'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

அரங்கேற்றம்

 1.     நீரின் மேன்மையும் சேமிப்பும்

இரட்டை மணிமாலை

வெண்பாக்கள் ஆக்கம்: பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்

ஆசிரிய விருத்தம்: பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

 

காப்பு

 

நீரினது மேன்மையை நெஞ்சில் பதிக்கவே

பேரவாக் கொண்டு பிழையிலாது – சாரல்

மழையெனத் தூவ மனங்கொண்டோம் அன்னாய்

விழைந்தருள்வாய் மென்றமிழே காத்து

 

நூல்

 

புவியினில் காணும் பொருள்கள் அனைத்தும்

அவியும் மழையின்றி யாங்குத் - தவிக்கும்

எவர்க்கும் இரங்கும் மழைநீர்ப் பெருமை

உவப்ப உரைப்பன் உரத்து                             1

 

உரைப்பன் உரத்துத் தண்ணீரை

    உருக்க மின்றி வீணாக்கும்

அருமை அறியா மானிடனே

    அலைந்து திரியும் உலகினிலே

இருப்பில் இருக்கும் தண்ணீரை

    எடுத்தே அளவாய்ப் பாவிப்பாய்

இரக்க மின்றி வீணர்களாய்

    இடரைக் கொடுத்தே அழிப்பதுமேன்        2

 

 அழிப்பதும் ஆங்கே அழகாய்ப் பொருளை

இழைப்பதும் நீரே எனலாம் - வழிப்பணம்

போல உதவும் பொருளதும் நீர்தானே

கால முழுதும் கவர்ந்து                                   3

 

துளிகள் கொட்டிச் சிந்தினாலும்

    துயரம் கொள்வாய் எந்நாளும்

தெளிவு வேண்டும் தண்ணீரைத்

    தீர்த்து விட்டால் நிலைமையினை

ஒளியும் அற்றுப் போய்விடுமே

    உணர்ந்து செயலை நீயாற்றி

இளையோர் மனத்தில் பதிந்துவிட

    இனியும் தண்ணீர் சிந்தாதே                      4

 

தேனென்று கார்முகில் சிந்தித் தெளிக்கின்ற

வானீயும் மாரி வளநீரைத் - தேனென்றே

சொல்வன் புவிதன்னில் சோர்வகற்றும் நீரன்றோ

வல்வினை நீக்கும் மருந்து                             5

 

மருந்தாய் நோக்கத் தண்ணீரை

    மகிழ்வுன் வாழ்வில் பொங்காதோ

அருந்தும் நீரின் தூய்மையதே

    அழகு படுத்தும் உன்னுடலை

இரத்த லின்றிக் கிடைக்கும்நீர்

    இனிமை தருமே நம்வாழ்வில்

கருக்கல் தோன்றிப் பொழியும்நீர்

    கண்ணாய்ப் போற்றி நீகாப்பாய்              6

 

காக்கும் கடுநிலை காட்டும் வறட்சியைப்

போக்கும் புதுவெள்ள நீராகி - ஏக்கம்

தவிர்த்துச் செழிப்பைத் தருநல நீரே

புவிக்குச் சிறப்பென்று போற்று                    7

 

போற்று நீரைப் புவியினிலே

    பொய்கை யெல்லாம் பாதுகாப்பாய்

ஆற்று நீரைச் சேகரிப்பாய்

    அழித்து நாளும் புலம்பாதே

ஊற்றைத் தேடிக் கிணறுகளை

    ஒன்று சேர்ந்து வெட்டிடுவாய்

மாற்ற முண்டேல் வழிபிறக்கும்

    மகிழ்வு பொங்கும் வாழ்வினிலே               8

 

வாழ்வினில் நம்மை வளப்படுத்தும் நீரினைத்

தாழ்வாய் நினையாதே தம்பிநீ - வீழ்வம்

உலகினில் ஒண்ணீர் இலையேல் அதனால்

தலைமேலிட் டாங்கதனைத் தாங்கு             9

 

