'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 5.       பைந்தமிழ்ப்பாமணி சுந்தர ராசன்

 

விழுந்தால் சிரிக்க விரைபவர் உண்டு

    விளித்தால் உதவ எவருமிலை!

அழுதால் ரசிக்க அனைவரும் உண்டு

    அணைத்தே துடைப்பார் ஒருவரிலை!

கொழுத்தார் தனையே கொஞ்சுவர் கோடி!

    இளைத்தார் தனக்கே யாருமிலை!

எழுத்தால் எழுக! தமிழ!வு னக்கே

    இணையென் பாரிப் பாரிலிலை!              1

 

குறளாய் வந்தே கொண்டமெய் நீட்டம்

    திருமாற் போலே திருக்குறளும்!

அறமே உரைத்தும் அழிவதும் பாடும்

    அரனைப் போலே அணிசிலம்பும்

சிறப்பாய்ப் பன்னீ ராயிரம் படைத்தே

   சிரம்நான் கனைநேர் கம்பனும்போல்

திறமாம் எழுத்தால் திகழுக மீண்டும்

    தேடிப் பணியும் வையமெல்லாம்!             2

 

பார திபோலே பாடிடப் பழகு!

    பரவிப் போற்றப் பார்விரையும்!

பார திதாசன்!  சீற்றமும் ஏற்று!

    பரவ சமெய்தி யதுமயங்கும்!

நேர துகண்ணன் தாசனென் றானால்

    நினைந்து நினைந்து நிதம்வியக்கும்!

சீருன் எழுத்தில் சிறந்திடும் என்றால்

    சகமுன் சொத்தாய் ஆகிவிடும்!                 3

 

புழுவாய் நெளிவார் புறமொரு தண்டைப்

    புகுத்த உடனே புறப்படுக!

தழலாய் அறத்தீ வளர்த்தொரு வேள்வி

    தான்செய் தாகு தியாகிடுக!

விழலே வாழ்வென் றிருப்பவர் எல்லாம்

    வீறோ டெழவே கோலையெடு!

எழுத்தால் நீயும் எழுகையில் அதனை

    எல்லார்க் கும்மென் றாக்கிவிடு!                               4

 

எவ்வா றெழுத? என்பனை யோ?வா

    இணையமி ருக்கு(து) ஓர்சோலை!

கொவ்வைத் தமிழின் பாவகை எல்லாம்

    குழவிக் கேற்றிச் சொல்வதுபோல்

செய்வார் எங்கள் பாவலர் ஆசான்

    சேர்ந்தே இழுப்போம் தமிழ்த்தேரை!

உய்வோம் அதனால் உயர்வுறு வோம்நம் 

    உள்ளம் வெல்லம் ஆகிடுமால்…                  5

No comments:

Post a Comment