'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

13.       பைந்தமிழ்ப்பாமணி மாலா மாதவன்

 

அற்புதம் அருளும் ஆனை முகத்தோனை

    அறிவினை ஆளும்  அன்னை சரஸ்வதியை

நற்றமிழ்த் தாயை நாவின் மொழியாளை

    நலம்தரும் கவிதை நாடி வேண்டுகிறேன்

சொற்சுவை பெருகும் சோலைத் தமிழ்க்குழுவை

    சோலையின் கவிய ரங்கத் தலைமையினை

கற்றவர் சபையைக் களிக்கும் குழுவதனைக்

    கண்டுளம் வணங்கிக் கவிதை படைக்கின்றேன்

 

எழுத்தால் எழுக

 

திருவேழமு னெயிறோடிய திருவாசக மெழுத்தே!

தருமேயது தளராவிசைத் தவமாமொழி எழுத்தே!

கருவானது களமேறிடக் கவியாகிடு மெழுத்தே!

பெருமாசபை பொலிவாயுறத் துணிவேதுணை எழுத்தே!   1

 

அருமாமணி அழகோடிசை அலையாகிடு மெழுத்தே

தருமாசையைத் தனியோசையைத் தளராமணி எழுத்தே!

உருவாகியென் உளமீதினில் உருவாகிடும் எழுத்தே!

கருவாகிடுங் கதைபேசிடுங் கவியாகிடு மெழுத்தே!  2

 

வளமேறிட நலமூறிட வலுசேர்க்குமென் எழுத்தே!

தளையேதினி தடையேயிலை தடமேவிய எழுத்தே!

கிளையோடிரு குறையாதிரு கொழுமாமன எழுத்தே

உளமாறிட உறவாடிடு முயிரோவிய எழுத்தே         3

 

மொழியாளுமை மனமேறிட முதலாகிடு மெழுத்தே!

வழிகாணவும் அடியேறவும் வடிவாகிடும் எழுத்தே!

அழியாதது வரியாகிட அகலாதது மெழுத்தே!

சுழிபோடுக சுயமாயினிச் சுகமூறிடு மெழுத்தே!   4

 

அவையேறிநல் விதைதூவலி லமுதூறிடு மெழுத்தே!

சுவைகூடவும் சுவையாகவும் உருவாகிய எழுத்தே!

எவையாயினு மெழுதாவிடி லெவைதான்பயன் எழுத்தால்!

அவையோசையை இசையாக்கிடு மமுதானவென் எழுத்தே! 5

No comments:

Post a Comment