'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label சூரிய வெளிச்சம். Show all posts
Showing posts with label சூரிய வெளிச்சம். Show all posts

Dec 15, 2020

சூரிய வெளிச்சம்

 பகுதி-3

பைந்தமிழ்ச்செம்மல்

முனைவர் அர.விவேகானந்தன்


2. குறிஞ்சி வளம்!


படர்ந்திடு மூங்கில் தோட்டம்

    பக்கமாய்க் கமுகு தோட்டம்

அடர்ந்திடும் வனத்தின் நாட்டம்

    அழகென வியற்கை கூட்டும்

இடர்தரும் விலங்கே எல்லாம்

    இசைவினைக் காட்டிச் செல்லும்

தொடர்ந்திடு மழலை யன்ன

    தொடுமலை சிறப்பின் குன்றாம் 31


பவளமா மலையு முண்டாம்

    பளிங்கென வொளிரும் நன்றாம்

தவமதை முனைய வேண்டித்

    தவத்தினில் கனிந்தோ ருண்டாம்

அவமென வந்த போதும்

    அதிர்ந்திடா அறவோ ருண்டாம்

நவமணி விளைச்சல் நல்கும்

    நல்வழி நாட்டுங் குன்றாம் 32


வேலவ னருளுங் குன்றாம்

    வெள்ளைக ளொலிக்குங் குன்றாம்

கோலமே கூடுங் குன்றாம்

    குறமகள் வாழுங் குன்றாம்

சீலமே காட்டும் மன்றம்

    சேர்ந்துமே வாழு முற்றம்

பாலமா யுலகி லோங்கும்

    பைம்முறை காட்டுங் குன்றாம் 33


பற்பல விளைச்ச லாக்கிப்

    படையலி லோங்கி நிற்கும்

சிற்சில வின்னல் நேரின்

    செழுமையா யாக்கிக் கொள்ளும்

பற்பல பழமை தேக்கிப்

    பாங்கெனும் பண்பை நாட்டும்

வெற்பென நிமிர்ந்து நிற்கும்

    வெற்றியை யாக்குங் குன்றாம் 34


வரிசையா யூர்திக் கூட்டம்

    வழியினில் செல்லல் போலும்

வரிசையாய்க் குன்றின் தோற்றம்

    வளமையைச் சுமந்து நிற்கும்

சரிவினில் கதிரோன் செல்லத்

    தருவெனும் மணிகள் மின்னும்

பரிவுடன் வந்த பேர்க்குப்

     பலவளந் தேக்குங் குன்றாம் 35


பலாவினைச் சுமக்கு மந்தி

    பகலினில் பந்தி வைக்க

உலாவரும் புள்ளின் கூட்டம்

    உரிமையாய்க் கொத்தித் தின்னும்

கலாவெனுங் கனியைக் காட்டிக்

    கணக்கெனப் பங்கைப் போடும்

துலாவிய கையின் நாற்றம்

    தொலைவினில் மணக்குங் குன்றாம் 36


பெருமலை யுடைத்தல் போலும்

    பிசினெனுங் கிழங்கைத் தோண்ட

வருமுறை சொல்லா நேர்வாய்

    வரிசையாய் நாடிச் செல்வார்

ஒருவரு மோய மாட்டார்

    ஒருநிழ லமர்ந்தே உண்பார்

தருநிழல் செழிக்குங் குன்றம்

    தவிப்பெலா மில்லாக் குன்றாம் 37


இடுப்பினில் தழையா மாடை

    இருப்பெனக் குறவோர் கட்ட

மிடுப்பினில் மழலைக் கூட்டம்

    மிஞ்சியே ஆட்டிப் பார்க்கும்

துடிப்பென ஒளிருங் கூட்டம்

    துயரதை நின்றே போக்கும்

உடுப்பென இல்லா வாழ்வில்

    உலகதை மயக்குங் குன்றாம் 38


கூத்திடும் கலைஞர் கூட்டம்

    குறையெனக் கூறி நிற்க

வேத்தெனப் பாரா வண்ணம்

    வென்றிடும் வழியைச் சொல்வார்

பூத்திடும் மலர்கள் போலும்

    புவியினில் செழிக்கச் சொல்வார்

காத்திடுங் குறவர் குன்றம்

    கருணையு மொளிருங் குன்றாம் 39


மணிவளஞ் சுரக்குங் குன்றம்

    மனவளம் சிறக்கும் குன்றம்

கனிவளம் பெருக்குங் குன்றம்

    கரும்பென இனிக்கும் குன்றம்

குணவளங் குறவோர் குன்றம்

    குறையது மில்லாக் குன்றம்

தனியெனத் தழைக்குங் குன்றம்

    தகையெலாங் கூட்டுங் குன்றாம் 40


வெளிச்சம் தொடரும்…

Nov 14, 2020

சூரிய வெளிச்சம்

 பகுதி-2

 பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்

 1.       தொண்டை நாடு!