உலகில் தண்ணீர் இல்லையெனில்

    உயிர்கள் வாழ வழியில்லை

அலைந்து திரிந்து வாடுமிங்கே

    அழிந்து போகும் பயிரும்தான்

பலரும் வாழத் துணையாகும்

    பருகும் நீரை அழிக்காதே

கலக்கம் வேண்டா மனத்தினிலே

    கண்ணும் கருத்தாய்ப் பேணிடுவோம்      10

 

பேணுநற் றாயின் பெருமை தனக்கீடாய்க்

காணுவாய் நீரின் கருணையை - ஆணென்றும்

பெண்ணென்றும் ஏதும் பிரித்துப் பகுக்காத

தண்ணீர் தரத்தில் இறை                                11

 

இறைவன் அளிக்கும் கொடையினையே

    இழந்து தவித்துக் கலங்காதே

சிறுகச் சேர்க்கும் தண்ணீரே

    தினமும் உன்னைக் காப்பாற்றும்

பொறுமை யோடு சிந்திப்பாய்

    புனலின் மகிமை உணர்ந்திட்டால்

வறுமை மறையும் நாட்டினிலே

    வளமாய் நீரைக் காத்திடவே                      12

 

காக்கும் கடவுளாம் தண்ணீரின் சீரதை

நோக்கும் திறனும் நுமக்குண்டேல் - வாக்குரைப்பீர்

நீரைச் சிறிதாய் நினையாமல் சேமிப்பீர்

நீரிதனை என்றும் நினைந்து                         13

 

நினைவில் கொண்டு செயல்படுங்கள்

    நீரின் மகிமை யாதென்றே

மனத்தி லிருந்தால் வீணாகா

    வளமாய்ச் சேர உதவிடுமே

தினமும் நீரை அழிக்காது

    சிறுகச் சிறுகச் சேர்த்தால்தான்

புனலும் என்றும் வற்றாதே

    புதுமை பொங்க எழிலாகும்                     14


எழிலதைக் கொண்ட இயற்கையாம் வானம்

பொழியுது நீரைப் புவியில் - வழிகண்

டதனைநீர் சேமித்தால் அண்டமே வாழும்

இதனை மறவாதீர் இங்கு                            15


குன்றி லிருந்து வரும்நீரில்

    குப்பைக் கழிவைச் சேர்க்காதே

நன்மை கருதிக் காத்திட்டால்

    நாளும் பெறுவாய் குறையாமல்

தண்ணீர் மகிமை புரிந்திட்டால்

    தவித்து நிற்றல் மறைந்துவிடும்

இன்றே தொடங்கு செயற்படுத்த

    என்றும் வாழ்வு சிறந்திடுமே                    16


மேனின்று வீழ்ந்து விரைவதால் நீரது

வானின் அமிழ்தென வாழ்த்துவரே - காண

உலகில் அரிதாய் உளநீரை வீணாய்க்

கலக்க விடலேன் கடற்கு                                17


கடலும் வற்றிப் போவதில்லை

    கண்ணீர் சிந்தி அழுவதில்லை

இடரை நீக்கி வாழ்ந்திடவே

    இதமாய் கிடைக்கும் தண்ணீரும்

விடாமல் மழையும் பொழிந்திடவே

    விரைந்து நடுங்கள் மரங்களையே

கெடுதல் இன்றித் தண்ணீரும்

    கெதியாய்க் கிடைக்கும் யாவருக்கும்    18

 

யாவர்க்கும் நன்மை அளிக்குமொரு தண்ணீர்க்குத்

தேவனை ஒத்த சிறப்பன்றோ - ஆவலாய்ச்

சேமிப்பீர் செம்மையுள நீரைச் சிறப்பாகச்

சேமமாய்ச் சீருண் டுமக்கு                            19

 

சீருண் டுமக்கே நீரையென்றும்

    செம்மை யாகச் சேமித்தால்

நீரா டுகையில் குளத்தினின்று

    நெகிழிப் பையை வீசியெறி

சாரல் துளிகள் தாமென்றே

    தாண்டிச் செல்லல் தவறாகும்

வாராத் தெய்வம் வந்ததென

    மழைநீர் சேர்த்தல் வளமாமே!                   20

No comments:

Post a Comment