'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

அரங்கேற்றம்

 2.     முருகப்பெருமான் அருள்

பைந்தமிழ்ச் சுடர் பா. நடராசன்

கவிஞர் சிதம்பரம் சு.மோகன்

 

விநாயகர் வணக்கம்

கொம்பொரு எழுது கோலாய்க்

               கொண்டுநற் காவி யத்தை

அம்மலை மீதி லெல்லாம்

               ஆக்கினான் கழல்கள் போற்றி

செம்முகம் ஐந்து ளானின்

               சேயவன் பெருமை தன்னை

அம்பலந் தன்னில் ஏற்றி

               அளிக்கின்றோம் அருளி னாலே!

 

அவை வேண்டுகோள்

சரவணப் பொய்கை தன்னில்

               தாமரை மலர்கள் போல

சிரங்களோர் ஆறும் ஆக

               சிசுக்களாய்ப் பிறந்த சேயின்

அரும்பெரும் விளையாட் டெல்லாம்

               ஆறுசீர்ப் பாட்டில் சொல்வேன்

விருப்புடன் கேட்க வேண்டி

விடுக்கின்றேன் வேண்டு கோளே!

 

1.       முருகப்பெருமான் தோற்றம்

சூரனை வதைக்கத் தேவர்

               சுடுசரம் போல வேலை

வீரமாய் வீசும் சேயை

               விரைந்திறை அளிக்க வேண்டப்

பேரிருள் விலக்கி ஓங்கும்

               போரொளிக் கதிரைப் போல

ஆறிரு கரங்க ளோடே

               அறுமுகன் தோன்றி னானே!

 

2.       முருகப்பெருமானின் பெருமை

மண்ணொடு தீயும் நீரும்

               மதியுள வானும் காற்றும்

எண்ணிலா உயிர்கள் யாவும்

               ஏத்திடும் இறைவ னன்றோ

பன்னிரு கரமும் கொண்டான்!

               பரமனின் மகனாய் வந்தான்!

விண்ணுளார் வியக்க நின்றான்!

               விரும்புவார் உளத்து ளானே!

  

3.       பழனி மலை சென்றான்

அரியவன் பெயரைக் கூறி

               ஆங்கொரு கனியை ஏந்தித்

திரிபுர முனிவன் ஈயத்

               திருநுதல் விழியான் ஏவ

விரிந்தவிவ் வுலகந் தன்னை

               வேலவன் விரைந்து சுற்றிப்

பெரியவன் வெல்லக் கண்டு

               பிரிந்ததும் பெருமை தானே!

 

4.       பழனி மலையின் பெருமை

தன்வழி தனித்த தென்று

               தரணியில் முதலில் சொன்னான்

விண்ணவர் முதலாய் யாரும்

               விரும்பிடும் ஈசன் மைந்தன்

மண்ணிலே மலையென் றாலே

               வள்ளலின் பழனி யன்றோ!

கண்ணுளார் கண்டால் போதும்

               கடலெனக் களிக்க லாமே!

 

5.       ஒளவைக்கு அருளினான்

ஆயிரம் பாடி விட்டேன்

               அதிசயம் செய்து விட்டேன்

ஏயெனும் முன்னர் பன்னூல்

               எடுத்தியான் இயம்பி விட்டேன்

தாயவள் ஒளவை யெண்ணி

               தருக்குற்ற போதில் வந்து

தூயவன் முருகன் வந்தான்

               துரும்பவள் பணியென் றானே!

 

6.       ஞானம் கொடுத்தான்

தன்றிறம் எண்ணி நாளும்

               தடையின்றிப் பாக்கள் சொல்லி

வண்டமிழ் வளர்ப்பார்க் கெல்லாம்

               வாதினால் புரிய வைத்தான்

விண்டதோர் நாவல் ஒன்றால்

               விளக்கினான் ஞானந் தந்தை

கொண்டதோ பால கோலம்

               கொடுத்ததோ ஞானந் தானே!

 

7.       பிரம்மனிடம் கேட்ட கேள்வி

மூலமந் திரத்தைக் கூறி

               முடுகியே ஞாலம் செய்யும்

கோலநான் முகனை நோக்கிக்

               கூறுக பொருளை யென்றான்

மாலவன் பெற்ற சேயும்

               மலைப்பொடு விழித்து நிற்க

வேலனோ கரத்தால் குட்ட

               வியந்தன உலகெ லாமே!

 

 

8.       பிரம்மனைச் சிறைசெய்தான்

அடைத்தொரு சிறையில் பூட்டி

               ஆங்கயன் பிரண வத்தால்

படைத்திரும் தொழிலும் ஏற்றான்

               படைத்தனன் உயிர்கள் எல்லாம்

விடைகொளும் நாதன் தோன்றி

               விடுத்திட வேண்ட ஏற்றே

தடையிலை என்றே வேலை

               தந்தனன் பிரம்ம னுக்கே!

 

9.       ஈசனிடம் விளையாட்டு

அயனிடம் கேட்ட கேள்வி

               அறிவையோ பொருளை என்றே

மயக்கறு ஈசன் கேட்டான்

               மறுப்பிலா தறிவேன் என்றான்

தயவுடன் பணிவாய் நின்று

               தடக்கையால் வாயும் பொத்தி

முயன்றுநீர் கேட்டால் சொல்வேன்

               முருகன்யான் குருவாய் என்றே!

 

10.    பரமனின் ஒப்புதல்

மாதுமை பாகத் தானை

               மனத்தினில் இருத்தி நாளும்

மாதவர் கருதித் தேடும்

               மண்ணுளார் வருந்தி நாடும்

காதணி குழையும் தோடும்

               கரத்தினில் ஓடும் சூடும்

போதெலாம் புலவர் பாடும்

               புண்ணியன் உடன்பட் டானே!

 

11.    குருவும் சீடனும்

மெய்தனை விளக்கி நன்றாய்

               மேனியில் நீறும் பூசிக்

கைமுதல் வாயும் பொத்திக்

               கலிங்கமும் அடக்கி உள்ளம்

பொய்யிலா உணர்வி னோடு

               புவனங்கள் போற்று மீசன்

ஐயனே அருள்க வென்றான்

               அறுமுகன் விளக்கி னானே!

 

12.    சுவாமிமலை தலப்பெருமை

அறுமுகன் குருவாய் நிற்க

               அரனவன் பணிந்து கேட்க

உறுதுணைச் சாமி நாதன்

               உற்றவோர் படைவீ டன்றோ

மறுப்பிலா துலகோர் ஒப்பும்

               மண்ணக உயிர்கட் கெல்லம்

சிறுமையைப் போக்கி நாளும்

               சீர்வளர் ஊரென் பேனே!

 

13.    பேரறிவின் பிறப்பிடம்

வெற்றியும், புகழும், ஊரை

வென்றிடும் வளமும், செல்வம்

பெற்றிடும் வாய்ப்பும், என்றும்

பெருஞானத் தகுதி யன்றாம்!

கற்றது கைம்மண் ணென்றும்

               கடலள வுளதென் றெண்ணும்

உற்றவோர் அறிவே யன்றோ

               உறுதுணை உயிர்க ளுக்கே!

 

14.    வேல்பெற்றுச் சூரனை அழித்தான்

(சிக்கல் / திருச்செந்தூர் / திருப்பரங்குன்றம்)

அன்னையின் சக்தி வேலை

               ஆண்டகை முருகன் வாங்கி

முன்னையோர் வரத்தால் தேவர்

               முதலியோர் தவத்தால் வென்று

தன்னுடன் பிறந்தா ரோடு

தவமுடைச் சூரன் கொண்டு

பெண்ணவள் தேவ யானை

பெருமணம் முடித்தான் அன்றே!

 

15.    வள்ளியை மணந்தான் (திருத்தணி)

போரதில் வென்று நல்ல

               பொன்னையும் மணந்த பின்னே

வீரர்க்கு விடையுந் தந்தான்

               விரைந்தவன் தணிகை சென்றான்

பார்புகழ் வேடப் பெண்ணாம்

               படர்கொடி வள்ளி தன்னை

மார்பொடு கொண்டான் அண்ணன்

               வேழவன் உதவி யாலே!

 

16.     முருனின் அருட்செல்வம்

(குன்றுதோறாடல்)

பழமுதிர்ச் சோலை யன்றி

               பார்க்கின்ற குன்றிற் கெல்லாம்

வழுவிலா பத்தி யோடு

               வருபவர் குறைகள் தீர்ப்பான்!

அழிவுறும் ஆயுள் தன்னில்

               அன்னையாய்த் தாதை தானாய்

விழியென நிற்பான்! தாளை

               விரைவுடன் பற்று வார்க்கே!

 

17.    கீரன் சொல்வான்

ஆக்குவான் அழிப்பான் பின்னர்

               அன்புடன் காப்பான் என்றே

வாக்கினால் கீரன் சொல்வான்

               வல்லவன் முருகன் என்றே!

பாக்களால் போற்றும் நூலாம்

               படைநூலே முதலாம் என்போம்

வாக்கது வழியாய்க் கொண்டால்

               வளத்துடன் வாழ்வார் தாமே!

No comments:

Post a Comment