ருத்தமிழ்ப் பெண்ணே - உன்னின்

    வளமானவள் நிலமீதினில் 

   இலையேபுகழ் நனிமேவிய

வனப்பே - உயிர் - கனப்பே


தெளிவான அரசியல் பார்வையும் உண்மையும் பொய்ம்மையும் கலந்த ஊடகத்துறையினூடே உண்மையைத் தேடித் தொடரும் ஒரு தொலைநோக்குப் பார்வையும் உடையவர். இவரது பாடல்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் தொடர்முயற்சியன.


காட்டில்வாழு மிருகமெலாம்

    காவலனாய் வந்து-நம்

    கழுத்தறுத்துக் கொன்று-உடல்

    காயவைத்துத் தின்று-அடக்

    காவலாளி நானென்கும்

    கனைத்தபடி நின்று


ஓட்டைவிற்றுத் தின்றதுதான்

    உலகமகாக் கேடு - பின்

    உருப்படுமா நாடு - நாம்

    உணராவரை பேடு - பலர்

    ஓலமிட்டும் உறங்குவதே

    ஒண்டமிழர் பீடு



இவரது பாடல்கள் உள்ளெழுச்சி ஊட்டுபவை. செயல்படத் தூண்டுபவை. இதோ ஒரு சான்று:


உன்போல வேறாரும் இல்லை-நீயும்

       ஒப்பிட்டுப் பார்த்தாலே ஓயாது தொல்லை

மின்மினி பூச்சிக்கு ஈடா-அந்த

        விண்ணிலா சூரியன் நேரில்லை போடா.


‘உண்மைக் கவிஞர் உண்டோ?’ எனும் தலைப்பிலான இவரது எண்ணங்கள், கவிஞர்கள் தம்மையே ஆராய்ந்து பார்த்துக் கொள்ளத் தக்கதாகச் செவியறிவுறூஉவாக இடித்துரைப்பன.


ஈனக் கவலைகள் இறக்கி வைத்து

மானக் கவிஞ னென்பா ரிங்கே

ஈயச் சொல்லில் பொன்முலா மிட்டு

மாயச் சொல்லென் றுரைப்பா ருண்டு

கிழட்டுச் சொல்லில் உவமை கோத்து

முழக்குங் கவிஞர் முக்கா லிங்கே

காமப் புலம்பலைக் கவிதை யென்று

தேமச் சீரில் குழைப்பவ ருண்டு

கள்ளைக் குடித்துப் பெருத்த தொந்திபோல்

வெள்ளைக் காகித வெற்றுப் புலம்பலை

அள்ளக் குறைவிலா வட்சய மென்று

கள்ளச் சிரிப்புடன் கதைப்பவ ருண்டு

தொந்திப் பெரியவர் தோழமை யெண்ணி

சந்தி சிரிக்கிற சந்தங்கள் பாடும்

எந்த வறிவு மில்லாப் பேதையர்

இந்த மண்ணிடை எண்ணில வுண்டு

சாலை வழிகிற செந்நீர் தள்ளி

மாலை நிலவுக்கு மாலைக ளுண்டு

வட்டித் தொழிலுக்கு வந்தவர் போலும்

புட்டிப் பொருளுடன் பொருந்துவ ருண்டே

ஆளுங் காலைக் கழுவிக் குடித்து

நாளுங் கவிதைகள் நெய்பவ ருண்டு

சாதிச் சங்கத்தின் தாதிகள் வந்து

நீதிக் கவிதை நீட்டுவ துண்டு

பொய்யை மட்டுமே பொருளெனக் கொண்டு

மெய்யை விற்பவர் மெத்த வுண்டே

உண்மை மட்டும் உரைக்கும்

திண்மைக் கவிஞர் தரணியி லுண்டோ?


சிறப்பாகக் கவி புனைதலோடு சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவருடைய ‘முகிலில்லா வானம்’, ‘மொழியின் இடைவெளி’, ‘தீதும் நன்றும்’ ஆகிய சிறுகதைகள் தமிழ்க்குதிரில் வெளிவந்துள்ளன. கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகச் சிற்றிதழ்களில் அரசியல், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளைப் பல்வேறு புனைபெயர்களில்  எழுதி வருகிறார்.


மேலும், தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பல்வேறு களப்போராட்டங்களில் முனைப்புடன் பங்கு பெற்று வருகிறார். சமூக நீதிக்கான போராட்டங்களில் கருத்து வேறுபாடு பார்க்காமல் மற்ற இயக்கங்களிலும் கலந்து கொள்கிறார். அரசியலில் காந்தியும் ஆன்மீகத்தில் ஓஷோவும் இரு கண்கள் என்னும் கருத்துடையவர் இவர். "நீ விரும்பும் மாற்றம் முதலில் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்" என்னும் மகாத்மா காந்தியடிகளின் மேற்கோள் இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.


