'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

கைம்மாறு!

மழையளிக்கும் முகிலினங்கள் பெய்வ தற்கு,

      மாற்றுதவி  எதிர்பார்க்கும் வழக்கம் உண்டோ?

குழையமுதைக் கொட்டுகின்ற நிலவும் அந்தக்

      குளிரொளியை விலைசொல்லி விற்ப  துண்டோ?

விழைவுடனே உலகமெலாம் சுற்றிச்  சுற்றி,

     வெம்மையுடன்  ஒளிபரப்பும் கதிரும் என்றும்

உழைகூலி கேட்பதுண்டோ? உயர்ந்த சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?


பூக்களெலாம் பணம்வாங்கி மலர்வ துண்டோ?

     புவிநம்மை வாடகைதான் கேட்ப துண்டோ?

கூக்குவென வைகறையில் பாடு் தற்குக்

     குயிலினங்கள் பரிசிலெதும்  பெறுவ துண்டோ?

ஏக்கமின்றிக் கரிவளியை மரம்வி ழுங்கி

       எஞ்ஞான்றும்  உயிர்வளர்க்கும் வளிய ளிக்க,

ஊக்குதொகை  கேட்பதுண்டோ? உயர்ந்த  சான்றோர்,

     ஒருநாளும்  கைம்மாறு கருதல் உண்டோ?

                                        -- தில்லைவேந்தன்

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

தவிப்பு

 தவிப்பு


அன்பே உன்னால் ஆசைத் தீயை
அகத்தில் வளர்த்து வாடுகிறேன்-அதை
முன்னே முகத்தில் மலரா வண்ணம்
முடியும் வரைநான் மூடுகிறேன்

புதிதாய் வந்தாய் பூத்துச் சொரிந்தாய்
புதுமை புரிந்தாய் பொன்னிலவே - நீ
எதுவோ செய்தாய் என்னை இழுத்தாய்
இயம்பாய் என்றன் இன்னிசையே

என்றோ ஒருநாள் எங்கோ பார்த்தேன்
எப்படிச் சொல்வேன் கனிமொழியே -அவன்
நன்றே எல்லாம் நாடிய அனைத்தும்
நாளும் நடக்கும் மணிமலரே

வந்தாய் வடிவே வரமே தந்தாய்
வளமாய் வாழ்வோ மென்றிருந்தேன்-
புதுச்
செந்தேன் வடியச் சிலநாள் நின்றாய்
சென்றாய் எங்கோ நின்றிருந்தேன்

உள்ளக் கமலம் உன்னால் தானே
ஊறுந் தேனில் நனைகிறது - அது
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
பாவை உன்னை நினைக்கிறது

தவியாய்த் தவித்துத் தலையும் பழுத்துத்
தனியே கிடந்து மாடுகிறேன் - நீ
தமிழாய் எழுந்து தருவாய் மலர்ந்து
சந்தக் கவிதை பாடுகிறேன்

காசு பணம் எதற்கு?

 காசு பணம் எதற்கு?


*********************

பறவைகளின் ஒற்றுமையைப் பார்க்கும் வேளை

படம்பிடித்து முகநூலில் பதிவர். ஆனால் 

உறவுகளின் கட்டமைப்பை ஒதுக்கி விட்டு

ஒண்டியென வாழ்வதற்கே ஊக்கம் கொள்வர்

சிறகடித்துப் பறப்பதற்கே சிந்தை தன்னில்

சிற்றின்ப வானத்தில் சேர்ந்து கொள்வர்

நிறம்மாறும் பச்சோந்தி நிலையில் நின்று 

நிதம்மாறும் குணமொன்றே  நெஞ்சில் வைப்பர்.

**

சுயநலத்தின் வழிசெல்ல சொகுசு வாழ்க்கை

சுதந்திரமாய் உள்ளதென்று சொல்லு வார்கள்

வியத்தகுவா னந்தபூக்கள் விளைந்து வாசம்

வீசுவதாய் வேறுசொல்லு வார்கள். மண்ணில்

பயமிகுந்த சூழலொன்று பாய்ந்து வந்து

படபடப்பை யூட்டுகின்ற பீதி வந்தால்

தயக்கமற்று உறவுகளைத் தாவிச் சென்று

தஞ்சமென்று கால்வீழ்ந்து தாங்கக் கேட்பர்.


