9. பைந்தமிழ்ப்பாமணி கவிஞர் ஜெனிஅசோக்
அழிந்தும் அழியொணா தொன்றாம் எழுத்தினா
    லழிந்தும் வாழ்ந்திருப்போம்
அழிந்து மறியொணா மாந்தர் படிக்கவே
    யனைத்து மெழுதிவைப்போம்
விழுந்தோர் மீண்டெழு வாய்ப்பை யெழுதியே
    மீளும் வழிகொடுப்போம்
தழும்பை யனுபவ மாக்கும் வலுவினைத்
    தரவே யெழுதுவமே                                     1
மருட்டும் வார்த்தைகள் மறந்து போகுமே
    வடிவம் கொடுப்போமே
கருக்குப் பட்டயம் எழுத்தே அதனைக்
    கண்ணாய் மதிப்போமே
அருவம் வாய்மொழி யெழுத்தே முகவரி
     அதற்காய் வாழ்வோமே
இருளும் நிலையல பொருளும் நிலையல
      எழுத்தா லிணைவோமே                           2
பகையைக் கடந்துநல் நட்பை யடைந்துநாம்
    பண்பாட் டினைக்காப்போம்
புகையை யெழுப்புவோர் களைத்துப் போம்வரை
   பூத்து மணங்கொடுப்போம்
நகைக்கும் நரிகளின் சாயம் கலைக்கவே
    நன்றாய் மொழியறிவோம்
திகைக்குஞ் சேதிகள் மொழியைச் சிதைக்கையில்
    திறப்பில் நிற்போமே                                   3
ஓல மடங்கினுஞ் சான்றா மெழுத்தினா
    லுண்மை வாழ்வுறுமே
பாலம் போலநாம் கூடி யெழுதுவோம்
    பாக்கள் வழிதருமே
காலங் கடப்பினும் வாழும் மரபினால்
    காவல் கொடுப்போமே
ஞாலம் நோயினால் வாடிக் கிடப்பினு
    மெழுத்தால் எழுவோமே                             4
No comments:
Post a Comment