8. கவிஞர் உதயநிலா கார்த்திகேயன்
இன்ப நினைவில் இதயம் நிறுத்தினால்
துன்பம் கடந்து துறவறம் ஆகிடும்
வந்திடும் சோதனை வார்க்க அழகாகும்
தந்திட்ட யாவையும் தண்டமிழ் ஆகிட
நன்மையைக் காட்டிலும் நாசனாய்த் தோன்றிடும்
வன்மையைக் கூட்டியே வண்மையைப் போக்கும்
கசப்பும் இனிப்பும் கருவினில் காட்டப்
பசப்பும் சலிப்பும் படர்ந்து வளர்ந்திட
கண்கள் சிவந்திடக் காட்சி மருகிடக்
காண்பவை யாவும் கடந்திடும் அன்னமாய் 10
வாய்மை தவிர்த்து வளமை தொலைத்திட
பொய்ம்மை அகற்றியே போக்கிடம் இன்றியும்
வீழ்ந்த விதைகள் விருட்சமாய் ஆகிடத்
தாழ்ந்த நினைவுகள் தண்டின்றிக் காய்ந்திட
நன்னெறிப் பக்கம் நடந்திடப் பேரின்பம்
அன்றி இருந்திட அல்லலைக் கூட்டிடும்
உள்ளார் மருண்டிட ஒன்றென மாறிட
வெல்லும் எழுத்தால் விருப்புற்(று) எழுந்திடக்
காய்ந்த முகமும் கனிவாய் மலர்ந்திட
மாய்ந்த அமைதி மறுபடி ஊறிடும் 20
ஓய்ந்த மனங்களும் ஓங்கி உயர்ந்திடும்
பாய்ந்த கணத்தில் பயமும் அகன்றே
இதமுடன் துன்புறு இம்மை கடக்கப்
பதங்களால் வென்றுநீ வாழ்
No comments:
Post a Comment