14. பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன்
• படிப்பு: இயந்திரவியில் பொறியாளர்
• பணி: ஹூண்டாய் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பராமரிப்புத் துறையில் 22 ஆண்டுகளாகப் பணி.
• பட்டம்:
மரபொளிர் விருது (நிலாமுற்றம் கவிதைகளுக்கான தேடல்),
பைந்தமிழ்ச்சுடர் பட்டம் (பைந்தமிழ்ச் சோலை)
• நூல்வெளியீடு: மரபு கதம்பம்
• தமிழின் மீது தீராத பற்றின் காரணத்தால் பைந்தமிழ்ச்சோலையில் அனைத்து வகை யாப்புகளையும் பயின்றும் பாவெழுதியும் வருகின்றார்.
கவிஞர் அழைப்பு
கன்னித் தமிழ்க்கவியைக் கன்னலென நினைக்குமிவர்
என்றும் ஆர்வமுடன் இடைவிடாமல் கவிபுனைவார்
அன்பாய் வருகவென அகமலர அழைக்கின்றேன்
முன்னே வந்தமர்ந்து முழங்குங்கள் உம்கவியை
பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன் ஐயா வருக
செந்தமிழ்ப் பாக்களை அள்ளித் தருக
தமிழ் வாழ்த்து
முத்தமிழே தாயே மூத்தவளும் நீயே
முன்னின்று காக்கும் என்னுயிரும் நீயே
தித்திக்கும் தேனே திகட்டாத வானே
திருவென்றும் தீராத் திருமகளும் நீயே
முத்தைப்போல் கருத்தை மொழிக்குள்ளே வைத்து
முயன்றார்க்கு வாரி இறைக்கின்ற கோனே
எத்திக்கும் விரியும் வான்போல வாழ்வாய்
இமைபோலக் காப்பேன் இளமையுள்ள தாயே
தலைமை வாழ்த்து
செந்தமிழை உயிர்மூச்சாய்க் கொண்டு
செம்மலாக வந்ததிந்த வண்டு!
செந்தமிழைச் செம்மையாகக் கற்றுச்
செழுமையுடன் வளர்ந்ததிங்கு நின்று!
சந்தத்தில் சிந்துகவி பாடிச்
சந்திப்பார் மகிழ்வாகக் கூடி!
பைந்தமிழின் நாயகியே வாழி
பார்போற்றும் தலைமகளே வாழி!
அவை வாழ்த்து
அன்புநிறை சான்றோர்கள் அமர்ந்திருக்கும் கவியரங்கம்
தன்னுடைய பாவனைத்தும் தரமாகத் தருமரங்கம்
விண்ணதிர வைப்பார்கள் விரைவாகக் கவிபுனைந்து
கண்ணாகத் தமிழ்காக்கும் கவிவாணர் போற்றுகின்றேன்
கதவைத் திறந்து வை
ஏட்டினிலே ஆட்சியாளர் எழுதவிட்டுச் செல்கின்றார்
நாட்டினிலே அன்றாடம் நடக்கின்ற கொடுமைகளை
வீட்டினிலே உள்ளவரை வீதிக்குக் கொண்டுவந்து
நீட்டுகின்றார் சட்டமென நீங்காத தொல்லைகளை 1
பாடாகப் படுத்துகின்றார் பாவிகளாய் ஆக்குகின்றார்
கேடாக விளைவித்துக் கோமாளி யாக்குகின்றார்
மாடாக உழைப்பவரை மனிதனாக மதிக்காமல்
ஓடாமல் ஓடுகின்றார் ஒதுக்கிவிட்டு நமையுந்தான் 2
மதுவருந்தி வீதியிலே மல்லாக்க விழுகின்றார்
முதுமையிலே முடங்கித்தான் மூலையினில் அமர்கின்றார்
மதுவினிலே மூழ்க்கித்தான் மதிமயங்கிச் சாகின்றார்
விதவைகளாய் ஆக்கிவிட்டு வீதியினில் விடுகின்றார் 3
மதுவிலக்கு வேண்டுமென்று மாதர்கள் நிற்கின்றார்
புதுமையாகப் போராட்டம் புவிதனிலே நடத்துகின்றார்
எதுவந்த போதுமென்ன எவர்மாறப் போகின்றார்
பொதுக்கூட்ட மேடையின்பின் போய்பார்க்கச் சொல்கின்றார் 4
போதையிலே இருத்தற்றான் பொதுமக்கள் அரசென்பார்
பொதுமக்கள் பணத்திற்றான் பொழுதெல்லாம் கழிக்கின்றார்
புதுவருடப் பரிசென்றே பொன்பொருளைத் தந்தாலும்
மதுக்கூடம் வழியாக மறுபடியும் பிடுங்குகிறார்! 5
நம்வாழ்க்கை நம்கையில் நம்விழிப்பே நல்வாழ்க்கை
கம்மென்றே இருந்தாலும் காரியத்தில் கண்வேண்டும்
உம்மென்றே இருந்தாலும் உயர்வினிலோர் கண்வேண்டும்
நம்நாடே என்றாலும் நம்முழைப்பே நமக்குயர்வாம்! 6
நன்றியுரை
அன்னைத் தமிழா மருந்தமிழில் பாவெழுதி
அன்பாகக் கேட்கும் அனைவருக்கும் நம்தமிழை
முன்னமர்ந்து கேட்டோர்க்கும் முந்திவந்து தானென்றும்
நன்றிகளைச் செப்பிடுவேன் நான்
வாழ்த்து
ஏட்டினிலே உள்ளதெல்லாம் ஏற்றுக்கொள் வதில்லையென்றார்
நாட்டினிலே எங்கெங்கும் நயவஞ்சக் கூட்டமென்றார்
பாட்டினிலே அனல்பறக்கப் பலகொடுமை எடுத்துரைத்தார்
கூட்டமாக வாருங்கள் கூடிநின்று வாழ்த்துவமே
No comments:
Post a Comment