பைந்தமிழ்ச் செம்மல் வ - க -பரமநாதன்
13-09-2020 அன்று நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை முகநூல்
குழுவின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் வாசிக்கப்பட்ட, பைந்தமிழ்ச்சோலையின்
நோக்கம், பணிகள்
குறித்த ஆண்டறிக்கை:
பைந்தமிழ்ச்சோலை உறவுகள் அனைவரையும் நுணுகி (Zoom) செயலி மூலமாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். 2019-2020ஆம் ஆண்டிற்கான அறிக்கை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி டைகின்றேன்.
கொரோனாப் பேரிடர் காரணமாக ஆண்டுவிழா இணைய வழியில் பாவலர் பா.நடராசன் அவர்களின் சிறப்பான பங்களிப்போடு முன்னெடுக்கப்படுகின்றது. இவ்விழாவில் முதல்முறையாக அரங்கேற்றமும் வாழ்த்தரங்கம், ஆசுகவியரங்கம், கவியரங்கம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
பைந்தமிழ்ச்சோலை (23-08-2015) தொடங்கப்பட்டு இன்றுவரை முகநூல்
வரலாற்றில் சாதனை புரிந்து வருகிறது எனச் சொன்னால் அது மிகையாகாது.
மரபு கவிதையின்மேல் காதல் கொண்ட அனைவருக்குமான இயங்குதளமாக இன்றுவரை
பைந்தமிழ்ச்சோலை இயங்கி வருவதோடு, என்றும் எழில் குன்றாது
வீரியமாய் இயங்கும் என்பதிலும் எந்த ஐயப்பாடுமில்லை. நிறுவுநர் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் மூலமாகப் பல
மரபு கவிஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். இன்னும்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் புதியவர்களுக்கு ஆரம்பப் பயிற்சி அளிக்கப்பட்டுப் பல பாவகைகள் கற்பிக்கப்படுகின்றன. வாரம்தோறும் பங்கு பற்றுவோர், பயிற்சியில் பதியும் பாடல்களில் காணப்படும் இலக்கணப் பிழைகளை அடுத்த நொடியில் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டி வழி நடத்தும் மரபு பைந்தமிழ்ச்சோலையிலன்றி வேறு எங்கும் காண முடியாது.
அனைத்துப் பயிற்சியிலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் யாப்பியல் தொடர்பான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுப், பட்டத்தேர்வு நடாத்தப்படுகின்றது. இப்பட்டத் தேர்வின் வழியாக மூன்றாம் நிலையாகப் பைந்தமிழ்ச்சுடர், இரண்டாம் நிலையாகப் பைந்தமிழ்ப்பாமணி, முதலாம் நிலையாகப் பைந்தமிழ்ச்செம்மல் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுகிறன.
பைந்தமிழ்ச்சோலையின் முதலாம் ஆண்டு விழா, சென்னை வாசுகி கண்ணப்பர் மகாலில் கவியரங்கம், கருத்தரங்கம் எனப் பல நிகழ்வுகளுடன் நடந்தேறியது. இவ்விழாவில் பாவேந்தர் பாரதிதாசனின் பெயர்த்தி பாவலர் மணிமேகலை குப்புசாமி கலந்துகொண்டு சிறப்பித்து, பாவலர்களுக்குப் பட்டம் வழங்கினார். தொல்காப்பியம் குறித்துத் தொல்காப்பியப் புலவர் வெற்றியழகனார் சிறப்புரையாற்றினார். பைந்தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசான் மா.வரதராசனாருக்குப் பைந்தமிழரசு என்னும் பட்டத்தினை வழங்கினர்.
இரண்டாம் ஆண்டு விழா சிதம்பரத்தில் பாவலர் பா.நடராசன், பாவலர் சு.மோகன் அவர்களின் சிறப்பான பங்களிப்போடு நடைபெற்றது. இவ்விழாவில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் தேன்மொழி அம்மையார் மற்றும் பெருஞ்சித்திரனாரின் மருமகன் ஆய்வறிஞர் அருளியாரும் கலந்து சிறப்பித்ததுடன் பட்டங்களும் வழங்கினர். ஆய்வறிஞர் அருளி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முதல்முறையாகப், புதுமையான நிகழ்வாக, ஆசுகவியரங்கம் இவர்களின் முன்னிலையில் நடைபெற்றதையும் சுட்டிக் காட்டலாம்.
