'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

11.பைந்தமிழ்ப் பாமணி இரா. அழகர்சாமி

 

எழுகநீ எழுத்தால் என்றே

     எழுப்பிடும் வரதர் தம்மைத்

தொழுதுநான் தொடங்கு கின்றேன்

     துடிப்புடன் மன்றம் வந்தே!

விழியெனத் தமிழை என்றும்

      விருப்புடன் பயிலும் சோலைக்

குழுவுக்கு முதல்வ ணக்கம்

     குறைவின்றி வாழ்க வாழ்க!                      1


ஊர்நலம் காக்கும் நல்லோர்

     உரைக்கின்ற சொற்கள் எல்லாம்

கார்முகில் பாலை வீழ்ந்த

     கனமழை போலே யானால்

ஊர்தனை யடித்தே தம்மின்

     உலையிடும் மாந்தர் ஊடே

யார்வந்து காப்பார் இந்த

     ஏதிலா மக்கள் தம்மை!                              2

 

வாயிலே கோட்டை கட்டி

     வந்தவர் ஆளும் போது

நோயிலே வீழும் நாடு

     நொந்துதான் போவார் மக்கள்

தூயநல் லாட்சி யின்றித்

     துயரமே தொடரு மாயின்

நாயினும் கீழாய் அன்னார்

     நலமிழந் தழிவார் உண்மை!                     3

 

தன்னலம் கருதும் பேர்கள்

     தரணியை ஆள்வா ராயின்

எந்நலம் விளையும் இங்கே

     எந்நிலை ஆகும் நாடு

முன்னொரு காலம் நாட்டை

     முனைப்புடன் ஆண்ட மன்னர்

தன்னரு கமர்த்திக் கொண்டார்

     தமிழாய்ந்த நல்லோர் தம்மை                  4

 

அன்னவர் அரச ருக்கே

     அறிவார்ந்த வழிகள் சொல்லிப்

பொன்னெனப் புவியை ஆளப்

     பொறுப்புகள் வகுப்பார் இன்றோ

கண்ணிலா மாந்தர் போலே

     கல்வியைத் தொலைத்து விட்டு

மண்ணிலே மண்டை செய்த

     மாந்தர்கள் ஆள்கின் றாரே!                      5

 

கற்றவர் ஆள வேண்டும்

     கல்வியை உயர்த்த வேண்டும்

மற்றவர் விலக வேண்டும்

     மாற்றங்கள் நிகழ வேண்டும்

கொற்றவன் ஒழுக்கத் தாலே

     குடிகளும் மகிழும்! தீமை

அற்றதோர் நாடு காண

     அறிவுள மன்னன் வேண்டும்!                    6


எழுதுமுன் கோலில், பற்றும்

     எரிதழல் நிரப்பு! நித்தம்

அழுதது போதும், உன்றன்

     அறிவினை எழுப்பு! வீணே

தொழுதது போதும், உள்ளத்

     துணிவினை உசுப்பு! மீண்டும்

பொழுதுகள் உனக்காய்த் தானே

     புவியிலே புலர வேண்டும்!                         7            


பேனா முனைதான் மண்ணில்

     புரட்சிகள் செய்யும்! நாடு

கோணா நிலையிற் செல்லக்

     கோடுகள் வரையும்! யாரும்

நாணா நிலையில் வாழ

     நன்மைகள் புரியும்! துன்பம்

காணா நிலையில் நாட்டைக்

     களிப்புடன் நடத்திச் செல்லும்!                 8

 

கேடுகள் களையும்! கெட்ட

     கீழ்மைகள் ஒழிக்கும்! செல்லும்

நாடுகள் எங்கும் நித்தம்

     நன்மைகள் விளைக்கும்! நாட்டில்

மேடுகள் பள்ளம் நீக்கி

     மேன்மைகள் கூட்டும்! இந்தப்

பாடுகள் யாவும் செய்யும்

     பழுதிலா எழுத்துத் தானே!                        9

 

அழியுமா மொழியென் றெண்ணும்

     அற்பர்கள் கையில் சிக்கும்

இழிநிலை களைவோம்! அஃதை

     எழுத்தினால் வெல்வோம்! தீராப்

பழியினை அழிப்போம்! நல்ல

     பாதைகள் சமைப்போம்! பேசும்

மொழியிலே ஆள்வ தற்கே

     முழங்குவோம் எழுத்தி னாலே!                 10

No comments:

Post a Comment