அன்புடை நண்பரீர், வணக்கம்!
செம்மொழியாம் நந்தமிழ் இனிய சொல்வளம் கொண்டது.
காலப் படிமங்களுக்கும், வழக்கிற்கும் ஏற்பப் புதிய சொற்களையும் தன்னகத்தே உள்ளடக்கியது.
‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ என்னும்
தொல்காப்பியர் கூற்றிலுள்ள ஆழத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பொருள் குறித்து அமையும்
பெயர்ச்சொற்கள் எக்காலத்துக்கும், எத்துறைக்கும் சமமாகப் பொருந்துமாறமைந்த நுட்பத்தை
உள்ளடக்கியது அந்நூற்பா.
சான்றாக, இன்றைக்கு கணினித்துறை சார்ந்த எத்தனையோ
சொற்களுக்குப் பொருந்துமாறான தமிழ்ச்சொற்கள் அமைந்து நம்மை வியப்பி லாழ்த்துகின்றன.
மடிக்கணினி, கட்செவியஞ்சல், புலனம், அலைப்பேசி, வலையொளி, வலைத்தளம், மின்மடல்... என
எதற்கும் சளைக்காத தமிழ்ச்சொற்கள் வழக்கிற்கு வந்துவிட்டன.
எனவே, நந்தமிழ்ச் சொற்களிலுள்ள தெளிவையும்
பொருளையும் உணர்ந்து போற்றி அவற்றைத் தொடர்வதே தமிழை வளர்க்கும் படிநிலையாகும். அதைவிடுத்து,
ஆங்கிலமே உலகப்பொதுமொழி... அதில்தான் பழக வேண்டும் என்றும், வடமொழிச் சொற்களைத் தாராளமாகப்
பயன்படுத்தலாம் என்றும் ஒருசாரார் இணையத்தில் பதிவிடுவதைப் பார்க்கும்போது மனம் மருகுகிறது.
இதற்குத் தீர்வும் இருக்கிறது. பொதுமக்களுக்கு
ஒரு சொல் போய்ச்சேர்வது ஊடகத்தால் மட்டுமே. எனவே ஊடகம்சார் நண்பர்களும், எழுத்தாளர்
களும் குறிப்பாகப் புதுக்கவிதை என்றழைக்கப் படும் வசனக்கவிதை எழுதும் நண்பர்களும் தங்கள்
எழுத்தில் பிறமொழிச் சொற்களைக் கலவாமல், புதிய புதிய தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்துவதுடன்,
பழந்தமிழ் இலக்கியச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும்.
மொழிக்கு நாம் செய்யும் தொண்டு நம் அன்னைக்குச்
செய்யும் தொண்டெனக் கருதி அனைவரும் ஒன்றிணைந்து இந்த முடிவையேற்று நடைமுறைப்படுத்த
வேண்டும்.
வாழ்க செந்தமிழ்! வாழிய நம்மினம்.!!
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர்
மா.வரதராசன்
No comments:
Post a Comment