'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label எழுத்தால் எழுக. Show all posts
Showing posts with label எழுத்தால் எழுக. Show all posts

Oct 17, 2020

எழுத்தால் எழுக

பைந்தமிழ்ச்சோலை ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் காணொலி வழியாய் நடைபெற்ற கவியரங்கக் கவிதைகள்

                                                       தலைப்பு: எழுத்தால் எழுக

         தலைமை: பைந்தமிழ்ச் சுடர் நடராசன் பாலசுப்பிரமணியன்

கவியரங்கத் தலைமைக் கவி

 தமிழ் வாழ்த்து

 மூவின எழுத்தில் முகிழ்த்தொரு பெயரில்

        ஆவியை உருக்கும் அற்புதத் தமிழை

நாவினில் ஏத்தி நவிலுவார் உள்ளம்

        நல்லமு(து) அருந்தித் தழைத்திடு மன்றே!

காவிரி பாயும் கரையதன் ஊரினில்

        கல்வியிற் சிறந்தோன் பிறந்தநன் மரபினில்

பாவலன் எனையும் பிறந்திடச் செய்த

        பைந்தமிழ் மொழியாள் பதம்பணி வேனே!!

 

அவை வாழ்த்து

 

மரபினைக் காக்கும் மாண்புறு அவையாம்!

        மண்ணக மீதினில் மகிழ்வுறு அவையாம்!

கரந்துறை யாத கண்ணிய அவையாம்!

        கவிஞர்கள் வாழும் கவினுறு அவையாம்!

அரசவை இதுவென அமைந்தநல் அவையாம்!

        அன்னை-இன் தமிழைக் காத்திடும் அவையாம்!

கரவொலி எழுப்பிக் கருத்தினை வளர்க்கும்

        கலைமகள் அவையெனக் கருதிட லாமே!

 

தலைவர் வாழ்த்து

 

பெற்ற தாயினும் பேரன்(பு) உடையார்!

     பெரிதென வணங்கும் மாட்சிமை உடையார்!

கற்றவை யாவையும் கரந்துவைக் காமல்

     கவிஞர்கள் பலர்க்கும் விருந்தெனப் படைப்பார்!

மற்றவர் மகிழ்வில் மகிழ்ந்திடும் பெரியார்!

     மாசறு மனத்தார்! மலையெனத் திடத்தார்!

நற்றமிழ் ஆசான் பாவலர் தனையே

     நாமொழி உளத்தால் கரங்குவிப் போமே!!

 

எழுத்தால் எழுக

 

ஒருதுளி நீரில் உயிரெனப் பிறந்தோம்

ஒருபது மாதம் சிறையினில் கிடந்தோம்

கருமுதிர்ந் தோர்நாள் பிறப்பினை அடைந்தோம்

உருவது வளர்ந்தே உயர்வதும் அடைந்தோம்

ஒற்றை எழுத்தால் ஒலிகளை எழுப்பி

அன்னையின் தந்தையின் தாத்தனின் பாட்டியின்

வெற்றிப் பரிசென முத்தங்கள் பெற்றோம்

பெற்றவர் மகிழ மழலையில் உதிர்த்தோம்

கற்றலும் இல்லை கற்பனை இல்லை

காண்ப(து) ஒன்றே கடலென நினைத்தோம்           10

 

உற்றவோர் வயதில் பள்ளியில் புகுந்தோம்

வெற்றொலி எழுத்தே விரிந்தன பலவாய்

நற்றமிழ் மொழியின் நாற்றெது வுணர்ந்தே

உயிரை மெய்யை உறவதில் பிறந்த

உயிர்மெய் எழுத்தை

எழுத்தில் இணைந்த பல்வகைச் சொல்லைப்

பழுதற அறிந்தோம் படமென விரிந்தோம்

நாட்கள் ஓடின நண்பர்கள் கூடினர்

கேட்கவும் பார்க்கவும் கேளிரும் ஆயினர்

எடுக்கவும் கொடுக்கவும் எண்ணங்கள் விரிந்தன       20

செந்தமிழ் மொழியின் சந்த வகைவரை

முந்தைத் தமிழ்தனில்  முழக்கிட அறிந்தோம்

பைந்தமிழ்ச் சோலையில் பார்த்தோம் பலரை

ஐந்தெனும்  இலக்கணம் அனைத்திலும் இனிதாய்

யாப்பினை அறிந்தே யாவரும் உயர்ந்தோம்

பாக்களை இயற்றும் பாவலர் ஆகிப்

பட்டமும் விருதும் விளங்கிட வளர்ந்தோம்

ஏற்றமும் எழுச்சியும் எத்துணை யாயினும்

தோற்றுவாய்  என்பதென்?  ஒற்றை எழுத்தே

எத்துணை நீண்ட பயணங்கள் ஆயினும்                 30

 

