'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Apr 18, 2021

மனக்கண்ணாடி

கவிஞர் இரா. இரத்திசு குமரன்

பெயர்ப்பலகையில் உயர்தர சைவ மற்றும் அசைவ உணவகம் என்று பொறிக்கப்பட்ட கட்டிடத்திற்குள் நந்தாவும் அவனுடைய நண்பன் ராஜீவ்காந்தியும் நுழைந்தார்கள். வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் வந்து செல்லக்கூடிய பரபரப்பான உணவகம்தான் அது. உணவு ஆர்டர் எடுப்பதிலும் உணவைக் கொண்டுவந்து டேபிளில் அலங்கரிக்கவும் வைட்டர்ஸ் பிஸியாக இருந்தனர். ஒவ்வொரு டேபிளிலும் நான்கு இருக்கைகள் எனப் பத்து டேபிள்களுக்கு நாற்பது இருக்கைகள் இருந்தன. ஒவ்வொரு டேபிள்களிலும் பேச்சு சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. மீன், காடை, கோழி, ஆடு, மாடு எனப் பாகுபாடு பார்க்காமல் அனைத்தும் கிடைக்கும் இந்த சமத்துவ உணவு விடுதிதான் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமானது. பேருந்து நிலையத்திலிருந்து தள்ளி இருந்தாலும் உணவு பிரியர்கள் நடந்து வந்துகூட அந்த உணவகத்தில் சாப்பிட்டுப் போவார்கள். அறையின் இடது புறம் நடுப்பகுதியில் உள்ள ஒரு டேபிளில் இரண்டு இருக்கைகள் காலியானதும் பேருந்தில் இருக்கைக்கு இடம் பிடிப்பதுபோல் வேகமாய்ப் போய் அமர்ந்தனர் எதிர் எதிரே நந்தாவும் ராஜீவும்.

"நீ என்ன சாப்பிடற?" நந்தா தன் நண்பனைக் கேட்டான்.

"எனக்கு சாம்பார் சாதம் போதும். நேத்துதான் வீட்ல நான்வெஜி சாப்பிட்டேன் ". பசி எடுக்கவில்லை மூன்று வேளையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக சாப்பிடுபவன் போல பதில் அளித்தான் ராஜீவ்.

"இங்க காடை நல்லா இருக்கும். ஒன்னு சைடு டிஷ் மாதிரி தொட்டுக்கோ." நந்தா ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டம்பளர்களை நிமிர்த்தி வைத்துக்கொண்டே பரிந்துரைத்தான்.

"ஹே... அத பாக்கவே பாவமா இல்ல? குட்டி பேர்ட்ஸ். அத எப்படி சாப்பிட மனசு வருது உங்களுக்கெல்லாம்."? இறக்கும் குஞ்சுக்காகப் பரிதாபப்படும் தாய்ப்பறவையின் முகத்தைப் போல அவன் முகம் உணர்வுகளை வெளிப்படுத்தியது.

"நீ பழக்கப்பட்ட பிராணியோட கறி சாப்பிடும்போது உனக்கு எப்படி மனசு வருதோ அதே மாதிரி தான் மக்களுக்கு அவங்கவங்க பழக்கப்பட்ட பிராணியை சாப்பிடும் போது மனசு வருது." சிறு புன்னகையுடன் இரண்டு தோள்பட்டைகளையும் மேலே தூக்கி அசைத்து சாதாரணமாக கூறினான்.

ம்ம்ம்ம்... என்று தலையை அசைத்துக்கொண்டு "நம்ம உணவு நம்ம கேரக்டர வடிவமைக்கறது இல்லனு தெரியும்.

பியூர் சைவமா இருக்கலாம். பட் அதனாலே செயலும் சைவமா இருக்கும்னு சொல்லிட முடியாதுல?" எனத் தானக்குத்தானே இராஜீவ் பேசிக் கொள்வதுபோல் மெதுவாகப் பேசினான். அதனால் அது யாருடைய காதிலும் விழவில்லை.

அவர்கள் இருவருக்கும் ஆர்டர் செய்த உணவு பரிமாறப்படுகிறது. உணவு உட்கொண்டிருக்கும் சமயத்தில் இராஜீவ் நந்தாவிடம் கேட்டான். "நீ ஏதோ ஆர்ட்டிகள் எழுதப் போறதா சொன்னியே?" டாபிக்கை மாற்றினான் இராஜீவ்.