மூன்றாம் ஆண்டு விழா திருப்பூரில் பைந்தமிழ்ச் செம்மல் கட்டிக்குளம் சுந்தரமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்திரு.மாது அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பட்டங்கள் வழங்கிச் சிறப்புரை யாற்றினார். இவ்விழாவில், புதுமையாக இசையுடன் கூடிய சிந்துப்பாட்டரங்கம், ஆசுகவியரங்கம், கவியரங்கம் என விழா நிகழ்வுகள் நடைபெற்றன. மாணவர்கள், ஆசான் மா.வரதராசனாருக்குப் யாப்புச்சீர் பரவுவார் என்னும் பட்டத்தினை வழங்கினர்.
நான்காம் ஆண்டில் 2018-2019 காலப்பகுதியில் பாட்டியற்றுக, சிந்துபாடுக பயிற்சிகளும், பைந்தமிழ்ச்செம்மல்களுக்கான சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் விடுகதை, ஈற்றடிக்குப் பாட்டெழுதல், அந்தாதி, ஆசுகவிச்சுழல் போட்டி எனும் பணிகள் சீரிய முறையில் நடாத்தப்பட்டு, விரைகவிவாணர் மற்றும் விரைகவி வேந்தர் பட்டங்களும் வழங்கப்பட்டன.
பைந்தமிழ்ச்சோலையினை வழிநடத்தும் வகையில் மன்னை வெங்கடேசன் அவர்களுக்கு இணை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டுப், பாவலர்கள் மன்னை வெங்கடேசன், சியாமளா ராசசேகர், பரமநாதன் கணேசு, நிர்மலா சிவராசசிங்கம், அர.விவேகானந்தன், வள்ளிமுத்து, தமிழகழ்வன், விவேக்பாரதி ஆகியோரைக் கொண்ட எண்பேராயம் எனும் அமைப்பு அமைக்கப்பட்டது.
பைந்தமிழ்ச்சோலையின் சார்பாகத் தமிழ்க்குதிர் மின்னிதழ் தொடங்கப்பட்டது. பைந்தமிழ்சோலை நிறுவுநர் பாவலர் மா.வரதராசனார் ஆசிரியராகவும், பாவலர்கள் மன்னை வெங்கடேசன், வள்ளி முத்து, அர.விவேகானந்தன், தமிழகழ்வன் துணை ஆசிரியர்களாகவும், பாவலர்கள் பா.நடராசன், வ.க.பரமநாதன் நெறியாளர்களாகவும், பாவலர்கள் விவேக்பாரதி, சீராளன் மற்றும் பைந்தமிழ்ச்செல்வி தமிழரசி இணைய வடிவமைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
இவ்விதழ் பல இலக்கியத் தகவல்களைத் தாங்கித் திங்கள்தோறும் வெளிவருகின்றது. இவ்விதழுக் கான ஆக்கங்களைப் பெற்று, அழகு மிளிர வடிவமைத்து வெளிக்கொணரும் பணியில் பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன், பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம் இருவரின் செயற்பாடு அளப்பெரியது.
நான்காம் ஆண்டு விழா சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மறைந்த பாவலர் பொன்.பசுபதியார் குடும்பத்தார், பாவலர் கருமலைத் தமிழாழன், கவிமாமணி க.ரவி, இசைக்கவி ரமணன் மற்றும் கவிக்கோ ஞானச்செல்வன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
மறைந்த பாவலர் புதுவை பொன்.பசுபதியார் அவர்களது திருவுருவப் படத்திற்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி நினைவரங்கப் பாடலைப் பாடினார். இவ்விழாவில் நடைபெற்ற கவியரங்கில் முன்னிலை வகுத்துப் பாவலர் கருமலைத் தமிழாழன் எழுச்சிக் கவிதை பாடினார். ஆசுகவியரங்கம், கவியரங்கம் என நிகழ்வுகள் நடந்தேறின. இவ்விழாவில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர்கள் பாவலர் மா.வரதராசனார்மேலும் சோலையின்மேலும் எழுதிய பைந்தமிழ்ச்சோலைப் பன்மணி அந்தாதி எனும் நூல் வெளியிடப்பட்டது.