அத்துணை யாவும் ஓரடித் தொடக்கம்

வித்தகர் மொழிவதும் விரைந்தவர் நுவல்வதும்

தித்திக்கும் ஓரெழுத்  தொருவிதை  யென்பேன்!

காவியம் படைப்போம் கவிதைகள் படைப்போம்

காலத்தை வென்றிடும் கருத்துரை வழங்குவோம்

பாவலர் தொடங்கிய பைந்தமிழ்ச் சோலையில்

பாவகை பலவும் பழுதற உணர்ந்தோம்

உணர்ந்ததை எல்லாம் உவப்புடன் அளிக்க

வணங்கியே அழைப்பேன் வள்ளல்காள்.. வருக!

கோடை இடியெனக் குளிரென  மழையென           40

 

வாடைக் காற்றினில் வளரும் சுகமெனப்

பாடும் பாட்டினில் விளையும் பயனென

“எழுத்தால் எழுக”  என்றுநீர் உரைத்தே

எழுச்சியைத் தருக!  ஏற்றத்தைத் தருக!

வளர்ச்சியைத் தருக! வாழ்வினை உயர்த்துக!!

எழுத்தால் எழுக

 1.       கவிமாமணி சேலம்பாலன்

 தமிழ்த்தாய் வணக்கம்

என்னை இயக்கும் இனிமைத் தமிழே!நீ

என்னை வளமாய் இயக்கு

 

                       மரபு மாமணி மா. வரதராசனார்க்கு வணக்கம்

பல்வகை அரங்கம் பாராட்டும் வண்ணம்

நல்முறை அமைத்துள நல்லா சானே

மரபு மாமணி வரத ராசரே!

உரமே நீங்கள்! உந்தென் வணக்கம்!


சோலைப் பாவலர்களுக்கு

சோலை விழாவைச் சுறுசுறுப் பாக

ஆலை போல ஆக்கிடும் அனைத்துப்

பாவல ருக்கும் பண்புடன் செந்தமிழ்க்

காவலன் பாலனின் சீர்தமிழ் வணக்கம்!


உடன் பாடுவோர்க்கு

எனக்குப்பின் கவிதைகளை இனிதாகக் கேட்போரின்

மனத்திற்கு மகிழ்வுதனை மட்டின்றி வழங்கவுள்ள

பைந்தமிழ்நல் சோலைபுகழ் பாட்டாளிப் பாவலர்காள் !

செந்தமிழ்த்தே னருவிசேலம் பாலனின் வணக்கங்கள்!

 

அவையோருக்கு

இணையத்தில் ஆர்வமுடன் இணைந்துகவி கேட்கஉள

இணையில்லாச் சுவைஞர்காள்! எங்கெங்கோ இருந்தாலும்

தமிழார்வம் கொண்டவர்காள் தன்னேரில் லாதவர்காள்

அமிழ்துதமிழ் நல்வணக்கம் அனைவர்க்கும்! ஏற்றிடுவீர்!

 

எழுத்தால் எழுதுக

எழுத்தாலே எழுகவென இனியதொரு பொருளை

எழுத்தாலே தந்திட்டார் எழுத்துத்தரும் அருளை

எழுத்தினது பெருமைகளை எல்லோரும் அறிவர்

எழுத்தினையே அறியாதார் எப்பொழுதும் சிறியார்

எழுத்தினையே கற்றுத்தரும் ஆசானோ நல்லோர்!

எழுத்தினிலே பதித்திடலாம் இறைவனுக்கு மேலோர்

எழுத்தினையே கற்றவர்கள் எப்போதும் கூறுவார்

எழுத்தினையே கற்பிப்போர் அறப்பணியின் நாயகர்

எழுத்துடனே எண்ணும்தான் கண்ணென்பர் ஆள்வர்!