**

விறகாலே எரிந்தோயும் வேட்கை கொண்டு

விளையாட்டாய் வளர்ந்துவிட்ட வெற்றுத் தேகம்

மறவாமல் ஒருநாளில் மண்ணில் சாயும்

மரபோடு இவ்வாழ்க்கை மறைந்து போகும்

திறவாமல் மனக்கதவை திடமாய்ப் பூட்டித்

திரிகின்ற கடும்போக்குத் தீயை மூட்டிப்

பிறவிக்குப் பயனற்றப் பேராய் வாழப் 

பிடிவாத மென்கின்றப் பீடை யேனோ?

**

எரிகின்ற தீபமென இருந்து நாளும்

இருளென்ற பேயகற்றி இடரும் நீக்கித்

திரிந்திட்ட மகிழ்ச்சிக்குத் தீமை செய்து

திக்கெட்டும் பதைபதைப்பைத் தேக்கி வைக்கத்

தெரியாத நோயொன்று தீண்டித் தீண்டித்

தினந்தோரும் பலபேரைத் தீர்க்கும் வாழ்க்கை

கரிகின்ற வேளையிலும் கருணை யற்று

கண்மூடிக் கிடப்பதற்கேன் காசு பணமோ?

**

மெய்யன் நடராஜ் 

வண்ணப்பாடல்

 வண்ணப்பாடல்


கவிதை

**********

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்

தனத்தன தனத்தந் தனதானா



கருத்துட னுருக்குங் கவித்துவ மிருக்குங்

களிப்பது மிகுக்குங் கனவாமே

கழித்தவ ரொதுக்குங் கருப்பொரு ளெடுக்குங்

களத்தினி லொலிக்குங் கனலாமே


குருத்துவ மளிக்குங் குறிப்பொடு சிறக்குங்

குணத்தினை நிறைக்குங் குரலாமே

குழப்படி யொழிக்குங் குலப்பகை யழிக்குங்

கொதிப்பதை நிறுத்துங் கனிவாமே


திருக்குறள் முழக்குந் திருட்டினை விரட்டுந்

திரட்டுவ தனைத்துந் திருவாமே

தெருக்களை யசைக்குந் தருக்களி லிசைக்குந்

திருப்புக ழினிக்குங் கடலாமே


சுருக்கமும் அருத்தந் திகைப்புற விரிக்குஞ்

சுருக்கென வுறைக்குஞ் சுடராமே

துலக்கமு மொளிர்க்குங் கலக்கமு மடக்குஞ்

சுரத்தொடை யணைக்குங் கவியாமே!


செல்லையா வாமதேவன்

கடலிலே செந்தூள்!

விவேக்பாரதி - இலக்கியக் கட்டுரை

மிகவும் சுத்தமான வெண்மை நிறம் கொண்ட பாற்கடல் மீது அன்று திடீரெனச் சிவப்பு நிறத்தில் துகள்கள் பறந்தன. "அவை ஏன் பறந்தன அதுவும் கடலுக்கு நடுவில் திடீரென எப்படிப் பரவின?" என்று அனைவரும் ஐயம் கொள்ளக் கூடும் அதற்கான காரணத்தைக் கவிஞர் பின்னால் இப்படிக் கூறுகின்றார்.

மத்தகத்தைக் கொண்ட ஒரு ஆண் யானையைக் கொன்று அதன் தோலினை உரித்துப் போர்த்திய சிவபெருமான் தன்னுடன் சண்டையிட வந்த அழகில் சிறந்த ஆடவனான மன்மதனோடு போரிட்டு வென்று முப்புரத்தில் அவனை நெற்றிக் கண்ணன் சுடரால் எரித்தான். இந்தச் செய்தி எட்டு திக்கும் பரவி அண்டம் முழுவதும் நிறைந்தது.

