'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

எழுத்தால் எழுக

 2.       பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

 

என்னால் என்ன செய்ய வியலும்

    என்றே எண்ணிக் கலங்காதே !

பின்னால் தூற்றும் கயவர் பேச்சைப்

    பெரிதாய் மனத்தில் பதிக்காதே !

இன்னா செய்தோர் நாணும் வண்ணம்

    என்றும் நன்மை செய்திடுவாய்

என்றோ ஒருநாள் மாற்றம் நிகழும்

     எழுக எழுத்தால் முனைப்புடனே !!          1

 

 சுழன்று பாயும் எழுது கோலால்

     துரத்தி அடிப்பாய் கொடுமைகளை !

கிழக்கு வெளுக்கும் விடியல் மலரும்

       கேடு விலகும் பனிபோலே !

 உழுத நிலத்தில் விளைச்சல் காண

     உள்ளம் தானும் விழையாதா ?

எழுச்சி பிறக்கும் நலமே நடக்கும்

     எழுத்தால் எழுக தமிழ்மகனே !!                2

 

முன்னோர் எழுதி வைத்த தெல்லாம்

    முனைந்து படித்தால் தெளிந்திடலாம் !

குன்றாய் நிமிர்ந்து வாழும் வழியைக்

    குறளின் நெறியால் அறிந்திடலாம் !

கன்னல் தமிழில் கற்ற தெல்லாம்

    கனிவாய்ப் பிறர்க்கும் சொல்லிடலாம் !

இன்னும்  ஆய்ந்து வீறு கொண்டே

     எழுக எழுத்தால் துடிப்புடனே !!                3

 

அடக்கி நசுக்கும் தலைமை எதிர்த்தே

      அச்ச மின்றிப் போராடு !

மடமை என்னும் மயக்கத் தோடு

    மழுங்கிக் கிடக்கக் கூடாது !

தடுக்கி விழலாம் தடைகள் வரலாம்

    தாண்டி யோடப்  பழகிவிடு !

எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க

     எழுத்தால் எழுக ஊற்றாக !!                      4

 

 ஏரைப் போற்ற உலகே செழிக்கும்

      இளைஞர் கட்கும் புரியவைப்பாய் !

பேரும் புகழும் பணத்தால் வாரா

   பித்தம் தன்னைத் தெளியவைப்பாய்!

வீரத் தோடு விவேகம் இருந்தால்

        வெற்றி என்றும் வசமென்றே

ஈர மனத்தோ டழுத்திச் சொல்லும்

     எழுத்தால் எழுக துணிவுடனே !!               5

 

பெண்கள் நாட்டின் கண்கள் என்று

     பேணிக் காக்கக் கற்பிப்பாய் !

பண்டை நாடாம் நம்தாய் நாட்டின்

     பண்பாட் டைநீ நேசிப்பாய்!

வண்ணங் கொஞ்சும் கன்னித் தமிழை

    வரமாய்க் கருதி  சுவாசிப்பாய்!

எண்ணிப் பார்த்து நெஞ்சம் மலர்ந்தே

      எழுக எழுத்துச்  சீரோடே !!                       6

 

தமிழன் பெருமை தமிழால் பேசித்

      தரணிக் கெல்லாம் செப்பிடுவாய் !

தமிழே முதலாம் தமிழே அமுதாம்

     தகைமை தன்னை எடுத்துரைப்பாய் !

தமிழின் இளமை தமிழின் வளமை

       தப்பா மல்நீ உணர்த்திடுவாய் !

 இமைபோல் காக்க எழுத்தால் எழுந்தே

      இமய மெட்டச் செய்திடுவாய் !!               7

 

பொய்யும் புரட்டும் களவும் கொலையும்

      பொறாமைக் குணமும் இங்கெதற்கு ?

செய்யும் தொழிலை இறையாய் மதித்துச்

     சிறப்பாய் உலகில் செயல்படவே

உய்யும் வழியை உயர்வாய்க் காட்டி

      உரக்கச் சொல்ல எழுச்சியுடன்

எய்த அம்பாய்க் கொடுமை துளைக்க

     எழுத்தால் எழுக கவிமகனே !!                  8

 

 கூர்மை வேலும் வாளும் எதற்கு?

    கோலுன் கையில் இருக்கையிலே !

நேர்மைத்  திறத்தை நிறைவாய்ப் பெற்று

    நெஞ்சில் உரத்தை வளர்த்திடவே

கார்மே கம்போல் பொழிந்து கருத்தால்

    கனலாய்த் தெறித்து விழிப்பூட்டி

யார்க்கும் நலமே விளையும் விதத்தில்

    எழுத்தால் எழுக திருமகனே !!                   9

No comments:

Post a Comment