14. கவிஞர் கல்யாணசுந்தரன் காலீசுவரன் (சுரேஜமீ)
எழுதும் எழுத்தும் ஒருநாளில்
   எழுந்து நிற்கும் உலகினில்தான்
விழுது தாங்கும் ஆல்போல
   விரியும் மனிதம் பயனுறவும்
தொழுது வருமோ எழுத்தென்ப
   தொடுத்தால் வருமோ சொல்லிடுக
அழுது வருமோ உணர்ச்சிகளால்
   அணைத்தால் வருமோ காதலினால்          1
பட்டு வருமோ பாட்டினால்தான்
  பகையில் வருமோ யாரறிவார்?
நட்பில் வருமோ நல்லோர்சொல்
   நயத்தில் வருமோ தெரியாது
கட்டில் சொல்லும் கதையாமோ
  கள்ளில் மயங்கும் சுவையாமோ
தொட்டில் பிள்ளை சுகமாமோ
   தொலைவில் நிற்கும் வானாமோ               2
எதுவும் தருமவ் வனுபவமே
   எழுந்து நிற்கும் எழுத்தாகும்
பதுமை போல நின்றிருந்தால்
   பாட்டும் எழுத வாராதே
மதுவும் மங்கை இருப்பிடமும்
   மண்ணில் விதைத்த விதைபோல
எதுவும் எழுத்தாய் ஆகிவிட
   என்னே கண்ண தாசனாநான்?                   3
ஆனால் ஒன்றைச் சொல்லிடுவேன்
  அகிலம் சிறக்கும் எழுத்துவரும்
தேனே தென்றல் திரவியமே
  தெவிட்டா இன்பச் செந்தமிழே
ஊனில் கலந்த உயிர்மூச்சே
  உலகம் காணா உவகையெனத்
தானே உலகம் பாராட்டும்
   தகையாய் நீயும் எழுதிடவே!                       4
மனிதம் தழைக்க நீயெழுது
  மறந்தும் அறத்தை வழுவாமல்
புனிதம் காத்து நீயெழுது
  புகழுக் காக எழுதாமல்
தனியே ஒருவன் தவித்தாலும்
  தட்டி எழுப்ப நீயெழுது
கனிவாய் முதியோர் மனங்குளிர
  கருத்தை வைத்து நீயெழுது                         5
எழுந்து நிற்கும் உனதெழுத்தும்
  ஏழ்மை விரட்டும் உனதெழுத்தும்
அழிவில் லாத உனதெழுத்தும்
   ஆக்கம் பெருக்கும் உனதெழுத்தும்
உழவை மதிக்கும் உனதெழுத்தும்
  ஓங்கி நிற்கும் உனதெழுத்தும்
தொழவே தோன்றும் உனதெழுத்தும்
   தோகை விரிக்கும் குவலயத்தே!                 6
No comments:
Post a Comment