இதிகாசங்கள் கூறுவதாவது மன்மதன் நாரயணனின் பிள்ளை ! ஆகையால் தனது மகன் இறந்து போன புத்திர சோகத்தால் அறிவின் வித்தகம் நிறைந்த அந்தப் பேதையான இலக்குமி தேவி தனது களபம் தழுவப் பெற்ற மார்பில் அடித்துக் கொண்டு அழுதிடத் துவங்குகின்றாள் அந்த இடத்தில் காற்றோடு கலந்த அவளது மார்பின் செந்தூரத் துகள்கள் கடலின் மேலே பறந்த செந்தூள் ஆயின. அதுவும் திருமால் துயிலும் பாற்கடல் மேலே பறக்கும் செந்துள்கள் ஆயின.

மாரனைக் கண்ணால் எரித்த செய்தியினைக் கேட்ட அந்தத் திருவானவள் என்னதான் அறிவுடையவளாக இருந்தாலும் புத்திர சோகத்தால் புத்தி இழந்து மாரில் அடித்துக் கொண்டதாய் விளக்கும் இந்தப் பாடல் முழுக்க முழுக்கக் கற்பனைப் பாடலே என்று நினைக்கையில் நெஞ்சம் இனிக்கின்றது.

ஆம்! "கடல் நடுவிலே செந்தூள்" இருப்பதாகப் பாடல் புனைய இயலுமா என்றொரு புலவர் அவரது சவாலுக்கு விடை கொடுக்கக்

காளமேகப் புலவன் கற்பனையில் புனைந்த பாடல் எத்துணை இனிமையுடையதாகத் திகழ்கின்றது.

வெறும் கடல் நடுவில் செந்தூள் என்றொரு தலைப்புக்கு அழகான ஒரு காட்சியைக் கண்முன் விரித்த காளமேகக் கவிஞரின் பாடல் இதோ ! கறபனையில் உதித்த தேன் துளி !

பாடல் :

சுத்தபாற் கடலின் நடுவினில் தூளி

தோன்றிய அதிசயம் அதுகேள்

மத்தகக் கரியை யுரித்ததன் மீது

மதன்பொரு தழிந்திடும் மாற்றம்

வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள்

விழுந்துநொந் தயாந்தழு தேங்கிக்

கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள்

எழுந்தது கலவையின் செந்தூள் ! - காளமேகம

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி

ஆசிரியராகத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு அதற்குள் அடங்கிவிடாமல் ஆன்மீக சொற்பொழிவாளராக, பட்டிமன்ற நடுவராக, தொகுப்பாசிரியராக, வானொலி வருணணையாளராக, எழுத்தாளராக, நனிசிறந்த மரபு கவிஞராக இன்னும் இன்னும் எண்ணற்ற தனித்திறமையின் மூலமாக எட்டுத்திக்கும் புகழ்பல கொட்டிக் குவிக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத மாபெரும் மனிதர்தான், இந்தமாத நமது தமிழ்க்குதிரின் கதாநாயகராக வலம்வரும் ஐயா திருமிகு முனைவர் இரா.மாது அவர்கள்...


இற்றைத் திங்கள் இவரைப்பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.


நெல்வளமும், நீர்வளமும், பல்வளமும் மிகுத்துச் செல்லும் காவிரிக் கரையோரமான திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், பல இளந்தலைமுறையினரைப் பேச்சுக்கலையில் உருவாக்கியவரும் மேனாள் திருச்சி தேசியக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியருமான இரா.இராதகிருஷ்ணன் அவர்களுக்கும் திருமதி இரா.புவனேஸ்வரி அம்மையாருக்கும் தவப்புதல்வராகப் பிறந்தவர்தான் முனைவர்.இரா.மாது அவர்கள்.


இளம் வயதிலேயே கல்வி கேள்வியில் வல்வராய்த் திகழ்ந்த அவர் தமிழின் மீது ஆர்வம்கொண்டு முதுகலைத் தமிழையும் மேலும் இளங்கலை கல்வியியல் (பி.எட்) பட்டங்களைப் பெற்று திருச்சி உருமு தனலட்சுமி வித்யாலயாவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.


மேலும் தனது தீராத கல்வி ஆவலால் "கம்ப ராமாயணத்தில் ஒருமைப்பாடு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் (P.hd) பட்டம் பெற்றுள்ளார்.


பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு, மற்றும் கவியரங்கம் எனத் தமிழகத்தின் பல பக்கங்களுக்கும் செல்வதோடு மட்டுமல்லாமல் இவங்கை, மலேசியா, பிரான்சு, ஆஸ்திரேலியா எனப் பலநாடுகளுக்கும் சென்று வருகின்றார்.


சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி நிகழ்விலும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகதாசி நிகழ்விலும் நேரடி வருணனை செய்தவர்.


மேலும் வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சிறப்புரையாற்றிவரும் செந்தமிழாளர்.


இவரின் படைப்புகள் :


@ உள்ளம் கவர்கள்வன் (தொகுப்பாசிரியர்)
@ மகாமகம் 2016
@ இலங்கை கம்பன் விழா மலர்
@ மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக மலர்
போன்ற நூல்களையும்


மேலும் இதழாசிரியராக "தர்மச்சக்கரம்" என்னும் இதழில் கந்தர் அநுபூதி விளக்கவுரையினை எழுதி வருகின்றார்.


பெற்ற பட்டங்கள் :
திருச்சி தருமையாதீனம் வழங்கிய அருள்நெறி நாவலர் என்ற பட்டமும். அம்பத்தூர் கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சுடர் பட்டமும், திருத்துறை அறநெறி கழகம் வழங்கிய கம்பன்சீர் பரவுவார் பட்டமும், சென்னை கம்பன் கழகம் வழங்கிய கோதாண்டக்கவுண்டர் நினைவும் பரிசும் குறிப்பிடத் தகுந்தவை.. இவற்றைப் போல் இன்னும்பல இலக்கிய விருதுகளையும்
பட்டம் பெற்ற வாழும் கவிஞராக நம்முடன் வலம்வரும் திருமிகு முனைவர் மாது அவர்களுக்கு பார்வதி என்ற மனைவியும் ஸ்ருதகீர்த்தி, ஸ்வாதி என்னும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்..


பல்துறை வித்தகராக வளர்ந்து வரும் முனைவர் மாது அவர்கள் மேலும் மேலும் புகழ்பல குவித்துத் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இளம்தலைமுறைக்கும் தொண்டாற்றிப் பல்லாண்டு பல்லாண்டு வாழ பைந்தமிழ்ச் சோலையின் வாயிலாகவும், தமிழ்க்குதிர் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகின்றோம்..!

தமிழர்களே... தமிழர்களே!

ஆரியத்தை வெல்வதற்கு ஆங்கிலர்க்குத் தாழ்திறந்தாய்
பூரிய இந்தியைப் பூட்டிவிட்டாய்-சீரிய
சிந்தையின்றிச் சீழாந் திராவிடத்தை ஏன்கொண்டாய்
தந்தைதாய் இல்லாச் சருகாநீ-கந்தகமே
ஆயிரம் ஆண்டுகளாய் ஆரியத்தை வாளெடுத்துப்
பாயிரத்தெ றிந்ததெலாம் பைந்தமிழே-வாயிருந்தும்
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தில் சேர்ந்தாயே
தாலிக் குகந்ததுவோ தாய்தமிழா-வேலியென
நின்றாரே மேய்ந்தகதை நீயறிந்தும் வெட்கமின்றிச்
சென்றவர்பால் சேருகின்றாய் தீதிலையோ-கொன்றழிக்கும்
தீப்பகைதாள் தாங்கத் திராவிடத்தார் போனதன்றிக்
காப்பில்லை என்பதனைக் காண்கிலையோ-மூப்பிலா
செந்தமிழச் சொந்தங்களே சேர்வீர் தமிழர்களாய்
எந்நோய்க்கும் இஃதே எதிர்ப்பு
                                                        -ஆதிகவி

நுளம்பு (கொசு) சூழ் உலகு.-

பைந்தமிழ்ப் பாமணி 
 சரஸ்வதி பாஸ்கரன்

உயிர்கொல்லும் நுளம்பழித்து வாழ்வினிலே என்றும்
    உயிரான இளந்தளிரைக் காத்திடுவோம் வாரீர்
பயிராகும் முன்னருமே கருகுகின்ற பாவம்
     பசுந்தளிரைப் பக்குவமாய்ப் பாதுகாத்தல் வேண்டும்
கயிர்கொண்டே இழுக்கின்ற எமனிடமும் நாமும்
     காப்பாற்ற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் நாளும்
உயிரெல்லாம் செத்துப்போய் இவ்வுலகில் என்றும்
     உறவுகளும் ஒப்பாரி வைப்பரிங்கே காண்பீர் !