தொழிற்சங்கப் பணியோடு ஆவடி திண்ணூர்தித் தொழிலக முத்தமிழ் மன்றத்தின் மேனாள் இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். பைந்தமிழ்ச்சோலையோடு இணைந்து பயணிக்கும் அவர் கடந்த இரண்டாண்டுகளாகப் பைந்தமிழ்ச் சோலையில் பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார்.


இவர் பெற்றுள்ள பட்டங்கள்:

கவியருவி (தடாகம் இலக்கிய வட்டம், இலங்கை)

பைந்தமிழ்ப்பாமணி (பைந்தமிழ்ச்சோலை)

பைந்தமிழ்ச்செம்மல் (பைந்தமிழ்ச்சோலை)

விரைகவிவாணர் (பைந்தமிழ்ச்சோலை)

ஆசுகவி (பைந்தமிழ்ச்சோலை)

காரைக்குடி வீறுகவியரசர் முடியரசனார் விருது,

ஈரோடு தமிழ்ச்சங்க விருது- கவியொளி

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கவிதைப் போட்டியில் (சுமார் 700 கவிஞர்களில்) முதற்பரிசு.

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை - திருவண்ணாமலைக் கிளை நடத்திய ஆண்டுவிழாச் சிறப்பு மரபு கவிதைப் போட்டியில் முதற்பரிசு.



இவர் தனது முதல் நூலான ‘தலைநிமிர்காலம்’ எனும் நூலை  மார்ச்சு 21, 2021 அன்று வெளியிட்டார். இந்நூலை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதியை மதிப்பிற்குரிய நண்பர் திரு.அரங்கன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மரபு மாமணி பாவலர் வரதராசன் அவர்களும் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திரு.ஹாஜா கனி அவர்களும் காந்திய மக்கள் இயக்க மாநிலப் பொருளாளர் திரு.பா.குமரய்யா அவர்களும், ஆவடி தமிழ்ச்சைவப் பேரவைத் தலைவர் திருமதி கலையரசி நடராசன் அவர்களும் ஆவடி எழில் இலக்கியப் பேரவைத் தலைவர் திரு.எழில்.சோம.பொன்னுசாமி உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.


'நண்பர் சாமி சுரேஷ், பாவேந்தர் பாரதிதாசன் பாசறை தந்த சிந்தனைகளால் செதுக்கப்பட்டவர் என்பதை அவருடைய பல்வேறு கவிதைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்துகின்றன, தமிழ் வளர்த்தெடுத்த பாவினங்கள் அனைத்தையும் இவர் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் வியப்பு மேலிடுகிறது' என்று தமிழருவி மணியன் அவர்கள் வாழ்த்துகிறார்.


பேச்சில் சுவைகூட்டி இனிக்க இனிக்கப் பேசும் பேராண்மை கொண்டவரான தமிழறிஞர் பைந்தமிழ்ச்செம்மல் “ஆதிகவி” சாமி.சுரேஷ் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அவர் எல்லா வளமும் நலமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய உவகையுடன் வாழ்த்துவோம்.


நீதியொளிர் செங்கோலைக் கையில் தாங்கி 

    நெறிசொல்லி ஆள்கின்ற மன்ன னாக 

மேதினியை மேன்மைமிகப் படைக்க வேண்டி  

    வெல்கின்ற ஆற்றலொடு வெல்லம் போன்ற  

சேதிசொல்லிச் செம்மைசெயும் எழுது கோலைத் 

    தன்கையில் தாங்கியவர் நயமாய்ப் பாடும்   

ஆதிகவி சாமிசுரே(சு) ஐயா வாழ்க! 

    அவையதிரும் கவிசொல்லும் அனலே வாழ்க!

             - தமிழகழ்வன் சுப்பிரமணி


5 comments:

  1. கவிஞரின் தமிழ்த் தொண்டு சிறக்கட்டும்.

    ReplyDelete
  2. மனம் கவர்ந்த பாவலன் சாமி சுரேஷ் தன் பாத்திறத்தால் மேலும் புகழீட்ட வாழ்த்துகிறேன். மு.சே.மு. சபீக்.

    ReplyDelete
  3. மிகவும் சிறப்பு..இனிய நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. மிகவும் சிறப்பு. அருமை.
    பாவலரின் தமிழ்த் தொண்டும், சமூகத்தொண்டும் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete