'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

12.       கவிஞர் சொ.சாந்தி

விந்திய மலையொடு இந்திர லோகம்

சந்திரன் வரைதமிழ்ச் சங்கம் படைத்திடலாம்        1

 

எழுத்தினை யாக்குக ஏவு கணையென 

குழுவாய் விண்வெளி  கூடிச் சுற்றிடலாம்..!                              2

 

ஏற்ற மமைக்கும் படிகள் நமக்கு!

போற்றுக வெழுத்தைப் புகழினை யடைந்திடலாம்              3


தூற்றும் கொடுமைகள் துவளட்டும் துரோகிகள்

ஏற்றத் தமிழினில் இன்னலும் களைந்திடலாம் ..!    4

 

கூக்குர லிடுதலில் பலனெது முண்டோ

பாக்குர லெழுப்பிடு பதர்கள் அழிந்திடவே               5

 

பாரதி குரலின்னும் பாக்களில் ஒலித்திட

கோரங்கள் இன்றும் கூனிக் குறுகிடுதே...!                6

 

எழுத்தினை யெடுத்தான் ஈட்டியைப் படைத்தான்

கொழுத்தவன் ஆட்டம் தமிழால் ஆடியதே                7

 

மழுங்கிக் கிடப்பின் மடுவிலும் தள்ளுவார்

எழுத்தால் எழுக இன்னலும் ஓட்டிடவே..!                    8


தமிழை யழிப்பவன் தலையுங் குனிந்திட

உமிழ்வாய் எழுத்தால் உடையட்டு மவர்செயலே   9

 

கழிபோ லாக்கு கனத்தத் தமிழனை

சுழற்றிடு வதனை சோதனை கலங்கிடவே..!          10

 

வெட்டுக் குத்துக் களரி நடத்து

முட்டுந் தமிழால் துட்டர்க ளழிவாரே                        11

 

குட்டிக் களித்தவன் கோமா னெனினும்

வெட்டிச் சாய்ப்பாய் எழுத்தெனும் வாளாலே..!      12

 

எதிர்த்துப் போர்செய் எழுத்தே ஆயுதம்

சுதியினைக் கூட்டு சுட்டிடும் சொல்லாலே              13

 

பட்டுக் கோட்டை பாப்போல் பாய்ந்திடு

வெட்டிடு குற்றங்கள் வீழட்டும் எழுத்தாலே..!         14

 

எத்தனை இன்னல் இடித்த போதும்

வித்தக வெழுத்தால் விரட்டிடு தமிழாலே                15

 

வலிமை யெழுத்து வாகை சூட்டும்

நலிவுகள் விலகிட நாட்டினில் எழுவாயே..!              16

No comments:

Post a Comment