'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

திருமுருகாற்றுப்படை

 உரையாடல் 

பகுதி - 5

பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன்

புலவர்: ‘அது மட்டுமன்று…’ என்றால் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே! திருப்பரங் குன்றத்தில் உறையும் திருமுருகப் பெருமான் அடுத்து எங்குச் செல்வார் தெரியுமா?

புலவர்: ஆகா! கேட்க ஆவலாக உள்ளேன்.

நக்கீரர்: திருமுருகப் பெருமான் வீற்றிருக்கும் யானையைப் பற்றி அறிவீரோ?

புலவர்: யானையின் மீது வீற்றிருக்கிறாரா? சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: திருமுருகப்பெருமான் வீற்றிருக்கும்  ஆண் யானை மிகுந்த வேகத்துடன் நடக்கும் நடையினைக் கொண்டு கடுமையாக வீசும் காற்றைப் போன்று விரைவாகச் செல்லக் கூடியது; யமனைப் போன்று தடுப்பதற்கு அரிதான வலிமை உடையது.

புலவர்: அப்பப்பா. அவ் யானையின் வலிமையும் வேகமும் போற்றற்குரியது.

நக்கீரர்: அது மட்டுமா… அதன் அழகைக் கேளீர். கூர்மையான முனையை உடைய அங்குசம் குத்துவதால் மத்தகத்தில் ஏற்பட்ட வடுவினை உடையது; புகர் எனப்படும் செம்புள்ளிகளை உடைய நெற்றியை உடையது; அசையும் நெற்றிப் பட்டத்தையும், பொன்னாலான வாடாத மாலையினையும், இரு பக்கங்களிலும் தாழ்ந்து தொங்குகின்ற மணியானது மாறி மாறி ஒலிக்கின்ற ஒலியினையும் உடையது.

புலவர்: அழகோ அழகு! கண்முன்னே காட்சிகள் விரிகின்றன. மேலும் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் எனப்படும் ஐவேறு வகையில் அலங்கரிக்கப்பட்டு, மின்னலைப் போன்ற ஒன்றுக்கொன்று நிறத்தால் மாறுபடும் மணிமுடியுடன் அவருடைய திருமுடி காட்சியளிக்கின்றது. ஒளி பொருந்திய பொன்னால் ஆகிய 'மகரக்குழை' வடிவில் அமைந்த காதணிகள் தொலைதூரத்தில் உள்ள நிலமெங்கும் ஒளி வீசும் சந்திரனைச் சூழ்ந்துள்ள விண்மீன்களைப் போல ஒளி வீசி விளங்குகின்றன.

புலவர்: அடடா! அவருடைய மணிமுடியின் அழகும் மகரக் குழையின் அழகும் கண்கொள்ளாக் காட்சி!

நக்கீரர்: குற்றம் இல்லா நோன்போடு தாம் மேற்கொண்ட செயல்களை நிறைவு செய்யும் அடியார் மனத்தில் பொருந்தித் தோன்றும் ஒளி மிக்க முகங்களுடையவர் திருமுருகப் பெருமான்.

புலவர்: அவருடைய ஆறு திருமுகங்களும் மலர்ந்திருக்கும் காரணம் அறிய வேண்டுகிறேன் ஐயனே!

நக்கீரர்: சொல்கிறேன் புலவரே!

1.       உலகத்தைச் சூழ்ந்துள்ள மிகுதியான இருள் நீங்கி, அவ்வுலகம் குற்றம் இல்லாது விளங்கும் பொருட்டுப் பல கதிர்களை உடைய கதிரவன் தோன்றுவதற்குக் காரணமாய் விளங்குவது  ஒரு திருமுகம்.

2.       அன்பர் வேண்டிய வரங்களை அவர்களுக்கு அன்புடன் மகிழ்ந்து வழங்குவது மற்றொரு திருமுகம்.

3.       அந்தணர்கள் தம் மரபு வழியில் மந்திரங்களை ஒலித்து இயற்றுகின்ற வேள்விகளை ஏற்று மகிழ்வது மற்றொரு திருமுகம்.

4.       எந்த நூல்களும் ஆராய்ந்து உணர்த்த இயலாத மெய்ப்பொருளை, அனைத்துத் திசைகளையும் தன் ஒளியால் விளக்கும் திங்களைப் போல, முனிவர்களுக்கு உணர்த்தி விளக்குவது மற்றொரு திருமுகம்.

