'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 10.       பைந்தமிழ்ச்சுடர் சோமு.சக்தி

 

அவையை வணங்கி ஆற்றும் தலைப்பில்

சுவைபட உண்மை சொல்லிச் செல்வேன்

அழுதால் இரங்கி அருளார் உனக்கு!

தொழுதால் எதற்கும் துணையாய் வாரார்!

இதுதான் நாமும் இதுவரை பெற்ற(து)

இன்னும் ஏனோ ஏமாந்து நிற்ப(து)

எத்தனை இந்தியர் இன்னுயிர் ஈந்தனர்

அத்தனை ஈகமும் அலட்சியம் செய்வதா?

மக்கள் ஆட்சி மாண்புகள் எங்கே?

சுக்கலாய் ஆக்கியே சுகம்பெறல் யாரோ?         10

 

கூட்டாய் ஆட்சிக் குடியர சில்லை

கோட்டான் ஆளக் கொள்கையும் தொல்லை

மொழியைத் திணித்து மொழியை அழிக்க

மொழிவார் இங்கே மும்மொழிக் கொள்கை

சுற்றுச் சூழலைச் சொல்லும் வரைவை

முற்றும்  படித்து மொழிவார் எவரோ

இருபத் திரண்டா யிருக்கும் மொழிகள்

இருந்தும் ஆங்கிலம் இந்தி என்று

சொந்த மொழியில் சொல்வார் இல்லை

மந்தையில் மேயும் மாடோ மக்கள் ?           20

 

ஒன்றே நாடாம் ஒன்றே தேர்தலாம்

நன்றாய் நடக்கும் நாடக மேடை

படிப்படி உரிமை பறிக்கும் செயலால்

அடிக்கடி நடக்கும் அதிகாரக் குவிப்பு

பேரம் பேசிப் பிழைப்போர்க் கெல்லாம்

ஈரமோ வீரமோ இதயத்தில் இல்லை

இருபத் தோராம் நூற்றாண்டில் இருந்தும்

உரிமை பறிப்பதை ஒற்றுமை என்பார்

தேய பத்தியாம் தேனாய் ஒழுகுவார்

நேய மாந்தனே நேரிய பார்வைகொள் !      30

 

விடுதலை கிடைத்தும் விடிவிலை என்றால்

கெடுதலைத் தட்டிக் கேளடா தம்பி !

ஒற்றைத் தமிழகம் உரத்தே ஒலித்தால்

மற்றை மாநிலம் மயக்கம் தெளியும்

இந்திய ஒன்றியம் என்னும் அமைப்பை

இந்தியக் கூட்டாட்சி என்றே மாற்று

சுரண்டல் இல்லா சொர்க்கம் படைக்கத்

திரண்டு வந்தே தெருவில் இறங்கு

நன்றி அவைக்கே நானும் வைப்பேன்

நன்மை தீமை நன்கறி  வோரே!                     40

 

உழுக உளத்தை உயரிய நோக்கில்

எழுகவே எழுத்தால் ஏந்துக தூவலே !

No comments:

Post a Comment