எழுத்தறிய முடியாதார் எப்போதும் வீழ்வர்!                           10

 

எழுத்தறிந்தே கவிஎழுதும் எல்லோரும் சிறந்தார்!

எழுத்தறிந்தும் கவிபடிக்கார் இன்பம்பல துறந்தார்!

எழுத்தொன்றை அச்சிட்டால் என்றென்றும் மாறார்!

எழுத்தொன்றை எழுதிப்பின் மறுப்பவர்கள் தேறார்!

எழுத்திலையேல் இக்காலம், எதிர்காலம் இல்லை!

எழுத்தறியா திருப்பவரோ காண்பார்பல தொல்லை!

எழுத்துத்தான் எழுச்சிகொள எந்நாளும் செய்யும் !

எழுத்துத்தான் கதை,கவிதை, கட்டுரைகள் நெய்யும் !

எழுத்திலையேல் முன்னுக்குப் பின்எதுவும்நடக்கும் !

எழுத்திருந்தால் எப்போதும் எவரையுமே அடக்கும்!                     20

 

எழுத்தேதான் கற்றறிந்தால் பண்புநலம் பெருக்கும்!

 எடுத்தறிந்தோர் குடும்பமெனில் மகிழ்ச்சியதே இருக்கும் !

எழுத்துத்தான் செய்திகளை எடுத்துச்செலும் எங்கும்!

எழுத்தறிந்தால் நாகரிகம், சமத்துவமே பொங்கும்!

எழுத்தொன்றே எவரையுமே ஏற்றிவைக்கும் ஏணி!

எழுத்துத்தான் பிறவிக்கடல் கடக்கச்செயும் தோணி!

எழுத்துத்தான் எதனையுமே பதிவுசெயும் ஆணி!

எழுத்துத்தான் கவிஞரையே மதிப்புணர்த்தும் பேணி !

எழுத்தறிந்தோர் எல்லோர்க்கும் எழுத்தேதான் தேனி!

எழுத்தறிந்தோர் நாவினிலே வீற்றிருப்பாள் வாணி !                    30

 

எழுத்தறிந்தோர் மகிழ்வுக்கே இணையில்லை சீனி!

எழுத்தின்றி அரசியலார் ஏதேதோ வாக்கை

எழுத்தறியார் என்றாலும் ஏமாறும் போக்கை

எழுத்தறிந்தோர் சொலக்கேட்டு எடுத்தியம்பி வெற்றி

எழுச்சியினைக் காண்கின்றார் என்பதுவே வெற்றி

எழுத்தறிந்தோர் அனைவருமே எக்கேடும் மாற்ற

எழுத்தாலே தீர்வுகளை எல்லோரும் போற்ற

எழுதிட்டால், இருப்பவர்கள் ஏற்றிட்டால் நாட்டில்

எழுத்தறிந்தோர் ஆண்டிட்டால் மகிழ்வுவரும் வீட்டில்!

எழுத்தறிந்தோர் அறியாதார் இருப்பதனால் தானே                      40

 

எழுத்தறிந்தோர் தன்படைப்பில் சாடுகிறார் வீணே!

எழுத்துக்கே உளபெருமை எடுத்துரைத்தேன் கேட்டீர்!

எழுத்ததனை வேண்டாவென எவரும்சொல மாட்டார் !

எழுத்தறிந்த நல்லறிஞர் நாட்டிற்கு நன்மை

எழுத்தாலே வருமென்று சொல்வதெல்லாம் உண்மை!

எழுத்திலுள்ள வழிமுறைபோல் எல்லோரும் ஒன்றி  

எழுத்ததுபோல் எழுந்திட்டால் வென்றிடுவோம் நன்றி!!                  47

எழுத்தால் எழுக

 2.       பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

 

என்னால் என்ன செய்ய வியலும்

    என்றே எண்ணிக் கலங்காதே !

பின்னால் தூற்றும் கயவர் பேச்சைப்

    பெரிதாய் மனத்தில் பதிக்காதே !

இன்னா செய்தோர் நாணும் வண்ணம்

    என்றும் நன்மை செய்திடுவாய்

என்றோ ஒருநாள் மாற்றம் நிகழும்

     எழுக எழுத்தால் முனைப்புடனே !!          1

 

 சுழன்று பாயும் எழுது கோலால்

     துரத்தி அடிப்பாய் கொடுமைகளை !