"தப்பு செய்யறவங்க மனநிலை எப்படி இருக்குங்கிறத பத்தி ஆராய்ச்சி கட்டுரை எழுத ஆசை. ஆனா இத யார வச்சி ஆராய்ச்சி செய்யறது. யார்கிட்ட போய் நாம கேட்க முடியும். குற்றம் செஞ்சவங்க யாராகிலும் இருந்தாங்க அப்படின்னா நீ சொல்லு நாம ஒரு இண்டர்வியூ மாதிரி வச்சுப் பேசலாம்." சீரியசாக நந்தா தன் நினைப்பை வெளிப்படுத்தினான்.

“எனக்கு அந்த அளவுக்கு பழக்கமில்லை. நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா. பேசாம நீயே குற்றவாளியாக முயற்சி பண்ணு. அப்புறம் உனக்கு எழுதுறதுக்கு ரொம்ப ஈசியா இருக்கும்." நக்கலாகச் சிரித்து கொண்டே சொன்னான் இராஜீவ்.

“நான் அதுமாதிரி குற்றம் ஏதும் செய்ய மாட்டேன். தப்பு எதுவும் செய்யுறது இல்லையே." தீர்க்கமான குரலில் ஆணித்தரமாக அடித்துக் கூறினான் நந்தா.

அவன் சற்று வேகமாக அடித்து விட்டான் என்பது போல. அவனுக்கு பக்கத்தில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேராவது அவனை உற்று நோக்கியே இருந்தனர்.

சிறிது நேரத்தில் நண்பர்களின் மதிய உணவு முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பிறகு சந்திப்பதாக சொல்லிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.

ஒரு வாரம் கடந்தது. மதிய உணவு முடித்துவிட்டு இளைப்பாற ஓய்வு எடுப்பதற்காக நந்தா வீட்டிலேயே இருந்தான். தன் வீட்டில் காலிங்பெல் சத்தம் ஒலித்தது. யார் என்று அவன் எழுந்து திறந்து பார்த்தான். தன் வயதை ஒத்த ஓர் ஆள் நின்று கொண்டிருந்தான். அயர்ன் போட்ட முழுச்சட்டை வெளிர் இளம் சிவப்பு நிறத்தில் டக் இன் செய்து இருந்தது. கருப்பு பெல்ட் அணிந்திருந்தான். கால் சட்டையின் நிறம் சரியாகச் சொல்லிவிடும் அளவுக்குப் பளிச்சிடவில்லை. சட்டை பாக்கெட்டில் ஒரு பால் பாயிண்ட் பேனா இருந்தது.

“மே ஐ கம் இன் சார்?" என்று அந்த மனிதன் அனுமதி கேட்டான்.

"வாங்க. நீங்க யாரு? என்ன வேணும்?" என்று இயல்பான தோரணையில் விசாரித்தான் நந்தா.

"சார், நான் உங்கள பார்க்கத்தான் வந்தேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்."

"ம்ம்ம் சரி உள்ள வாங்க" என்று தனது அறைக்குள் அழைத்தான்.

"நீங்க தப்பா நினைக்கலனா உங்கக்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லலாமா?" சற்றுத் தயக்கத்துடன் அந்த திடீர் விருந்தாளி கேட்டான்.

"தாராளமாக சொல்லுங்க. நான் தப்பா நினைக்க மாட்டேன்." பெருந்தன்மை முன் பின் தெரியாதவர்களிடம் இயல்பாக வருவதை நந்தா உணர்ந்தான்.

"போன வாரம் நீங்க ஒரு ஹோட்டலுக்கு உங்க பிரண்டு கூட சாப்பிட வந்தீங்க இல்லையா? அப்போது நீங்க பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். குற்றவாளிகளைப் பற்றி நீங்க எழுதறதுக்கு ஆசைப்படுவதாகப் பேசிட்டு இருந்தீங்க இல்லையா..." சிறுகுழந்தை குழைவதுபோல தொடர்ந்துகொண்டே இருந்தான் வந்தவன்.

"ஆமாம். உண்மைதான்."

"அப்படியென்ன வித்தியாசமான ஒரு விருப்பம் உங்களுடையது" எனக் கேட்டுவிட்டு, பதிலை உடனே எதிர் பார்க்காதவன் போல் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து அதில் அமர அனுமதி கேட்டான் அந்த மனிதன்.

“ஐ ஆம் சாரி. ஏதோ ஞாபகத்துல உங்கள நிக்க வச்சே பேசிக்கிட்டு இருந்துட்டேன். வெரி சாரி. தாராளமாக உட்காருங்க" கையை நாற்காலியின் திசையில் காண்பித்தான் நந்தா.

