'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2021

அம்மா! மாறிலாப்பத்து!

 அம்மா! மாறிலாப்பத்து!

                           கவிஞர் சுந்தரராசன்

பிண்டமாய்ப் போந்துன் னுள்ளே

  பிரண்டுகால் நீட்டி எத்தி

உண்டியின் சத்தை எல்லாம்

  உறிஞ்சியென் வளர்ச்சி யாலே

மண்டிடும் மசக்கை வாந்தி

  மற்றுபற் கோடித் துன்பும்

கொண்டனை தாயே நீசன்

  கொடுத்திடக் கைம்மா றுண்டோ?


பத்திரண் டென்பு நையும்

  பாடெலாம் பட்டுப் பெற்றுக்

கத்திடும் போதி லெல்லாம்

  கண்விழித் திருந்து பார்த்து

நித்தமும் என்னைக் காத்த

  நிமலையே! பிள்ளை ஈடாய்

எத்திறம் மாறு செய்ய?

  ஏதுமீ டிலையே தாயே!


உன்னுடை உதிரந் தன்னை

  உவந்திவன் பாலாய்ப் பெற்றேன்!

என்பசி தூக்க மென்றே

  எனக்கென வாழ்ந்தாய் நீயே!

தன்னல மில்லா உன்றன்

  தகைமையின் எதிரே வைக்க

என்னிவன் செய்வேன் தாயே!

  ஏதுமே இலையே மாறே!


அகஞ்சுழித் தழுதே னானால்

  ஆதுரங் காட்டிச் சற்றும்

முகஞ்சுழிக் காதென் தூய்மை

  முந்தியே பேணிச் சுற்றுஞ்

சகஞ்சுழித் தோடிக் காக்கும்

  சலமதன் கருணை காட்டிச்

சுகஞ்சுழித் தாடச் செய்தாய்!

  சொல்லிவன் மாறென் செய்வேன்? 


கலைகளைக் கற்றுத் தந்து

  கவிதையில் ஆர்வ மூட்டி

பலவகைப் போட்டி யெல்லாம்

  பங்குறச் செய்து வெற்றி

நலமெனைச் சேரப் பின்னே

  நாளெலா முழைத்தற் கீடொன்

றிலையெனும் போதிற் பிள்ளை

  என்செயக் கூடு மம்மே!


உழைப்பிலாப் போழ்தை உன்னில்

  ஒருகணம் கண்டேன் இல்லை!

இழப்பெது நேர்ந்த போதும்

  இருக்கிறேன் அன்னை என்றே

முழக்கிநீ முன்னே நின்று

  முழுமையுங் காத்தாய் அவ்வப்

பழுக்கிலா அன்புக் கீடாய்

  அம்மையே மாறென் செய்வேன்?

 

மெய்யெலாஞ் சோர என்றன்

  மேன்மையே கருத்திற் கொண்டு

கையெலாங் காப்பு கைக்கக்

  கைத்தொழில் செய்தே பாரில்

உய்யலாங் கவலை இன்றி

  உயரலாம் என்றே சொன்ன

தையலா முனக்கோர் மாறு

  தருக்கனுஞ் செய்வ தென்னே? 


கேணிவாழ் வான்மேல் பத்திக்

  கிறுக்கிலே பாடல் யாக்கும்

வாணிவாழ்ந் திருந்த நாவால்

  வாஞ்சையாய் என்னைத் தூண்டிக்

காணிவாழ் வேண்டல் செய்தோன்

  காலடி தொடரச் செய்தாய்!

நாணிலேன் கைம்மா றென்றே

  நடத்தவொன் றிலையே தாயே!


ஆழியாய்க் கடைந்தே உன்னை

  அமுதெனக் கீந்தாய் அம்மா!

தோழியாய்த் தோளுந் தந்து

  துயர்துடைத் திருந்தாய் அம்மா! 

நாழிகைப் போழ்தும் என்றன்

  நலம்மறந் திலையே அம்மா!

ஏழையேன் இவைக்கீ டாக

  என்னகைம் மாறு செய்வேன்? 


மாறுதல் ஒன்றே என்றும்

  மாறுதல் காணா தென்னும்

மாறிலா நீதி யாலே

  மாறிநீ வடிவு கொண்டு

மாறுதல் இல்லா அன்பை

  மழையெனப் பொழிவாய்! பிள்ளை

மாறிலேன் ஏதும் செய்ய!

  மறக்கிலேன் வாழு மட்டே

No comments:

Post a Comment