தொண்டையாம் நாட்டின் பேரைத்

    தொடாவெனுங் கொடியா லாக்கிப்

பண்டைய காலத் துள்ளோர்

    பக்குவமாய்ப் பாடி வைத்தார்

மண்டையி லறிவைச் சேர்த்து

    மகிழ்ந்திட வாழ்ந்த சான்றோர்

அண்டையில் கூடி யாய்ந்த

    அருமையாம் தொண்டை யம்மே!             21

 

வடக்கினில் மாலின் குன்றம்

    வளந்தருந் தெற்காம் பெண்ணை

குடக்கினில் மலையென் றாகிக்

    குணக்கிலே கடலாம் காண்பீர்

எடுத்திடுந் தோற்றங் கொண்ட

    எளிமையின் சீராய் நின்று

தொடுத்திடு முண்மை கூறும்

    தொண்டையாம் பெருமை யம்மே            22

 

பல்வகை நதிகள் பாய்ந்து

    பசுமையாய் இசையை மீட்டும்

நெல்வகை முற்றி யாடும்

    நெறியெலாஞ் சிறந்தே ஓங்கும்

இல்வகை யில்லை யென்றே

    இனிப்பென வெல்லாஞ் சேரும்

பொல்லெனு முழங்கு மோசை

    புதுமையாந் தொண்டை யம்மே                23

 

பல்லவ ராண்ட பூமி

    பார்புக ழீந்த சாமி

வல்லவர் வலிமை யோர்கள்

    வறுமையைக் காணா தோர்கள்

வில்லினி லம்பைப் போலும்

    விருப்புட னியங்கி யோர்கள்

நல்லெனுஞ் சான்றோர் வாழ்ந்த

    நனிதிகழ் தொண்டை யம்மே                    24

 

திருவெனுங் கோயி லுண்டாம்

    திகழொளி யென்று முண்டாம்

வரவெனும் விருந்தி னோர்க்கு

    வாய்சுவை யாக்க முண்டாம்

கருமலைக் குன்றம் நன்றாம்

    கருத்தினில் செம்மை நன்றாம்

செருவெனி லெதிர்த்தே ஓங்கும்

    செழிப்பெலாம் தொண்டை யம்மே           25

 

தொன்மையைத் தாங்கி நிற்கும்

    துணையென வரலா றாக்கும்

வன்மையை வாடச் செய்து

    வாக்கினை நிலைக்கச் செய்யும்

பொன்னென வளங்கள் மிஞ்சப்

    பொலிவுறும் வயல்க ளோங்கும்

மின்னிடுங் குன்றந் தன்னில்

    மிரட்டிடுந் தொண்டை யம்மே                   26

 

தொல்லியல் கருவி யெல்லாந்

    துலங்கிடுந் தொண்டை நாட்டில்

நல்லிய லிருப்பின் கூட்டம்

    நனிந்திடும் பொருப்பின் மேட்டில்

ஒல்லிய மகளிர் கூட்டம்

    ஒளிவிடும் நெற்றித் தோட்டம்

புல்லிய ரஞ்சி யோடும்

    புலமையாந் தொண்டை யம்மே                               27

 

தேன்பிழி கூட்ட மென்றும்

    தெளிதொழில் செய்து வாழும்

ஊன்பிழி  யுழைப்பைத் தந்தே

    உறுதுயர் துரத்தி யோட்டும்

கான்வழி யெல்லாஞ் சென்று

    கமகம  மருந்தை யாக்கும்

வான்வழி  வரைக்கும் வீசும்

    வாசமாம் தொண்டை யம்மே                     28

 

விருந்தென வந்த பேர்க்கு

    விருப்பமாய் மலர்வர் நெஞ்சை

மருந்தென வாழ்வே கொள்ளின்

    மறுத்திடா உள்ளங் கொள்வர்

இருந்திடுங் கூலந் தன்னில்

    இளைப்பெனு மமுதம் பெய்வர்

வருந்திடும் பேர்கள் வாழா

    வாஞ்சையாந் தொண்டை யம்மே             29

 

மலர்களும் புள்ளும் மானும்

    மலையினில் மகிழ்வாய் வாழும்

அலரென மொழியும் பேச்சை

    அறிந்திடா மாண்பு மோங்கும்

புலர்ந்திடுங் காலை தன்னில்

    புதுவிசை மயங்கக் கூட்டும்

பலந்தரும் பழமை யெல்லாம்

    படைத்திடுந் தொண்டை யம்மே               30

 

வெளிச்சம் தொடரும்…

Sep 16, 2020

சூரிய வெளிச்சம்

பகுதி - 1

 பைந்தமிழ்ச்செம்மல் முனைவர் அர.விவேகானந்தன்

 இறை வணக்கம்!