இசைக்கவி ரமணன் ”கம்பனில் நுண்மைகள்” என்னும் தலைப்பில் உரையாற்றிச் சிறப்பித்தார். கவிக்கோ ஞானச்செல்வன் ”பிழையின்றி நல்ல தமிழ் பேசுவோம்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றி வெற்றியாளர்களுக்குப் பட்டம் வழங்கினார்.
நான்காம் ஆண்டு விழாவின்பின் பைந்தமிழ்ச் சோலையில், வெண்பா வேந்தர், காரிகை வேந்தர், விருத்த வேந்தர் மற்றும் அகவலரசர் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இத்தேர்வில் 40 கவிஞர்கள் பங்குபெற்றனர். தேர்வில் 90 மற்றும் அதற்குமேல் மதிப்பெண்களைப் பெற்று வெண்பா வேந்தர் விருதினை 4 கவிஞர்களும், காரிகை வேந்தர் விருதினை 2 கவிஞர்களும், விருத்த வேந்தர் விருதினை 3 கவிஞர்களும், அகவலரசர் விருதினை 4 கவிஞர்களும் பெற்றுக் கொண்டனர்.
பைந்தமிழ்ச்சோலை தனது கிளைகளைக் குவைத்து நாட்டிலும் திருவண்ணாமலையிலும் நிறுவித் தமிழ்ப்பணி செய்து வருகின்றது. இவ்வாண்டு, 05/07/2020 ஆம் நாள், பைந்தமிழ்ச்சோலை தலைமை இலக்கியப் பேரவையின் இலக்கியக் கூடல் முழுக்க முழுக்க இணையவழியில் நடைபெற்றது. இலக்கிய நிகழ்ச்சியின் நேரலையைக் கண்டு பலரும் களிப்படைந்தனர். இவ்விலக்கியக் கூடலில் வானவில் க.ரவி அவர்களின் சிறப்புரையும் இலந்தை சு.ராமசாமி அவர்களின் தலைமையில் ”எதுவரை போகும் இது” என்னும் தலைப்பில் கவியரங்கமும் சிறப்பாக நடைபெற்றது.
பைந்தமிழ்ச்செம்மல் அழகர் சண்முகம் முன்பயிற்சியாக யாப்பிலக்கணத்தினைக் கற்றுக் கொடுத்துள்ளார். இதனால் பலரும் பயன் பெற்றிருக் கின்றார்கள்.
இதுவரை பைந்தமிழ்ச்சோலையில் பயின்று பாவலர் பட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றோர்:
பைந்தமிழ்ச்சுடர் - 42 கவிஞர்கள்
பைந்தமிழ்ப்பாமணி - 34 கவிஞர்கள்
பைந்தமிழ்ச்செம்மல் - 23 கவிஞர்கள்
ஆசுகவிப்பட்டம் - 14 கவிஞர்கள்
சந்தக்கவிமணி - 8 கவிஞர்கள்.
புதுக்கவிதையில் மூழ்கிக் கிடந்தவர்கள் சோலையில் இணைகிறார்கள். சோலை நிறுவுநர் மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களின் வழிநடத்தலில் புதியோர்களை வாரியணைத்து, மரபுகவிதை கற்றுக்கொடுப்பது வேறு எந்த முகநூல் குழுமங்களுக்கும் இல்லாத சிறப்பாகும்.
பல முகநூல் குழுமங்கள் பட்டங்களை வாரியள்ளிக் கொடுத்து சாதனை
புரிந்துவரும் இக்காலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை மிகக் கடுமையான தேர்வின் மூலமாகப்
பட்டங்களை வழங்கிக் கவிஞர்களின் தரத்தினை உயர்த்துவதில் பைந்தமிழ்ச்சோலை அனைத்துக்
குழுமங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றது என்பதைப் பெருமையுடன்
கூறிக் கொள்கின்றேன். நன்றி.
No comments:
Post a Comment