"நான் மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி எழுதுவதில் விருப்பம் உடையவன் ஒவ்வொரு மனிதனும் தவறு செய்கிறான். குற்றங்கள் நிகழ்கின்றன. அவன் திருந்த வேண்டும். மேலும் குற்றம் செய்யும் மனிதனின் அணுகுமுறைகளை ஆராய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம் தான். " யாரும் கொண்டிராத விசித்திர விருப்பம் தான் கொண்டிருப்பதாகத் தன்னைத் தனிமைப்படுத்தி நினைத்துக்கொண்டான் நந்தா. பேசும் தோணியும் மாறியது.

"நீங்கள் குற்றம் மற்றும் குற்றம் புரிபவர்கள் உணர்வுகளைப் பற்றி எழுதுவதால் குற்றம் புரிபவர்கள் திருந்துவார்கள் என்று உங்களால் நிச்சயம் கூற முடியுமா?" கேள்வியின் தடிமன் அதிகரித்தது. வந்தவரின் மொழியும் மாறியது.

இந்த இளைஞன் ஏன் இப்படிக் கேள்விகள் கேட்கிறான் என்று ஏதும் புரியாதவனாய் அமைதியாய் பதிலளித்தான் நந்தா.

“எல்லோரும் திருந்திவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தான் திருந்தி விட்டதாக ஏதாகிலும் ஒரு மனிதன் கூறினாலும் அது எனக்கு கிடைக்கும் பெரிய வெற்றிதான்" என்று தீர்க்கமாக கூறினான் நந்தா.

குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? அருகிலிருந்த தண்ணீர்க் குவளையைப் பார்த்துக் கேட்டான் அந்த ஆள். தனது அருகே இருந்த குவளையை நீட்டினான் நந்தா.

மடமடவெனக் குடித்துவிட்டு அமைதியானான் அவன். இருவரும் சற்று நேரம் மௌனம் காத்தனர். ஒருவர் மற்றவர் முகத்தைப் பார்க்க விரும்பாதவர்கள் போல வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தனர்.

"நானும் குற்றவாளி தான். நானும் தவறு செய்பவன் தான். ஆனால் நான் என்ன தவறு செய்கிறேன் என்று இப்போது நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. ஆனால் என்னுள் ஏற்படக்கூடிய உணர்வுகளை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நீங்கள் அனுமதித்தால்..." அனுமதியைப் பிடுங்கினான்.

"நீங்கள் குற்றவாளியா? குற்றம் செய்தவரா? என்ன குற்றம்? " சற்றுப் பதற்றமான குரலில் கேள்விகள் வெளிவந்தன.

நந்தாவின் முகம் மாறுவதைக் கண்ட அந்த இளைஞன். சிரித்துக்கொண்டே "நீங்கள் பதற்றப்படும் அளவுக்கு அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அதைச் செய்யும் போது நான் பல உணர்வுகளை வித்தியாசமாக உணர்கிறேன். அதை யாரிடமாவது சொல்லி விடவேண்டும் என எப்போதிலிருந்தே துடித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அன்று இது பற்றிப் பேசியபோது உங்களைச் சந்தித்து உங்களிடம் இதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்."

“சரி பேசுங்கள். குற்றம், தப்பு என்று உங்களுக்கு தெரியுது பிறகு ஏன் அதைத் தொடர்ந்து செய்கின்றீர்கள் ?"

"அதுவும் சேர்ந்துதான் எனது வாழ்க்கை என்றாகிவிட்டது அதை அவ்வளவு எளிதாக என்னால் விட்டுவிட முடிவதில்லை."

"அதை நீங்களாகத்தான் தேர்வு செய்தீர்கள் அல்லவா?"

"அது அப்படியே நிகழ்ந்தது அதை நான் பற்றிக்கொண்டேனா அல்லது அது என்னைப் பற்றிக் கொண்டதா? எனத் தெரியவில்லை." நாற்காலியின் வலது கையின் நுனியில் தன் வலது உள்ளங் கையால் தட்டினான்.

"அதை விடுவதாக உத்தேசம் இருக்கிறதா?" நந்தாவின் விரிந்த கண்கள் கேள்வியின் முடிவில் சுருங்கின.

"தெரியவில்லை. எதிர்காலத்தில் விட்டுவிட வேண்டும் என்று தோன்றுகிறது" கண்கள் தொடக்கத்தில் சுருங்கி இறுதியில் அகலமாக விரிந்தன.

"அப்படியானால் நல்லதுதான்." மூச்சுக்காற்று முழுமையாக உள் இழுத்து வெளியில் விட்டான் நந்தா.

"நீங்க அன்னைக்கு ஹோட்டல்லே பேசியதிலிருந்து எனக்குள் ஒரு பெரிய குழப்பம் உண்டானது . உண்மையில் உங்க வாழ்க்கையில நீங்க எந்தத் தப்பும் செஞ்சது இல்லையா ?" பேசும் தோணி இயல்பானது.