கொஞ்சுகின்ற பிள்ளைகளின் கதியதுவும் பாரீர்
     கோலமயில் தாயவளின் கண்ணீரால் நாமும்
வஞ்சிக்கப் படுவதுவும் நிலைதானோ ஈங்கே
     வரமான வாழ்க்கையுமே இல்லைதானோ நமக்கே
அஞ்சனாவின் நிலைதன்னை அறிவோமே நாமும்
    அழுதாலும் தொழுதாலும் மீண்டிடுமா வாழ்வு
பஞ்சுபோன்ற பாலகரை இழந்தவர்கள் எல்லாம்
    பரிதவித்தல் பார்த்திருத்தல் கூடிடுமோ சொல்வீர் !

விழிப்படைவீர் எல்லோரும் ஈங்கின்றே கண்டு
    வியனெனவே தளிர்களையும் காப்பாற்ற ஒன்று
வழிதேடி நிலவேம்பின் சாற்றினையும் தேடி
    வாழ்விற்குத் தந்திடுதல் முறைதானே ஓர்க.
விழியாகக் குழந்தைகளைப் பேணிடுதல் வேண்டும்
    விலகாதும் அவர்நலனைக் காத்திடுதல் வேண்டும்
பழியில்லாச் சமுதாயச் செயலன்றோ இஃதும்
    பக்குவத்தின் மேன்மையதைப் புரிவீரே நீங்கள்

உதிர்கின்ற தளிர்களையும் காத்திடுவீர் சேர்ந்தே
     உதிரத்தில் நுளம்பழித்துப் பேணிடுவீர் சேர்ந்தே
கதிராகும் காலத்தில் பயிர்காத்தல் நன்றாம்
    கடமையென்றே எண்ணுதலும் அறிவீரே திண்ணம்
மதியிழந்து தவிக்காதீர் மண்ணுலகில் என்றும்
    மரணங்கள் நோய்நொடியால் வேண்டாமே என்றும்
விதியெனவே எண்ணாதீர் மானிடரே நீங்கள்
    விரைந்திடுவீர் எல்லோரும் நலன்நோக்கி வாழ்க !

வெற்றி - சிறுகதை

மதுரா

வாழ்த்துகள் ...என்ற ஒலி காதையும் மனசையும் நிறைத்துக் கொண்டிருக்க...

பூங்கொத்துகளையும் மாலைகளையும் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் விஜயன்.

இந்த ஆண்டு டர்ன்ஓவர் மட்டும் ஐந்து கோடி... லாபம் ஒரு கோடி..

கம்பெனி தொழிலாளர்கள் குதூகலமாக கொண்டாடிக் கொண்டிருக்க,

என்னோட எல்லா மூவ்மன்ட்டும் வெற்றிதான்.. என் வெற்றிய யாரும் தடைபோட முடியாது"என்று பெருமையாக,

ஆனந்தம் பொங்க தன் மனைவி ஜெயந்தியிடம் சொல்லிகொண்டிருந்தவன்

ஒர் ஓரமாக சோகமாக அமர்ந்திருந்த தன் செல்ல மகள் 'சைந்தவி' யை பார்த்துவிட்டான். பதறிப்போனவனாய் "என்னாச்சு ஜெயந்தி? ஏன் என் பொண்ணு இப்படி இருக்கா? தவித்தான்.

பார்த்துப் பார்த்து வளர்த்த மகள் பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தான். இப்படி வருத்தமா உட்கார்ந்திருக்காளே..

ஜெயந்தி!! என்ன ஆச்சு?

