3. பைந்தமிழ்ச்செம்மல் வள்ளி முத்து
சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற 
சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!
ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்
அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!
பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும் 
  பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!
நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்
     நீயதற்குப் புரட்சிக்கவி
தருக...!                1
உழைக்காமல் தொந்திதனை வளர்க்கின்ற உலுத்தர்களின் 
    சுரண்டலினை உலகறியச் செய்க..!
பிழைப்பொன்றை உள்நிறுத்தி மதக்கலகம் செய்கின்ற 
    பேதையரை அறிவொளியால் கொய்க..!
மழைக்காளான் போல்தோன்றி அறிவுமங்கச் செய்கின்ற
   மடத்தனத்தை எதிர்த்துக்கவி
பெய்க..!
அழைக்காமல் ஏழைமக்கள் அடிவயிறும் நிரப்புகின்ற
    ஆட்சியாளர் கரம்பற்றி உய்க..!                 2
அடிமைகண்டு பொங்குகின்ற ஆற்றல்சேர் புலவோரை
     அன்போடு கரம்பற்றித் தொழுக..!
இடியனவே முழங்குகின்ற எளியவரின் துயர்துடைக்கும்
    ஏற்றமிகு கவிபடைக்க வருக
பொடிப்பொடியாய் உடையட்டும் சாதிமத அடக்குமுறை
    புவியெங்கும் சமத்துவமே
பெருகப்
படிப்படியாய் உயரவேண்டும் பண்பொழுக்கம் மலரவேண்டும்
     படைப்பாளா..! எழுத்தாலே
எழுக.!           3
கீழென்றும் மேலென்றும் கீழ்த்தனங்கள் செய்கின்ற
     கேடுகெட்ட பிறவிகளை வெல்க
சீழென்று புண்வடிக்கும் சீத்தையரை வேரறுக்கச்
   செம்மாந்த கவிநடத்திச் செல்க..!
வாழ்வொன்றாம் வையத்தில் வந்துதித்த பயன்பெறவே
   வற்றாத கவியூற்றைத் தருக..!
தாழ்வுற்றோர் சமத்துவத்தில் தலைநிமிரச் செய்கின்ற
  தகுதிமிக்க எழுத்தாலே எழுக..!                   4
No comments:
Post a Comment