5.       பகைவரைப் போரில் கொன்று அழித்துக் கள வேள்வியை இயற்றச் செய்வது மற்றொரு திருமுகம்.

6.       பூங்கொடி போன்ற இடையும் இளமையும் உடைய குறவர் மகள் வள்ளியுடன் மகிழ்ச்சி அடைவது மற்றொரு திருமுகம்.

புலவர்: அடடா! ஒளிதருவது, அன்பர்க்கு அருள்வது, வேள்வி காப்பது, ஞானம் உணர்த்துவது, வீரம் விளைவிப்பது, வள்ளியோடு மகிழ்வது.

நக்கீரர்: ஆம்… அவருடைய ஆறு திருமுகங்களும் அவ் ஆறு தொழில்களை முறையாக நடத்துவதற்கு ஏற்ப அழகும், பெருமையும், ஒளியும், வலிமையும் பொருந்தியவர். அவருடைய மார்பில் அழகிய சிவந்த மூன்று வரிகள் உள்ளன. ஒளி பொருந்திய வேலினை எறிந்து பகைவர்களின் மார்பைப் பிளக்கின்ற ஆற்றல் உடையன அவருடைய நிமிர்ந்த தோள்கள்.

புலவர்: அருமை ஐயனே! அவருடைய பன்னிரு கைகள் என்ன செய்கின்றன?

நக்கீரர்: அதைத்தான் சொல்ல வருகிறேன் புலவரே!

1.       ஒருகை முத்திப் பேற்றினைப் பெற்று வானுலகம் செல்லும் முனிவர்களைக் காத்து ஏந்திய வண்ணம் உள்ளது.

2.       ஒருகை இடுப்பினைச் சார்ந்து விளங்கு கின்றது.

3.       ஒருகை அழகிய செந்நிற ஆடையால் அலங்கரிக்கப் பெற்ற தொடையைச் சார்ந்து உள்ளது.

4.       ஒருகை யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தைச் செலுத்திய வண்ணம் உள்ளது.

5.       ஒருகை கேடயத்தைத் தாங்கிய வண்ணம் உள்ளது.

6.       ஒருகை வேற்படையினை வலப்பக்கம் நோக்கிச் சுழற்றிய வண்ணம் உள்ளது.

7.       ஒருகை அடியார்களுக்குத் தத்துவங்களை உணர்த்திய வண்ணம் மோன முத்திரையோடு மார்பின் மீது விளங்குகின்றது.

8.       ஒருகை மார்பில் புரளும் மாலையைச் சார்ந்துள்ளது.

9.       ஒருகை 'களவேள்வி தொடங்குக' என்னும் சைகை காட்டுகின்றது.

10.     ஒருகை கள வேள்வியின்போது ஓதப்படும் பாடலுக்கு ஏற்ற வகையில் இனிய ஓசையை உண்டாக்கும் மணியானது மாறி மாறி ஒலிக்கச் செய்கின்றது.

11.     ஒருகை வானத்திலிருந்து மேகமானது மிக்க மழையைப் பொழியுமாறு செய்கின்றது.

12.     ஒருகை வானுலக மகளிர்க்குத் திருமண மாலையைச் சூட்டுகின்றது.

புலவர்: அப்பப்பா. திருமுருகப்பெருமானின் பன்னிரு கைகளும் செய்யும் பணியைக் கேட்கவே மலைப்பாக இருக்கிறது.

நக்கீரர்: வானுலகத்து இசைக்கருவிகள் முழங்க, திண்ணிய வயிரம் வாய்ந்த ஊதுகொம்பு ஒலிக்க, வெண் சங்கு முழங்க, அச்சம் தரும் இடியைப் போன்ற ஓசையுடைய முரசுடன், மயில் அகவ, வெற்றிக் கொடியின் கோழி கூவ, வானின்வழி விரைவாகச் சென்று உலக மக்கள் போற்றும் உயர்ந்த புகழுடைய திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர் நகர் வந்து சேர்தலும் அவருடைய நிலையான பண்பேயாகும்; அதுமட்டுமன்று…

                                              (தொடரும்)

No comments:

Post a Comment