"உங்க பொண்ணாச்சே எல்லாத்திலையும் ஜெயிக்கணும்னு நினைச்சா....மாப்பிளையோட சின்ன வாய்த்தகராறு இப்ப கோவிச்சுக்கிட்டுஇங்க வந்து உட்கார்ந்திருக்கா....சாதாரண விஷயத்தை ஜெயிக்க நினைச்சு வாழ்க்கையை தோத்துடுவாளோனு எனக்கு பயமாயிருக்கு"

ஜெயந்தி ஒரு தாயாய்க் கலங்கி நின்றாள். ஒரு கணம் திகைத்தவன் சட்டென சுதாரித்து

"வாம்மா சைந்தவி உங்க வீட்டுக்கு போகலாம் மாப்பிளைகிட்ட நான் பேசுறேன் என்ன பிரச்சினை என்றாலும் பேசி சரி செய்திடலாம் "என்றான்.

அப்பா சண்டையே உங்க வெற்றியின் பின்னணி பற்றி தான்..நியாயமான வழியில் எப்போதும் ஜெயிக்க முடியாது.உங்கப்பா குறுக்குவழியில ஜெயிக்கிறார் னு சொல்றார் உங்க மாப்பிள்ளை.

ஆமாம் னு சொல்லிடு மா.

அப்ப நான் தோற்று போயிட்டேனா?

"இங்க பாரும்மா வாழ்க்கை வேறு பிசினஸ் வேறு. வாழ்க்கையை வாழ்ந்து ரசிக்கணுமே தவிர போர்க்களமா மாத்திடக்கூடாது.சில நேரங்களில் ஜெயிக்கறதுக்காகவே தோற்கணும்....வாழ்க்கையில வெற்றி பெறுவதற்கு விட்டுக்கொடுத்தல் பொறுமை ங்ற குறுக்குவழியில தான் போகணும். "ஸ்டூப்ஸ் டு கான்கேர் னு சொல்வாங்க புரிஞ்சிப்பேனு நினைக்கிறேன்"

"அப்பா இதுவும் குறுக்குவழி தான்.ஆனா நியாயமான குறுக்குவழி.எங்க வீட்டுக்கு போகலாம் வாங்க" என்று கிளம்பிய மகளை பார்த்ததும் ஜெயந்தி கணவனின் வெற்றி மூவ்மெண்டை புரிந்துகொண்டு பெருமிதத்தோடு சிரித்தாள்




முடிவு - சிறுகதை

பைந்தமிழ்ச் செம்மல் 
நிர்மலா சிவராசசிங்கம்

அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருந்த நந்தினி நேரத்தைப் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள்

ஓ மாலை ஐந்து மணியாகி விட்டதே என்று தனக்குள் முணுத்து முணுத்தாள் வழமையாக நான்கு மணிக்கே வேலை முடித்து வீட்டுக்குச் சென்று விடுவாள் .இன்று முக்கிய வேலை என்றதால் நேரத்தைக் கவனிக்கத் தவறி விட்டாள் .

ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள் .இருபது நிமிட நடை தூரத்தில் தான் அவளது வீடு இருந்தது .ஆனாலும் பிந்திச் சென்று விட்டால் கணவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்று பயத்தில் விரைவாக நடந்து கொண் டு இருந்தாள் .

அவளது எண்ண ஓட்டத்தில் கணவர் சந்துருவின் முகம் தான் நிழலாடிக் கொண்டு இருந்தது .எதற்கு எடுத்தாலும் சந்தேகப் பட்டுக் கொண்டு இருப்பார் .நந்தினி நேர்மையான பெண் .தானுண்டு தன் வேலை என்று இருப்பவள்.அவள் மீது சந்தேகம் கொள்வது சந்துருவின் வழமையான போக்கு . சொற்களால் அவளைக் காயப்படுத்துவதில் சந்துருவுக்கு இன்பம்

விரைவாக நடந்து வந்த நந்தினிக்கு மேல்மூச்சு கீழ் வாங்கியது .வீட்டுக் கதவைத் திறக்கும் போது

.”என்ன தாமதம் யாருடன் கதைத்துக் கொண்டு இருந்தாய”; என்று கேள்வி கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு.அவள் மௌனமாக உள்ளுக்குச் சென்றாள் .