கிழக்கு வெளுக்கும் விடியல் மலரும்

       கேடு விலகும் பனிபோலே !

 உழுத நிலத்தில் விளைச்சல் காண

     உள்ளம் தானும் விழையாதா ?

எழுச்சி பிறக்கும் நலமே நடக்கும்

     எழுத்தால் எழுக தமிழ்மகனே !!                2

 

முன்னோர் எழுதி வைத்த தெல்லாம்

    முனைந்து படித்தால் தெளிந்திடலாம் !

குன்றாய் நிமிர்ந்து வாழும் வழியைக்

    குறளின் நெறியால் அறிந்திடலாம் !

கன்னல் தமிழில் கற்ற தெல்லாம்

    கனிவாய்ப் பிறர்க்கும் சொல்லிடலாம் !

இன்னும்  ஆய்ந்து வீறு கொண்டே

     எழுக எழுத்தால் துடிப்புடனே !!                3

 

அடக்கி நசுக்கும் தலைமை எதிர்த்தே

      அச்ச மின்றிப் போராடு !

மடமை என்னும் மயக்கத் தோடு

    மழுங்கிக் கிடக்கக் கூடாது !

தடுக்கி விழலாம் தடைகள் வரலாம்

    தாண்டி யோடப்  பழகிவிடு !

எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க

     எழுத்தால் எழுக ஊற்றாக !!                      4

 

 ஏரைப் போற்ற உலகே செழிக்கும்

      இளைஞர் கட்கும் புரியவைப்பாய் !

பேரும் புகழும் பணத்தால் வாரா

   பித்தம் தன்னைத் தெளியவைப்பாய்!

வீரத் தோடு விவேகம் இருந்தால்

        வெற்றி என்றும் வசமென்றே

ஈர மனத்தோ டழுத்திச் சொல்லும்

     எழுத்தால் எழுக துணிவுடனே !!               5

 

பெண்கள் நாட்டின் கண்கள் என்று

     பேணிக் காக்கக் கற்பிப்பாய் !

பண்டை நாடாம் நம்தாய் நாட்டின்

     பண்பாட் டைநீ நேசிப்பாய்!

வண்ணங் கொஞ்சும் கன்னித் தமிழை

    வரமாய்க் கருதி  சுவாசிப்பாய்!

எண்ணிப் பார்த்து நெஞ்சம் மலர்ந்தே

      எழுக எழுத்துச்  சீரோடே !!                       6

 

தமிழன் பெருமை தமிழால் பேசித்

      தரணிக் கெல்லாம் செப்பிடுவாய் !

தமிழே முதலாம் தமிழே அமுதாம்

     தகைமை தன்னை எடுத்துரைப்பாய் !

தமிழின் இளமை தமிழின் வளமை

       தப்பா மல்நீ உணர்த்திடுவாய் !

 இமைபோல் காக்க எழுத்தால் எழுந்தே

      இமய மெட்டச் செய்திடுவாய் !!               7

 

பொய்யும் புரட்டும் களவும் கொலையும்

      பொறாமைக் குணமும் இங்கெதற்கு ?

செய்யும் தொழிலை இறையாய் மதித்துச்

     சிறப்பாய் உலகில் செயல்படவே

உய்யும் வழியை உயர்வாய்க் காட்டி

      உரக்கச் சொல்ல எழுச்சியுடன்

எய்த அம்பாய்க் கொடுமை துளைக்க

     எழுத்தால் எழுக கவிமகனே !!                  8

 

 கூர்மை வேலும் வாளும் எதற்கு?

    கோலுன் கையில் இருக்கையிலே !

நேர்மைத்  திறத்தை நிறைவாய்ப் பெற்று

    நெஞ்சில் உரத்தை வளர்த்திடவே

கார்மே கம்போல் பொழிந்து கருத்தால்

    கனலாய்த் தெறித்து விழிப்பூட்டி

யார்க்கும் நலமே விளையும் விதத்தில்

    எழுத்தால் எழுக திருமகனே !!                   9

எழுத்தால் எழுக

3.       பைந்தமிழ்ச்செம்மல் வள்ளி முத்து

 

சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற

சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!

ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்

அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!

பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும்

  பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!

நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்

     நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!                1

 

உழைக்காமல் தொந்திதனை வளர்க்கின்ற உலுத்தர்களின்

    சுரண்டலினை உலகறியச் செய்க..!