உயிர்களைக் காக்குங் கோவே

    உளத்தினில் பூக்கும் பூவே

உயர்வினை வேண்டும் நெஞ்சுள்

    உடனிருள் போக்கும் காவே

மயக்கதை மடிக்குங் கோனே

    மனத்தினைத் தேற்றுந் தேனே

பயிரதன் பசுமை போலும்

    பாவினைத் தருவாய் மாலே!                               1

 

உலகெனும் நடப்பில் யாவும்

    உனதரு ளோங்கி நிற்கும்

கலகமே கலைக்கும் மாலே

    கருத்தினை யளிப்பாய் மேலே

பலப்பல வகையா மின்னல்

    பனியினைப் போலு மோடக்

கலையெலாங் கனிவா யின்றே

    காலடி தருவாய் மாலே!                                          2

 

இருளுறை யிடத்தில் நீயும்

    இடியென இடித்து நிற்பாய்

மருளுரை யோங்க நேரின்

    மடியினில் கிடத்திச் சாய்ப்பாய்

அருளுரை வழங்கும் மன்னா

    அகத்தினி லொளிருங் கண்ணா

தெருளுரை மிளிர வேண்டும்

    தென்மொழி தருவாய் மாலே                      3

 

சூரிய வெளிச்சம் போலும்

    சுருக்கென நெஞ்சுள் தைத்து

வேரெனக் கிளைத்த பாட்டை

    வெற்றியி னடியில் வைத்து

நேரிய நோக்கி லாக்கி

    நெறியெலா மொளிர நோக்கிப்

பாரினில் பரப்ப வந்தேன்

    பதமருள் தருவாய் மாலே!                                    4

 

தாயெனும் வடிவங் கொண்டு

    தரணியில் வடிவெ டுத்தாய்

பேயவள் முலையு றிந்து

    பெருமையைக் காட்டிச் சென்றாய்

காயெனக் கலக்கு மின்னல்

    கடிதினி லோட வேண்டும்

சேயென வணைத்துக் கொண்டு

    செறிவினைத் தருவாய் மாலே!                         5

 

உறவென வுன்னை யன்றி

    உலகினில் யாரு மில்லை

திறவென உன்றன் நெஞ்சம்

    திருப்பெலா மங்கே தஞ்சம்

குறையெனைக் கூடா வண்ணம்

    குறிப்பென வென்னைக் காப்பாய்

நிறையென வின்பஞ் சேர்ப்பாய்

     நிலைப்பினைத் தருவாய் மாலே!                   6

 

கிணற்றினில் விழுந்த பிள்ளை

    கெஞ்சியே அழுதல் போலும்

உணர்வினில் கருத்தை வைத்தே

    உறவுனைத் தொழுதேன் நானே

கணக்கெனப் பாட லாக்க

    கருணையுங் காட்டல் வேண்டும்

பிணக்கென விருக்கு மென்னுள்

    பெருமழை தருவாய்  மாலே!                              7

 

திருமக ளுறையும் மார்பா

    திருப்பமே யருள வேண்டும்

திருவெனப் பிடித்தே னுன்னைத்

    திளைப்பினில் ஆழ்த்தல் வேண்டும்

இருப்பென விருந்தே என்னுள்

    இமயமே காட்டல் வேண்டும்

கருவென விருப்பாய் பாட்டுள்

    கரும்பினைத் தருவாய் மாலே!                         8

 

மானிட உருவெ டுத்து

    மாந்தரின் மனங்க வர்ந்தாய்

நாணிடுஞ் செயலுங் கூடின்

    நசுக்கியே நலத்தை யீந்தாய்

வானிட வளத்தைப் போலும்

     வளமையை வாரித் தந்தாய்

தேனிட வினிப்பே நீயும்

    தேறுதல் தருவாய் மாலே!                                     9

 

திறந்தரும் வடிவைக் கண்டு

    திரும்பியே போற்றி நிற்பேன்

உறவினில் உயர்ந்தோ னுன்னை

    உலகினி லுயிராய்க் கொள்வேன்

மறந்தரும் மகிழ்வே வேண்டும்

    மனத்தினில் மலர்ச்சி வேண்டும்

சிறப்பெலாம் பொலிய வேண்டும்

    செழிப்பினைத் தருவாய் மாலே!                      10

 

ஆசான் வணக்கம்!