கோபத்துடன் சந்துரு அவள் தலையைப் பிடித்து கீழே தள்ளி விட்டான் .தலையில் பலமான அடி பட்டு விட்டது

அவள் கீழே விழுந்தாள் .சந்துரு கோபம் அடங்காதவனாய் கேவலமாக பேசி விட்டு வெளியே சென்றான் .சில நிமிடங்களில் நந்தினி மெல்ல எழும்பி நீராடி நெற்றியில் ஒத்தடம் மெல்லக் கொடுத்தாள் .

திருமணம் முடித்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது .ஆனால் சந்துரு நந்தினி மீது அன்பு காட்டுவதில்லை .மாறாக இப்படி மிருகத்தனமாகவே நடந்து கொண்டு வருகிறான் .நந்தினி தன்னை விட உயர்ந்த பதவியில் நல்ல சம்பளம் பெறுகிறாள் என்ற காரணமோ தெரியவில்லை .நந்தினி சந்துருவிடம் அன்பாகப் பேசினாலும் அவன் எடுத்து எரிந்து தான் பேசுவான் .குடும்ப உறவிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை

நந்தினிக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை .. ஆத்திரம் அடங்கியதும் சந்துரு வீட்டுக்குத் திரும்பியதும் நந்தினி மெல்ல உணவைப் பரிமாறிய படியே “நான் நாளை என் பெற்றோர் வீட்டுக்குப் போகிறேன் .அங்கிருந்து வேலைக்குச் செல்கிறேன் .நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள”; என்று கூறி விட்டு தன் அறைக்குள் சென்றாள் உள்ளே சென்று பெட்டிக்குள் தன் உடுப்புகளையும் முக்கியமான சில பத்திரங்களையும் எடுத்து வைத்து விட்டு அமைதியாக உறங்கினாள் .இப்போது தான் அவள் மனம் ஆறுதல் அடைந்தது .

மறுநாள் விடிந்ததும் அவள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றாள் .அங்கு அம்மாவுக்கு இரண்டு வருடங்களாக பட்ட கஷ்டங்களை கூறினாள் . நான் இங்கு தான் இனி இருக்கப் போகிறேன் என்று கூறினாள் .அவளின் அம்மா அதிர்ந்து போனாள்

“.ஏன் அம்மா இதை முதலில் சொல்லவில்லை” என்று கூறி வருத்தம் அடைந்தாள் .

“இப்போது இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பல நிலையங்கள் இருக்கின்றன .சொல்லி இருந்தால் அங்கு செல்வதற்கு வழிகள் சொல்லி இருப்பேன் .மற்றவர்கள் எம்மைப் பற்றி என்ன சொல்லுவார்கள் என்று நினைத்தால் வாழ முடியாது .பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கப் பழக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினாள் .இப்போது அமைதியாக இரு முடிவு எடுக்கலாம்” என்றாள்

சந்துருவுக்கு நந்தினி சென்றவுடன் வீடு வெறுமையாக இருப்பதை உணர்ந்தான். தன் தவறுகளை உணர்ந்தான் .ஏன் நான் மிருகத்தனமாக இவ்வளவு காலமும் நடந்தேன் என்று நினைத்தவாறு நந்தினியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினான்

எங்கே சென்றாய் பேரழகே!

நா.பாண்டியராசா

அன்பே உன்னை மறவேனோ
   அமுத மொழிமை மறப்பேனோ
இன்பச் சுவையை இழப்பேனோ
   இனியப் பொழுதை துறப்பனோ
மென்றுத் தின்ற இதழ்களைதான்
   மெல்ல நழுவ விடுவேனோ
உன்னால் இங்கே சாகிறேனே
   உயிரே நேரில் வருவாயா?

பூவைப் போன்ற உடலழகை
   பூட்டி வைத்தால் பயனுண்டோ?
பூவை நானும் தொட்டிடவே
   பார்வை மட்டும் போதிடுமோ?
தேவைத் தீர வழிச்சொன்னால்
   தேளைப் போல் கொட்டுவதேன்?
பாவை உன்னைக் காணத்தானே
   புவியில் ஆனாய் நான்பிறந்தேன்!

கன்னே உன்னால் உருகுகிறேன்
   கண்மணி பூவே வாயேன்டி
உன்றன் நினைவில் வாடுகிறேன்
   உயிலே சேதி சொல்லேன்டி!
என்றும் என்னை ஆள்பவளே
   எங்கே சென்றாய் பேரழகே!
என்று வருவாய் என்னருகில்
   என்றே நானும் ஏங்குகிறேன் !.