"நான் அப்படி எந்தப் பெரிய தப்பும் செஞ்சதா எனக்கு நினைவு இல்லை. என் மேல எந்தப் புகாரும் வந்ததில்லையே." பதிலும் இயல்பானது.

"அப்படிங்களா சரி.. சரி..

என்னைப் பற்றி நீங்க மத்தவங்கக்கிட்ட சொல்லுவீங்களா? நம்முடைய சந்திப்பு சீக்ரெட் ஆகவே எப்போதுமே இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் எனக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா?"

"நிச்சயமா... நீங்க என்ன நம்பலாம்."

தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் குறுஞ்செய்தி வந்திருப்பதுபோல் அதை வாசிக்க ஆரம்பித்தான் அந்த ரகசிய மனிதன் . தன் முகம் மாறியது. " ஒரு நிமிஷம் இருங்க சார்." போன் செய்தான். "என்ன நிஜமாவா? சரி இன்னும் ஒன் அவர்ல பஸ் ஸ்டாண்ட்ல இருப்பேன். அங்க வெயிட் பண்ணு."

"இது நான் நடக்கும்னு நினைச்சேன். சாரி சார் நான் இப்ப கிளம்பனும். நான் உங்களைப் பிறகு முடிஞ்சா வந்து பார்க்கிறேன் சார் . ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படிங்க சார் ". ஒரு கடிதத்தை நந்தாவின் கையில் திணித்துவிட்டு விர்ரென்று வெளியே சென்று விட்டான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. பேப்பரைத் திறந்து பார்த்தான் நந்தா. "மன்னித்துவிடுங்கள். இனி உங்களைக் காண வரமாட்டேன். அதனால் சில விஷயங்களைக் கடிதத்தில் சொல்கிறேன். சில குற்ற உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே நல்லதுதான். எல்லா குற்றங்களையும் தவறுகளையும்ஒத்துக்கொள்ளும் மனிதன் இதுவரையில் பூமியில் வந்ததாக எனக்கு தெரியவில்லை.எல்லா உணர்வும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.இது எனக்குத்தான் என எடுத்துக்கொள்ளவோ, இது எனக்கானது இல்லை என ஒதுக்கி விடவோ யாராலும் முடியாது. என்னுடைய குற்றங்களை உங்களிடம் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என எனக்குத் தெரியும். ஐம்பது பைசா மிட்டாயைக் கடையில் திருடினேன். சொந்த வீட்டிலே உண்டியல் உடைத்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துச் சிரிக்கிறேன். பருவத்தில் பாலின ஆராய்ச்சி கொண்டேன் . அது இயல்புதானே எனத் தேற்றிக் கொண்டேன். பெற்றோர்களிடம் கோபமாய்ப் பேசியுள்ளேன் . அவர்கள் மறந்துவிட்டனர். ஆனால் என்னால் முடியவில்லை. சிலரிடம் பொய் பேசியுள்ளேன். தவிர்க்க முடியவில்லை என்பதனால்... வீடுகளில் புகும் பாம்புகள் பலவற்றைக் கொன்றுள்ளேன். அப்போது வேறு வழி இல்லை என்பதால் எனக்கு வலிக்கவில்லை. இன்னும் பல இதுபோன்று நம் வாழ்வில் நடந்திருக்கும். குற்றங்களை நான் நியாயப்படுத்தவில்லை. ஏனெனில் பெரிய குற்றங்கள் திடீரென நடந்துவிடலாம். ஆனால் குற்றம் செய்யும் உணர்வு தானாக முளைத்துவிடுவதில்லை. நல்லது செய்யும் உணர்வும் அதே போலத்தான். இந்தக் கடிதம் என் நினைவாக எப்போதும் வைத்திருங்கள்.

நன்றி
இப்படிக்கு,
****

பெயர் இருக்கவேண்டிய இடத்தில் கையெழுத்து இடப்பட்டிருந்தது. பெயர் புரியவில்லை. நந்தா அதைத் தெரிந்துகொள்ள மெனக்கெடவில்லை. அலமாரியின் கண்ணாடி முன் நடந்து வந்துவிட்டிருந்தான் நந்தா. அதில் இரண்டு முகங்கள் தெரிவதைக் கண்டு அமைதியானான். நண்பனுக்கு போன் செய்து கேட்டான் "ஹலோ ராஜீவ் ... நல்லத அதிகமா செய்யுற ஆளுங்க உனக்குத் தெரிஞ்சா சொல்லேன். அவங்களப் பத்தி எழுதலாம்னு தோணுது ".

No comments:

Post a Comment