பிழைப்பொன்றை உள்நிறுத்தி மதக்கலகம் செய்கின்ற

    பேதையரை அறிவொளியால் கொய்க..!

மழைக்காளான் போல்தோன்றி அறிவுமங்கச் செய்கின்ற

   மடத்தனத்தை எதிர்த்துக்கவி பெய்க..!

அழைக்காமல் ஏழைமக்கள் அடிவயிறும் நிரப்புகின்ற

    ஆட்சியாளர் கரம்பற்றி உய்க..!                 2

 

அடிமைகண்டு பொங்குகின்ற ஆற்றல்சேர் புலவோரை

     அன்போடு கரம்பற்றித் தொழுக..!

இடியனவே முழங்குகின்ற எளியவரின் துயர்துடைக்கும்

    ஏற்றமிகு கவிபடைக்க வருக

பொடிப்பொடியாய் உடையட்டும் சாதிமத அடக்குமுறை

    புவியெங்கும் சமத்துவமே பெருகப்

படிப்படியாய் உயரவேண்டும் பண்பொழுக்கம் மலரவேண்டும்

     படைப்பாளா..! எழுத்தாலே எழுக.!           3

 

கீழென்றும் மேலென்றும் கீழ்த்தனங்கள் செய்கின்ற

     கேடுகெட்ட பிறவிகளை வெல்க

சீழென்று புண்வடிக்கும் சீத்தையரை வேரறுக்கச்

   செம்மாந்த கவிநடத்திச் செல்க..!

வாழ்வொன்றாம் வையத்தில் வந்துதித்த பயன்பெறவே

   வற்றாத கவியூற்றைத் தருக..!

தாழ்வுற்றோர் சமத்துவத்தில் தலைநிமிரச் செய்கின்ற

  தகுதிமிக்க எழுத்தாலே எழுக..!                   4

எழுத்தால் எழுக

 4.       பைந்தமிழ்ச் செம்மல் சாமி சுரேஷ்

 

நீர்வளமும் நெல்வளமும் நிறைந்த நாடாம்

    நீங்காத புகழ்வெளிச்சம் படைத்த நாடாம்

தேர்வளமும் திறல்வளமும் மிகுந்த நாடாம்

    தேவைக்கு மேல்பொருளை அடைந்த நாடாம்

ஊர்வளத்தைப் பிறநாட்டார் காணும் முன்னே

    உலகமெலாம் கடல்வளத்தை வளைத்த நாடாம்

கார்வளமும் நாணுகின்ற இலக்கி யங்கள்

    கடலளவு கொண்டதெங்கள் தமிழர் நாடாம்        1

 

தமிழர்க்குத் தமிழன்றி முகமே இல்லை

    தனித்தனியாய் அவர்களுக்குள் பேத மில்லை

அமிழ்தான மொழிவளத்தைப் பேணு தற்காய்

    அவன்போல உயிரீந்தார் யாரு மில்லை

சிமிழ்க்கின்ற நேரத்தில் உயிரை வாங்கும்

    சிறுமதியார் வளைக்கின்றார்; கால மில்லை

கமழ்கின்ற தமிழோடு காரஞ் சேர்த்துக்

    கடுகிவினை புரிவார்க்குத் தோல்வி இல்லை       2

 

'நீட்'டென்ற கொடுங்கரத்தை நீட்டி விட்டார்

    நிதம்நமது பிள்ளைகளை இழந்து நின்றோம்

'வாட்'வரியும் பிறவரியும் வழித்தெ டுத்தார்

    வாணிபத்தைப் பிறரிடத்தில் இழந்து நின்றோம்

மாட்டனைய மூளைகொண்ட மடையன் தந்த

    மறுமலர்ச்சிக் குலக்கல்வி ஏற்றுக் கொண்டால்

தேட்டமுடன் செப்புகின்றேன் முன்னோர் செய்த

    தெருவோர வேலையில்தாம் தேங்கி நிற்போம்  3

     