பாரதி..சமுதாயச் சாரதி

ஓசூர் மணிமேகலை

அறம்பாட வந்துதித்த ஆதவனாய்க் கண்டோம்!
   அகிலத்தைத் தன்கவியால் மாற்றியநற் தொண்டன்!
இறவாத புகழதுவைப் பெற்றிட்ட பேறே!
   இவ்வுலகில் புதுமைகளைப் புகுத்திட்ட வேரே!
திறமான உணர்வுகளைத் தீரமுடன் நெஞ்சில்
   திடமாகப் பதித்திட்ட வீரகவி நீதான்!
நிறம்மாறும் பூக்களல்ல நீயளித்த பாக்கள்!
   நிலையாக உள்ளத்தில் கனல்மணக்கும் பூக்கள்!

விடுதலையை உன்போலே விளம்பியவர் இல்லை!
   வீரத்தின் விளைநிலத்தில் விதைத்தாயே சொல்லை!
இடுகின்ற ஆணைகளோ இலக்கினதன் எல்லை
   இனபேதம் ஒழித்தாலே அச்சமொன்று மில்லை!
சுடுகின்ற சொல்லாலே சுதந்திரத்தீ மூட்டி
  சுற்றிவரும் பகைவிரட்டி வெற்றியைநீ காட்டி
தொடுத்திட்டக் கவிப்பூக்கள் அனலாக வீசி
  தொடர்ந்திடுமே காலமெல்லாம் வரலாற்றைப் பேசி!

பாரதியாம் தீப்பிழம்பைப் பக்குவமாய் ஓதி
  படைத்திடலாம் புதுமையினை இப்புவியில் யாரும்!
சாரதியாய்ச் சமுதாயத் தேரோட்டி னானே!
   சரித்திரத்தில் வாழ்கின்ற சத்தியமே வாழி!
ஓரணியாய் இணைந்துநாமும் ஒற்றுமையாய் வாழ
   ஒன்றுபடப் பாடியநம் சிந்துகவி வாழ்க!
காரணியாம் என்றுமவன் கருத்தினையே போற்றி
   கனல்பூத்த நெருப்பான கவிதைகளாய் வாழ்வோம்!

ஆசிரியர் பக்கம்

பெருங்கொடுமைக் காலத்தில் நாம்வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமே இப்பெருந்தொற்றை ஒழிக்கும் வழியறியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் இது உண்மைதானா?என்ற ஐயமும், இன்னொருபக்கம் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்து வீழ்வதுமாய் ஒரு குழப்பமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

பன்னாட்டரசுகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்விற்கான தேவைகளையறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. சிலநாடுகளில் தொற்றைக் கண்டறியும் கருவிகளையும், நோய் வந்துவிட்டால் அதன் சிகிச்சை செலவுகளையும் அரசே பார்த்துக் கொள்கிறது.

நம்நாட்டிலோ… சோதனை தொடங்கி நோய் குணமாகி வீட்டிற்கு வருவதற்குள் சில இலட்ச உரூபா செலவழிகின்றன. வசதிபடைத்தவன் செலவழிக்கிறான். இல்லாதவனுடைய நிலை…?

சில கயவர்கள் மருத்துவமனை என்ற பெயரில் கொள்ளையடிப்பதும், பொய்யான சோதனை முடிவுகளைக் காட்டுவதுமாக இப்பெருங்கொடுமையிலும் கொள்ளையடிக்கும் ஈனத்தைச் செய்கின்றனர்.

நம் அரசோ மருந்துக்கும் வரிபோடுகிறது.

நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்….

மக்களை வாழ விடுங்கள்

அன்புடன்
பாவலர் மா.வரதராசன்.

தமிழ்க்குதிர் - விடை இதழ் - மின்னிதழ் வடிவில்


https://drive.google.com/file/d/1yXydc2NXwhwR4BGjMmGbuQX7GD0kl8GS/view?usp=sharing

தமிழ்க்குதிர் - விடை இதழ்  - முன்னட்டை