(மரபு மாமணி பாவலர்  மா.வரதராசர்)

 

பாமணம் கவிஞர் கூட்டம்

    பழக்கிடு மின்பத் தோட்டம்

பூமணம் அன்பின் நாட்டம்

    புதியதோர் புவியின் மாற்றம்

வாமன வுருவின் தேக்கம்

    வழங்கலில் நீண்ட தோற்றம்

போமெனப் பொய்க ளோட்டும்

    பொருளவர் வரதர் தாமே!                                     11

 

யாப்பெனுஞ் சோலை தந்து

    யாதுமா யாகி விட்டார்

தோப்பெனக் கவிக ளாக்கித்

    துறையெலாங் காட்டி வைத்தார்

ஆப்பெனும் பேர்கள் வந்தால்

    அருந்தமிழ் துணையாய் கொள்வார்

பாப்புனை பாங்கில் பண்பில்

    பகலவன் வரதர் தாமே!                                          12

 

சுயமதை யெண்ணி யெண்ணிச்

    சுற்றிடும் பொல்லோர் ஞாலில்

கயமையைச் சுருக்கி லேற்றிக்

    கதைத்திடும் நல்லோர் ஓங்க

மயக்கமே யில்லா நேர்வாய்

    மாக்கவி பரப்பு கின்றார்

தயக்கமே யின்றிச் செல்வேன்

    தண்டமிழ் மறவர் தாமே                              13

 

மண்ணெனப் பயனி லாது

    மரமெனக் கிடந்த வென்னைப்

பொன்னெனப் புதுக்கி வைத்தார்

    பொருளென ஆக்கி வைத்தார்

கண்ணெனக் கால மெல்லாம்

    காலடி கிடந்து வாழ்வேன்

திண்ணமாய்க் கூறு கின்றேன்

    தெளிவெலாம் வரதர் தாமே                        14

 

மனத்தினில் சுரக்கு மூற்றை

    மதுக்கவி யாக்க வந்தேன்

மனக்குறை நேரா வண்ணம்

    மணியென வொளிர வேண்டும்

குணக்கடல் வரதே குன்றே

    குறையெலாம் நீங்க வேண்டும்

உனக்கென உறைவே னூற்றே

    உயிருனுள் கலப்பாய் தாமே                       15

 

அவை வணக்கம்!

 

அன்னையாம் மொழியில் நாளும்

    அழகெனப் பாக்கள் ஓங்க

முன்னிடைப் புலவோ ரெல்லாம்

    முத்தெனும் பனுவல் செய்தார்

எண்ணிலாக் காவி யத்தை

    ஏட்டிலே யேற்றி வைத்தார்

இன்றமிழ் மொழியில் யானும்

    இனிமையைத் தேடி வந்தேன்                     16

 

முத்தெனப் பாக்கள் செய்து

    முன்னவர் பலரி ருக்க

வித்தென யானு மெண்ணி

    விதைக்கவே வந்து விட்டேன்

பித்தென வெண்ணங் கொண்டு

    பிதற்றிடும் நோக்க மில்லை

சத்தெனக் கொடுப்பீர் ஊட்டம்

    சந்தனம் தெளிப்பீர் நன்றே                         17

 

புலியதன் பின்னே சென்று

    புதிரென பிடித்தேன் வாலை

எலியதன் ஓட்டம் போலும்

    எளியவன் ஓடு கின்றேன்

கலியதன் கவலை போக்கிக்

    கவியினில் புதுமை யேற்றி

வலிமையாம் காவி யத்தின்

     வளமையை வேண்டு கின்றேன்                18

 

சொல்லினில் குற்றங் காணின்

    சொல்லுவீ ரினிமை வேண்டி

நல்லெனும் பொருளில் குற்றம்

    நடையினில் தேக்கங் கண்டால்

வில்லெனப் பாய்தல் வேண்டா

    விருப்பென யெடுத்துச் சொல்வீர்

மெல்லவே காவி யத்தின்

     மேன்மையைப் போற்றி வைப்பீர்             19

 

அருந்தமி ழடியோர் போற்றி

    அருமையா முலகோர் போற்றி

விருந்தெனும் விதையோர் போற்றி

    வித்தகம் நிறைப்போர் போற்றி

இருமெனும் தனியோர் போற்றி

    இதழினில் இனிப்போர் போற்றி

கருத்தினில் கவிழ்ப்போர் போற்றி

    கவிதையில் களிப்போர் போற்றி               20

 

      - வெளிச்சம் தொடரும்