படித்ததமிழ் இளையோர்கள் கோடி பேர்கள்

    பணிவேண்டிப் பதிந்துவிட்டுக் காத்தி ருக்கக்

குடிப்பதற்கே முன்னுரிமை வழங்கு கின்றார்

    குடிகெடுக்கும் செயல்முனைந்து செதுக்கு கின்றார்

நடிக்கவரும் தொழிலோரும் நடுங்கும் வண்ணம்

    நாச்சுழற்றிப் பலகாலம்  ஆளு கின்றார்

அடித்தவடி மேற்காயம் ஆறும் முன்னே

    அடிநாக்கில் தேள்வைத்துக் கொட்டு கின்றார்    4

 

தெருவோரம் திரிகின்ற நாய்கள் கூடத்

    தெளிவான இடப்பற்றைக் கொண்டி ருக்கும்

வருவோர்கள் போவோர்கள் எல்லாம் வாழ

    வக்கற்று நிற்குதடா தமிழக் கூட்டம்

கருவோடு திருவான தமிழர் நாமும்

    களமாடப் போமுன்னர் கருத்தை எல்லாம்

செருவோடே எழுத்துலகில் செதுக்கி வைப்போம்

    தெருளற்ற பயணத்தைத் தொடங்கி வைப்போம்

              5

முன்போல இன்றில்லை முகநூல் போல

    முழுநேரம் பயன்பாட்டுத் தளங்கள் உண்டு

கண்போல எண்ணெழுத்தாம் கவனம் கொண்டு

    கருத்துகளைத் தரவோடு சேர்த்து வைத்துப்

பொன்போல எதிர்காலப் பிள்ளைக் கையில்

    பொறுப்புடனே தந்துவிட்டு நகர்ந்து செல்வோம்

என்போல நீங்களில்லை எல்லாம் வல்ல

   எழுத்தாலே எழுந்தவர்தாம் அறிவேன் நானே       6

எழுத்தால் எழுக

 5.       பைந்தமிழ்ப்பாமணி சுந்தர ராசன்

 

விழுந்தால் சிரிக்க விரைபவர் உண்டு

    விளித்தால் உதவ எவருமிலை!

அழுதால் ரசிக்க அனைவரும் உண்டு

    அணைத்தே துடைப்பார் ஒருவரிலை!

கொழுத்தார் தனையே கொஞ்சுவர் கோடி!

    இளைத்தார் தனக்கே யாருமிலை!

எழுத்தால் எழுக! தமிழ!வு னக்கே

    இணையென் பாரிப் பாரிலிலை!              1

 

குறளாய் வந்தே கொண்டமெய் நீட்டம்

    திருமாற் போலே திருக்குறளும்!

அறமே உரைத்தும் அழிவதும் பாடும்

    அரனைப் போலே அணிசிலம்பும்

சிறப்பாய்ப் பன்னீ ராயிரம் படைத்தே

   சிரம்நான் கனைநேர் கம்பனும்போல்

திறமாம் எழுத்தால் திகழுக மீண்டும்

    தேடிப் பணியும் வையமெல்லாம்!             2

 

பார திபோலே பாடிடப் பழகு!

    பரவிப் போற்றப் பார்விரையும்!

பார திதாசன்!  சீற்றமும் ஏற்று!

    பரவ சமெய்தி யதுமயங்கும்!

நேர துகண்ணன் தாசனென் றானால்

    நினைந்து நினைந்து நிதம்வியக்கும்!

சீருன் எழுத்தில் சிறந்திடும் என்றால்

    சகமுன் சொத்தாய் ஆகிவிடும்!                 3

 

புழுவாய் நெளிவார் புறமொரு தண்டைப்

    புகுத்த உடனே புறப்படுக!

தழலாய் அறத்தீ வளர்த்தொரு வேள்வி

    தான்செய் தாகு தியாகிடுக!

விழலே வாழ்வென் றிருப்பவர் எல்லாம்

    வீறோ டெழவே கோலையெடு!

எழுத்தால் நீயும் எழுகையில் அதனை

    எல்லார்க் கும்மென் றாக்கிவிடு!                               4

 

எவ்வா றெழுத? என்பனை யோ?வா

    இணையமி ருக்கு(து) ஓர்சோலை!

கொவ்வைத் தமிழின் பாவகை எல்லாம்

    குழவிக் கேற்றிச் சொல்வதுபோல்

செய்வார் எங்கள் பாவலர் ஆசான்

    சேர்ந்தே இழுப்போம் தமிழ்த்தேரை!

உய்வோம் அதனால் உயர்வுறு வோம்நம் 

    உள்ளம் வெல்லம் ஆகிடுமால்…                  5